மேகலா இராமமூர்த்தி

திரு. விஜய் கணேஷ் ஜெயராஜ் எடுத்த இந்தப் படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் எங்கள் நன்றிகள்.

Lion and Lioness

காட்டரசனார் ஏதோ சிந்தித்தவண்ணம் நாக்கைச் சுழற்றுவதிலும் ஓர் நளினமும், கம்பீரமும் தென்படவே செய்கின்றன. அவர் பார்வையில்தான் என்னவொரு தீட்சண்யம்! ’அரிமா நோக்கு’ என்பது இதைத்தானோ! அருகிருக்கும் பெண்ணரசியாரின் வாஞ்சையும் நம் நெஞ்சைக் கவரவே செய்கின்றது.

கவிஞர்களின் பார்வையில் இந்தச் சிங்கங்களைப் பற்றி அறிந்துவருவோம்!

முதல் கவிதை திரு.கவிஜியினுடையது. தத்துவ நோக்கில் இப்புகைப்படத்தை அணுகியிருக்கும் அவர், உயிரின் தன்மை, வாழ்க்கையின் தீராப்பிணியான பசி, சிறந்த உறக்கமான மரணம் இவற்றைக் குறித்தெல்லாம் தன் கவிதையில் பேசுகின்றார்.

நான் அழிவதில்லை
என்று நினைப்பதே
உயிர்…

ஓயாமல்
தேடிக் கொண்டே இருப்பது தான்
பசி…

யாரென்று நீ என்று
நினைக்கிறாய் 

அழியாத தீ ஒன்று
உனதென்று சொல்….

விழுமியங்களின்
விருட்சம் –தலைவிரித்த
பற்களின் நற நற…

பற பற- பரபரக்கும்
பரிதவிப்பு ஆளும்
மாமிச பிண்டம்….

அண்டம் சுழலும்
ஆன்மா- நீ மற்றும்
நான்…

அழியாத ஒன்றுக்குள்
சூன்யம்….
ஆக சிறந்த தூக்கம்
மரணம்…

ஆன்மாவுக்கும்
மரணத்துக்கும்
இடைவெளி…
காலம்….

காலம் எக்காலம் என்பதில்
இருக்கிறது…
ஜனிப்பென்ற காடு….

***

’சிறுமுயலைத் தின்றுவிட்டு அந்தப்புரத்தில் அரசியோடு ஓய்வு கொண்டிருக்கும் சிங்கமிது’ என்கிறார் திரு. எஸ். பழனிச்சாமி தன் கவிதையில்.

அறுசுவை(?) விருந்து முடிந்து ஓய்வெடுக்க
அந்தப்புரம் வந்தமர்ந்த ராஜாவே
உறுதுணைக்கு ராணியுண்டு; உங்களிடம் தப்பியே
உயிர்பிழைக்க எண்ணுவோரின் நிலைஎன்ன?
இறுதிவரை காத்திடுவீர் என்றுநம்பி கானகத்தில்
இருக்கின்ற உயிரினங்கள் காத்திருக்க
சிறுமுயலைக் கொன்றுதின்று நாவால்சப் புக்கொட்டும்
செயல்தான் முறையாமோ சொல்லேன்?

***

பெண்சிங்கத்தின் உயர்வு பேசும் திரு. செண்பக ஜெகதீசன், ’நாட்டுப் பெண்டிரும் இந்தக் காட்டரசிபோல் போட்டி பொறாமையற்றோராய் வாழ்ந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!’ எனும் தன் உள்ளக்கிடக்கையை இங்கே பதிவு செய்திருக்கிறார்.

வேட்டை யாடி வென்றுவரும்
வனத்து வேந்தன் உளங்குளிர
காட்டும் காதல் அரவணைப்பு
காலம் காலமாய் உள்ளதுதான்,
போட்டி பொறாமை இல்லாத
பெண்மையின் உயர்வது இதுபோல
நாட்டு மாந்தரில் வந்துவிட்டால்
நலம்பெறும் மக்கள் நல்லுறவே…!

***

’தலைவனைத் தந்திரமாய்த் தன்வலையில் வீழ்த்தும் வனராணியைக் காண்மின்!’ என்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

தலையணை மந்திரம் ஓதித் தமது 
தலைவனைத் தந்திர மாக – வலைக்குள் 
விழச்செய்யும் வித்தை வனராணிக் கும்தான் 
பழக்கமாய் ஆனதே பார்! 

***

காதலின் கதகதப்பில் இணைந்திருக்கும் சிங்கங்களை நமக்கு அறியத்தரும் திருமிகு. தமிழ்முகில், அவற்றின் இயல்புணராது விளையாடினால் ஆபத்து நமக்குத்தான் என எச்சரிக்கவும் தவறவில்லை.

காதலின் கதகதப்பில்
கலந்திட்ட ஜீவன்கள்
ஒருவருக்கொருவர்
ஆதரவாய் அனுசரணையாய்
அன்பு உலகில்
ஆனந்தமாய் சஞ்சரிக்கிறார்கள் –
சுற்றியிருக்கும் சூழல் தனையே
மறந்தவர்களாய் !
அவர்தம் வாழ்விடத்தை விட்டு
நம் வசதிக்கேற்ப கூண்டில்
குகையில் அடைக்கிறோம் !
அவர்களை காட்சிப் பொருளாய்
நாம் எண்ணிக் கொள்கிறோம் ….
உண்மையில்
நாம் அவர்களுக்கு
காட்சிப் பொருளாகிறோம் !
சமயங்களில் அதீத விளையாட்டால்
அவைதம் இரையாகவும்
மாறிப் போகிறோம் !
இயற்கையின் இயல்பை
மாற்ற எத்தனித்தால்
அழிவு நமக்கென்பதை
நாம் உணரும் காலம் எப்போது ?

***

’செல்களுக்குப் புத்துயிர் பாய்ச்சும் மீளாக்காதலுடன் நெருங்கியிருக்கும் சொந்தங்கள் இவை’ என்று சிங்கங்களைச் சுட்டுகின்றார் திருமிகு. கார்த்திகா.  

அடர் வனத்தின் கருமையில்
தொலைந்த சிற்றொளியாய்

சப்தங்கள் நிறைந்த
குழலிசையில் இழையோடும்
சந்தங்களின் இன்னிசையாய்

மரங்கள் தழுவிய இளம்
மலர்களின் அணைப்பாய் 

தொடர் மழையால்
மின்னிடும் பூமியின்
புது வெட்கமாய்  

செல்களுக்கு புத்துயிர் தரும்
மீளாக் காதலுடன்
வசந்தங்களில் தலையசைப்புகளில்
இதமாய் இனித்திருக்கட்டுமே!!

***

காதல் மானுடத்திற்கு மட்டுமன்று; மன்னுயிர்கள் அனைத்திற்குமே பொதுவானது! எனும் வாழ்வியல் தத்துவத்தைத் தன் கவிதையில் சுவைபட விவரிக்கிறார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.

பாரில் உயிர்கள் இயங்க
பாசம் காதல் பொதுவுங்க
மாக்கள் மனிதரும் உணர்வில்
மாற்றமில்லாச் சம தேடல்
காதல் துறைமுகத்தில்  இணைகளுக்கு
காத்திரமான நங்கூரம் – அருகாமை
வயோதிபமும் வளரிளம் பருவமும்
வசமாக விரும்பும் வாசமிது

சுதந்திர வனத்தில் இணையாமை
தந்திரமாய் இங்கடைத்தார் மானுடர்
கூண்டிற்குள் எம் பொழுதாயினும்
மீண்டதுன் அருகாமை ஆறுதல்
அடுத்த காட்சிக்கு முன்னர்
எடுக்குமுன் அருகாமை ஓய்வு
கொடுக்கட்டும் மகாபலம் எமக்கு
கொடுப்பனையிது பாலைவனச்சோலை உன்னருகு

 ***

அல்லல் தரும் மானுடத்தை வெல்லும்வழி யோசித்துக்கொண்டிருக்கும் அரிமாவை நமக்கு அறிமுகம் செய்கின்றார் திரு. சுரேஜமீ.

…இந்தோ வருகின்றான் கூண்டில் அடைக்கின்றான்
  கேளிப்பொரு ளாக்கி வதைகள் செய்கின்றான்
என்ன மனிதனிவன் அத்தனை பெரியவனா?
 என்னைப் படைத்தவனே உண்மை உரைப்பாயா?

பசிக்கு உண்போமே அல்லால் எதையும்
 புண்ணாக்கும் எண்ணம் எமக்கில்லை மானுடரே
புண்ணியம் பாவமெலாம் எம்வழி வந்ததில்லை
 புத்தனும் காந்தியும்போல் பூமியில் வாழ்ந்திடவே

எல்லைகள் யாமறிவோம் எண்ணிய முடித்திடுவோம்
 அல்லல்கள் ஏற்படுத்தும் மானிடம் வெல்வதற்கு
மாற்றினை யோசித்து யானும் இருக்கின்றேன்
 மந்திரம் ஏதுமுண்டோ மாற்றுக் கருத்துமுண்டோ?

மண்ணும் அழிகிறதே மானுடம் போக்கினிலே
 மாரியும் பொய்க்கிறதே மீறிய செயலாலே
யாரிடம் சொன்னாலும் தானாய் அறியாமல்
 யாண்டும் வருவதில்லை இன்பம் வாழ்வினிலே!
 
***

வழக்கம்போலவே சிறந்த கவிதைகளைச் சீரிய சிந்தனையுடன் படைத்திருக்கும் கவிஞர்கட்கு என் பாராட்டுக்கள்!

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என்று பார்ப்போம்!

காலம்செய்த (அலங்)கோலத்தால் சொந்தங்களை இழந்து நல்வாழ்வதனைத் தொலைத்து, மானுடன் அமைத்த கூண்டில் சிக்கிவிட்ட காதலுயிர்களாம் சிங்கங்கள் இரண்டின் அவலம்பேசும் கவிதையொன்று நம் மனத்தை வேதனையில் கனக்கச் செய்கின்றது.

அக்கவிதை…

காலம் செய்த கோலமிது கடந்து வந்த பாதையிலே
ஞாலம் செய்து விட்ட மாற்றம் கூடிக் குலவியன்று
கோலமிட்ட வாழ்வதனை மானிடக் கூண்டு ஒன்றில்
ஓலமிட்டுத் தொலைத்து விட்ட பொழுதுகளை இன்றும்

மேலும் நினைத்திங்கே வாடுதலும் முறையோ…?
சால ஆறி அமர்வதற்கு மரக் கிளையின் நிழல் இல்லை
பால வயதினிலே எம்மைச் சுற்றி நின்ற சுற்றம் இல்லை
ஆலம் விழதுகள் போல் எமைத் தொடர்ந்த உறவும் இல்லை

சீலம் பெற்ற எம் வாழ்வும் சிறைப் பட்டே போயிற்று
வேலேனவே நெஞ்சில் துன்பக் கணைகள் தைத்து
நூலான எம் வாழ்வு இனி அதில் மகிழ்வு எங்கு ?
காலன் அழைப்பு வரை நாமிருவர் துணையிருப்போம்…

கலங்காதீர் கண்ணாளா! வேளை வெகு தொலைவிலில்லை
சலனமற்ற பொழுதுகளும் சற்றே பொறுத்து விட்டால்
சுலபமுடன் கழிந்து விடும் காலன் எமை அழைத்திடுவான்
உலகழிந்து போனாலும் நிலைத்து நிற்கும் எம்
உறவு

இக்கவிதையைப் படைத்திருக்கும் கவிஞர், திருமிகு. புனிதா கணேசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

அரியாசனப் பதவிவெறியில் மனிதநேயம் மறந்து மதம்பிடித்தலையும் மானுடர்களின் உடல்புசிக்க மறுமை உலகில் பசியோடு வீற்றிருக்கும் சிங்கங்கள் இவை எனும் அழகிய விளக்கம் தாங்கிய மற்றொரு கவிதையும் மனங்கவர்கின்றது.

கல்மனச் சுவர்ச் சிறை உலகில்
அரியாசனப் பதவி வெறியில்
உலர் மரங்களாய் அர்த்தமற்ற
மனிதநேயம் மறந்த சாதிப்பித்து
மனிதர்கூட்டம் அழிக்க
சிம்மங்களின் இரகசிய அளவளாவல் ஆரம்பம்!
பசுமை சூழ் அன்பு வித்தை விதைக்க
மறந்த அரிமா சமுதாயக் குருளைகள்
பாதம் காணும் ஆவலில்
பசும்புற்களும் இங்கு காத்துக் கிடக்கின்றன!!
நீலவான் நிலவுலகில்
நில்லாப் புகழ் தேடி
சகடக்கால் செல்வமொடு
நிற்காமல் ஓடும் இம்மை
அகங்கார மனிதர்கள் இரை வேண்டி
கூற்றுவ அரிஏறு குடும்பம்
மறுமை உலகத்தில்
நெடிய பசியுடன் காத்திருக்கிறது!

திருமிகு. லட்சுமி எழுதிய இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.

***

கவிஞர் நண்பர்களே! கடந்த சில வாரங்களாகக் கவிதைப் போட்டிக்கான கவிதைகளின் வரவு குறைந்து வருவதைக் காண்கின்றேன். இத்தொய்வு நிலையகற்றிச் சிந்தனைக்கு வேலை கொடுத்துக் கவிமழை பொழியவேண்டுமாய்க் கவிஞர்கள் அனைவர்க்கும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றேன். சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் என்பதுபோல் கவிதையும் சிந்தையைப் பழக்குவதினால் மட்டுமே வசப்படும் ஒன்றாகும். முயன்றுபாருங்கள்!

அதிக எண்ணிக்கையிலான கவிதைகளை வரும் வாரங்களில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 20-இன் முடிவுகள்

  1. வல்லமை குழுவினருக்கும், திருமிகு மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் என்னை மீண்டும் தேர்ந்தெடுத்ததிற்கு மனப் பூர்வமான நன்றிகள் ; மற்றும் அனைத்து கவிஞர் பெருமக்களிற்கும் என் அன்பு பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *