பறவைகளுக்கும் உணர்ச்சி உண்டா?

3

ஷைலஜா

காக்கா!  காக்கா! கண்ணுக்கு மை கொண்டு வா!
குருவி! குருவி!  கொண்டைக்குப் பூ கொண்டு வா!
கிளியே! கிளியே! கிண்ணத்தில் பால் கொண்டு வா….!

இப்படியெல்லாம் பாட்டுப்பாடி பறவைகளை அழைத்த காலமெல்லாம் கனவாகிப் போய்விடும் அபாயச் சூழ்நிலையில்  இருக்கிறோம். ’நாம் பெரும்பாலும அழகானவற்றை ஏற்றுக்கொண்டு மிகவும் உபயோகமானவற்றை  கைவிட்டு விடுகிறோம்’ என்னும் பிரெஞ்சுப் பழமொழிக்கு ஏற்ப வாசலில் இருக்கும் மரங்களை வெட்டிவிட்டு  வரவேற்பறையில் ப்ளாஸ்டிக் செடிகளை கொண்டு வைக்கிறோம்.  மரத்தை வளர்க்கத் தெரியாத மனங்களுக்கு பிளாஸ்டிக் தாவரங்களில் படிந்த தூசியை துடைக்கத் தெரிந்திருக்கிறது.  நாம் வளர்த்த மரங்களின் எண்ணிக்கையை விட நாம் தொலைத்த மரங்களின் எண்ணிக்கை அதிகம்.

சாலைகள் அமைக்க, ரயில் பாலங்கள் கட்ட, குடிநீர் குழாய் அமைக்க, குடியிருப்புகள் தொழிற்சாலைகள் கட்ட, என்று  மரங்களை வெட்டிச் சாய்த்துவிட்டோம்.  அதனால் பறவைகளின் வீடுகளை அழித்துவிட்டோம்.  வசிக்க இடமின்றி அவைகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

ஒரு பறவை பறந்து கொண்டிருக்கும் போது
மிதந்து கொண்டிருந்தது கூடவே வானமும்.
பறவையைச் சுட்டார்கள்,
விழுந்ததோ  துண்டுவானம்!

எனும் கவிதையைப்  படிக்கிறபோது  நம் மனமும்  சிதறி விழுகிறது.

பறவைகள் நம் சுற்றுச்சூழலின் நண்பர்கள்.  செல்போன்களை நாம் அதிகம் பயன்படுத்தத் தொடங்கியதும் அதன் அலைவரிசைத் தாக்கம் பொறுக்க முடியாமல் சிட்டுக்குருவிகளின் இனம் அழிந்துவருகிறது.

ஒரு சிட்டுக்குருவியின் அழிவுக்கும் பிரபஞ்சத்தின் அழிவுக்கும் தொடர்பிருக்கிறது என்று பறவை இயல் நிபுணர் சலீம் அலி எழுதுகிறார்.

பறவைகள் இந்த உலகினை அழகு படுத்துகின்றன.  ஆனால் சூழல் பற்றிய அக்கறையே இல்லாமல் பறவைவைகளே இல்லாமல் போகிற உலகத்தை நாம் உருவாக்கி வருகிறோம் என்பது எவ்வளவு வருத்தமானது? பறவைகளுக்கும் உணர்வு உண்டு. கோபதாபம், காதல், அன்பு, அச்சம்  ஆகியவை உண்டு.

ஏதாவது ஒரு காகம் நம் தலையை தட்டிவிட்டுப் போனாலே நாம் பதறிவிடுவோம்.  ஆனால் சாதுவான பறவை தன் இயல்பை மீறி தன் சகாக்களோடு மனிதர்களைத் தாக்கத் தொடங்கினால் எப்படி இருக்கும்?

அப்படி ஒரு திகிலான கதைதான் The Birds! சிலவருடம் முன்பு வெளிவந்தது.  Alfred Hitchcok இயக்கத்தில். இந்தப்படத்தின் ஒவ்வொரு நிமிடமும்   நம்மை  உறைய வைக்கும்.  இப்படம் கோல்டன் க்ளோப் விருதுபெற்றது.

அதிகம் தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் ’mattprinting’ உத்தியுடன் தயாரிக்கப்பட்ட பறவைக்காட்சிகள் இப்போது பார்க்கும் போதும் ஆச்சரியம் அளிக்கின்றன.  படம் முழுக்க வித விதமான பறவைகளின் சத்தமே பின்னணி இசையாகப் பயன்படுத்தி இருந்தார்கள்.

துவக்கத்தில் வீட்டுக்குள் நூற்றுக் கணக்கான சிட்டுக் குருவிகள் வருவதும் தீவிபத்து நடக்கையில் நகரத்தின் மேலிருந்து இறங்கி பறவைகள் தாக்கும் காட்சியும் சிலிர்க்க வைப்பவை.  பறவைகள் பற்றிய இந்தக் கதையில் மெலிதான காதல், மனித உறவுகள் குறித்த காட்சிகளும் திகிலோடு இணைந்து வருகின்றன.

கதாநாயகனும் கதாநாயகியும் இருக்கும் இடத்திற்கே பறவைகள் வந்து  தாக்குதல்களை செய்கின்றன.  ஜன்னல் கதவுகளின் கண்ணாடியைக் கொத்திக் கொத்தி, கதவு உடையும் நிலைக்கு வருகிறது….! இன்னும் சில நொடிகளில் கதவின் கண்ணாடி  உடைந்து நூற்றுக் கணக்கான் பறவைகள்   வீட்டிற்குள் வர நேரிடலாம் அந்தச் சுழலில் என்ன நடந்தது?  ஒரு முறை அந்தப் படத்தின் குறுந்தகடு கிடைத்தால் வாங்கிப்பாருங்கள்…

எதற்கு இந்தப் படம் பற்றி இப்போது சொல்கிறேன் என்றால், பறவைகளுக்கும் உணர்ச்சி உண்டு என்பதை அறிந்து கொள்ளத்தான்.  மரங்கள் அடர்ந்த காட்டில்,  குறுக்கும் நெடுக்குமாய் ஒழுங்கற்று நீண்டிருக்கும்  கூரிய முட்களின் இடையே உடலைக் கொண்டு நுழைத்து வெளியேறி இரை தேடிப் பசியாறி வரும் பறவைகள், நமக்கு வாழ்க்கையின் வடிவத்தையும், வாழ்தலின் அர்த்தத்தையும் சொல்கிறது அல்லவா?

பறவைகளின் உலகம் தனித்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.  அதன் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களும் மனிதனுக்கான அறிவுறுத்தலாகவே உள்ளது.

சிட்டுக்குருவிகளின் சுதந்திரத்தில் மனதைப் பறிகொடுத்த பாரதி,
’விட்டுவிடுதலையாகி நிறகவேண்டும் இந்தச்சிட்டுக்குருவிகளைப்போல’ என்றானே!

’அன்றிலடி நான் உனக்கு!’ என்கிறார் பாரதிதாசன்.

தோல்வியில் துவ்ளும்போது ’ஃபீனிக்ஸ் பறவையைப் போல சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவேன்!’ என்கிறான் மனிதன்.
நம்மைச் சுற்றிலும் பறவைகள் இருகின்றன அழகழகான் நிறங்களோடு உருவங்களோடு அவை நம்மை வசீகரிக்கின்றன!

ஆனால் பறவைகளுக்கான சுதந்திரத்தை நாம் எப்போதும் மதிப்பதில்லை அவைகளை ஒரு பொருட்டாகக் கருதுவதுமில்லை.

விழாக்கால இரவுகளில் நெருப்புகள் வெடித்துச் சிதறும் பேரதிர்வுகள் நமக்குக்கோலாகலம்! ஆனால் பறவைகளுக்கு  திசை தெரியாமல் இருளினுள், அவை பீதியுற்று கறியபடி பறப்பதை நாம் பார்த்ததில்லை.

காகத்தின் கரைதல், விருந்தினர் வருவதற்கான அறிவிப்பு என்கிறோம்.
’நாராய்! நாராய்!  செங்கால் நாராய்! பழம்படுபனையின் பழக்கூர்வாய் செங்கால் நாராய்!’ என்றார்  ஒருபுலவர்.

பற்வைகளைப் பார்தால் சிலருக்கு பாட்டு வரும்.  சிலருக்கு வயிற்றுப்பாட்டுக்கு ஆனதென்று தோன்றி  குறி வைத்து அடித்து வீழ்த்தத் தோன்றும்.

அன்பைக் கிளைகளாய் விரித்து, மரம் சுமந்திருந்த பறவைகளை, அதன் மொழிகளை, கூவலை, மரங்களை வெட்டிச் சாய்ப்பதின் மூலம் பெரிதும் இழக்கிறோம். இரட்டிப்பு இழப்பு.

சாலைகள், இரயில்வே பாலங்கள் கட்டவும், தொலைபேசி, குடிநீர்குழாய் அமைக்கவும், குடியிருப்பு்கள், தொழிற்சாலை கட்டவும்  மரங்களை வெட்டுகிறோம்.  மரங்கள் போனால் பறவைகள் காணாமல் போகும். பாதிப் பறவை இனம் பூண்டோடு அழிந்துவிட்டது.
தூக்கணாங்குருவி, முதல் கட்டிட நிபுணர்! ஆகாயத் தோட்டி காக்கை!  பல்லவி சரணம் பாடும்
வானம்பாடி!
கொக்கின் ஒற்றைக் கால் தவம்! எல்லாம் இனி வரும் சந்ததியினருக்குப் பாடபுத்தகத்தில் மட்டும் பார்க்க என்றாகிவிடுமா?

ஆலாப்பறவை வேகமாய் பறக்குமாம் ‘ஏன் ஆலாய்ப்பறக்கறே?’ என்பார்களே இதனால்தான்! ஆல்பட்ரோஸ்  பறவை சிறகைவிரித்துவிட்டல், ஏறத்தாழ ஐந்துவருடங்கள் பறக்குமாம்! புறாக்கள்  தூது போயிருக்கின்றன.  ஒற்றுமைக்கு காகம்! இனிமையாகப் பாடுபவர்களை குயில் என்கிறோம்!  மழையை தோகை விரித்து அறிவிக்கும் மயில்! கழுகுப்பார்வை என்கிறோம்.  கொய்யா மரத்தில் எப்போது பழுக்கும் எனத் தெரிந்த அணில்.  கல்யாணமுருங்கை எப்போது பூ பூக்கும் என அறியும் கிளிகள்.  தும்பிகளுக்கு மழைவருவது தெரியும்! களிமண்னை பிரபஞ்சமாக்கி பச்சைப்புழுவைப் பறக்கவைக்கும் மந்திரம் குளவிக்குத் தெரியும். நமக்கு என்ன தெரியும்?

நற்றிணையில் ஒருபாடல் உண்டு.

தலைவனைப் பிரிந்து துன்பத்தில் வாடும் தலைவி நாரையை நோக்கிப் பாடுகிறாளாம்!

(நாரை இவள் கூறுவதைக் கேட்காது. அவ்வாறு கேட்டாலும் அதைத் தலைவனிடம் சென்று கூறாது. இது தலைவிக்கும் தெரியும். ஆயினும் தன் குறையை எப்படியாவது ஏதோ ஒரு வழியில் வெளிப்படுத்தித் தானே தீர வேண்டும்!)

உளவியல் அடிப்படையில் மன அழுத்தம் நீக்கும் முறையாக இதனைக் கொள்ளமுடிகிறது.

’சிறிய வெண்மையான குருகே …….
நீர்த்துறைகளில் துவைத்து வெளுத்த ஆடை போன்ற நல்ல நிறம் பொருந்திய சிறிய வெண்மையான குருகே…..

நீ தலைவன் வாழும் நிலத்திலிருந்து தினமும் எம் நிலத்துக்கு வருகிறாய்!  இங்குள்ள நீர் நிலைகளிலே மீன் உண்கிறாய்!
பின் அவர் ஊருக்குப் பெயர்ந்து சென்று விடுகிறாய்!  தினமும் தான் என்னிலையை நீ பார்க்கிறாயே………

நான் அணிந்த அணிகலன்கள் அவன் பிரிவால் என் உடலைவிட்டு நெகிழ்ந்து கீழே விழுகின்றன. எனது துன்பத்தை நீ அவனிடம் கூறமாட்டாயா…..?  மீன் உண்ட நீ … இந்த நன்றியை மறக்கலாமா…..?

ஒருவேளை என்மீது அன்பிருந்தும், என் நிலையைத் தலைவனிடம் சொல்ல வேண்டும் என எண்ணியும் உன் மறதி காரணமாகச் சொல்லாது விட்டுவிடுகிறாயா…?’ என்று புலம்புகிறாள் தலைவி.

பாடல் இது தான்….

சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே
எம் ஊர் வந்து எம் உண்துறைத் துழைஇ
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி
அனைய அன்பினையோ பெரு மறவியையோ
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே

(மருதம்)  வெள்ளிவீதியார் எழுதியது.

 

படங்களுக்கு நன்றி

காகம்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “பறவைகளுக்கும் உணர்ச்சி உண்டா?

  1. “காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்ன நீரார்க்கே உள” என்ற குறளில் பகுத்துக் கொடுத்து
    உண்ணும் பழக்கத்தை காககையிடத்தும்,
    “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த இடத்து” என்ற குறளில் தக்க காலம்
    வரும் வரை காத்திருக்கும் பொறுமையை கொக்கினிடத்தும்
    படித்துக்கொள்ள மனிதனுக்கு அறிவுறுத்தினார் வள்ளுவர்.
    ஜடாயு என்ற பறவையை ராம லக்ஷ்மணர்கள் தங்கள் தந்தையாகவே
    பாவித்தனர். எனவே தான் “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று
    பாடினார் மகாகவி பாரதியார். அக்காலத்தில் பறவைகளைக்கொண்டு
    செய்திகளை அனுப்பினர். இப்போது தகவல் தொடர்புக்காக பறவைகளைக்
    காலி செய்யும் காலித்தனம் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது. பாவம்!
    மனிதர்களின் எதிர்காலம்!
    இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.

  2. காலம் காலமாகக் காத்திருந்தும், ஷைலஜா பறந்து, பறந்து வந்தது மகிழ்ச்சியே.

  3. i cried when one of trees in my school campus was cut…my tears are not only for the tree but for the birds… when they would return at the evening how could they find their home 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.