இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(144)
— சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே!
இந்தவார மடலிலே உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.
மனித சமூகமானது காலம் காலமாகப் பல மாறுதல்களுக்கு ஏற்ப தமது வாழ்வு முறைகளை மாற்றியமைத்துத் தம்மை ஒரு நாகாரீகமான சமுதாயம் என்று குறிப்பிடுமளவிற்கு மாற்றமடைந்திருக்கிறது என்பதுவே ஒரு பொதுவான கருத்தாகிறது.
மனிதராய் நாம் பிறந்து, மனிதராய் நாம் வாழ்வதென்பது நமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் எத்தனையோ விதமான நோய்களுடன், எத்தனையோ விதமான அங்கவீனங்களுடன் பலர் பல கடுமையான போராட்டங்களினூடு மிகவும் துணிச்சலாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டமிது.
பையிலே நாலணா காசு கூட இல்லாமல் மற்றவர்களின் கருணை மனதை தமது மூலதனமாகக் கொண்டு தம் நாளை ஆரம்பிக்கும் எத்தனையோ ஆயிரம் மக்கள் இவ்வகிலத்தில் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.
அவர்கள் யாரும் தமது இல்லாமையின் ஏக்கத்தினால் தமது வாழ்வை முடித்துக் கொள்ள எண்ண மாட்டார்கள். அப்படி எண்ணுவதும் தவறு. நமது உயிரை மாய்த்துக் கொள்ளும் அதிகாரம் நம் ஒருவருக்கும் கிடையாது.
அதுகூட ஒரு வகையான கொலையாகவே கருதப்பட வேண்டும்.
என்ன! எதை நோக்கி சக்தியின் இவ்வார மடல் பயணமாகிறது என்று எண்ணுகிறீர்களா ?
இங்கிலாந்திலே கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவம் ஒன்று என் மனதில் தாக்கத்தை உண்டு பண்ணியதால் தான் இம்மடலின் கருவாக அது அமைகிறது.
இங்கிலாந்தின் வடபகுதியில் அமைந்துள்ள “டெல்ஃபோர்டு’ ( Telford) என் னும் இடத்திலே கடந்த சனிக்கிழமை ஒரு துயரகரமான சம்பவம் நிகழ்ந்தது.
வயதில் நாற்பதுகளில் உள்ள ஒரு மனிதன் கார் பார்க் ஒன்றின் உச்சியில் இருந்து குதித்து தன் வாழ்வை மாய்த்துக் கொண்டான்.
அம்மனிதன் அத்தகைய ஒரு முடிவையெடுக்க அவன் வாழ்வில் அவன் எத்தகையதோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்க வேண்டும் என்று எண்ணும் போது அது மிகவும் ஆழமான மனவருத்தத்தையே உருவாக்குகிறது.
அது ஒருபுறமிருக்கட்டும் …
நாககரீகமான உலகில் நாகரீகமடைந்த மனிதர் என்று கூறிக் கொள்வோர் இந்த 22ம் நூற்றண்டிலே மற்றொரு சக மனிதனை நோக்கி நடந்து கொண்ட முறையே என் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
அக்கட்டடத்தின் உச்சியில் ஏறத்தாழ 2 மணிநேரம் குதிப்பதற்குத் தயாரான நிலையில் நின்றிருந்த அம்மனிதனை பாதுகாப்பாகக் கீழே கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அந்நகர பாதுகாப்புப் படையினரும், தீயணைக்கும் படையினரும் முயன்று கொண்டிருந்தனர்.
தன் உயிரைப் போக்கிக் கொள்ள முயற்சிக்கும் ஒரு மனிதனை வேடிக்கை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் கூடியது.
இக்கூட்டத்தில் இருந்த பலர் தமது ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளில் அவனது துர்ப்பாக்கிய நிலையை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை.
“எதற்காகத் தயங்குகிறாய் குதித்து விடு நேரமாகிறது ” என்றும் …
“மேலிருந்து குதித்தால் உன் உடல் எவ்வளவு தூரத்திற்கு துள்ளப்போகிறது பார்க்க வேண்டும் குதித்து விடு” என்றும் பலவகையான கோஷங்களில் அம்மனிதனைக் குதிப்பதற்குத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது ஒரு கும்பல்.
பாதுகாப்புப் படையினரின் வேண்டுகோளையும் புறக்கணித்து இக்கோஷங்கள் தொடர்ந்தன.
விளவு! அக்கட்டடத்தில் இருந்து பாய்ந்து தன் உயிரைப் போக்கிக் கொண்டான் அம்மனிதன்.
இவ்வாறு கூச்சல் போட்டுக் குழப்பியவர்கள் காட்டுமிராண்டிகளே, அவர்களை அடையாளம் கண்டு போலிசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 50,000 பேர் இணையத்தளம் வாயிலாக கையொப்பமிட்டு கேட்டுக்கொண்டுள்ளனர்.
அவ்வாறே கூச்சலிட்டவர்களில் ஒருவரை தாம் கிடைக்கப்பெற்ற புகைப்படங்களின் மூலம் அடையாளம் கண்டு விட்டதாகப் போலிசார் கூறுகின்றனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்களோ, இல்லையோ? அது ஒருபுறமிருக்க மனிதர் என்று கூறிக்கொள்வோர்கள், அடுத்தவர்களின் அழிவில் ஆனந்தம் காணும் இவ்வகையான மனோபாவம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
இத்தகையோர் பெரும்பான்மையான எண்ணிக்கையில் இல்லை என்பது ஒருவகையில் ஆறுதலாக இருந்தாலும், இப்படியானவர்கள் இத்தனை பகிரங்கமாக தமது மிருக உணர்வினை வெளிக்காட்டுமளவிற்கு எமது சமுதாய உணர்வு மழுங்கி விட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது.
உலகின் பல பாகங்களிலும் மதங்களின் பெயராலும், மொழிகளின் பெயராலும் அநியாமகப் பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன.
வேறு பலபாகங்களில் தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில் பலபுதுவிதமான நோய்கள் பலரைத் தமக்கு இரையாக்குகின்றன.
இவைகளைத் தடுக்க உலகின் பல நாடுகளில் உள்ள பல அமைப்புகள் தம் உயிரைப் பணயம் வைத்துப் போராடுகின்றன.
இந்தச் சூழலில் ஒரு உயிர் அநியாயமாகப் போகப் போகிறதே எனும் உணர்வு இல்லாமல், அவ்வுயிரைக் காப்பாற்றத் தம்மால் என்ன செய்ய முடியும் என்று சிந்திக்காமல் அவ்வுயிரைப் பறிக்கக்கூடிய வகையில் நடந்து கொள்ளும் இம்மக்களும் நான் வாழும் இதே நாட்டில் வாழ்கிறார்கள் என்று எண்ணும்போது என் உடலே கூசுகிறது.
ஆனாலும்,
கடந்த வாரம் நடைபெற்ற “காமிக் ரிலீவ் (Comic Releif)” எனும் பீ.பீ.சி தொலைக்காட்சி நடத்திய வறியநாடுகளுக்கு உதவுதற்கான நிதிசேகரிப்பு நிகழ்வில் ஒரு பில்லியன் பவுண்ஸ் அளவிற்கு நிதியுதவி ஈந்த கருணை மிக்க மக்களைக் கொண்ட நாடு இது எனும் நினைப்பு என்னைப் பெருமை கொள்ள வைக்கிறது.
“மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா – தம்பி மனதில் வையடா” என்று புரட்சித் தலைவரின் படத்தில் வரும் பாடலின் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றது.
நாம் வாழ்வது 21ம் நூற்றாண்டு, ஆனால், அதற்கேற்ற வகையில் நமது உள்ளங்கள் வளர்ச்சியடைந்திருக்கின்றனவா ?
சிந்திக்க வேண்டிய கேள்வியுடன் விடைபெறுகிறேன்.
மீண்டும் அடுத்த மடலில் …
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan