தொலைக்காட்சி தொடர், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சிந்தனைக்கு …

-நாகை வை. ராமஸ்வாமி.

media

பல வெற்றிப்படங்களையும், தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்து தமிழ்நாட்டிற்கும் இந்திய தேசத்திற்கும் பெருமையும் புகழும் சேர்க்கும் உங்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் முதற்கண்.

நீங்கள் அனைவரும் அறியாத, செல்லாத, அயல்நாடுகள் மிகக் குறைவே என்றே சொல்லலாம். பல படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் மிக அருமையான, அழகான, சுத்தமான வெளிநாட்டுக் காட்சிகளை அமைக்கிறீர்கள். நம் நாட்டில் அப்படிப்பட்ட இடங்கள் இல்லையா? அப்படி அமைந்தால் எவ்வளவு பெருமையாக இருக்கும்? எவரும் மெச்சும் வகையில், நம் ஊரில், நம் நாட்டில் அழகும், சுத்தமும், சுகாதாரமும், வசதிகளும் மிக்க அயல் நாட்டிற்கு நிகரான இடங்கள் அமைவதற்கு ஏன் ஆவன செய்யக் கூடாது? சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, அரசாங்கத்தை அணுகுங்கள், செயல்படுத்த முயலுங்கள். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து நம் நாட்டிற்கு வருமானமும் வளமும் பெருகும் அல்லவா? உங்களுக்கும் அயல்நாட்டில் படப் பிடிப்புக்காக ஆகும் செலவு எவ்வளவு மிச்சமாகும்?

“பல படங்களில், ஏன், தொலைக்காட்சித் தொடர்களிலும் கூட ஏராளமான காட்சிகள், மக்கள் நல்வாழ்வுக்கு ஏற்றவகையிலில்லாமல் அமைக்கப்படுகின்றன, இளைஞர்கள் கெடுவதற்கான பல கெட்ட பாடங்களே கற்பிக்கப் படுகின்றன’” என்பன போன்ற வாதங்களும் குற்றச்சாட்டுகளும் பட்டி மன்றங்களிலும், விவாதங்களிலும் எதிரொலித்து அதிக பட்ச மக்கள் ஒப்புக்கொள்ளும் அவல நிலை சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். புரிந்திருந்தால் ஏன் அதை செயல் படுத்த முயலவில்லை?

பல படங்களில் வில்லன்கள் பாராட்டப்பட்டு, அவர்கள் செயல்களுக்கு நியாயமும் கற்பிக்கப்படுகிறது. சில கதாநாயகர்கள் செய்யும் ஒரு சில கோமாளித்தனங்களும், ஆபத்தான செயல்களும், சண்டைக் காட்சிகளில் வில்லன்கள் செய்யும் ‘அதி வீர தீர சாமர்த்தியமான’ செயல்களையும் உண்மையென நம்பி மோசம் போகும் இளைஞர்கள் ஏராளம். நாளுக்கு நாள் சண்டைக் காட்சிகள் கோரமான முறையில் காட்டப்பட்டு கொலை, கொள்ளை இன்னும் பல தவிர்க்கப்படவேண்டிய சமூக விரோதச் செயல்கள், இவற்றை எப்படியெல்லாம் செய்யலாம், என்னென்ன யுக்திகள் கையாளலாம் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறவாறு அமைகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த ‘நூறாவது நாள்’ படத்தின் அடிப்படையில் பல கொலைகள் செய்ததாக ஒப்புக்கொண்ட ஒரு நபர் தண்டிக்கப்பட்டது அந்நாள் நடுவயதுக்காரர்கள் அறிவார்கள்.

காமெடி காட்சிகளில் அருவறுக்கும் வசனங்கள். காமெடி, பகுத்தறிவு என்ற பெயர்களில் குறிப்பிட்ட ஒரு ஆதரவில்லா சாதியினரை மட்டுமே இலக்காக்கி, அவர்களை ஏளனப்படுத்தும் அவலம் தமிழ் நாட்டு சினிமாவில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என்று சொல்லலாம். வேறு எந்த சாதியினரையும் இவ்வளவு ஈனமாகச் சாடினால் விளைவு என்ன ஆகும் என்று எவருக்கும் தெரியும். இவைகளில்லாமல் படங்கள் எடுக்க வழியா இல்லை?

காதல் என்ற ஒரு சப்ஜெக்ட்டை வைத்துக்கொண்டு, என்னமோ காதல் செய்யத் தெரியாதவர்கள் எல்லாம் மடையர்கள், அல்லது ஏமாளிகள் அல்லது பயந்தாங்கொள்ளி அல்லது வாழ்க்கைக்கே லாயக்கில்லாதவர்கள் என்பது போலவும், வாழ்க்கைக்குக் காதல் ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்பது போன்ற கதைகளும் பெருகிவிட்டன. இவற்றைப் பார்த்து கெட்டுப் போய் சீரழியும் மக்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள், உற்றார் உறவினரைப் பகைத்துக்கொண்டு, பெரும்பாலும் தகுதி இல்லாதவர்களிடம் ஏமாந்து வாழ்க்கையையே தொலைத்துவிட்டு கஷ்டப்பட்டு சீரழிபவர்கள் ஏராளம்.

இந்த வகையில் நூதனமான தற்கொலைகளும் கொலைகளும் காட்டப்படுகின்றன . கொலைகளிலும் தேவையில்லாத பலவிதமான உத்திகள், ஆக்ரோஷமான பயங்கர வன்முறைகள். ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், உடனே ‘போட்டுத் தள்ளவேண்டியது’, அதற்கு கூலிப் படையை நாடுவது, போன்ற காட்சிகள். இவற்றிற்கெல்லாம் பெருமளவு சினிமா, தொலைக்காட்சி பாதிப்பு காரணம் என்று தாராளமாகச் சொல்லலாம், பலரும் ஒப்புதல் அளிப்பர்.

ஒரு காரியம் நமக்கு சாதகமாக அமைத்துக்கொள்ள வேண்டுமென்றால், எப்படி யாரை ஏமாற்றவேண்டும், லஞ்சம் எப்படிக் கொடுப்பது என்பனவற்றைத் தெரிந்துகொள்வதற்கு ஏன் வேறு எங்கும் போகவேண்டும், சினிமாவும் தொலைக்காட்சியும் இருக்கும்போது?

ஒரு அன்பான குடும்பத்தையே எப்படி எல்லாம் பிரிக்கலாம், எப்படி சண்டை போட்டுப் பிரிந்து போகலாம் அல்லது, பிரிய வைக்கலாம், பெற்றோர், குழந்தைகள் உறவிலேயே எப்படி சந்தேகம் கொள்வது, பெரியோரை எப்படி மரியாதைக் குறைவாக நடத்துவது அல்லது ஏசுவது, ‘ஏய், பெரிசு’ போன்ற அடைமொழிகள், குடும்பத்தினர் காதைப் பொத்திக்கொள்ளும் அளவுக்கு வசைமொழிகள், எதற்கெடுத்தாலும், எல்லா இடத்திலும் ‘தூ தூ’ என்று அநாகரிமாக, அசிங்கமாகத் துப்பும் காட்சிகள், எதிராளியின் முகத்தில் காரி உமிழும் காட்சிகள், இன்னபிற அருவறுக்கும் காட்சிகள், அனைத்திற்கும் சினிமாவும் தொலைக்காட்சியும் ஒரு பல்கலைக்கழகமாக ஆகிக்கொண்டிருக்கிறதே என்ற பெருங்கவலை இருக்கிறது அனைத்துத்தர மக்களுக்கும்.

சென்சார் போர்டு என்ற ஒரு அமைப்பு இருக்கிறதா, இருந்தால் சரிவர செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. தொலைக்காட்சித் தயாரிப்பாளர்களுக்கு – விளம்பரம் ஒரு வருமான சாதனம் தான். ஆனால், 30 நிமிட நிகழ்ச்சியில், விளம்பரங்கள் 20 நிமிடங்களும் நிகழ்ச்சிகள் 10 நிமிடங்கள் மட்டுமே உள்ளன. விளம்பரத் தொடரில் அவ்வப்போது சிறிது கதையும் சொல்லப்படுவது போல் இருக்கிறது.

விளம்பரங்களின் ஒலி அளவோ நிகழ்ச்சிகளின் ஒலி அளவைவிட மிக மிக அதிகம். ஏன் ஒரே அளவில் அமைக்கத் தவறுகிறீர்கள்? ஒவ்வொரு விளம்பர இடைவேளையும் போதும் ‘ரிமோட்டை’ வைத்துக்கொண்டு சப்த அளவைக் குறைப்பதோ அல்லது ‘ம்யூட்’டில் வைப்பதோ தான் வேலையாகிவிடுகிறது. இது தவிர, தேவையற்ற இசை, வசனங்களே காதில் விழாதவாறு பின்னணி இசையின் கர்ண கடூரம், இவற்றையெல்லாம் சீர்படுத்துங்கள்.

இனியாவது, புகை பிடிப்பது, மது அருந்துவது, கற்பழிப்பது, வன்முறைச் செயல்கள் போன்றவைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டாம். நடிகர்களே, கிழித்த காகிதம், குப்பை இவற்றை குப்பைத் தொட்டியில் அல்லாமல் எங்கு வேண்டுமானாலும் தூக்கி எறிவது, எங்கு வேண்டுமானாலும் எச்சில் துப்புவது அல்லது சிறுநீர், மலம் கழிப்பது போன்ற காட்சிகள் அவசியம் தவிர்க்கப்பட வேண்டும்

எரிபொருள் சிக்கனப்படுத்தப்படவேண்டும் என்று எல்லோரும் அறிவர். பின் ஏன், சிதை எரிப்புக்காட்சிகள், வீடு கொளுத்தும் காட்சிகள் காட்டவேண்டும்? அடையாளமாக, எந்த நபர் இறந்ததாகச் சித்தரிக்கப் படுகிறாரோ, அவரது புகைப்படத்தை ஒரு மாலையுடன் காட்டினால் போதாதா?

சண்டைக் காட்சிகள்? அடேயப்பா? எத்தனை, வாகனங்கள், பொருட்கள், பெட்ரோல் முதலிய எரிபொருட்கள் நாசமாக்கப்படுகின்றன? எரியூட்டப்படுகின்றன, தண்ணீர், பால், பழங்கள், காய்கறிகள் சேதமாக்கப்படுகின்றன? எல்லாவற்றையும் தவிர்க்கமுடியாது என்றாலும், அவசியமில்லாததை, நீங்கள் நினைத்தால் நிச்சயம் தவிர்க்கலாம். சிம்பாலிக் ஆக காட்டும் உத்திகள் உங்களுக்குத் தெரியாதவையா? அனிமேஷன் முறையில் இவற்றை காட்டினால் போதாதா? எவ்வளவு எரிபொருளும், சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும்?

படம் எடுப்பது பெரும்பாலும் வியாபார நோக்கமே என்றாலும், சமூக நலன் இன்னும் சற்று அதிகமாக உங்கள் பார்வையில் இருக்கவேண்டும். “சினிமாவும் தொலைக்காட்சியும் ஒரு பொழுதுபோக்கு சாதனமே, அவற்றில் காணப்படுபவை எல்லாம் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளே” என்று நீங்கள் வாதிடுவதும் ‘சினிமாவிலிருந்தும் தொலைக்காட்சிகளிலிருந்தும் தெரிந்து கொண்டுதான் நாங்கள் இந்த செயல்களைச் செய்கிறோம்’ என்று குற்றவாளிகளும் மாறி மாறி சொல்லிக் கொண்டேயிருந்தால், இதற்கு எல்லையே இல்லை, வடிகாலும் இல்லை. பாதிக்கப்படுபவர்கள் இளைய சமுதாயம் தான்.

ஆகவே, காட்சிகளுக்கான ஒரு வரையறை வகுத்து, சமூகக்கேடு குறைவதற்கு உதவிட சமூக ஆர்வலர்களும் அரசாங்கமும் முன்வரவேண்டும். நீங்களும் பொறுப்பான பெற்றோர்கள் தான். இதற்கு பொறுப்பான பங்கு உங்களையும் சாரும். உங்கள் தொண்டு ஆக்கபூர்வமாக வளரச்செய்யுங்கள். நாடும், மக்களும், சுற்றுப்புரச் சுத்தமும் உலகத்தரமான மேம்பாடு அடைந்து, தமிழ்நாடும் இந்தியாவும் அனைத்துலகும் போற்றத்தகு பெருமையான இடம் வகிக்க தயவு செய்து பெரும்பங்கு ஆற்றிடுங்கள்.

நடிகர் விவேக் போன்றவர்கள் பல புத்திமதிகள் சொல்லிவருகிறார்கள். அவரே தனியாகவோ, அவர் மூலமாகவோ மது அருந்துதல் புகை பிடித்தல், வன்முறைச் செயல்கள் இவற்றின் தீமைகளையும், வீட்டையும், தெருவையும், ஊரையும், நாட்டையும் சுத்தம் சுகாதாரத்துடன் வைத்திருத்தல், அவற்றின் நன்மைகள் இவற்றை அறிவுறுத்தலாம்

சமூகப் பொறுப்புணர்வோடு நீங்கள் செயல்பட்டு, பல சாதனைகள் செய்து மக்களையும் நாட்டையும் ஏற்றமுறச் செய்யுங்கள். இன்னும் அதிக அக்கறையுடன் செயல்பட்டால், சமூக முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும், உங்களை நாடும் மக்களும் இன்னும் பாராட்டுவார்கள் என்றே தோன்றுகிறது.

நன்றி, வணக்கம்.

நாகை வை. ராமஸ்வாமி
மே 1, 2015

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *