நீலமேக ஸ்யாமளரூப கண்ணன் துதி

இயற்றியவர்: கவிதாரத்னம், வித்யாரத்னம், வித்யாவிஷாரத
பாஷணகேஸரி, விக்ஞான சிந்தாமணி, ப்ரவசன சிரோமணி

திருமதி ஹா.கி. வாலம்

அனுப்பியவர்: தஞ்சை திரு. வெ. கோபாலன்

நீலக்கடல் மேல் ஆல இலை
ஆலிலை மேலோர் நீல மணி!                                                 

கோலக் குழவி குளிர் வடிவம்                            Aalilai-Krishna
ஜாலக் கடலோ ஜாலக் கடலுள்

தாமரைக் கண்கள், தளிர் உடலம்
சாமள வண்ணன், ஜலஜ முகம்
கோமள குழற் சுருள், க்மிழ் நாசி
காமனை மயக்கும் கட்டழகு!

குமுதப் பூங்கனி வாய் அதரம்
அமுதம் பொழி எழில் அதிமதுரம்
சமுத்திர நடுவில் கருணை முகில்
அமைத்தது யாரோ அற்புதமே!

வலப்பத மலரைக் கரமலரால்
ஜலஜ முகக் கனிவாய் அதனில்
நிலைபெறச் செய்து கட்டைவிரல்
சுவைத்திடும் சுந்தரமணி யாரோ?

வானம் நீலம், கடல் நீலம்
தானும் நீலம், விழி நீலம்
பானம் பண்ணும் விரல் நீலம்
ஆன இந்நீலக்கடல் யாரோ?

ஊழிக்கால் உயர் கடலுள்
ஆழிக்கையன் ஆலிலை மேல்
தோழர் துணைவர் இல்லாமல்
வாழ்வதும் என்னடி என் தோழி!

அன்னையுமில்லை, அப்பனில்லை
பன்னகப் பாயல் தானுமில்லை
முன்னையுமில்லை, பின்னையிலை
தன்னில் சுகிப்பவன் இவன் யாரோ?

அன்னவன் உன்னை ஆட்கொண்ட
பன்னக சயனப் பெருமான் தான்;
கன்னல் மதுமொழிக் கண்ணபிரான்
சின்னக் குழந்தை வடிவானான்!

ஆலிலைமேல் துயில் அக்குமரன்
பாலையுளம் வளர் பரமன் காண்
நீலக்கடல் மணி நெடுமால்தான்
பாலப் பருவத் தெய்வம் காண்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *