சு. கோதண்டராமன்

 திருவாஞ்சியம்

 vallavan-kanavu111111

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே

                                                  -சம்பந்தர்

ஹரதத்த சர்மா திருவாஞ்சியம்வாசி ஆகி மூன்று வருடங்கள் ஆகின்றன. அதற்குள் ஊர் மக்கள் அத்தனை பேரின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமாகிவிட்டார். ஊரில் யார் வீட்டில் எந்த விசேஷமானாலும் வலுவில் போய் உதவி செய்வார். அடுத்த வீட்டுக்காரர் கூரை வேய்ந்து கொண்டிருந்தால் இவர் கீழே நின்று கீற்று எடுத்துக் கொடுப்பார். பக்கத்துத் தெருவில் திருமணம் என்றால் பந்தல்கால் நடுவதற்குக் கடப்பாரையுடன் வந்து நிற்பார். பனைமட்டை வெட்டிக் கொண்டு வந்து விசிறி செய்தாலும் சரி, தேங்காய்நார் கொண்டு மாட்டுத்தும்பு திரித்தாலும் சரி, தனக்கு மட்டும் செய்து கொள்ளாமல் அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் செய்து கொடுப்பார். கோயிலில் உட்கார்ந்து அவர் வேதம் சொல்லும் காட்சி மக்களைக் கவர்ந்தது. பொருள் புரியாவிட்டாலும் ஸ்வரத்துடன் கூடிய அந்த ஒலிக்கோவை அவரது கணீரென்ற குரலில் வெளிப்படும்போது அவர்களுக்கு ஒரு இனம் புரியாத ஆனந்தம் ஏற்பட்டது.

ஊர் மக்கள் தங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை அவரிடம் சொல்லி ஆலோசனை கேட்கத் தொடங்கினர். அறநெறிக்கும் உலகியலுக்கும் ஏற்ற வகையில் அவர் சொல்லும் ஆலோசனைகள் எல்லோருக்கும் மனதிற்குப் பிடித்ததாகவும் நடைமுறை சாத்தியமானதாகவும் இருந்தன. தான் சொல்வதைத் தானே கடைப்பிடிக்காத ஊத்தைவாய்ச் சமணத் துறவிகளின் அறநெறி உபதேசங்களையே கேட்டு வந்த மக்களுக்கு உடல் தூய்மை, உடைத் தூய்மை, உள்ளத் தூய்மை கொண்ட ஹரதத்தர் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக ஆனதில் வியப்பில்லை.

நூறு குடும்பங்கள் கொண்ட அந்த ஊரில் இருபது சிராவகக் குடும்பங்கள் இருந்தன. அவர்கள் அருகர்களை மட்டும் வணங்கினர். மற்றவர்கள் திருமால், மாரியம்மன் போன்ற தெய்வங்களை வழிபடுவதோடு அருகர்களையும் வழிபட்டனர். மற்றபடி வாழ்க்கை முறை இரு சமயத்தாருக்கும் ஒரே மாதிரியாக இருந்தது. அவர்கள்  ஒருவர்க்கொருவர் நல்லிணக்கத்துடன் வாழ்ந்தனர். சமணத் துறவிகள் வந்தால் எல்லோருமே உணவளிப்பர். மாமிசம் சாப்பிடுபவர்களின் வீட்டிற்கு மட்டும் அவர்கள் போக மாட்டார்கள். அத்தகையோர் சிறுபான்மையராகவே இருந்தனர்.

அவருடைய வீட்டிற்கு அடுத்த வீட்டில் இருந்தவர் ஒரு சிராவகர். வந்த சில நாட்களிலேயே இரு குடும்பத்தவர்களும் நெருங்கிய நண்பர்கள் ஆயினர். இல்லத்தரசிகள் தங்கள் தங்கள் வீட்டுக் கொல்லையில் நின்று பேசி நட்புறவை வளர்த்தனர். ஆடவர்கள் திண்ணையில் உட்கார்ந்து பேசினர். பெண் குழந்தைகள் மற்றவர் வீட்டுக்குள் சென்று விளையாடினர். பையன்கள் தோப்பிலும் ஆற்றங்கரையிலும் திடல்களிலும் சென்று விளையாட்டிலும் பேச்சிலும் ஈடுபட்டனர். அடுத்த வீட்டுப் பெண் சுநந்தா ஹரதத்தரின் பெண்ணிடம் கோலம் போடவும் பாட்டுப் பாடவும் கற்றுக் கொண்டாள். அவளுடைய தந்தைக்கு முதலில் இது பிடிக்கவில்லை.

“நம் குடும்பங்களில் இது வழக்கம் இல்லை, அம்மா” என்றார்.

“போங்கள் அப்பா. அடுத்த வீட்டு வாசலில் கோலம் போட்டிருப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது. நானும் நம் வீட்டு வாசலில் இதுமாதிரி போடப் போகிறேன். இந்தச் சின்ன ஆசைக்குக் கூடத் தடை போடுகிறீர்களே!”

“சின்ன ஆசை நிறைவேறியவுடன் பெரிய ஆசைக்கு அழைத்துப் போகும். அது நிறைவேறினால் அதைவிடப் பெரிய ஆசை. இப்படிப் போனால் ஒரு காலத்தில் நிறைவேறாத ஆசையுடன் செத்துப் போவோம். மீண்டும் பிறப்போம். இந்தப் பிறவியில் துன்பப்படுவது போதாதா, மீண்டும் பிறக்க வேண்டுமா?”

“ஏன் அப்பா எப்பொழுதும் துன்பத்தையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இந்த உலகில் இன்பமே இல்லையா? கோலம் போடுவது ஒரு இன்பம், பாட்டுப் பாடுவது ஒரு இன்பம், பறவைகள் பாடுவதைக் கேட்பது இன்பம், ஓடும் நதியையும் பெய்யும் மழையையும் ரசிப்பது இன்பம். வாலைத் தூக்கிக் கொண்டு கன்றுக்குட்டி துள்ளிக் குதிப்பதிலும் குரங்குக் குட்டி அனாயாசமாக ஒரு கிளையிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுவதிலும் அழகும் இன்பமும் பொங்குகின்றன. அதை எல்லாம் ரசிக்கத் தெரியாத மனம் வெறும் பாலைவனம். உலகில் இயற்கையாகக் கொட்டிக் கிடக்கும் அழகையும் மனித முயற்சியால் ஏற்படுத்தப்படும் அழகையும் ரசித்தால் மோட்சம் கிடைக்காது என்றால் அந்த மோட்சமே எனக்கு வேண்டாம்.”

சந்திரசேனர் மறுமொழி சொல்லவில்லை. அவரது மனைவி சொன்னாள். “வீட்டில் எறும்புக்கு எட்டாமல் எல்லாவற்றையும் உறியில் வைக்கிறோம். எறும்பும் உயிர் வாழவேண்டாமா? அதற்குத்தான் வாசலில் கோலம் போடுகிறோம். நமக்கும் இடைஞ்சல் இல்லை, அவையும் உயிர் பிழைக்கும் என்று அடுத்த வீட்டு மாமி சொல்கிறார்கள்” என்றாள்.

சந்திரசேனருக்கு இதில் நியாயம் இருப்பது தெரிந்தது.  “சரிம்மா, உன் விருப்பப்படி செய்” என்றார்.

சிறுகச் சிறுக அந்த ஊரிலுள்ள அத்தனைச் சிராவகர் வீட்டிலும் கோலம் போடுவது வழக்கமாகிவிட்டது.

சந்திரசேனரின் மூத்த மகன் விசுவசேனன் ஹரதத்தரின் மகன் பசுபதியுடன் ஒத்த வயதுடையவன். இருவரும் தோப்பிலும் ஆற்றங்கரையிலும் மணிக்கணக்காகப் பேசினார்கள். பசுபதி தன் பழைய இருப்பிடம் பற்றிச் சொல்வதை எல்லாம் திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்பான் விசுவசேனன். ஊரிலுள்ள மற்ற இளைஞர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அந்த வயதிற்கு உள்ள இயல்புப்படி, எல்லோருக்குமே சமயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. சமயப் பழக்க வழக்கங்களைப் பற்றி விவாதித்தனர். லகுலீசரின் கொள்கைகள் எப்படி அம்மையாரின் பாடல்களில் வெளிப்படுகிறது என்று பசுபதி சொன்னது எல்லோரையும் கவர்ந்தது.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *