புத்தாண்டே வருக! புதுப்பொலிவு தருக!
-மேகலா இராமமூர்த்தி
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல என்றிட்ட ஆன்றோர்கள் நெறிப்படி
ஆண்டொன்று சென்றதே நம்மிடம் விடைபெற்று – புத்
தாண்டொன்று வந்ததே நம்மில்லம் தேடியே!
புத்தம் புதுஆண்டில் புத்தொளி பரவட்டும்!
நித்தமும் மகிழ்ச்சியில் நம்மனம் திளைக்கட்டும்!
பசிப்பிணி அகலட்டும் பகையுமே நீங்கட்டும்!
கசப்புகள் நீங்கியே களிப்பது ஓங்கட்டும்!
மதத்தின் பெயராலே மதங்கொண்டு அலையாமல்
இனத்தின் பெயராலே இன்னல்கள் இழைக்காமல்
இதமாய் இன்சொற்கள் யாவரும் பேசிநல்
விதமாய் நடப்பதே நன்மைகள் விளைத்திடும்!
உலகத்தை வென்றிட்டோம் தொழில்நுட்ப வளர்ச்சியால்
கலகத்தை வெல்லலாம் மதிநுட்பச் செயல்களால்!
வேற்றுமைக் களைதனை வேரோடு அழித்துநாம்
ஒற்றுமைப் பயிர்தனை வளர்ப்போம் என்றுமே!
பார்போற்றும் வண்ணமே நம்செயல் அமையட்டும்!
நேரான பாதையில் நம்முளம் செல்லட்டும்!
பொங்கிடும் மகிழ்வோடு புத்தாண்டை வரவேற்போம்!
தங்கட்டும் மங்கலம் எங்குமே இனிதாக!
Happy new year to all vallamai readers and friends