இன்ஜ்போர்க் ஸில்ம்-ரபோபோர்ட்!
– தேமொழி.
உயர்கல்வியின் சிகரமாக விளங்கும் முனைவர் படிப்பை முடித்து, முனைவர் பட்டம் என்ற வெற்றிக் கொடியை நாட்ட விரும்புவது பெரும்பாலோருக்கு நிறைவேறாக் கனவாகவே முடிந்துவிடும். அதற்கு அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை, திறமையில்லை போன்ற காரணங்களைச் சொல்வதற்குக் கூட சிலசமயம் வழியிருக்காது. பெரும்பாலும் படித்து முடித்து சொந்தக்காலில் நிற்கவேண்டிய நேரம், தனது கடமைகளும் தன்னை அழைக்கிறது என்ற வயதில் பலர் சிக்கிக் கொள்ளும் வாழ்க்கையின் திருப்புமுனையான காலம் அது. சரி இப்பொழுது கொஞ்சம் விலகிச் சென்று மீண்டும் திரும்ப வந்து முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் கல்விக்கு தற்காலிக இடைவெளி விடுபவர் மீண்டும் முடிக்கமுடியாமல் கூட போய்விடுவதும் பலர் வாழ்வில் எதிர்கொள்ளும் உண்மை. அதற்குள் வாழ்க்கையில் பெரிய திருப்பங்கள் தோன்ற நிரந்தரமாகவே தங்கள் முனைவர் பட்டக் கனவை கைவிடும் நிலை ஏற்பட்டு விடுவதும் உண்டு.
இங்கு அடுத்து வைக்கப்படும் கருத்துகள் இந்தியக் குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டு கூறுவது. பெரும்பாலும் அறிவியல், கணிதம், பொறியியல் போன்ற துறைகளில் படிப்பவர்கள், குறிப்பாக ஆண்கள், அதுவும் அவர்கள் வீட்டிற்கு அவர்கள் கடைசி மகனாய் இருந்தால் அவர்களுக்கு முனைவர் படிப்பை முடிப்பதற்கு தடைகள் மிக மிகக் குறைவு. வீட்டின் மூத்தபிள்ளையாக இருந்து குடும்பத்தைக் காப்பாற்றும் நிலையில் ஆர்வமுள்ள ஒருவர் இருப்பார் என்றால், வேலைக்குச் சென்று கொண்டே மாற்றுவழியில், பகுதி நேரமாக முனைவர் ஆய்வு செய்து முடிக்க வேண்டிய நிலைமை இருக்கும். இதில் வயதும் பெரிய பங்கை வகிக்கிறது. ஆண்கள் முப்பது வயது வரை குடும்ப வாழ்க்கையைத் துவக்குவதற்கு முன்னால் எந்த இடையூறும் இல்லாமல் முனைவர் படிப்பு மேற்கொள்வதில் தடைகள் ஏற்படுவதில்லை.
ஆனால் பெண்களாக இருந்தால், அவளுக்கு இருபத்தியைந்து வயது நெருங்கத் துவங்கும் பொழுதே பெற்றோர்களுக்கு மகளின் வயது கவலை தரத் தொடங்கிவிடும். அந்தப் பெண்ணே திருமணம் பற்றிக் கவலைப்படாமல், படிப்பிலேயே கவனமாக இருந்தாலும்கூட பெற்றோர்களிடம் இருந்து திருமணம் பற்றிய கேள்விகளும் முயற்சிகளும் துவங்கிவிடும். அதுவும் அந்தப்பெண் மூத்த பெண்ணாக இருந்தால், அடுத்து இருக்கும் பிள்ளைகளுக்கும் படிப்பை முடித்து, திருமணத்தை முடித்து தங்கள் கடமைகளை நிறைவேற்றும் பொறுப்பைப் பற்றியக் கவலை பெற்றோருக்கு இருக்கும். ஆனால் அதுவே கடைசி மகளாக இருந்தால் தாங்கள் பாடும் பாட்டை மாற்றிப் பாடுவார்கள். நாங்கள் கண்ணை மூடுவதற்குள் உனக்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்று மகளின் படிப்பை ஒரு வழி செய்துவிடுவார்கள். இது போன்ற நெருக்கடிகளுக்குக் காரணம் முனைவர் பட்டப்படிப்பும் ஒரு வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் முடியாமல் ஆராய்ச்சிநிலை பலமுறை வரையறுக்கப்பட்ட கால எல்லையையும் தாண்டி நீடித்து விடுவதுதான்.
முனைவர் பட்டத்தை முடிப்பதற்கு இது போன்ற வழக்கமான தடைகளை பார்த்துப் பழகிய நமக்கு ஜெர்மனியைச் சேர்ந்த ‘இன்ஜ்போர்க் ஸில்ம்-ரபோபோர்ட்’ (Ingeborg Syllm-Rapopor) என்பவர் எதிர்கொண்ட தடை மேலும் வியப்பைத் தரும். சென்ற மாதம் (ஜூன் 9, 2015) தனது 102 வயதில் (ஆம், சரியாகத்தான் படிக்கிறீர்கள், சந்தேகம் வேண்டாம்) தனது முனைவர் படிப்பை முடித்து பட்டம் வாங்கியிருக்கிறார். உலகிலேயே மிகவும் வயதாகி முனைவர் பட்டம் பெற்றவர் என்ற பட்டத்தையும் இதனால் இவர் பெறுகிறார். இவரது இந்தச் சாதனையை முறியடிப்பதற்கு வரலாற்றில் மேலும் பல ஆண்டுகள் கூட ஆகலாம். இனி இவர் ஏன் இந்த வயதில் முனைவர் பட்டம் பெறுகிறார், இவர் எதிர்கொண்ட வழக்கத்திற்கு மாறான தடை என்ன என்று பார்ப்போம்.
அவர் எதிர்கொண்ட தடை இனப்பேதம். இந்த நூற்றாண்டில் நம்மால் இது நம்பக்கூட முடியாத ஒன்றுதான். ஆனால் சென்ற நூற்றாண்டில் ஒருவரது இனம் என்ற பின்புலம் கல்வி கற்பதில் இடையிட்ட போராட்டங்கள் நிறைந்த காலம்.
இன்ஜ்போர்க் 1912 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டின் காமரூன் (Cameroon) பகுதியில் பிறந்தவர். ஜெர்மனியின் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் (Hamburg University) 1937 ஆம் ஆண்டில் தனது மருத்துவப் படிப்பை முடித்தார். தொடர்ந்து அதில் முனைவர் பட்டப்படிப்பும் மேற்கொண்டார். அவரது 25 ஆவது வயதில், 1938–ம் ஆண்டில் அத்துறையில் ஆய்வுகள் செய்து, அக்காலத்தில் குழந்தைகளை அதிகம் பாதித்த தொண்டை அழற்சி தொற்றுநோய் பற்றி முனைவர் பட்ட ஆய்வறிக்கையை (PhD thesis on infectious disease – diphtheria) சமர்ப்பித்தார். அந்த நாட்களில் உலகப் போர் சூடுபிடித்திருந்தது. ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லரின் கொடுங்கோலாட்சி நிகழ்ந்த காலமது. இனப்பேதம் தலைவிரித்தாடிய அக்கால கட்டத்தில், ஹிட்லரின் கட்டளைக்கிணங்க யூதக்குலத்தை அடியோடு அழித்தொழிக்கும் நிலையை ஜெர்மன் நாடு நடைமுறைப்படுத்தியது. நியாயம் கேட்பார் இல்லை. யூதர்கள் பணம், பதவி, உடமை, சொத்து, சுகம் என அனைத்தும் இழந்து உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். பிடிபட்டவர்களை சிறையில் அடைத்து நச்சுவாயு அறையில் அடைத்து உயிரை எடுத்தார்கள்.
இந்தக் கொடிய காலகட்டத்தில் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த இன்ஜ்போர்க் ஒரு கலப்பினப் பெண்ணாக இருந்தார், ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்த்துவராக வளர்க்கப்பட்டவர் இவர். ஆனால், இவரது தாய் யூத இனத்தைச் சேர்ந்தவர், அவர் ஒரு பியோனா இசைக்கலைஞர். இன்ஜ்போர்க் அவர்களது ஆய்வறிக்கையின் மேல் அவரது ஆய்வின் அடிப்படையில் முடிவெடுக்கப்படாமல், இவர் யூத பின்புலம் கொண்டவர் அதனால் பட்டம்பெற தகுதியற்றவர் என்று மஞ்சள் வண்ணத்தில் கோடிட்டு இவரது ஆய்வறிக்கை புறக்கணிக்கப் பட்டது (அந்நாட்களில் யூதர்கள் தங்கள் ஆடைகளின் மீது அடையாளம் தெரிவதற்காக மஞ்சள் வண்ண நட்சத்திரங்களை அணிய நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்). இவர் சமர்ப்பித்த ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, மேற்கொண்டு வாய்வழித் தேர்வில் இவர் பங்கு பெற அனுமதி மறுக்கப்பட்டார்.
ஒருவரது மூதாதையரின் இனம் அடிப்படையில் அவரது தகுதியை நிர்ணயிக்கும் நாட்டின் சட்டங்கள் குறுக்கிடாவிட்டால் மட்டுமே இவர் தேர்வில் அமர அனுமதிக்கலாம் என்ற குறிப்பு ஒன்றும் எழுதப்பட்டு இன்ஜ்போர்க்கின் ஆய்வறிக்கையில் இணைக்கப்பட்டுவிட்டது. செய்வதறியாது திகைத்த இன்ஜ்போர்க் பிற யூதர்கள் போல நாட்டை விட்டு வெளியேறினார். தனது மருத்துவப் பணியின் எதிர்காலமே நொறுங்கிப் போனதாக பின்னர் இதைப் பற்றிக் கருத்து தெரிவித்துள்ளார். அது ஜெர்மனிக்கும், அறிவியல் உலகத்திற்கும் அவமானம் தரும் ஒரு நிகழ்ச்சி என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்க மண் இந்த அகதிக்குப் புகலிடம் கொடுத்தது. கையில் பணமின்றி வேலைக்கு அலைந்தார். நியூயார்க், பால்ட்டிமோர் போன்ற நகர்களில் சிறு சிறு வேலைகளை ஏற்று வாழ்க்கையுடன் போராடினார். அமெரிக்காவின் மருத்துவக் கல்லூரிகளில் 48 கல்லூரிகளுக்கு மருத்துவப் பயிற்சியைத் தொடர விண்ணப்பித்ததில் பென்செல்வேனியா பல்கலைக்கழக மருத்துவமனையில் மட்டுமே பயிற்சியாளராக சேரும் வாய்ப்பு கிடைத்து, பயிற்சியைத் தொடர்ந்து மருத்துவப் பட்டம் பெற்று, 1944 ஆம் ஆண்டில் சின்சினாட்டி மருத்துவமனையில் குழந்தைநல மருத்துவரானார்.
அந்நாட்களில், இவரைப்போலவே ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து அகதியாகத் தப்பி வந்த, வியன்னா, ஆஸ்திரியாவைச் சேர்ந்த ‘சாமுவேல் மிட்ஜா ரபோபோர்ட்’ (Samuel Mitja Rapoport) என்ற யூதரைச் சந்தித்தார். மருத்துவரும் உயிர்வேதியியல் துறையைச் சார்ந்தவருமான சாமுவேல் ரபோபோர்ட்டை விரும்பி மணந்து கொண்டார். இவர்களது அன்பான சிறிய குடும்பம் 1950 களில் மீண்டும் புதுவகை இடரைச் சந்தித்தது. கம்யூனிச, இடதுசாரி சிந்தனையைக் கொண்டவர்கள் ரபோபோர்ட் கணவன் மனைவி இருவருமே. ஐம்பதுகளில் அமெரிக்காவில் கம்யூனிச எதிர்ப்பு அலை மிகவும் தீவிரமடைந்திருந்தது. இவர்களும் கைது செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் குடும்பத்துடன் அந்நாள் கிழக்கு ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு மீண்டும் 1952 ஆம் ஆண்டில் குழந்தைகளுடன் குடிபெயர்ந்தனர். முதலில் கருத்தரங்கு ஒன்றுக்காகச் சென்ற கணவர் அங்கேயே தங்கி வேலைத்தேட, நான்காவது குழந்தையுடன் கர்ப்பிணியாக இருந்த இன்ஜ்போர்க் குழந்தைகளுடன் சென்று அவருடன் சேர்ந்து கொண்டார்.
இன்ஜ்போர்க் கிழக்கு பெர்லினில் ஒரு மருத்துவமனையில் குழந்தைநல மருத்துவராகவும், குறிப்பாகப் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு நிபுணராக (neonatologist ) பணி புரிந்தார். இவர் பணிசெய்த காலத்தில் ‘குழந்தைகள் மரண விகிதம்’ (Infant mortality rate) வெகுவாகக் குறைக்கப்பட்டது. பிறகு, குழந்தைநல மருத்துவப் பேராசிரியராகவும் 1964 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்தார், குழந்தைகள் பராமரிப்புத் துறையின் முதல் தலைவராகவும் பெர்லினின் புகழ் பெற்ற சாரைட் மருத்துவமனையில் ( Charité Hospital in East Berlin) பதவி வகித்தார். பின்னர் 1973 – ஆம் ஆண்டு இன்ஜ்போர்க் ஓய்வு பெற்றாலும் தனது 80 வயதுகளிலும் அறிவியல் ஆராய்ச்சிகளில் பங்குபெற்று வந்தார். குழந்தை இறப்பு விகிதத்தை பெருமளவில் குறைத்ததற்காக, கிழக்கு ஜெர்மனியின் தேசிய விருது வழங்கப்பட்டுப் பாராட்டப்பட்டார்.
இவரது இத்தனை சாதனைகளையும் பின்னுக்குத் தள்ளுவது, எந்த முனைவர் பட்டம் இவருக்கு அநீதியான முறையில் மறுக்கப்பட்டதோ அதை மீண்டும் உழைத்து நியாயமான முறையில், அதுவும் தனது 102 ஆவது வயதில் இவர் பெற்றதே. சற்றொப்ப 80 ஆண்டுகள் கடந்த பின்னர், சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 77 ஆண்டுகளுக்கு பிறகு, இவர் முயற்சியின் அடிப்படையில் பெற்ற முனைவர் பட்டம், ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற விரும்புபவர்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியான வழிகாட்டல் என்றால் அது வெறும் வெற்றுப் புகழுரை அல்ல.
இவருக்கு கல்வியில் கிடைத்த மறுப்பு கசப்புணர்வு தராதவகையில் பணியில் பல வெற்றிகள் பெற்றாலும், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி அவர் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. இவரது மகன் ‘டாம் ரபோபோர்ட்’ (Tom Rapoport) ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு மருத்துவப் பேராசிரியர். இவர் தனது தாயின் கதையை, அவர் முனைவர் பட்டம் பெறுவதில் எதிர்கொண்ட ஏமாற்றத்தை ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அவரது நண்பர் ஒருவரிடம் பகிர்ந்திருந்தார். அவர் இன்ஜ்போர்க் படித்த ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறைத் தலைவரைச் சந்திக்க நேர்ந்தபொழுது, இன்ஜ்போர்க்கின் கதையைக் குறிப்பிட்டார். துறைத்தலைவர் அநீதியைச் சரி செய்யவேண்டியத் தேவை இருக்கிறது என்று பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்தாலோசித்தார்.
இன்ஜ்போர்க்கின் ஆய்வறிக்கையைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அவரும் அமெரிக்காவில் படிப்பைத் தொடர்ந்து மருதவராகவும் ஆகிவிட்டார், ஆண்டுகள் பலவும் கழிந்துவிட்டன சட்டச் சிக்கல்கள் உள்ளன என்று மறுப்புக்கான காரணங்களை அடுக்கியது பல்கலைக்கழக நிர்வாகம். நிர்வாகம் ஆண்டுகள் பல கடந்துவிட்டதால் இன்ஜ்போர்க் விவகாரத்தில் ஆர்வமோ அக்கறையோ காட்டவில்லை. அவருக்கு ஒரு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து கதையை முடித்துவிட நினைத்தது. இதனை இன்ஜ்போர்க்கும், துறைத்தலைவரும் ஒப்புக்கொள்ளவில்லை. இரக்கத்தின் பேரில் தருவது போன்ற பட்டதை ஏற்க மனமில்லை இருவருக்கும். தகுதியுள்ள ஒருவர் மறுக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு அவரது தகுதி அடிப்படையில் பட்டம் வழங்குவதையே இருவரும் எதிர்பார்த்தனர். இதனால் ஏற்படும் சட்டச்சிக்கல்களை, விதி புறக்கணிப்புகளை பல்கலைக்கழகம் எதிர் கொள்ளாதவாறு இன்ஜ்போர்க் மீண்டும் ஒரு ஆய்வறிக்கை தயார் செய்து, அதில் வாய்வழித் தேர்வை விதிகளின் முறைப்படி எதிர்கொண்டு வெற்றிபெற்றால் அவருக்கு முனைவர் பட்டம் வழங்க தீர்மானிக்கப் பட்டது.
இன்ஜ்போர்க்கிற்கு பார்வை குறைந்ததால் படிப்பதோ, கணினி வழி ஆய்வு செய்வது இயலாது போனது. தற்கால மருத்துவ முன்னேற்றங்கள், கடந்த 80 ஆண்டுகளில் குழந்தைகளைப் பாதிக்கும் தொற்றுநோய் மருத்துவ சிகிச்சைமுறை ஆகியவற்றை ஆராய இவரது நண்பர்களும் உறவினர்களும் உதவ முன் வந்தார்கள். இணையத்தில் தகவல் சேகரித்து, அவரது ஆய்விற்குத் தேவையான தகவல்களை இவரிடம் கொண்டு வந்து தொலைபேசி வழியே சேர்த்தார்கள். இவர் அவற்றின் அடிப்படையில் மீண்டும் ஒரு அறிக்கை எழுதிச் சமர்ப்பித்தார். அவர் படித்த காலத்தைவிட இப்பொழுது ஏற்பட்டுள்ள மருத்துவ முன்னேற்றங்கள் இவருக்கு வியப்பளித்தது. பல்கலைக்கழகம் இவரது வேண்டுகோளுக்கு பொறுமையாக ஒத்துழைத்ததற்கும் இன்ஜ்போர்க் பல்கலைக்கழகத்தைப் பாராட்டினார்.
பல்கலைக்கழகத்தில் இருந்து இரு மருத்துவத் துறை ஆசிரியர்களும், துறைத் தலைவரும் வாய்வழித் தேர்விற்காக இவரது வீட்டிற்கே வந்தனர். இவரது வரவேற்பறையிலேயே இவருக்கு 45 மணித்துளிகள் கேள்விகள் மேல் கேள்விகள் வீசப்பட்டு தேர்வு நடந்தது. பரிசோதிக்க வந்தவர்கள் இவர் கொண்டுள்ள புத்திசாலித்தனத்தைக் கண்டு பேச்சிழந்து போனதாகப் பாராட்டினார்கள். தேர்வு இவருக்குக் கொஞ்சம் மனஉளைச்சளை உண்டாக்கியதாகக் கூறிய இன்ஜ்போர்க், இந்த முதுமையில் அவர் மேற்கொண்ட இந்த முயற்சி தனக்கு பட்டம் வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல, அவர் காலத்தில் அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிகழ்வின் மூலம் நியாயம் கிடைத்ததாக ஏற்பட்ட உணர்விற்காக என்றும், இது கொள்கைக்கு கிடைத்த வெற்றிக்கான அறிகுறி என்றும் பட்டமளிப்பு விழா உரையில் குறிப்பிட்டார். தனக்கு வாழ்க்கையில் வாய்ப்புகள் மட்டும் அமையவில்லை, தன்னிடமும் விடாமுயற்சி இருந்தது என்றும் இன்ஜ்போர்க் குறிப்பிட்டார்.
கொள்கை வென்றது, நீதி வெற்றிபெற்றது, விடாமுயற்சி வெற்றி தரும், கல்விக்கு வயது ஒரு தடையல்ல என எத்தனையோ செய்திகளை தான் 102 வயதில் முனைவர் பட்டம் பெற்றதன் மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ள இன்ஜ்போர்க் ஸில்ம்-ரபோபோர்ட் பாராட்டப்படவேண்டியவர்.
படங்கள் : பற்பல இணையதளங்களில் இருந்து திரட்டப்பட்டன, அத்தளங்களுக்கு நன்றி.
News Sources:
The Wall Street Journal:
Ingeborg Rapoport to Become Oldest Recipient of Doctorate After Nazi Injustice is Righted
http://www.wsj.com/articles/from-nazi-germany-a-tale-of-redemption-1431576062
The Daily Mirror:
The shocking reason a 102-year-old woman waited 77 years to get her PhD published
http://www.mirror.co.uk/news/world-news/shocking-reason-102-year-old-woman-waited-5802450
The Sydney Morning Herald:
Ingeborg Syllm-Rapoport, 102, completes degree denied her by Nazis 77 years ago
http://www.smh.com.au/world/ingeborg-syllmrapoport-102-completes-degree-denied-her-by-nazis-77-years-ago-20150610-ghke0k.html