கிரேசி மோகன்

 

உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு
————————————————-

1294
காப்பு
——–

சைவதிற்(கு) ஆண்டாள், சிவனின் மனம்புரிந்த
மொய்விரித்தக் கூந்தலால் மேனிமூடும் -தெய்வத்தாய்
அக்கமகா தேவியே அம்மல்லி கார்ஜுனரை
சொக்கவைத்தத் தோழி சரண்….(0)….
——————————————————————

akka-mahadevi-220x300

மனத்தலையைக் கொய்து மயானத்தில் நித்தம்
தனித்தலையும் தேவாதி தேவன் -பனிதலையன்
சென்னமல்லி கார்ஜுனன் சேவடி சேர்ப்பிக்க
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(1)….

கோலுக்குக் குரங்காக நூலுக்கு பொம்மையாய்
தோலுக்குள் ஆடுகிறான் தாண்டவம் -மேலுக்கு
சென்னமல்லி கார்ஜுனன் சொன்னபடி ஆடினால்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(2)….

கரங்களில் ஓடு கிராமத்தில் பிச்சை
கிறங்கிட பாழடைந்த கோயில் -குரங்கென
சென்னமல்லி கார்ஜுனனை சிக்கென்(று) அணைத்திட
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(3)….

கணுவில் கசப்பாய் கரும்பில் இனிப்பாய்
அணுவிற்குள் அண்டத்தை ஆளும் -குணவானாம்
சென்னமல்லி கார்ஜுனனை என்னசொல்லிச் சேர்ந்தாலும்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(4)….

மன்ணில் புதையலாய் மாங்கனியில் தீஞ்சுவையாய்
உன்னில் உணர்வாய் ஒளிந்தமுக் -கண்ணனவன்
சென்னமல்லி கார்ஜுனரின் சர்வ வியாபகமே
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(5)….

 
புல்லினோடு பச்சையாய் பூவினோடு வாசமாய்
கல்லினோடு கெட்டியாய்க் குந்தியவன் -‘எல்லிநோடு’
சென்னமல்லி கார்ஜுனரை சிந்தை நினைந்திட
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(6)….

மன்றாடி வாழ்வோர்க்கும், அன்றாடங் காய்ச்சிக்கும்
தின்றாடி தீர்ந்தபின் துக்கம்தான் -மன்றாடி
சென்னமல்லி கார்ஜுனராம் அன்னமள்ளி உண்டிட
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(7)….

சாவில் பறிபோகும் சாசுவதம் எல்லாமே
ஆவி பிரியும்முன் அக்கமகா -தேவியின்
சென்னமல்லி கார்ஜுனரை சென்னியள்ளிச் சூடிட
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(8)….

 
கூத்தாடும் வேளையில் கோவணம் போனது
தோத்தாடும் நேரத்தில் தான்தெரியும் -மாத்தாடு
சென்னமல்லி கார்ஜுனரின் கன்னலொலி நாமத்தை
உன்னையள்ளுக் கொள்ளும் உவப்பு….(9)….

திகம்பர ஆடை திருநீறு வாடை
அகம்புறத்தில் நீராடும் மேடை -சுகம்பெறும்
சென்னமல்லி கார்ஜுனரின் சாரணர்க்கு சேவகம்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(10)….

சூரணம் ஆயிரம் சூழப் படுக்கையில்
தேறணும் தேகமென்று தேம்பிடாது -நீறணி
சென்னமல்லி கார்ஜுனனின் எண்ணிலாத பேர்சொல்ல
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(11)….

உமிக்குநீர் ஊற்ற உயருமோ நெல்லாய்!
குமித்த பழவினைகள் குன்றும் -நிமித்தமாய்
சென்னமல்லி கார்ஜுனரின் எண்ணமல்லி வாசத்தால்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(12)….

வாழை வனம்புகுந்து பாழும் வினைகளைந்து
ஆழ வசனித்த அக்கம்மா -தோழனாம்
சென்னமல்லி கார்ஜுனரை சிந்திக்க சித்திக்கும்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(13)….

தேடிக் களைத்துள்ளம் வாடி வதங்கிட
கோடிக்கை கொண்டாலும் காட்டிடுவான் -வேடிக்கை
சென்னமல்லி கார்ஜுனரின் சேவடி ஜோடிதான்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(14)….

நெய்தடவும் மீசையும் பொய்தடவும் பாஷையும்
மைதடவும் மங்கையும், மூப்புற -கைவிடுமே!
சென்னமல்லி கார்ஜுனரால் சின்னவய சாகிடுவாய்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(15)….

உடம்பை வளர்த்து உயிரை தளர்த்த
இடம்பிடிப்பாய் ஸ்ரீசைல ஈசன் -குடும்பத்தில்
சென்னமல்லி கார்ஜுனம் சொன்னவண்ணம் ஊர்ஜிதிக்க
உன்னயள்ளிக் கொள்ளும் உவப்பு….(16)….

வெக்கமென்ன மானுடா அக்கமகா தேவியின்
சக்களத்தி ஆகிநீ சண்டையிடு -அக்கணமே
சென்னமல்லி கார்ஜுனம் என்னதிது என்றுவர
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(17)….

காமனிடம் கால்பிடித்துக் கெஞ்சாதே, கையேந்தி
சோமனிடம் பிச்சைக்குச் செல்லாதே -ஷேமமாய்
சென்னமல்லி கார்ஜுனர்முக் கண்ணசையக் காதலாய்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(18)….

பொய்யடைத்துப் பேசி பொருள்குவித்துப் போகுங்கால்
கையெடுத்துப் போகுமோ கூன்முதுகா -உய்படுத்து
சென்னமல்லி கார்ஜுனரின் சன்னிதியில் நிம்மதியாய்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(19)….

ஆர்ப்பரித்து ஓடிவந்த ஆகாச கங்கையின்
நீர்பரப்பை வார்சடையால் நேர்படுத்தி -பார்விடுத்த
சென்னமல்லி கார்ஜுனரின் சீதளம் சீர்படுத்த
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(20)….

திருநீறு மஞ்சள், திகம்பரம் ஆடை
குருபாத தீர்த்தம் குளியல் -மறுநாளை
சென்னமல்லி கார்ஜுனரின் சித்தமென்று சாய்ந்திருக்க
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(21)….

சொப்பன வாழ்விது கொப்பள நேரம்தான்
எப்போ(து) உடையுமென்(று) யாறிவார் -அற்புதம்
சென்னமல்லி கார்ஜுனன் சுண்டு விரலசைய
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(22)….

வசமான லிங்க எசமானன் மீது
பசவண்ணன் சிஷ்யை புகன்ற -வசனத்தை
சென்னமல்லி கார்ஜுனரின் சன்னிதியில் செப்பிட
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(23)….

மாற்றான் வனச்சென்ன மல்லியே ஆனாலும்
நோற்றாளக் கம்மா நமக்காக -போற்றுஅச்
சென்னமல்லி கார்ஜுனரை சொன்ன வசனத்தால்
உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(24)….

ஏகனை, தேவியுமை பாகனை, தேவாரப்
பாகனை, அக்கம்மா ராகனை, -மோகனை
எண்ணியிரு பத்தைந்து பண்ணிசைக்கச் சொன்னவனை
சென்னமல்லி கார்ஜுனனைச் சூடு….(25)….கிரேசி மோகன்….
—————————————————————————————

படங்களுக்கு நன்றி ; http://solvanam.com/?p=10377

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *