வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 2

1

என்.கணேசன்

முக்கியமானதை முதலில் படியுங்கள்!


வாழ்க்கையில் பாடங்களை விரைவாகப் படித்துத் தேறுவது முக்கியம் என்பதைப் பார்த்தோம். ஏனென்றால் வாழும் காலம் இவ்வளவு தான் என்பது படைத்தவன் மட்டுமே அறிந்த ரகசியம். ”நான் வயதில் சிறியவன். எனக்கு இதை எல்லாம் படிக்க இன்னும் நிறைய காலம் இருக்கிறது, அதனால் நிதானமாய் பின்பு படித்துக் கொள்கிறேன்” என்று எந்த இளைஞனும் சொல்லி விட முடியாது. ஏனென்றால் படிக்க ஆரம்பிக்கும் முன்பே வாழ்க்கை முடிந்து போகின்ற துரதிர்ஷ்டசாலியாகி விட அவனுக்கு வாய்ப்புகள் நிறைய உண்டு. அதே போல “எனக்கு வயதாகி விட்டது. அதனால் நான் இனி படிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று எந்த முதியவரும் அலட்சியமாக இருந்து விட முடியாது. கடைசி மூச்சு வரை நீடிக்கும் இந்த வாழ்க்கைப் பாடங்களைப் படிக்கத் தவறினால் தோல்வியின் உரசல்களில் காயப்பட்டு வருந்த நேரிடும்.

வாழ்க்கைப் பள்ளியில் தேர்வு முறை வித்தியாசமானது. சாதாரண பள்ளிகளில் வைப்பது போல தேர்வுகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் வைக்கப்படுவதில்லை. தேர்வுகள் முன் கூட்டியே அறிவிக்கப்படுவதில்லை. எந்நேரமும் வாழ்க்கை உங்களை பரீட்சித்துப் பார்க்கலாம். அந்த நேரத்தில் நீங்கள் தயாராக இருந்து அந்தத் தேர்வில் தேற வேண்டும். எனவே எந்நேரமும் பரீட்சிக்கப் படலாம் என்ற உண்மை உணர்ந்து தயார்நிலையில் இருப்பது அறிவுடைமை.

முதலில் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களைப் படித்துக் கொள்ள வேண்டும். எதெல்லாம் அவசியத் தேவைகளோ, எதெல்லாம் நம் நிம்மதியான வாழ்க்கைக்கு முக்கியமோ அதையெல்லாம் படித்துத் தேறுபவன் எந்தக் காலத்திலும் பாஸ் மார்க் வாங்கி முன்னேறிக் கொண்டே போகலாம். அதைக் கற்றுக் கொள்வதில் எந்தத் தயக்கமும் காட்டி விடக் கூடாது. அதை விட்டு விட்டு மற்றவற்றை எவ்வளவு அறிந்து வைத்திருந்தாலும் அது யதார்த்த வாழ்க்கைக்கு உதவாது.

ஒரு கர்வம் பிடித்த அறிவாளி ஆற்றில் பயணித்த கதையை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். அந்த அறிவாளி ஏராளமான புத்தகங்களைக் கரைத்துக் குடித்தவர். பல விஞ்ஞானக் கோட்பாடுகளை நுணுக்கமாக அவரால் விவாதிக்க முடியும். பல மொழிகளில் அவர் நல்ல பாண்டித்தியம் பெற்றவன். என்ன தலைப்பை அவருக்குத் தந்தாலும் அவரால் அதைப் பற்றி விரிவாக விளக்க முடியும். அதனால் அவனுக்கு நிறையவே கர்வம் இருந்தது. ஒவ்வொருவரிடமும் அவர் அறியாதவற்றைக் கேட்டு அவர் திணறுவதை ரசிப்பார்.

ஒருமுறை அவர் ஆற்றைக் கடந்து பயணிக்க வேண்டி இருந்தது. படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆற்றில் பயணித்தார். படகோட்டியைப் பார்த்தாலே படிக்காதவன் என்பது அவருக்குப் புரிந்தது. அவன் தன் படகில் எப்படிப்பட்ட அறிவு ஜீவியை அழைத்துக் கொண்டு போகிறான் என்பதை அவனுக்கு அவர் உணர்த்த விரும்பினார். அவனிடம் அவர் அது தெரியுமா, இது தெரியுமா என்று பெரிய பெரிய விஷயங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டே வந்தார். அவனோ பலவற்றின் பெயரைத் தன் வாழ்க்கையில் இது வரை கேட்டறியாதவன். அவன் தெரியாது, தெரியாது என்று பரிதாபமாகச் சொல்லிக் கொண்டே வந்தான். இதெல்லாம் தெரியாத உன் வாழ்க்கை வீண் என்பதைப் பல விதங்களில் அந்த அறிவாளி அவனுக்கு உணர்த்திக் கொண்டே வந்தார்.

திடீரென்று ஆற்றில் வெள்ளம் வந்து விட்டது. வெள்ளத்தில் அந்தப் படகு தத்தளித்தது. படகோட்டி அவரைக் கேட்டான். “ஐயா இத்தனை தெரிந்த உங்களுக்கு நீச்சல் தெரியுமா?”

அந்த அறிவு ஜீவிக்கு நீச்சல் தெரிந்திருக்கவில்லை. வேறொன்றுமே தெரியா விட்டாலும் நீச்சல் தெரிந்த அந்த படகோட்டி நீந்தி உயிர் பிழைத்தான். ஆனால் அது தவிர எத்தனையோ தெரிந்திருந்த அந்த அறிவாளி வெள்ளத்தில் மூழ்கி இறந்தார். எத்தனை தெரியும் என்பது முக்கியமல்ல. உங்கள் வாழ்க்கைக்கு அந்தந்த காலத்திற்குத் தேவையான முக்கியமானவற்றை நீங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்களா என்பதுதான் முக்கியம். அது தெரியாமல் அதைத் தவிர பாக்கி எல்லாமே தெரிந்து வைத்திருந்தாலும் மற்றவர்கள் உங்களை மேலாக நினைக்க அவை உதவலாமே ஒழிய வாழ்க்கையில் அந்த குறிப்பிட்ட காலத்தை சமாளிக்க அவை உதவாது.

எனவே வாழ்க்கைக்கு முக்கியமான விஷயங்களை முதலில் கற்றுத் தேறுங்கள். எதெல்லாம் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ அத்தியாவசியமோ அதைத் தேவையான அளவு பெற்றிருங்கள். எந்த குணாதிசயங்கள் வாழ்க்கையைத் தாக்குப் பிடிக்கத் தேவையோ அந்தக் குணாதிசயங்களைக் கண்டிப்பாக வளர்த்துக் கொள்ளுங்கள். அவை என்ன என்று கேட்க நீங்கள் மற்றவர்கள் உதவியை நாட வேண்டியதில்லை. வாழ்க்கை உங்களுக்குத் தரும் சோதனைகளைக் கூர்ந்து கவனியுங்கள். எதையெல்லாம் உங்களால் சரியாக சமாளிக்க முடியவில்லையோ அதில் எல்லாம் நீங்கள் கற்றுத் தேற வேண்டியது இருக்கிறது.

எந்தக் குறையால் ஒரு சூழ்நிலையை சமாளிக்க முடியவில்லை என்று யோசியுங்கள். உடனடி பதிலாக விதி, சொந்தக்காரன், பக்கத்து வீட்டுக்காரன், அரசாங்கம் என்று எடுத்துக் கொண்டு பொறுப்பை அந்தப் பக்கம் தள்ள முயற்சி செய்யாதீர்கள். உங்கள் குறையை உணருங்கள். நீங்கள் படிக்க வேண்டிய முக்கியமான பாடம் உங்களுக்குக் கிடைத்து விட்டது. முன்பு சொன்னது போல சீக்கிரமே படித்துத் தேறுங்கள். அதை விட்டு விட்டு கல்வி, செல்வம், பட்டம், பதவி ஆகியவற்றைப் பெற்றிருக்கிறதால் அனைத்தும் அடைந்து விட்டதாக ஒரு கற்பனை உலகில் இருந்தால் ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போன அறிவு ஜீவியைப் போல் வாழ்க்கை ஓட்டத்தில் துரும்பாக அலைக்கழிக்கப் படுவீர்கள்.

 

மேலும் படிப்போம் …..

 

N.Ganeshan

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 2

  1. கட்டுரையின் சாராம்சமே ,

    “எந்த குணாதிசயங்கள் வாழ்க்கையைத் தாக்குப் பிடிக்கத் தேவையோ அந்தக் குணாதிசயங்களைக் கண்டிப்பாக வளர்த்துக் கொள்ளுங்கள். அவை என்ன என்று கேட்க நீங்கள் மற்றவர்கள் உதவியை நாட வேண்டியதில்லை. வாழ்க்கை உங்களுக்குத் தரும் சோதனைகளைக் கூர்ந்து கவனியுங்கள். எதையெல்லாம் உங்களால் சரியாக சமாளிக்க முடியவில்லையோ அதில் எல்லாம் நீங்கள் கற்றுத் தேற வேண்டியது இருக்கிறது.” இந்த வரிகளில் ஆழமாய் ஊடுருவி நிற்கின்றது.

    தவத்தினில் தினமும் தற்சோதனை செய்து ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்தின் அடுத்த படியை நோக்கு நகரலாம். வாழ்த்துகள் கணேசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *