அன்பின் தாரை
இசைக்கவி ரமணன்
ஒவ்வோர் இலையும் ஒவ்வொரு துளியையும்
உணர்ந்து உணர்ந்து ரசிக்கிறது
ஒவ்வொரு முறையும் ஒரேவிதமாய்த்தான்
உயிர்முழு தாக நனைகிறது
செவ்விய மழையின் சேதியை வாங்கிச்
செடியும் கொடியும் படிக்கிறது
செகம் முழுதுமே அகம் குளிருமொரு
சிந்தனைக் கோட்டம் விரிகிறது
மண்ணின் ஒவ்வொரு சின்னத் துகளும்
மழையைப் பருகிக் கரைகிறது
மலையில் அருவிகள் சிலிர்க்கும் குருவிகள்
காட்சியில் முரணே கவர்கிறது
தண்ணீர் என்னும் அமிழ்தம் பண்ணாய்
தரையில் இசைத்து நடிக்கிறது, அதன்
தாள லயத்தில் ஸ்வரத்தில் கிறங்கித்
தரையே கரவொலி செய்கிறது
மண்ணின் காதலும் விண்ணின் கருணையும்
மழையாய்த் தொடர்ந்து வருகிறது
மகா சக்தியின் மண்டும் தயையை
மழையே எனக்குச் சொல்கிறது
கண்ணாய் வாழ்வைக் காக்கும் அன்புக்
கடவுளின் பொழிவைக் காணீர், ஒரு
காதல் போதையில் காளி இசைக்கும்
கவிதையைக் கேட்போம் வாரீர்!
03.11.2014 / திங்கள் / 10.42