கே.ரவி

“என்னப்பு! ஆசுகவி எல்லாம் எழுதித் தள்ளிப்புட்டீர்.” சிகாமணி திடீரென்று என்முன் கேலி கலந்த கேள்வியோடு தோன்றுகிறான். “அது கெடக்கட்டும். ஏதோ புதுக்கவிதை என்று காதில் விழுந்தது. அதெல்லாம் வேறு எழுதுவதுண்டோ?”

“ஓ! மாணவரிஸம் பத்திரிகையில் …” என்று நான் முடிக்குமுன், சிகாமணி இடைமறித்து, “அதென்ன ஓய் பேரு? மாணவரிஸம்?” என்று கேட்கிறான்.

அது ஒரு கதை அப்பா. சிந்தனைக் கோட்டத்தில் சேர்ந்த பெண்கள் கூட்டம் சில மாதங்களுக்குப் பிறகு காணாமல் போய்விட்டார்கள் என்று சொன்னேன் இல்லையா? ஷோபனாவும் அப்படித்தான். கிட்டத்தட்ட ஒரு வருடம் பார்க்கவில்லை. திடீரென்று ஷோபனாவும், மங்களசுந்தரியும் நான் வசித்த பலாத்தோப்பு வீட்டுக்கு என்னைத் தேடி வந்தார்கள். அப்போது, அவர்கள் ‘நாம் மாணவர்களுக்காக ஒரு பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?’ என்று கேட்கப் போய் நான் உடனே அந்த யோசனையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். பத்திரிகைக்கு நாங்கள் தேர்ந்தெடுத்த எந்தத் தலைப்பையும் பத்திரிகைப் பதிவாளர் அங்கீகரிக்கவில்லை. ஏற்கனவே பதிவாகி விட்ட பெயர்கள் என்று தள்ளி விட்டார். மாணவர் குரல், மாணவர் முரசு எல்லாம் தள்ளுபடியாகி விட்டன. எனக்குப் பொறுமை போயிற்று. யாரும் வைத்திருக்க முடியாத ஒரு பெயர் வேண்டும் என யோசித்துத் தேர்ந்தெடுத்த பெயர்தான் ‘மாணவரிஸம்’.

அந்தப் பத்திரிகை சுமார் நாலாண்டுக் காலம் நடந்தது. அவ்வளவு காலம் நான் படித்துக் கொண்டிருந்தேன். ஒரே வகுப்பில் இல்லை சாமி! பி.ஏ. முடித்துவிட்டு, பி.எல்.! அது முடித்த பிறகு, எம்.ஏ. அதற்கும் பிறகு எம்.ஃபில். மாணவனாகவே என் வாழ்நாள் முழுதும் போய்விடுமோ என்ற அச்சமே வந்து விட்டது. திருமணத்துக்குப் பிறகும் நானும், ஷோபனாவும் சில ஆண்டுகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தோம், கவிஞர் சொன்னதுபோல் பாடித் திரிந்த பறவைகளாக!

சரி, சரி மாணவரிஸத்துக்கு வருகிறேன். அதில் எத்தனை மாணவர்கள் கதை, கவிதை, கட்டுரை எழுதினார்கள்! எத்தனை மாணவர்கள் ஓவியம் வரைந்தார்கள், நிருபர்களாகச் செய்தி திரட்டித் தந்தார்கள்! வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான், பின்னாளில் ஐ.பி.எஸ். அலுவலராக வரவிருந்த ரவி ஆறுமுகம், சுகி சிவம், சு.ரவி, க்ரேஸி மோகன்! ஏன், பின்னாளில் பெரிய திரைப்பட இயக்குநராக வரவிருந்த மனோபாலா மாணவரிஸத்தின் நிரந்தர ஓவியராகப் பணியாற்றினார். சென்னை, திருச்சி, கடலூர், பாண்டிச்சேரி, மதுரை, திருநெல்வேலி, பம்பாய், டில்லி என்று எல்லா இடங்களிலும் மாணவ நிருபர்கள் இருந்தும் நிறைய பிரதிகள் அவர்கள் மூலம் மாதம்தோறும் பட்டுவாடா ஆகியும் வசூல் மட்டும் சரிவர இல்லாததால், என் கைப்பணத்தைச் செலவழித்துத்தான் பத்திரிகையை ஒவ்வொரு மாதமும் அச்சகத்திலிருந்து கொண்டு வருவேன்.

சிகாமணிக்குப் பொறுக்க முடியவில்லை. ‘ஏம்பா, புதுக்கவிதை எழுதியுள்ளாயா என்று கேட்டேன். அதற்கு பதில் சொல்லாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டு போகிறாய். உன் பதிலைப் புரிந்து கொள்வதை விடப் புதுக்கவிதையைப் புரிந்து கொள்வதே சுலபம் போல இருக்கிறதே!’ என்று ஒரு போடு போட்டான்.

நான் எழுதும் கவிதை புதுசா, பழசா என்று நானே சொல்வதை விட அதைப் படிப்பவர்கள்தான் சொல்ல வேண்டும். இலக்கணக் குடத்துக்குள் கவிதையை அடக்கவும் நான் முயலவில்லை, இலக்கணத்தை மீறி எழுதியே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததும் இல்லை. நான் எழுதத் தொடங்கும் போது, இப்பொழுது ஒரு வெண்பா எழுத வேண்டும் அல்லது விருத்தம் எழுத வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு ஆரம்பிப்பதில்லை. ஏதோ தோன்றுவதை மனத்துக்குள் சொல்லி அல்லது பாடிப் பார்த்து, ஓ! இது வெண்பாவோ? ஓ! இது கட்டளைக் கலித்துறையோ? என்று அடையாளம் காண்பதே என் வழக்கம். பல சமயங்களில், இலக்கண வடிவுகளில் கட்டுப் படாமல் கவிதை திமிறிக் கொண்டும் வரும். ஆனால், அதற்கும் புது இலக்கணம் வடிவமைத்துச் சொல்ல இருக்கவே இருக்கிறான் நம்ம புத்தி சிகாமணி! எடுத்துக்காட்டாக ஒன்று சொல்கிறேன். 1978-ஆம் ஆண்டில் எழுதிய ஒரு கவிதை:

எதற்காக வோமனம் படபடக் கின்றது

யாழெடுத் தேனதில் ஸ்ருதிகலை கின்றது

கருமே கங்கள் உருமா றிப்போய்

நெஞ்சுக் குள்ளே நுழைந்து கொண்டன

ஒருதுளிக்கும் மறுதுளிக்கும்

இடைவெளி இன்றி மழைபொழி கின்றன

எதற்காக வோமனம் படபடக் கின்றது

.. .. ..

இந்தக் கவிதையில், “ஒருது ளிக்கும் மறுது ளிக்கும்” என்று யாப்பிலக்கணப்படி எழுதிப் படித்துப் பாருங்கள். சப்பென்று இருக்கும். அப்படி இல்லாமல், மேலே உள்ளது போல், இடைவெளி இல்லாமல் ‘ஒருதுளிக்கும் மறுதுளிக்கும்’ என்று சேர்த்துப் படித்துப் பாருங்கள். அப்போது, இடைவெளியின்றி மழைபொழியும் சந்தம் புரிபடும். இலக்கணம், கவிதைக்குப் பணிசெய்ய வேண்டுமே அல்லாமல், இலக்கணத்தால் கவிதை முடங்கிவிடக் கூடாது. எப்படி என் பிரசங்கம்!

இப்பொழுது நிஜமாகவே புதுக்கவிதை சமாச்சாரத்துக்கு வருவோம். புதுக்கவிதை இயக்கத்துக்கும் மரபுக் கவிதைப் புலவர்களுக்கும் நடந்துவந்த போர்பற்றி முன்பொருமுறை நான் எழுதியிருந்ததை நினைத்துக் கொள்கிறேன்:

“பொய்க்கால் குதிரைகளும் வைக்கோல் கன்றுகளும் போர்க்குரல் எழுப்புகின்றன.”

மாணவரிஸத்தில் ‘பகலவன்‘ என்ற பெயரில் கவிதைகளும், ‘கதிரவன்‘ என்ற பெயரில் கட்டுரைகளும் எழுதிய காலத்தில், மரபு மீறாத ஒரு புதுக்கவிதை மாணவரிஸத்தில் எழுதினேன். அது என்னய்யா, மரபு மீறாத புதுக்கவிதை? கவிதையின் தலைப்பு “இவள் ஒரு புதுக்கவிதை”:

இவளொரு புதுக்கவிதை

சுரதாவின் கவிதையைப்போல் சுகமான நளினங்கள்

சுழலும் பார்வை

எலியெட்டின் கவிதையைப்போல் என்றைக்கும் புதிராக

இருக்கும் உள்ளம்

தத்துவங்கள் கனக்கின்ற தாகூரின் கவிதையைப்போல்

தழைந்த கூந்தல்

இத்தனையும் இவளிடமே இயைந்திருக்கும் காரணத்தால்

மட்டும் இல்லை

செவிவரைக் கும்தான் செல்ல வேண்டுமெனக்

கவிஞர் வகுத்த கண்ணிலக் கணத்தை

மீறிய தாலும்

தன்சிலிர்ப் புக்குத் தக்க காரணத்தைத்

தானே அறியாமல் தயங்குவ தாலும்

உரைநடை ஒன்றை ஒடித்து வளைத்துப்

பாட்டெனச் சொல்லும் பாசாங் கைப்போல்

தென்றலைக் குழைத்துத் தேக்கில் இழைத்து

மின்னலின் வடிவில் மெல்ல வளைத்து

(அதை)

இடையெனச் சொல்லும் இரகசியத் தாலும்

இவளொரு புதுக்கவிதை

சிகாமணி ஒரு கேள்வி கேட்கிறான். “சரி ஓய், இன்ன வடிவில் எழுதுவது என்று முடிவு செய்து கொள்ளாமல் எழுதுகிறாய் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறாய். எதைப் பற்றி எழுதுவது என்றாவது முடிவு செய்து கொண்டு எழுதுவாயா, இல்லை…? என்று சிகாமணி இழுக்கிறான்.

எல்லாம் தெரிந்தே, தெரியாதது போல் கேட்கிறான் சிகாமணி. என்னை வம்புக்கு இழுப்பதில் அவனுக்கு அவ்வளவு ஆனந்தம்!

எதைப் பற்றி எழுதுகிறேன் என்ற முன்முடிவோடு நான் கவிதை எழுதுவது கிடையாது. அதுவாக உள்ளிருந்து பொங்கி வரும். வந்து, வார்த்தைகளாகிச் சிந்திச் சிதறி, வெடித்துச் சில சமயங்களில் கோவென்று கதறிய பிறகே அதன் பொருள் என்ன என்று புரிந்து கொள்ள முயல்வேன். சில சமயம் புரிந்து கொள்ளும் முயற்சியில் தோற்றும் போயிருக்கிறேன்.

நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். இந்தத் தொடரின் சென்ற பகுதியை வல்லமை ஆசிரியருக்கு அனுப்பிய பிறகு அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ” சார், நீங்கள் அனுப்பிய கட்டுரையின் நிறைவில் ஒரு கவிதை எழுதியிருந்தீர்கள். அதில், “கூத்தன் அவனன்றிக் கூட்டில் எதுபறவை” என்று ஒரு வரி இருக்கிறது. ஒருவேளை, ‘ஏதுபறவை’ என்பது தட்டச்சுப் பிழையால் ‘எதுபறவை’ என்று ஆகி விட்டதோ?” என்று கேட்டார். அவர் கேட்டது பற்றிச் சிந்தித்தால் அவர் சொன்னது சரியென்றே பட்டது. ஆனாலும், அது எப்படி இருக்கிறதோ அப்படியே இருக்கட்டும் என்று சொல்லி உரையாடலை முடித்து விட்டேன். உடனே பொறிதட்டியது. ஆம், ‘கூத்தன் அவனின்றி’ என்றிருந்தால் ‘ஏதுபறவை’ என்பதே சரியாக இருந்திருக்கும். அவன் இல்லாமல் உயிர்ப்பறவை எப்படியிருக்க முடியும் என்று அர்த்தமாகும். ஆனால் அவன் அன்றி எதுபறவை என்றால், அவனே பறவை என்று பொருளாகிறது. கூத்து நடத்துபவனும் அவனே. கூடு கட்டுபவனும் அவனே. கூட்டுக்குள் உயிர்ப்பறவையாய்ச் சிறைப்பட்டிருப்பவனும் அவனே. இந்தப் பொறி தட்டியதும் உடனே நான் வல்லமை ஆசிரியரைத் தொலைபேசியில் அழைத்து இதைச் சொன்னேன். அவரும் ஒப்புக் கொண்டார். நான் பல வருடங்களுக்கு முன் எழுதிய நாடோடிக் குறள் என்ற குறட்பாக்களில் வரும் ஒரு குறளுக்கு அர்த்தம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் தெளிவாகிறது:

கூடோ தான் கட்டுறது கூண்டோ போய்ச் சிக்குறது

கூடே கூண் டானதென்ன கூத்து

கூத்தன் சிரிக்கிறான். வானத்தில் இடியிடிக்கிறது. மழைபொழியப் போகிறதோ?

images (1)என்னடா கதையளக்கிறாய். வானத்தின் இடியோசைக்குத் தாளம்போட உன்னால் முடியுமா? இல்லை கடலின் ஓங்காரத்துக்கு ஸ்ருதி சேர்க்கவாவது முடியுமா? என் தலைப்பாகை மைந்தனைப் போல் மழைபொழிந்திடும் வண்ணத்தைத்தான் காண முடியுமா? கவிதைக்கு என்ன வடிவம், என்ன அர்த்தம் என்றா ஆராய்ச்சி செய்கிறாய்! அங்கே பார், ஓர் ஓரத்தில் ஒயிலாகச் சாய்ந்து கொண்டு உன்னைப் பார்த்து அந்த நந்தியாவட்டைப் பூ நமுட்டுச் சிரிப்புச் சிரிக்கிறது. அதன் மேல் ஒரு பனித்துளி எவ்வளவு கனமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது பார்த்தாயா? இன்னும் ஒரு நொடியில், ஒரே நொடியில் அது உடையப் போகிறது. தன் கனம் தாங்காமல் தானே உடையப் போகிறது. அதைத் தன் கதிர்க் கையால் அபகரித்து விழுங்கிவிடப் போகிறான் சூரியன். அது காணாமல் போய்விடுமோ? அதற்குள் விரிந்த வானமும் காணாமல் போய் விடுமோ? உடையும் துளியில் இருந்து ஒரு புதிய வானம் தெறித்து விழுந்து விரிந்து இன்னுமோர் புதிய உலகம் பிறக்கும் கணநேர அதிசயத்தை உன்னால் தரிசிக்க முடிந்தால், அதற்குப் பிறகு வா, கவிதை, வடிவம், அர்த்தம் என்று வம்பளப்போம். நான் காலபைரவன்! காத்திருப்பேன்.

கூத்தன் சிரிக்கிறான். வானத்தில் இடியிடிக்கிறது. மழைபொழியப் போகிறதோ?

கேட்டு மகிழ  சொடுக்கிப் பாருங்கள்

எதற்காக வோமனம் படபடக் கின்றது

யாழெடுத் தேனதில் ஸ்ருதிகலை கின்றது

கருமே கங்கள் உருமா றிப்போய்

நெஞ்சுக் குள்ளே நுழைந்து கொண்டன

ஒருதுளிக்கும் மறுதுளிக்கும்

இடைவெளி இன்றி மழைபொழி கின்றன

எதற்காக வோமனம் படபடக் கின்றது

செவியறி யாத ஓசைகள் எல்லாம்

சிந்தனைக் குள்ளெ ஜெபிக்கப் படவும்

புவியறி யாத உருவங்கள் எல்லாம்

புலன்க ளுக்குள் நடன மாடவும்

கவிதை என்ற பெயரி லேஒரு

கனத்தை நெஞ்சில் தாங்கிக் கொண்டும்

தவிக்கி றேன்நான் தளர்ந்து போயிதில்

தர்க்கம் வேறு தனிமை வேறு

மாம்பழத் துக்குள் வண்டிருப் பதைப்போல்

மனத்துக் குள்ளே ஏதோ ஒன்று

நடுங்கிக் கொண்டே நாதம் இழந்து

முனகுவ தைநான் உணருகிறேன்

வாரணம் ஆயிரம் மார்புக் குள்ளே

வந்து நுழைந்து மிதிப்ப தைப்போல்

காரணம் இன்றிக் கதறுகி றேனிதில்

கற்பனை வேறு கனவுகள் வேறு

இருட்டுக் குள்ளே மூழ்கிப் போயென்

இதயம் புழுங்கித் தவிக்கிறது

அறிவோ ஞானக் குளிரெடுத் துப்போய்

அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறது

ஒருமை பன்மை பேதங்கள் இன்றி

உள்ளம் குழம்பித் திகைக்கிறது

ஒருநிமி டம்தான் அதற்குள் இந்த

உலகே மாறி விடுகிறது

எங்கோ தொலைவில் ஒருகுயில் கூவ

மின்னல் வெளிச்சம் பிறக்கிறது

இருட்டை விரட்டி இதயம் மட்டும்

இடியிடி என்று சிரிக்கிறது

தர்க்கம் தனிமை கற்பனை கனவு

தத்துவம் எல்லாம் புரிகிறது

தாளத் தோடு மிதந்து கொண்டே

பாடல் ஒன்று வருகிறது

எதற்காக வோமனம் களிப்படை கின்றது

யாழெடுத் தேனதில் இசைபிறக் கின்றது

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *