குழல்வாய் மொழியாள் கொண்ட ஊடல்! (பாகம்-2)

0

மீனாட்சி பாலகணேஷ்

அன்புத் தம்பதிகளுக்குள் வாக்குவாதங்கள் வலுக்கின்றன! உலகமே அவன் காலடியில் பணிந்து கிடக்கும் நாயகனை அவனுடைய காதல் மனையாள் இகழ்ச்சியாகப் பேசி ஏசுகின்றாள்! அவனும் சளைக்காமல் ஏதேதோ சமாதானங்களைக் கூறிய வண்ணம் இருக்கிறான்.

(வெளிப்படையாகத் தெரிவது இச்செய்தி! ஆழ்ந்து நோக்கினால், அவனை இகழ்வது போல, இரு பொருள் படப் புகழ்ந்து உயர்த்திப் பேசி, மகிழ்ந்து தன் மனத்தினுள் கொண்டாடிக் கொண்டிருக்கிறாள் இந்தக் குழல்வாய் மொழியாள் எனத் தான் தெரிகின்றது! அவளுடைய காதல் தலைவனும் சளைக்காமல் மறுமொழியாகத் தன் பங்கிற்குத் தானும் அவ்வண்ணமே உரைக்கின்றான்!)

ரசிக்கத் தகுந்த விதத்தில் புலவர் பிரான் புனைந்துள்ள கவிதை நயத்தைத் தொடர்ந்து பார்க்கலாமே!

“பெருமை நிறைந்த இந்தத் திரிகூட மலையில் இருக்கும் பெண்ணமுதே! இதைக் கேட்டுக் கொள்!  உங்கள் அண்ணனான கண்ணன் வரகினைத் தின்று பின்பு தன் வாயால் அதை எடுத்த கதை உனக்குத் தெரியாதோ? ‘வரகு தின்று வாயால் எடுத்த கதை,’ என்பது ஒரு சொல் வழக்கு. வீணான ஒரு செயலைச் செய்துவிட்டு பின்பு துன்பப் படுதலை விளக்குகிறது. உதாரணமாக, ராகி, சோளம், போன்ற பயிர் வகைகளை அவற்றின் கதிர்களிலிருந்து உதிர்த்துப் பச்சையாகவே உண்ணலாம். அவற்றில் பால் உள்ளதால் மென்று சுவைத்து விழுங்கலாம். வரகு மட்டும் வறண்ட தானியமாதலால், அவ்வாறு விழுங்கினால் தொண்டையை அடைத்துக் கொள்ளும். இந்தப் பழமொழியைக் கவிஞர் சமத்காரமாகக் கையாளுகின்றார் எனத் தெரிகின்றது.

‘உந்தன் அண்ணனான கண்ணன், முதலிலே பிறந்தவன், உலகை விழுங்கிப் பின் தன் வாயாலே அதை எடுத்து அன்னை யசோதைக்குக் காட்டிய பண்டைக் கதை,’ எனப் பொருள் கொள்ள வேண்டும்! முதல்வர் +அ+ கு- (அந்த உலகு).

‘அவன் காலில் போடுகின்ற சிலம்பைக் கையில் போட்டான்; கையில் அணியும் வளையை வாய்மேல் இட்டான்’; இது பித்தன் செய்யும் செயலாகத் தெரிகிறது.  ஆனால் இதன் உட்பொருள் வேறு! ‘பண்டொரு காலத்தில் அவன் மலையைக் கையில் ஏந்தினான்- கோவர்த்தனகிரியைக் கையில் குடையாக ஏந்தினான்! சிலம்பு= மலை எனவும் ஒரு பொருள் உண்டு. வளை என்றால் கைவளை எனவும், சங்கு எனவும் இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். ஆகவே, கையிலணியும் வளையை- சங்கினை ( பாஞ்சசன்னியம் என்னும் சங்கினை) வாய்மேல் வைத்து ஊதினான்,’ என்றார்.

அடுத்து, “பெண்ணொருத்திக்காய் ஒருத்தி புடவை கிழித்தான் அவனே பித்தனாமே,” என்கிறான் குற்றாலநாதன். இதுவும் ஒரு புராணக் கதையை உள்ளடக்கியது! இரணியாக்கன் எனும் அசுரன் பூமாதேவியைக் கவர்ந்து சென்று கடலின் அடியில் ஒளித்து வைத்திருந்தான். திருமால் வராக அவதாரம் எடுத்துக் அக்கடலுள் சென்று அவளை (பூமாதேவியை- உலகை) மீட்டு வந்தான். கடலைப் புலவர் நிலமடந்தையின் ஆடையாகக் கூறினார். பூமாதேவிக்காக நிலமடந்தையின் புடவையைக் கிழித்தான் என்பது கவிதை சொல்லும் நயம். ஆனால் இங்கு அது ‘புதுப்புடவை வாங்கித்தர வக்கில்லாதவன் வேறொருத்தியின் புடவையைக் கிழித்துத் தந்தான்’ எனக் குற்றாலநாதன் கூறுவது பழிப்புரையாகும்.

அண்ணல்வரைத் திரிகூடப் பெண்ணமுதே கேட்டியுங்க ளண்ண னான

கண்ணன்முதல் வரகுதின்று வாயாலெ டுத்தபண்டைக் கதைகே ளாயோ

மண்ணிலொரு காற்சிலம்பைக் கையிலிட்டான் கைவளையை வாய்மே லிட்டான்

பெண்ணொருத்திக் காயொருத்தி புடவைகிழித் தானவனே பித்த னாமே (10)

இப்போது தான் வாக்குவாதம் இக்காலத்து மொழியில் ‘சூடு’ பிடிக்கின்றது! குழல்வாய்மொழியாள் கணவரை நீர் நன்றி மறந்தவர் என ஏசுகின்றாள்!

நீர் என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை! பொருள் தொக்கி நிற்கிறது! “(நீர்) பித்தன் என்று தெரிந்த பின்னும், அதனைப் பொருட்படுத்தாமல் என் அண்ணன் உமக்கு (என்னை) பெண்ணைக் கொடுத்தான்; என் கூடப் பிறந்தவன் ஆகையால் எனது திருமணத்தில் ‘பெண் சீர்’ என அத்தனை சீரும் கொடுத்தான்; உமக்குக் கையில் அம்பாகவும் இருந்தான். ( சிவபிரான் திரிபுரம் எரித்த போது திருமால் அம்பாக இருந்தான்). அப்படிப்பட்ட அந்த மைத்துனனை ஒரு நாளும் பாராட்டாமல், எங்கள் அண்ணன் உமக்குச் செய்த நன்றி அத்தனையும் மறந்து விட்டீரே! சத்தி பீடத்தில் உறைபவரே, இது தாம் உமது வழக்கமோ? சங்கை தானோ?” எனப் பழித்துரைக்கிறாள். (சங்கை- வழக்கம்).

பித்தனென்றும் பாராமற் பெண்கொடுத்தா னவனோடு பிறந்த வாசிக்

கித்தனைபெண் சீருமிட்டாங் கையம்பா வுமக்கிருந்தா னெந்த நாளும்

மைத்துனனைப் பாராட்டி யெங்களண்ணன் செய்தநன்றி மறந்த தாலே

சத்திபீ டத்துறைவீர் செய்தநன்றி நீர்மறந்த சங்கை தானே. (11)

Kutralanatharகுற்றாலநாதன் இப்போது விட்டானா? தன் பங்கிற்கு அவனும் கூறுகிறான்! “மங்கையே! குழல்வாய்மொழியே! உங்கள் அண்ணன் சங்கைக் கையிலெடுத்துக் கொண்டு திரிந்தான். நாம் தான் அவன் மீது இரக்கம் கொண்டு ஒரு சக்கராயுதத்தை அவனுக்குக் கொடுத்தோம். அதாவது, ‘வீணர்கள் கூட்டத்தொடு வெட்டியாகத் திரிந்து கொண்டிருந்தவனுக்கு நான் தான் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தேன்,’ என்பது போலக் கூறுகிறான் குற்றாலநாதன். “சங்கம் எடுத்தே திரிந்தான்; சக்கராயுதம் கொடுத்தோம்,” என்கிறான். கையில் ஏந்திய சங்கு வெறும் ஓசையைத் தான் கிளப்பும்; அப்படிப்பட்ட வெற்றொலி எழுப்பும் சங்கை வைத்துக் கொண்டு திரிந்து கொண்டிருந்தவனுக்கு நான் தான் பகைவரை வெல்லும் பேராற்றல் கொண்ட சக்கராயுதத்தைக் கொடுத்தேன் என்று பெருமை பேசுகிறான் என்கிறார்.

அவன் வெறி (மயக்கம் (அ) பைத்தியம்) கொண்டநரசிம்மமாய் உருவெடுத்த போது வெளிப்பட்ட பெரும் சினத்தைத் தீர்த்து வைத்தோம் (இரண்யகசிபுவை வதைத்து பிரகலாதனைக் காக்க திருமால் நரசிம்ம வடிவு கொண்டது கூறப்படுகிறது); இலக்குமியைப் பார்த்துத் திருமணமும் செய்து வைத்தோம். (பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வந்த இலக்குமியைத் திருமால் மணந்து கொண்டது கூறப்படுகிறது). இதெல்லாம் மறந்து விட்டனையோ? உங்கள் அண்ணன் நாம் செய்த இவற்றையெல்லாம் மறந்து போனதால்- செய்த நன்றி மறந்ததால் எங்கெல்லாமோ சென்று பாலைத் திருடி அதனால் உடலில் எங்கெல்லாமோ அடியும் படுவதற்காயிற்றே,” என்கிறான்.

சங்கமெடுத் தேதிரிந்தான் சக்கராயு தங்கொடுத்தோம் தலைநாட் கொண்ட

சிங்கவெறி தீர்த்தருளிச் செய்யாளை முகம்பார்க்கச் செய்தோம் கண்டாய்

மங்கைகுழல் வாய்மொழியே யுங்களண்ணன் செய்தநன்றி மறந்த தாலே

எங்கெல்லாம் பால்திருடி யெங்கெல்லா மடிபடவு மேது வாச்சே. (12)

அவளது அண்ணனைத் தொடர்ந்து  பழிக்கிறான் காதல் கணவன்; அவ்வளவில் அம்மையின் சினம் இன்னுமே மிகுகிறது!! “திரிகூடமலைக்கு இறைவரே! சொன்ன பேச்சை மறந்தீரோ! இவ்வளவு ஏச்சும் பேச்சும் வந்து தலையில் விழுந்தது எங்கள் அண்ணனுக்கா, உமக்கா எனச் சிறிது சிந்தித்துப் பாரும். எங்கள் அண்ணன் கண்ணன்  இடைச்சியர் காய்ச்சி வைத்திருந்த பாலைத் திருடிக் குடித்தான்; நான் ஒத்துக் கொள்கிறேன்; நீங்களோ எனில் என்ன செய்தீராம்? வேடன் கொடுத்த எச்சில் மாமிசத்தை உண்டீர் ( கண்ணப்பர் வாயில் அதுக்கிக் கொண்டு வந்து அர்ப்பணித்த மாமிசத்தை ஏற்றுக் கொண்டீர்).

“எங்கள் அண்ணனாவது ஆய்ச்சியர் கையால் தான் அடி பட்டான். அதுவும் கருணையினால் தான் அவ்வாறு அடிபட்டான்! நீரோ  பேடியின் கையால் அல்லவோ அடி பட்டீர்!  மறந்து போயிற்றோ?” எனக் கேட்கிறாள். (பேடு; பேடி- அர்ச்சுனன்). இங்கு மகாபாரத நிகழ்ச்சி ஒன்றைக் கூறுகிறாள் நம் காவியத் தலைவி.

பாண்டவர்களின் அஞ்ஞாத வாசத்தின் போது அர்ச்சுனன் பிருஹன்னளை எனும் பெயர் கொண்ட பேடியாக (திருநங்கையாக) இருந்தான்; அவன் பாசுபதாஸ்திரம் பெற வேண்டித் தவமிருந்த போது சிவபிரான் கிராதனாக (வேடுவனாக) வேடம் தரித்து வந்து அர்ச்சுனனுடன் வாது செய்தான் (கிரதார்ஜுனீயம்). அப்போது அர்ச்சுனன் கையால் சிவபெருமான் அடிபட்டான். இதைத்தான் ‘நீரும் தான் பேடி கையால் அடிபட்டீர்,’ என ஏளனமாகக் கூறுகிறாள்.

வாய்ச்சதிரி கூடமலைக் கிறையவரே சொன்னமொழி மறக்க வேண்டா

ஏச்சுவந்து சுமந்ததெங்க ளண்ணற்கோ வுமக்கோவென் றெண்ணிப் பாரீர்

காய்ச்சியபால் கண்ணனுண்டான் வேடனெச்சில் நீர்கலந்தீர் கருணை யாமா

லாய்ச்சியர்கை யாலடிபட்ட டானையநீர் பேடிகையா லடிபட் டீரே. (13)

இப்போது இந்த சொற்போர் கேட்போருக்கு மிக்க சுவையடையதாகிறது. இறைவனும் இறைவியுமாகிய தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்வதாகக் கற்பனை செய்து, சிவன், திருமால் ஆகியோரின் திருவிளையாடல்களை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் திரிகூட ராசப்பக் கவிராயர்.

குற்றாலநாதன் குழல்மொழியாளிடம் கூறுகிறான்:: “இவ்வாறு அடிபடுவது, ஆய்ச்சியர்கள் கறந்து  வைத்த பாலைக் களவாடிக் குடிப்பது என இருந்தவனும் அரசனாக ஆசைப்பட்டான்! எப்படித் தெரியுமா? முடித்தலையில்  ஒரு மணி முடியுமின்றிப் புரந்தான்! (தலையில் ஒரு முடியுமின்றிப் புரந்தான் எனவும் கொள்ளலாம். அதாவது மாபலி பால் மூன்று அடி மண் கேட்டுத் தானம் பெற்ற போது பிரம்மசாரியாக, மொட்டைத் தலையனாக நாட்டை இரந்து தானமாகப் பெற்றானே ஒழிய அரசனாகவா பெற்றான்?) அவன் பழகியதெல்லாம் பால் கலயங்களுடனும் பசுக்கூட்டங்களுடனும் தானே!

இவன்  இடைக் குலத்தில் பிறந்தவனோ, எது (யாதவ குலம் அல்லது எந்தக் குலம் என இருவிதமாகப் பொருள் கொள்ளலாம்) குலத்தில் பிறந்தவனோ? அரச குலத்தில் பிறக்கவில்லை! எந்தக் குலத்தவன் என யாரறிவார்?” (ஆசை இருக்கு தாசில் பண்ண; அதிர்ஷ்டமிருக்கு கழுதை மேய்க்க என்பது போல, ஆசை இருக்கு அரசனாக; ஆனால் அதிர்ஷ்டமிருக்கு ஆநிரை மேய்க்க!)

யாதவ வம்ச திலகன், யது குல திலகன் எனத் திருமாலை வருணிப்பர். இங்கு இவன் செய்கைகள் முன்பின்னாக, ஏறுமாறாக இருப்பதால் இவன் எக்குலத்தவனோ என ஐயப்படுவது போல இவ்வாறு கேட்கிறான் குற்றாலநாதன்.

அடிப்பதுவு மாய்ச்சியர்பால் குடிப்பதுவு மிசைந்தானு மரச னாக

முடித்தலையில் முடியுமின்றிப் படிபுரந்தா னுமுனது முன்வந் தானும்

படிக்கலமும் பசுநிரையும் பயின்றானுங் குழல்மொழிப்பூம் பாவை கேளாய்

இடைக்குலத்திற் பிறந்தானோ எதுகுலத்திற் பிறந்தானோ இவன் கண்டாயே. (14)

மிகுந்த சினம் இப்போது பொங்கி வெடிக்கிறது குழல்வாய் மொழியாளிடம்! கூறுவாள்: “பார்த்துக் கொண்டுள்ள போதே, வேறு கன்னியருக்காக என்னைப் பிரிந்து சென்ற செருக்கோ உமக்கு? இல்லை, அவர்களுடன் கூடி மகிழ்ந்து குலாவியதால் வந்த செருக்கோ? அதனால் தான் எங்கள் அண்ணனின் குலத்தைப் பற்றிக் குற்றம் சொல்ல வந்து விட்டீர்கள் போலுள்ளது. முற்காலத்தில் இருந்த உமது பழமையான குலத்தைப் பற்றி நான் கூறலாகுமோ ஐயா? பரமரே! நீர் என் அண்ணன் குலத்தைச் சேர்ந்த என்னை தாரமாகக் கொண்ட பின்னரும் இவ்வாறு அந்தக் குலத்தைப் பற்றிப் பழித்துப் பேசுவது நியாயமா? அந்தப் பழி உமது மனையாளான எனக்கும் ஆகாதோ? குற்றாலக் கூத்தனாரே!” என்கிறாள்.

குற்றாலம் சிவபிரானின் ஐந்து நடனசபைகளில் ஒன்றான சித்திரசபையாகும். ஆகவே அவரைக் கூத்தனாரே என விளிக்கிறாள்! மேலும், சிவபிரான் ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் பழம் பொருள். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருள் அவனல்லவோ? அதைத்தான் மறைமுகமாக, “உமது பழமையான குலத்தைப் பற்றி என்னாலுமே கூற இயலுமோ?” என்கிறாள். எவ்வளவு அழகான தூற்றுமறைத் துதியாக இப்பாடல்கள் அமைந்துள்ளன. படிக்கப் படிக்க நெஞ்சம் களி கொள்கின்றதே!

கண்டிருந்தும் கன்னியர்க்கா வெனைப்பிரிந்த மதந்தானோ கலவித் தேற

லுண்டிருந்த மதந்தானோ எங்களண்ணன் குலத்தில்மறு வுரைத்தீ ரையா

பண்டிருந்த வுமதுகுலம் நான்சொன்னாற் பழுதாமோ பரம ரேநீர்

கொண்டிருந்தும் குலம்பேசல் ஞாயமோ குற்றாலக் கூத்த னாரே. (15)

இவ்வாறு குழல்மொழியாள் கூறியதும் பரமனான குற்றாலநாதன் உள்ளம் அவள் பால் உருகிக் குழைந்து விடுகிறது.

“பூக்கள் நிறைந்த குற்றாலத் திரிகூட மலையின் சிகரத்தில் (என்னோடு கூடி) வாழும் பசுமையான கிளி போன்றவளே! நான் கூத்து நடத்திய (நடனமாடிய) பதத்தினைக் கண்டு தரிசனம் செய்ய ஏங்கி இருந்தனர் முனிவர்கள். அவர்களுடன் இந்திரன் முதலான தேவர்களும் காத்திருந்தனர். இவர்களுக்குக் கொலுவிருந்து காட்சி கொடுத்து மகிழ்விப்பதற்காகத்தான் உன்னைப் பிரிந்து நீயறியாமல் (கரந்து) சென்றோம் யாம். நீ என்னவென்றால் ஊடல் கொண்டு இப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாம் எனக்கு எதிராக உரைத்தால் நான் என்ன செய்வேன்?” என்று தழைந்து வந்து குழைந்து கேட்கிறான்!

கூத்திருந்த பதம்பெறவே கொதித்திருந்த முனிவர்கட் கொலுச்சே விக்கக்

காத்திருந்த தேவர்களுங் காட்சிபெற வேண்டியுனைக் கரந்து போனோம்

பூத்திருந்த திரிகூடப் பொருப்பிருந்த பசுங்கிளியே புலவிக் காக

வேத்திருந்த வார்த்தையெல்லா மெதிர்த்திருந்து நீயுரைத்தா லென்செய் வோமே. (16)

இதனைக் கேட்டபின் அவளும் வாளாவிருப்பாளா? குழல்வாய் மொழியாளின் மனமும் இப்போது பாகாய்க் கரைந்து பனியாய் உருகி விடுகிறது. “என் மீதும் பக்தி இல்லாத தேவர்களும் உண்டோ கூறுவீர்! (இதை இருவிதமாகப் பொருள் கொள்ளலாம்; உம்மைக் காணக் காத்திருந்த தேவர்கள் அனைவருக்கும் உமது சரிபாதியாகிய என்மீது பக்தி இல்லாமல் போகுமோ? ஆகவே நீவிர் எம்மையும் கூட அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என ஒரு பொருள்; மற்றது தேவரீர் என்மீது அன்பு (பற்று) வைத்திருந்தீர் ஆயின் என்னையும் தாங்களே உடன் அழைத்துச் சென்றிருக்கலாமே என்பது). என்னைப் பிரிந்து தனியாக வீதியில் போவது நீதியாகுமா தென் திசைத் திரிகூட மலையில் உறையும் செல்வரே!

என் மேலும் தான் தவறுண்டு. அது என்ன தெரியுமா? உம் மீது முன்பே கொண்ட காதல்  எனும் குற்றம் உண்டு. (அதனால் தான் இவ்வாறு கடும் சொற்களைப் பேசி விட்டேன்). உமது சொற்களுக்கு எல்லாம் எதிர்ச் சொற்கள் கூறி விட்டேன் என்பதால் என்மேலும் குற்றம் உண்டு தான். கூறியதனைத்தும் நான் தானே! இதனால் என் தமையன் மேல் குற்றம் உண்டோ? (இல்லை என்பதாகும்). உம் முன்பு தலை வணங்கி நிற்கிறேன்,” என்கிறாள்.

என்மேலும் பத்தியில்லாத் தேவருண்டோ எனைப்பிரிந்து வீதி போகத்

தென்மேவு திரிகூடச் செல்வரே நீதியுண்டோ தேவரீர் மேல்

முன்மேவுங் குற்றமுண்டு திருவாக்குக் கெதிர்வாக்கு மொழிந்த தாலே

தன்மேலும் குற்றமுண்டு தமையனார் மேலுமுண்டோ தாழ்த்தி தானே. (17)

இப்போது குற்றாலநாதனின் மனம் முற்றும் குழல்வாய்மொழியாள் பால் அன்பால் கனிந்து உருகிவிடுகின்றது. அவன் கூறுகிறான்: “குழல்மொழியே; பூவின் சாயலைக் கொண்ட மாதே!” எனக் கனிவாக அவளை அழைக்கிறான்; “அண்ணனென்றும் தங்கை என்றும் நான் உங்கள் இருவரையும் பிரித்து வேறுபடுத்திப் பார்த்ததில்லை; உமையவளே! உன் தமையன் உனக்கு மிக்க அருமையானவன்; அப்படியானால், எனக்கும் அவன் அருமையானவன் ஆகின்றான் அல்லவோ? நீ என்னைப் பற்றிக் குறைகள் கூறினாய்; ஆகவே நானும் அவனைப் பற்றி நையாண்டியாக (கேலிப் பேச்சாக) சில வார்த்தைகள் சொன்னேன். வானவர்கள் என் பதம் காண வேண்டி வந்ததால் நானும் செல்லும்படி நேர்ந்தது; அதனால் தானே இத்தனை வாக்கு வாதங்கள் நிகழ்ந்து விட்டன். இதைப் பொறுத்துக் கொள் அம்மா, இமயமலையில் வாழும் பெண்மணியே!” என மிகவும் வினயமாக வேண்டிக் கொள்கிறான் நமது காவியத் தலைவன் குற்றாலநாதன்.

தமையனென்று தங்கையென்று வேற்றுமையென் குழன்மொழிப்பூஞ் சாயல் மாதே

உமையவளே தமையனுனக் கருமையென்றா னமக்குமவ னருமை யாமே

நமையுமோரிங் குறையுரைத்தாய் நாமவனைச் சரசமாக நவின்றோம் கண்டாய்

இமையவர்கள் வேண்டுதற்கா இத்தனையும் பொறுத்தருள்வாய் இமய மாதே. (18)

இப்போது குழல்வாய் மொழியாளுமே பெரிதும் நாணம் கொள்கிறாள். ‘அவசரப்பட்டு என்னென்ன பேச்சுக்கள் பேசி விட்டோம் நாம்,’ எனக் காதல் கணவனிடம் மன்னிப்பும் கேட்கிறாள்.

“ஒப்பற்ற தேவரான நீவிர் ஆடியது திருக்கூத்தாயிற்று. (குற்றாலநாதன் சித்திரசபைக் கூத்தன் என்பது பொருள்; இவ்வாறு என்னை ஊட வைத்து வேடிக்கை பார்த்தது நீர் ஆடிய திருக் கூத்து (விளையாட்டும்) ஆயிற்று எனவும் இன்னொரு பொருள்). வலிமை மிக்கவர் (கொடியவர்கள்; அரக்கர்கள்) தவறுகள் செய்தால் நீங்கள் அதனைப் பொறுத்து செமிக்க (மன்னிக்க) மாட்டீர்கள்! ஆனால் கரிய ஆலகால நஞ்சினை விழுங்கி சீரணம் செய்து விடுவீரே நீர்” (சிவபிரான் ஆலகால விடத்தை உண்டு செரித்ததைப் பெருமையாகக் கூறுகிறாள் குழல்வாய்மொழியாள்).

பிறகு அவனிடம் இன்னும் வேண்டுகிறாள்: “நீங்கள் எனக்குக் கொடுக்கும் படி (படி- செலவினை ஈடுசெய்யத் தரும் பணம்- பஞ்சப்படி, அகவிலைப் படி என்பது போல) போதாது. (இருநாழிப் படி நெல்லைக் கொடுத்து முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றக் கூறினீர்கள்;) எனக்கு அது போதாது பெருமானே! பொன்னும் பூணும் அணிகளும் கிடைக்கும் உபாயத்தைக் கூறினால் எனக்கும் பெருமையாக இருக்குமே,” என்கிறாள்.

“நீர் குற்றால ஈசுவரர்; ஐசுவரியம் உடையவன் ஈசுவரன். உம்முடைய ஐசுவரியத்தை மறைத்து வைத்திருக்கும் வஞ்சகத்தை என்னிடம் சொன்னால் அது உமது பெருமையைச் சொன்னதாகாது அல்லவோ?” எனவும் கேட்கிறாள்.

மாதேவர் நீரொருவ ராடினது கூத்தாச்சு வலியோர் செய்தால்

தீதேதுஞ் செமியாதீர் குற்றால நஞ்சையுண்டு செமிப்பீ ரையா

போதாது நீரளக்கு மிருநாழிப் படியெனக்குப் பொன்னும் பூணுஞ்

சூதான வகைமுழுதுஞ் சொன்னாலென் னாற்பெருமை சொல்ல லாமோ. (19)

கடைசியாக எல்லா ஊடல்களும் வந்து முடிவது இங்குதானே (வேண்டுவது ஒரு பரிசு- அது புடவையோ, நகையோ, ஏதோ ஒன்று) என எண்ணினாரோ என்னவோ புலவர். அண்ணல் குற்றாலநாதன் கூற்றாகக் கூறுகிறார்: “சொர்ணமலை உனக்குச் சொந்தமாயிற்று;(சிவபிரான் திரிபுரம் எரித்த போது பொன்மலை அம்மையின் கையில் வில்லாகத் தங்கியது. அதனால் தன்னதாயிற்று). வெள்ளிமலையும் ( இமயமலையும்) உனக்கே சொந்தமாயிற்று; இனி வேறு ஒரு பொருளும் சொந்தமாக வேண்டுமோ? பெண்களுடைய பேதைமைக் குணம் (அறிவற்ற செயல்)  இது போல் உண்டோ? (‘எப்போதுமே இவ்வாறு தான்’ என எதிர்மறையாக உணர்த்தினார்) எண்ணுவதற்கு அரிய பயிர்கள் விளையும் நிலங்களையும், நல்ல நகரங்களையும் நவநிதியையும் ஆராய்ந்து உனக்கே சொந்தம் என்று நான் அளிக்கிறேன், கொஞ்சு மொழி பேசும் குழல்வாய்மொழியாளே! உனக்கே தந்தேன்; இதற்கான பட்டயத்தையும் தந்தேன் பார்!” என்று அருளுகிறான் குற்றாலத்து ஐயன்.

சொன்னமலை தனதாச்சுப் பொன்னுலகு வெள்ளிமலை சொந்த மாயிச்

சின்னமொரு பொருளுமுண்டோ பெண்கட்பே தமைக்குணந்தா னிதுபோ லுண்டோ

உன்னரிய விளைநிலமு நன்னகர நவநிதியு முனக்கே யென்று

பன்னிகுழல் வாய்மொழியே பாலித்தோம் பட்டயமும் பாலித் தோமே. (20)

தலைவன் தணிவித்தால் ஊடல் எளிதில் தீர்ந்து விடும் பண்பு தலைவியினுடையது ! குழல்வாய் மொழியாள் இப்பண்பைப் பெற்றவள். ஊடுவதற்கு ஒரு காரணமும் உண்மையில் இல்லையாயினும் தலைவி பொய்யான ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு ஊடுதல் பின் ஊடல் தீர்தல் ஆகியன பெண்மைக்குரிய பேதைமைக் குணம் என்கிறார்.

எவ்வாறாயின் என்ன? நமக்கு ஒரு அழகான சொல் நயம், பொருள் நயம் செறிந்த சிறு இலக்கிய நூல் படித்துச் சுவைக்கக் கிட்டியதல்லவா?

(திருக்குற்றால ஊடல் முற்றிற்று)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *