கிரேசி மோகன்
‘நான் -யார்’ ரமண வழி வெண்பாவாக்கம்….
————————————————————————–

images

வாழும் உயிர்கள் விரும்புவது ஆனந்தம்,
சூழுமா னந்தமுன் சொரூபமே, -பாழும்
மனமில்லா தூக்கத்தில் மாசற்ற இன்பம்,
வினவு ‘நான் யார்’தான் வழி…

தூல உடலோடு துய்த்திடும் ஐம்புலன்கள்,
கோலமதைக் காக்குமைம் காவலர்கள், -காலதேச
சேதி உணர்வற்ற ஜீவனும்நீ அல்ல
நேதிநேதி செய்தமீதி நீ….

களவுமனம் நீங்கும் களைப்புற்று, கூட்டுக்
களவாணி புத்தி குலையும், -உலகம்
பழுதில் படர்ந்திடும் பாம்பென்(று) அறிவாய்;
கழுதைக்கு கற்பூரம் காட்டு….

மந்திர வாதிமனம் மந்திமனம், எண்ணத்தை
உன்திறனாய்க் காட்டும் உலுத்தனவன், -தந்திரமாய்
எண்ணத்தைப் போக்கடித்து ஏதுமனம் என்றுணர்ந்து
பின்னத்தைப் பூரணத்தில் பார்…

எண்ணியதால் வந்ததே ஏழுலகும், தூக்கத்தில்images (1)
கண்ணிமைகள் மூட ககனமில்லை, -நின்னயர்வு
சொப்பனத்தில் தோன்றிடும், ஜாக்ரத்தில் ஊன்றிடும்
இப்புவிக்கு இல்லை இருப்பு….

வீட்டுச் சிலந்தி வலையுமிழ்ந்து தன்னுள்ளே
மீட்டுக்கொள் ளல்போல் மனச்சிலந்தி, -காட்டிய
உலகை கபந்தனாய் உண்டு மறைத்து
கலகம் புரியும் கனவு….

தானாயும் தூங்காது, தள்ளிப் படுக்காது,
போ!நாயே என்றாலும் போகாது, -ஆணாய்,
அழகாய், அருவருப்பாய் அத்வைதம் போக்கிப்
பழகும்நான் யாரென்று பார்….

மூலம் இதயத்தில், நிர்மூலம் உதயத்தில்,
வேலையோ செப்பிடு வித்தையாம், -தோலை
உபாசிக்கும் ‘நானை’ , உதாசீனம் செய்ய
சபாபதிக்(கு) ஈடாய் சமம்….

எந்திரமாய் ‘நான்நான்’ எனவுள் ஜபித்தாலும்
மந்திரத்தில் மாங்காய் முளைத்தலாய், -பொந்திதய
மூலத்தில் போய்மனம் முங்கி மறைந்திடும்:
தாளத்தை மாற்றத் தவம்……கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.