இலக்கியம்கட்டுரைகள்

அன்றும், இன்றும், என்றும் !!!

— தேமொழி.
thalaivan
அன்று:
தலைவன் (தனது நெஞ்சிற்குக் கூறியது):

பெறுவ தியையா தாயினு முறுவதொன்
றுண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர்க்
கைவள் ளோரி கானந் தீண்டி
எறிவளி கமழு நெறிபடு கூந்தல்     
மையீ ரோதி மாஅ யோள்வயின்
இன்றை யன்ன நட்பி னிந்நோய்
இறுமுறை யெனவொன் றின்றி
மறுமை யுலகத்து மன்னுதல் பெறுமே.

— பரணர், குறுந்தொகை பாடல் 199

பின்புலம்:
“தலைவா, இனி தலைவியை நீங்கள் காண்பது அரிது.  அவள் வீட்டை விட்டு வெளியேற வழியின்றி அவளது பெற்றோர் கட்டுப்பாடு விதித்துள்ளார்கள்”,  என்று  தலைவியின் தோழி தலைவனுக்குச் செய்தி சொல்லிச் செல்கிறாள்.  “இனி என் அன்புக்குரிய காதலியை இப்பிறவியில் காணவே முடியாதோ! ஆனாலும் இந்தச் சூழ்நிலையால் என் காதல் மாறாது எனது நெஞ்சே, ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து வருவது என் காதல் என்பதை அறிவாய்” என்று தனக்குத்தானே எண்ணிக் கொள்கிறான் அந்தத் தலைவன்.

பாடலின் பொருள்:
எனது நெஞ்சே, உறுதியான தேரையும், சிறந்த கைவண்மையும் பெற்ற ஓரியின் காட்டின் வழியே வீசும் மணம் கமழும் காற்றினைப் போல நறுமணம் கொண்ட, நெளி நெளியான முடியினால் ஆன மைபோன்ற கரிய கூந்தலை உடைய என் காதலியை நான் இப்பிறவியில் காண முடியாமல் போனாலும்  நான் அவளிடம் கொண்ட காதலுக்கு அழிவில்லை. அடுத்து வரும் பிறவிகளிலும் என் காதல் தொடர்ந்து வரும்.

***

இன்று:
தலைவன் (தனது தலைவியிடம் கூறியது):

எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்

— கவிஞர் கண்ணதாசன்

 

 

 

 

படம் உதவிக்கு நன்றி:  http://www.dinamani.com/

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (4)

 1. Avatar

  கற்றாரைக் கற்றாரே காமுறுவர்
  The learned likes the learned

 2. Avatar

   காதலியின் நெளிந்த கூந்தல் காட்டின் வாசத்தைச் சுமந்து வந்ததுபோல், சங்கத் தமிழின் வாசத்தைக் கண்ணதாசனின் கவிதை சுமந்து வந்த நயத்தைத் தானும் வியந்து நம்மையும் வியக்கச் செய்த தேமொழியின் ரசனையுணர்வு எத்தனைப் பிறவி எடுத்தாலும் தொடர்ந்து வரும். இன்பம் தரும். கே.ரவி

 3. Avatar

  பெருமதிப்பிற்குரிய செங்கை பொதுவன் ஐயா அவர்களின் கருத்துரை கிடைத்தது மனதை மிகவும் மகிழச் செய்தது, மிக்க நன்றி ஐயா. ஆம், நீங்கள் சொல்வது நூறு விழுக்காடு உண்மை.  தமிழிலக்கியப் பாடல் வரிகள் திறமை மிக்க இக்காலக் கவியரசரைக் கவர்ந்திருந்தது  நாம் பெற்ற பேறு.  

  அன்புடன்
  ….. தேமொழி

 4. Avatar

  மிக்க நன்றி திரு. ரவி.  உங்கள் எழுத்துக்களிலும் நான் உங்கள் ரசனைஉணர்வை படித்து வியந்து வருகிறேன்.

  அன்புடன்
  ….. தேமொழி

Comment here