-மேகலா இராமமூர்த்தி

இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்திருக்கும் திரு. ஜபீஷுக்கும், இப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் எங்கள் நன்றி.

monkey

இரும்புக் குழாயைத் தன் இருப்பிடமாக்கி, அதன் முனையை இவ்வானரம் தன் வாயால் ஊதுவதேன்? குழாயின் வழியே வரும் நீரைப் பருகும் தாகமா? இல்லை… குழாயையே ஊதுகுழலாக்கி இசைமழை பொழியவேண்டும் எனும் மோகமா?

பொதுவாகவே குரங்குகளின் செய்கைகள் பலவகையிலும் மனிதர்களை ஒத்திருப்பதை அறிவியல் அறிஞர்கள், இலக்கியம் படைத்த புலவர்கள் எனப் பலரும் உறுதி செய்துள்ளனர். இசைக்கருவிகளை இசைப்பதிலும் குரங்குகள் மனிதர்களை ஒத்திருக்கின்றன என்பதை ஏணிச்சேரி முடமோசியார் எனும் சங்கப் புலவரின் புறநானூற்றுப் பாடல் 128 நமக்குத் தெரிவிக்கின்றது.

படத்திலுள்ள குரங்காரின் செய்கையைக் கண்ட நம் கவிஞர்களுக்கு எவ்வாறெல்லாம் கற்பனை ஊற்று உடைப்பெடுத்திருக்கின்றது என்று அறியும் ஆவல் என்னுள்ளும் பீறிட்டு எழுகின்றது.

முதற்கண், நெஞ்சைத் தொடும் கவிதை வரிகளை படித்துவிடுவோமே!

***

திரு. பிரகாஷ் சுகுமாரன் எனும் புதிய கவிஞர் நிறைய கவிதைகளை இவ்வாரப் போட்டிக்கு ஆர்வத்தோடு அனுப்பியிருக்கிறார். அவரின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்!

’வானை அளந்தவனுக்கு புவிநீரைக் காக்கவேண்டியதன் அருமை புரியவில்லையே!’ எனும் தன் ஏக்கத்தைக் கவிதைவழியே கசியவிட்டிருக்கின்றார் அவர்.

வானமேறி
கிரகங்களை
பிடிக்க
தெரிந்தவனுக்கு
தெரியவில்லை
பூமி நீரின்
அருமை!

***

”என்னைத் தேக்கி வைக்கும் வழிபற்றிச் சிந்தியாது மரங்களைத் தாக்கி அழித்த நீ, என்னிடம் நீரை எவ்வாறு எதிர்பார்க்கலாம்?” என்று ’நீர்’ மனிதனிடம் சினந்துபேசுவதைச் சுவையான கவிதையாக்கியிருக்கிறார் திரு. கனவு திறவோன்.

என் கண்ணீரைக் கேட்கிறாய்
எனக்காக நீ என்ன செய்தாய்?

மலையில் பிறந்து
நிலத்தில் ஊர்ந்து
கடலில் விழுகிறேன்
இடையில்
மரமும் மனிதர்களும்
பருகிய மிச்சமாய்!
உன்னை நனைக்கும்
என்னைப் பாதுகாக்க
நீ மண்ணையாவது
கூட்டினாயா?
[…]
என்
கண்ணீரை வரவழைக்க
நீ இன்னும் யாரை
சித்திரவதைச் செய்வாய்?
மரத்தை வெட்டுகிறாய்
மனிதத்தைப் புதைக்கிறாய்
என் அழுகையின் ஆன்மா
ஆக்ஸிஜனற்றக் காற்றுதான்
வெப்பச் சலனமல்ல
என்பது தெரியாமல்!

உன் மாய்மால
ஆட்டங்களில் மயங்கி
அழுவேன் என்று நினைத்தாயோ?

***

’மண்திணி ஞாலத்தில், நீரின்றி நிலம் காய்ந்தால் மனிதம் மரிக்கும்; விலங்கினம் மாயும்; பயிரினம் காயும்’ எனும் தன் நியாயமான கவலையைக் கவினுறப் பதிவு செய்திருக்கிறார் திரு. ஜெயபாரதன்.

உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோர் ஆயினும்
மண்டினி ஞாலத்தில் பருகப்
புனித நீர் இன்றேல் 
மனிதம் மரிக்கும் ! 
விலங்கினம் மாயும் !
பயிரினம் காயும் !
உயிரினம் தேயும் !
குழாயில் சொட்டிய நீருக்குத்
தவிக்கும் வானரம்
துளி நீரின்றி மயங்கி
விழப் போகுது !…

***

நீரின் முகங்களைத் தத்துவ விசாரணைக்கு உட்படுத்தி நம்மை சிந்திக்கவைக்கிறார் திரு. கவிஜி தன் கவிதையில்.

நான் கழற்றிக்
கொண்டேயிருக்கிறேன்
கழன்று,
உடைந்து கொண்டே
இருந்த முகத்தில்
கடைசியாக
கழன்ற
முகம்தான் எனது முகம்..
சற்று யோசித்த
பொருளில்
தத்துவ முதல்வாதமென
இப்போது
மாட்டிக் கொண்டேயிருக்கிறேன்
பொருத்தமில்லாத
ஒன்றை…
அதுவும் எனது
முகம்தான் என்பதே
உடைய எத்தனித்த எனது
முந்தைய முகம் சொன்ன
வாதம் மற்றும்
பிரதிவாதமென நீரும்… பரிணாமமும்…

***

குறிஞ்சி நிலத்தில் குதூகலமாய்த் தாவித் திரிந்த மந்தி, இன்று குடிக்க நீரின்றித் தவிக்கும் அவலத்தைப் பாடியிருக்கிறார் திருமிகு. சியாமளா ராஜசேகர்.

குறிஞ்சி நிலமும் பாலையாச்சோ 
குடிக்கும் நீரும் வற்றிடுச்சோ 
குன்ற மெங்கும் காய்ந்திடுச்சோ
குட்டைக் குளமும் வறண்டிடுச்சோ
குதித்துத் தாவ மரமுமில்லை 
குடலின் பசிக்கு கனியுமில்லை 
குழாயு மிருந்தும் பயனுமில்லை 
குடிக்கத் தண்ணீர் வரவுமில்லை 
குரங்கின் தாகம் தீராதோ 
குடிநீர் கொஞ்சம் கிடைக்காதோ ….!!!

 ***

குடிக்கத் தண்ணீரின்றிக் கண்ணீர் சிந்தும் இந்தக் குரங்கு, ”பாட்டில்(bottle) தண்ணீரையாவது என் கண்ணில் காட்டக்கூடாதா?” என்று மனிதர்களிடம் இறைஞ்சுவதை நம் இதயம்தொடும் பாடலாக்கியிருக்கிறார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

திருகி திருகி  பார்க்கிறேன்
திடீரென
இரண்டு சொட்டு  நீர்
அது
தண்ணீர்  அல்ல
என்
கண்ணீர்
[…]
மூடாமலே
கிடக்கும் குழாய்
இப்போது
திறந்தே கிடந்தாலும்
காற்றுகூட
வரவில்லை
நாக்கு
வரளுகிறது கண்கள் இருளுகிறது
யாராவது
அம்மா பாட்டில் தண்ணியாவது
தாருங்களேன்
குடியிருப்புகளில்
உள்ள
தண்ணீர்
டாங்குகளில் மூடியை
தூர
வீசிவிட்டு
உள்ளேகுதித்து குதுத்து
கும்மாளமிட்டு நீரை
சிந்தினேன்
இன்று கண்ணீரை
சிந்துகிறேன்
என்னிலிருந்து
பிறந்தவன் தானே
மனிதன்
அவனுக்கும் என் புத்திதானே?

 ***

’மரத்தை வெட்டி மழைவரத்தைக் கட்டியதாலன்றோ அப்பாவிக் குரங்கும் நீரின்றி வாடி நிற்கிறது’ என்று விளம்புகிறார் திரு. செண்பக ஜெகதீசன். உண்மைதானே?

மரத்தை யெல்லாம் வெட்டிவிட்டார்
மழையின் வரவைக் கட்டிவிட்டார்,
வரவாய் ஆற்றில் நீருமில்லை
வறண்டா லங்கே மணலுமில்லை,
தரையில் நீரையும் மாசாக்கினர்
தண்ணீர் இருப்பதைக் காசாக்கினர்,
குரங்கு குடிக்கவும் நீரிலையே
குழாயதும் ஏங்குது பெருமூச்சிலே…!

***

குரங்கின் இயல்புகளை வேடிக்கையாய் விவரிக்கும் திரு. எஸ். பழனிச்சாமி, தண்ணீர்ப் பஞ்சம் தீர, புவியெங்கும் பசுமை செழிக்கச் செய்வதே முறை என்கிறார்.

வலது பக்க உடலைக்கூட
வலது கையால் சொறியும்
வனத்துக் குள்ளே மரத்திலேறி
தாவித் தாவித் திரியும்
[…]
குதித்து
வந்து வாழைப்பழத்தை
பறித்துக் கொண்டு விரையும்
பல்லைக் காட்டி சீறும்வாயும்
காதை நோக்கி விரியும் 
காசுக்காக ஆடச் சொல்வான்
மனிதன் என்று அறியும்
[…]
வழியும் துளியாம் குடிநீரை
வாயை வைத்து உறியும்
நிலமை வந்து சேருமென்று
நமக்கும் கூடத் தெரியும்
[…]
குரங்கு தரும் எச்சரிக்கை
புரிந்தால் வாழ்வு சிறக்கும்
பூமியெங்கும் பசுமை யானால்
புதிய வாழ்வு பிறக்கும்

***

குழாயின் உள்ளிருந்து வரும் ‘உஸ்’ சத்தம், ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சா? வனங்கள் அழிந்ததால் இயற்கைவிடும் எரிச்சல் மூச்சா? என்று வினாக்களை அடுக்கியிருக்கிறார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

நீர்த்தேடி நித்தமும்
நீண்ட குழாயின்
குமிழ் திறந்து பார்க்கிறேன்
உஸ்ஸென்று சத்தம் மட்டுமே
உள்ளிருந்து வருவது ஏன்

உழைத்து வியர்த்தும்
உயரம் அடையாத
உழைப்பாளியின்
உஷ்ண மூச்சா
[…]
ஆறு
குளம்  ஏரியென
அத்தனையையும் கட்டிடங்களாக்கி
வனங்களோடு வளங்களையும்
இரக்கமின்றி அழித்ததால்
இயற்கை விடும் எரிச்சல் மூச்சா

[…]
என்னவென்று நீங்களே
உடன் வந்து பாருங்கள்
அப்படியே
பத்து ரூபாய் தண்ணீர் பாட்டிலிருந்தால்
எனக்கொன்று கொடுங்கள்
நானும் பழகிக் கொள்ளுகிறேன்!

***

அறிவிலா மனிதன் இயற்கையை அழித்தான்; நீராதாரத்தை ஒழித்தான்; ’ஆகவே இத்தரணியை விட்டே ஓடிப்போவதே உனக்கு நல்லது!’ என்று குரங்கிடம் குமுறுகின்றார் திரு. மெய்யன் நடராஜ்.

உருகிய பனிமலை ஓடி மறைய 
==
உலகமே பாலை வனமாய் நிறைய 
பருகிட நீர்த்துளி தேடி அலைந்து 
==
பார்வையில் பட்டதோர் குழாயி னுள்ளே 
குறுகிய அறிவை கொண்டேத் தேடும் 
==
குட்டிக் குரங்கே வாயை எடு நீ  
அறிவிலா மனிதன் செய்த தவறால் 
==
அழிந்த காட்டின் கல்லறை அதுவே

கட்டிடம் கட்டும் அனுமதி பெற்றுக் 
==
காட்டிடம் காட்டும் அவமதிப் பிற்கு 
வட்டியும் முதலுமாய் வாங்கியே கட்டும் 
==
வாட்டமும் வருவதை உணரா மனிதன் 
திட்டியும் திருந்தா திருக்கும் நிலைக்கு 
==
திட்டமும் வகுத்து இயற்கை மூலம் 
பட்டயம் போட்டு பகிர்ந்து அளிக்கும் 
==
பரிசே வற்றிடும் நீரால் மரணம்.
[…]
மனிதன் போக்கில் மாற்றம் தோன்றி  
==
மண்ணில் மரங்கள் காடாய் வளர்ந்து
புனித பூமி உதிக்கும் போது 
==
பூக்கள் சொட்டும் தேனில் குளித்து 
இனிக்கும் இன்பம் காண வேண்டி 
==
இன்னொரு பிறவி எடுத்து நீயும் 
தனித்து வமாகவே தாகம் தீரு 
==
தரணியை விட்டு அதுவரை ஓடு!

***

வாரமொருமுறை மட்டுமே சிறிதுநேரம் நீர்தரும் விந்தை அருவிகண்டு சிந்தைநொந்த குரங்கின் நிலை கூறுகின்றார் திருமிகு. தமிழ்முகில்.

தித்திக்கும் நீர் பொங்க
குதித்தாட்டம்
போட்ட ஆறும்|
வற்றித்
தான் போனது !
தொங்கித்
தாவிய
ஆற்றங்கரை
மரமும்
வெட்டுண்டு
தான் போனது !
வசிப்பிடம்
பறிபோக
வாழ்வாதாரம்
தேடி
ஊரினுள்
படையெடுத்தேன்
[…]
அருவி
கண்டு பழகிய
எனக்கு –
இக்குழாயும்
அருவியெனவே
தோன்றவே
கொட்டும்
அருவியில்
நீரெடுக்க
ஏனிந்த வனிதையருள்
இத்தனை
போராட்டமென்றே
எண்ணினேன் !
[…]
மனதினுள்
பதிலறியா
கேள்விகள்
தலைதூக்க
சுற்றும்
முற்றும் பார்க்கிறேன் –
ஒரு
பெண்மணி
சொல்லிச்
செல்கிறார் –
அதற்குள் நிறுத்தி விட்டார்களே !
அதற்குள்ளாகவா
மூன்று மணி
நேரமாகி
விட்டது ?”

அந்தோ !
இப்போதல்லவா
புரிகிறது –
இந்த
அருவியில் வாரமொருமுறை
அதுவும்
மூன்று மணி நேரமே
நீர்வரத்து
என்று !

***

’மரங்களை வெட்டிக் கட்டடங்கள் கட்டி மழைவளத்தையும் உயிர்க்குலத்தையும் சேர்த்தே அழிக்கிறதே மானுடத்தின் மடமை!’ என்று வேதனையுறுகின்றார் திருமிகு. புனிதா கணேசன்.

…கட்டிடம் கட்டிட பெயர்த்த மரங்கள்
விட்டுச் சென்றிட்ட நீள் பெரு வெளிகள்
கொட்டும் வானத்து தூவான மழையை
மீட்டுக் கொடுக்காமலே கட்டிடங்கள்!

அரக்கர்கள் போல பூமியெங்கும்
நிரைக்கு நின்றன கட்டிடங்கள்
விரைந்து விலைக்கு வாங்கிய
புரையோடிய புது மாந்தர் மடமை

மழை அவை தாரதென்றறியார்
விழைந்து தறித்த மரங்கள் மொண்டு
குழைகள் தேக்கித் தரும் வான் நீரை
கோழைகள் தொலைத்தனர் பூமியில்
[…]
ஊகமான மந்திக் குரங்கார் இங்கு
வேகமாக நீர்க் குழாயாயைத் திருப்பி
சொட்டும்
சிறிய நீர்த் திவலைகள்
எட்டி நாக்கால் ஏக்கமாய் நக்கிறார்- மனிதரோ
வெட்டிய மரங்களின் வேர்கள் பதிய
விட்டு வைக்கவேயில்லை சிறுதுளி நீரையும்…

***

”நீர்நிலைகளைத் துடைத்தெடுத்த மனிதன், விரிசல் விழுந்த பூமியின் கிழிசலைத் தைத்துக்கொண்டிருக்கட்டும்! நீ எங்காவது ஓடிபோய் பிழைத்துக்கொள்!” என்று மந்திக்கு புத்திசொல்கிறார் திருமிகு. கார்த்திகா.

…நீர்நிலைகளை துடைத்தெடுத்து
அதன் கரைகளை சொந்தம் கொண்டாடியோர்
விரிசல் கண்ட புவிக்கு கிழிசல்
ஆடை தைத்துக் கொண்டிருப்பரோ?

தகிக்கும் வெப்பச் சூட்டில்
சொட்டு நீரையும்
அனல் உண்டுவிட
இரும்புக் குழாய் பற்றியிருக்கும்
உன் கால்களை பலமாக்கிக் கொள்!
[…]
நீரின் வறட்சியும்
விலங்கினத்தின் அழிவும்
அவர்களுக்கு எங்கே புரியப் போகிறது?

தாகம் கொண்டால்
செவ்வாயில் தீர்த்துக் கொள்வான் மனிதன்,
நர மாமிசம் நல்வழிபடுத்தும்”என்று
சொன்னாலும் அது மிகையாகாது..
எங்காவது
தப்பி ஓடிவிடு மந்தியே..
உன் இனத்தின் வேர்கள்
தீக்கிரையாக்கப்படுவதற்குள்..

***

(மழை)மேக அண்ணனோ வானிலே மறைந்துவிட்டார்; மீன் மாமி குடியிருந்த குளமும் ஆடுகளமாகிவிட்டது. எங்கள் இனம் பிழைக்க வழிதான் என்ன? என்று மடல் வரைந்து விடை தேடும் குரங்கை நமக்கு அறிமுகம் செய்கிறார் திருமிகு. லட்சுமி.

அடுக்குமாடி வரவுகளினால்
தொலைந்த மரங்களைத் தேடி
மேக அண்ணா மறைந்துவிட்டார்!
மீன் மாமி குடியிருந்த குளம்கூட
மட்டைப் பந்துக் களமாகி
வெகுநாளாகிவிட்டது!
[…]
ஆறிலிருந்து ஒன்றுதான் குறைவெனக்கு!
ஆனால் ஆறறிவுபோல செய்கை
அளந்து தந்தது யாரோ!
சஞ்சீவிநீர் அருந்த
நான் எங்கே செல்வது? 

***

சிந்திக்கவேண்டிய நல்ல கருத்துக்களைக் கவிதைகளாய் அள்ளித் தந்திருக்கும் கவிஞர்குழாத்திற்கு என் பாராட்டுக்கள்!

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைப் பார்த்துவிட்டு வருவோம்!

’நீரின்றி அமையாது உலகு’ என்பது பொய்யில் புலவரின் வாய்மொழி. காடுகளில் கனிபறித்து உண்டு காட்டாற்றிலே கட்டுப்பாடின்றி ஓடித்திரிந்த வானரமொன்று, வனங்கள் அழிந்ததனால் மனிதன் படைத்த காங்கிரீட் காட்டிலுள்ள ஒற்றைக்கம்பியில் சிக்கி உயிர்வாழ நீர்தேடி ஊசலாடும் கொடுமையைக் கவிநயத்துடன் நம் கண்முன் நிறுத்துகின்றது ஓர் கவிதை…

அடர்வனக் காடுகளின் பசுமைபோர்த்த
வெளியெங்கும் கவிந்த இருள்கிழித்து
கிளைதுளைத்துப் பாயும் சூரிய விசிறிக்கீற்றில்
கொடிபற்றி கிளைதாவி குதூகலித்த
நாட்கள்…
ஈரமண் வாசத்தில் வண்டுகளின் ரீங்காரத்தில்
கொழுத்த மரக்கிளை தனிலே
பழுத்த பலகனிச் சுவைதேடித் திரிந்த பொழுதுகள்…
முப்பொழுதும் பசுமையோடு காட்டாற்றுக் கரைதிரிந்து
கூட்டுக் குடும்பத்திலே குறையற வாழ்ந்தே
கூடிக் கழித்த சலிக்காத நினைவுகள்…
பொய்யாய் பழங்கதையாய் போனதோ இமைப்பொழுதில்
பசுமைதொலைத்த காங்ரீட் காடுகளில்
கதறியழும் தனிமை சூழ
பழுத்தகனி கிளைபற்றிய கரங்களில்
வாழ்வா சாவா போராட்டம் நிகழ்த்தி
ஒற்றைக் கம்பியில் ஊசலாடும் உயிர்வாழ்க்கை…
வாழத்தான் யாசிக்கிறேன்
பற்றுக்கோள் ஏதுமின்றி யோசிக்கிறேன்…
எந்திரங்களின் பூமியில்
உயிர்வாழ்க்கை அவ்வளவு வசப்படவில்லை!

’பொய்யாய்ப் பழங்கதையாய்’ப் போன வானரத்தின் வசந்தகாலத்தையும் இப்போதைய கசந்த காலத்தையும் எழிலுற இயம்பியிருக்கும் இந்தக் கவிதையின் ஆசிரியர் திருமிகு. சாசலின் பிரிசில்டாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

அதுபோல், ’உமிழ்நீரை ஊற்றியாவது மரக்கன்று வளர்ப்போம்; எழுதுகோலை முட்டுக்கொடுத்தாவது மரித்துப் போகாது மரங்களை நிமிர்த்துவோம்!’ என்று ஆவேசக் குரலெழுப்பும் திரு. இரா. சந்தோஷ் குமாரின் கவிதையைப் பாராட்டுக்குரியதாய் அறிவிக்கின்றேன்.

…மேகத்தாயின் கருவறையிலும்
ஈரக்கரு சிதைக்கப்பட்டதுவாம்.
என்ன செய்யப் போகிறீர்கள் ?
மரங்களை கொன்ற பாவத்திற்கு
தலைமூழ்கி பரிகாரம் தேட
கூவத்திலும் புனிதச்சாக்கடை ஓடாதே?
என்ன செய்யப் போகிறீர்கள்?
நாளை தலைமுறைக்கு
ஒன்று செய்வீர்களா?
உங்கள் உமிழ்நீரை ஊற்றியவாது
ஒரு மரக்கன்றையேனும் வளர்த்துவிடுவீர்களா? 

ஓ ! உலக கவிஞர்களே !
கொஞ்சம் அவசரமாய்
உங்கள் பேனாவின் முனையை
மரித்துப்போகும் மரங்களுக்கு
முட்டுக்கொடுப்பீர்களா ?
உங்கள் பேனாவின் மையினால்
மரத்துப்போன மானிடர்களின்
முகத்திலாவது
விழிப்புணர்ச்சியினை தெளிப்பீர்களா?
இதோ…!
உங்கள் மீதுதான் குற்றஞ்சாட்டி
ஒரு மரண வாக்குமூலம் பதிவிட்டவாறே
உலகின் கடைசி நீர்த்துளியினை
உறிந்து கொண்டிருக்கிறேன்.

***

போட்டியில் கலந்துகொண்ட அனைத்துக் கவிஞர்கட்கும் என் நன்றியும் பாராட்டும்!

 

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி 16-இன் முடிவுகள்

  1. தனக்குப் பிடித்த வரிகள் தவிர்த்து இந்த வானரப் படத்தின் கீழ் போடத் தகுதியுள்ள ஒரு கவிதை எதுவென்று நீதிபதி அவர்கள் சொன்னால் கேட்கலாம்.

    சி. ஜெயபாரதன்

  2. அன்பிற்கினிய ஜெயபாரதன் ஐயா,

    ‘சிறந்த கவிதை’ என்று ஒவ்வொரு வாரமும் ஒரு கவிதையைத் தேர்ந்தெடுப்பதே படத்திற்கு பொருத்தமான கவிதையாய் அஃது இருக்கும் என்ற அடிப்படையில்தான்! பாராட்டுக்குரிய கவிதையாய் அறிவிப்பதை அதற்கு அடுத்த நிலையில் கொள்ளலாம். அதற்காக மற்றவரின் கவிதைகள் எல்லாம் படத்திற்குப் பொருத்தமில்லாதவை என்று பொருளிலில்லை. எல்லாக் கவிதைகளுமே கற்பனை வளமும் கருத்துச் செறிவும் கொண்டவையாகவே இருக்கின்றன. எனினும், எல்லாக் கவிதைகளையும் (ஒரே நேரத்தில்) நாம் சிறப்பானவை எனத் தேர்ந்தெடுக்க இயலாதல்லவா? அதனால்தான் ஒவ்வொரு வாரமும் ஒரு கவிதையை மட்டும் சிறப்பான ஒன்றாகத் தேர்வு செய்ய வேண்டியிருக்கின்றது.

    ஐயா! உங்கள் ஐயங்களைத் தயங்காமல் கேளுங்கள். தெளிவுபடுத்துவது என் கடமை. தொடர்ந்து தாங்கள் சிறப்பான பங்களிப்பை இப்போட்டிக்குத் தந்துவருவதற்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்,
    மேகலா

  3. சிறந்த கவிதை எழுதிய திருமிகு. சாசலின் பிரிசில்டா மற்றும்  இவ்வாரத்தின்  பாராட்டுக்குரிய கவிதை தந்த .திரு. இரா. சந்தோஷ் குமார் இருவருக்கும் வாழ்த்துக்கள் 

  4. வெற்றி பெற்ற  திருமிகு. சாசலின் பிரிசில்டா மற்றும்  பாராட்டுக்குரிய கவிதை தந்த .திரு. இரா. சந்தோஷ் குமார் இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !

  5. சிறந்த கவிதை எழுதிய  திரு மிகு சாசலின் பிரிசில்டா அவர்களுக்கும்  பாராட்டுக்குரிய கவிதை எழுதிய  இரா.சந்தோஷ் குமார்  அவர்களுக்கும் பாராட்டுக்கள்–சரஸ்வதி ராசேந்திரன்

  6. எனது வரிகளை பாராட்டுதற்குரிய கவிதையாக தேர்ந்தெடுத்த நடுவருக்கும் .. வல்லமை குழுவிற்கும் நன்றி நன்றி நன்றி.  உற்சாகமும் உத்வேகமும் பெற்றேன். மகிழ்ச்சி.!
    சிறந்த கவிஞராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமிகு. சாசலின் பிரிசில்டா-கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள். !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *