நிர்வாண நேனோ செகண்ட்ஸ்…-10

4

Rishiraveendran

 

நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… -10

 

 

 

முன் கதை: 00, 01 ,02, 03, 04, 05, 06, 07, 08, 09  

இனி ….


 

  

நன்றி: Yandamoori.com

 

ரஸ்வதி வித்யா பீடம்.

பிரபல தெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத் அவர்களால் நிர்மாணித்து சேவை மனப்பான்மையில் மாணவர்களுக்கு இங்கே பயிற்சியளிக்கப்படுகின்றது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் காகிநாடாவிற்கு அருகே மாதவபட்டிணத்தில் அமைந்திருக்கின்றது.

இந்தியாவின் எந்த மூலையிலிருக்கும் பள்ளியிலிருந்தும் ஒரு நாற்பது மாணவர்களை ஒரு குழுவாக இரு ஆசிரியர்களுடன் இங்கே அனுப்பினால் அவர்களுக்கு ஒரு நாள் பயிற்சியளிக்கப்படுகின்றது. செலவு….?

அனைத்தும் இலவசம்.

சரஸ்வதி வித்யா பீடத்தின் நோக்கங்கள்…..?

மாணவர்களுக்கு பழங்கால மரபு வழியில் நம் கலாச்சாரப் பிண்ணனியின் சூழ்நிலையில் பயிற்சியளிக்கப்படுகின்றது. ஏறக்குறைய ஒரு ஆஸ்ரம பிண்ணனி. மரம் செடி கொடிகள் தோட்டங்கள் என இயற்கை சூழலில் பயிற்சி.

நினைவாற்றல், மன ஒருமைப்பாடு, தன்னம்பிக்கை, சாதனை படைத்தல், தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுப்பது எப்படி…?, கற்பனைத் திறன், ஆக்கத்திறன்… விளையாட்டின் மூலம் கற்றலை எளிதாக்கல் என ஒரு நாள் முழுக்க பயிற்சியளிக்கப்படுகின்றது.

நன்றி: Yandamoori.com

 

மாணவர்கள் வித்யா பீடத்திலிருக்கும் சரஸ்வதி ஆலயத்தில் வரிசையாக தவத்தினில் அமர்ந்திருந்தனர். சரஸ்வதி தேவியை கல்வி வேண்டி ஒரு தவம். தவம் முடிந்ததும் பயிலரங்கத்திற்குச் சென்றனர். வலது பக்க மூளையை எப்படி இயக்குவது…? நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி…? என எண்டமூரி வீரேந்திரநாத் மாணவர்களுக்கு பயிற்சியளித்துக் கொண்டிருந்தார். பிராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியானது மூளையை வெகு சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றது எனவும் நினைவாற்றல் மற்றும் அதிவிரைவாக எந்த ஒரு கடினமான பாடத்தினையும் கற்க பிரணாயாமம் எவ்வாறு உதவுகின்றது எனவும் விளக்கி… மூச்சுப் பயிற்சியை மாணவர்களுக்கு பயிற்சியளித்துக்கொண்டிருந்தார்.

“சார்… உங்களுக்கு ஒரு அர்ஜண்ட் கால்…..” என உதவியாளர் ஓடி வந்துகொண்டிருந்தார்.

“எங்கிருந்து…..?”

“தமிழ்நாட்டில் சிவகாசியிலிருந்து…… யாரோ ரெங்கநாயகியம்மாளாம்…….”

உதவியாளரிடம் சிறிது நேரம் பயிலரங்கத்தினைத் தொடரும்படிக் கேட்டுவிட்டு, இன்னொரு ஹாலினுள்ளிருக்கும் தொலைபேசியை நோக்கி நகர்ந்தார்.

“ஸார்…. என் பெயர் ரெங்கநாயகி. நான் சிவகாசிக்கருகே ஒரு கிராமத்திலிருந்து பேசறேன்…. தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட உங்கள் கதைகளை லைப்ரரியிலிருந்து எடுத்துப் படிச்சிருக்கோம்… அதில் துளசிதலத்தில் கூறப்பட்டது போன்ற அமானுஷ்யமான நிகழ்வுகள் என் தம்பியின் மகனுக்கு நிகழ்கின்றது….. ” என ’அ’ விலிருந்து ’ஃ’ வரை விளக்கிவிட்டு அதிலிருந்து எப்படி மீள்வது என ஆலோசனை கேட்டார்.

“1980ல் ஆந்திர ஜோதி பத்திரிகையில் எழுதிய ஒரு தொடர் கதை. அது ஒரு கற்பனைக் கதை அவ்வளவே. நிஜத்திற்கும் கதைக்கும் வித்தியாசம் இருக்கின்றது. நீங்கள் நினைப்பது போல் எனக்கு அதில் நிபுணத்துவம் இல்லை. ”

”கதை எழுதும்பொழுது ஆய்வு செய்திருப்பீர்களல்லவா….? நிச்சயமாக எனக்கு எதாவது தகவல்கள் கிடைக்கும்….”

தான் வங்கியில் பணிபுரிந்தபொழுது ஒரிசா மாநிலத்தில் இது போல் அமானுஷ்ய சக்திகளை எதிரிகளின் மீது ஏவிவிடுகின்றனர் எனக் கேள்விப்பட்டு அதையே ஒரு கதைக்கலனாக எடுத்து சுவாரசியம் கூட்டி கதை எழுதியதாகவும், அப்படி எழுதும்பொழுது நிறைய விசாரணை செய்து தெரிந்துகொண்டதில் காஷ்மோரா என்ற ஒரு தீயசக்தி ஒன்று இருப்பதாகவும். அது ஏவப்பட்ட 21 வது நாளில் யார் மீது ஏவப்பட்டதோ அந்த மனிதன் மரணிப்பான் எனவும் அந்த 21 நாளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாக சொல்லொணா துயர்கள் அனுபவிக்க வேண்டிவரும் எனவும் மருத்துவர்களால் சரியாக அனுமானிக்க இயலா வண்ணம் நோய் நொடிகள் உடலில் ஏற்படும் என்றும் ஏவிய அந்த மந்திரவாதி தொடர்ந்து அந்த 21 நாட்களுக்கும் நள்ளிரவில் சுடுகாட்டில் காஷ்மோராவிற்கு பூஜை செய்வான் என்றும் அந்த 21 நாட்களுக்கும் தன் உடலிலிருந்து ரத்தம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும்… இறுதிநாளில் அக்னி வளையத்தில் செய்யும் அந்த பூஜைதான் மிகவும் பிரதானமானதென்றும் ஏவப்படுவதற்கு அந்த நபரின் முடி, காலடி மண், ஆடை இதில் ஒன்றோ அல்லது பலவோ சேகரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அதன் மூலமே காஷ்மோராவை ஏவமுடியும் எனவும் தான் சேகரித்தத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

தனக்கு உதவிட சிவகாசிக்கு வர இயலுமா எனக் கோரிக்கை விடுத்தார் ரெங்கநாயகியம்மாள்.

 

———————–

 

ரெங்கநாயகியம்மாள், இதனை தாத்தாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுது பாட்டி… “அடக்கடவுளே…..” என எதோ ஞாபகம் வந்ததுபோல் அலறினார்.

”ரங்கராஜிற்கு மொதல்ல எங்கள் குல வழக்கப்படி திருப்பதியில்தான் மொட்டையடித்துக் காது குத்த முடிவெடித்திருந்தோம்… ஆனால் அவன் ஆறு மாதக் குழந்தையாக இருந்தபொழுது ஒரு முறை அதிகமாக சேஷ்டைகள் செய்து தூளியிலிருந்து கீழே விழந்ததில் தலையில் சின்ன காயம். டாக்டர் ரங்கராஜின் முடியை எடுத்தால்தான் அந்த இடத்தில் ஆராய்ந்து மருந்து தடவ இயலும் என்றதால் முடியை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் சுற்றி காலம் கைகூடும்பொழுது திருப்பதியில் செலுத்த நினைத்து வைத்திருந்தோம்….”

“அதை ரங்கராஜிற்கு மொட்டையடிக்க திருப்பதி சென்றபொழுது அங்கே செலுத்தியாச்சே…..” என்றார் தாத்தா..

“இல்லை… அதனை ரெண்டு பகுதியாகப் பிரித்து வைத்திருந்தோம். ஒன்னு திருப்பதிக்கு… இன்னொன்னு ஸ்ரீவில்லிபுத்தூருக்கருகே இருக்கும் திருவண்ணாமலை சீனிவாசனுக்கு. திருப்பதி மட்டும்தான் நாம செலுத்தியிருக்கோம்…. இன்னொரு பாகம் அதே மஞ்சள்துனியில்தான் இருக்கணும்….”

”அதை எங்கே வைத்திருந்தாய்….?” தாத்தாவின் குரலில் வேகம்.

”அந்த பழைய காரை வீட்டில்தான்….”

“கண்டிப்பா இப்போ அந்த முடி அங்கே இருக்காது…..” என்றார் ரெங்கநாயகியம்மாள்.

 

————————

 

தாத்தா சிவாவினை அழைத்துக்கொண்டு அந்த வீட்டிற்குச் செல்ல ஆயத்தமானார். சிவாவிடம் அந்த வீட்டின் சாவி பூச்சாவிடம் இருப்பதாகவும் அதனை வாங்கி வரும்படிச் சொன்னார்.

பூச்சா, சிவாவிடம் சாவி கொடுக்கும்பொழுது மிகவும் எச்சரித்தான். அந்த வீட்டில் அமானுஷ்யங்கள் இருப்பதாயும் அங்கே போவது தற்கொலைக்குச் சமம் எனவும் எச்சரித்தான்.

சிவாவும் தாத்தாவும் யமஹாவில் அந்த வீட்டினை நோக்கிப் பயணித்தனர்.

புள்ளியாக அந்த வீடு, பெரியவரின் பார்வையில்பட்டது. அதை நோக்கி நகர நகர அந்தப்புள்ளி விரிந்து ஒரு பெரிய புராதன வீடாக அதன் நிஜப் பரிமாணத்தை வெளிப்படுத்தியது. சில நூறு வருடங்களை உள்வாங்கிய காரைவீடு. இடிந்து கொண்டிருக்கும் கற்சுவர்கள். எஞ்சி நிற்கும் மதிற்சுவரில் கண்ணீர்போல எட்டிப்பார்க்கும் ஆழமான விரிசல்கள்.

ஆழ்ந்த வேர்கள் கொண்ட இச்சிதைவுகள் பொருள்தேடலில் வேட்கைகொண்ட சுயநலமான மனிதர்களின் தலைவிதியைக் காட்டுகின்றன. அகத்தேடல் இல்லாததினால் வாழ்வு இன்றும் ஆதிகாலம் போன்ற காட்டுமிராண்டி வாழ்வாகவே இருக்கிறது.

பர்மா தேக்கு மரங்கள் விட்டங்களாகவும் கதவுகள் மற்றும் ஜன்னல்களாகவும் உருமாற்றம் பெற்றிருந்தன. வீட்டின் வெளியே மிகப்பெரிய நிலவெளி. அதற்கப்பால் கூரை சிதைந்து வானைப்பார்த்த மாட்டுத்தொழுவம்.

மதில் கற்சுவரை ஒட்டி இரண்டு வாவரசி மரங்கள். மாட்டுத்தொழுவத்தின் அருகில் பரந்து விரிந்து கிடக்கும் வீட்டுத்தோட்டத்தில் முளைத்திருந்த எருக்கஞ்செடிகளினூடே ஒரு சிதைந்த அரிக்கேன் விளக்கு. நீர்த்தொட்டியில் சருகுகள், சிறகுகள் குழுமியிருந்தன.

நிகழ்வுகளின் நிழல்கள் படிமங்களாகியிருந்தன-

ஒரு சரித்திர ஏட்டின் நைந்துபோன பக்கங்களாக.

சிவா, தாத்தாவினை அந்த வீட்டின் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்.

தாத்தா அருகிலிருந்த மரங்களைக் கவனித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.

காற்றின் உரசலால் ஒரு வாவரசி மரம் கற்சுவரை உரசி சலசலப்பை உண்டாக்குகிறது. வாவரசி மரங்களினூடே செல்லும் முணுமுணுக்கும் தென்றலில், ஒரு குலவைச்சத்தம் மெல்லியதாகக் கேட்கிறது. சப்தம் பெரிதாகிக் கொண்டே போகிறது………….

“பொங்கலோ…..பொங்கல்……”

பெரிய நிலவெளியில் அரிசிமாவினால் கோலம் போடப்பட்டிருந்தது. ஆங்காங்கே அதன்மீது பசுவின் சாணம் வைக்கப்பட்டிருந்தது. அதில் பூசணிப்பூ பூத்திருந்தது. செங்கற்கள், கோலத்தின் நடுவே ஆயுத எழுத்தாக்கப்பட்டிருந்தது. இதன் மீது மிகப்பெரிய மண்பானை வைக்கப்பட்டிருந்தது. வெளிப்புறத்தை வெள்ளையடித்து காவிக்கோடுகள் கிழிக்கப்பட்டு அழகான மங்களகரமான மண்பானையாக அது உருமாற்றம் பெற்றிருந்தது. பொங்கலுக்கென விசேஷமாக விளைவிக்கப்பட்ட சிவப்பு நிற கார்போக அரிசியுடன் நாட்டுச் சர்க்கரையும் சேர்ந்து பொங்கிக் கொண்டிருந்தது.

அது ஒரு காலம்…………………………………………………

ஆலமரத்துப்பட்டியிலிருக்கும் இலந்தை மரக் கண்மாயும் சரி, செங்கமலப்பட்டியிலிருக்கும் செம்மண் கண்மாயும் சரி வற்றியதே இல்லை. சிறுவர்கள் தட்டையான கல் அல்லது ஓட்டினை நீர்ப்பரப்பின் மீது நேர்த்தியாக விட்டெறிந்து இரண்டு மூன்று முறை நீரில் மோதி எம்பிக் குதித்தோடி அது உருவாக்கும் சலன அலைகள் ரம்மியமாக இருக்கும்.

மாட்டுத் தொழுவம் பசுக்களாலும், காளைகளாலும் எப்பொழுதும் நிரம்பி வழியும். மாடுகள், மேய்ச்சலை முடித்துவிட்டு மாலையில் வீடு திரும்பும்பொழுது அவைகள் தொலைவிலிருந்தே ‘ம்மா… ‘ என்று அதன் மொழியில் தகவல் சொல்லும். வெள்ளை நாய் வெளிப்புற வாசலைத் தன் வாயால் கவ்வித் திறந்து அவைகளை அழகாய் வரவேற்கும்.

குழந்தைகள், பசும்பாலை ஒவ்வொரு உபாத்யாயர்களின் வீட்டிலும் பயபக்தியுடன் இலவசமாகவே ஊற்றிவிட்டு வருவர். அண்டை அயலார்கள் மற்றும் உறவினர்கள் தங்களது விளைச்சலை பரிமாற்றம் செய்து கொள்வர். வணிகச்சிந்தனை இல்லாத காலங்கள்..!

பொங்கலன்று பசுமாடு ஈன்றால் மிகவும் விசேஷம். இராட்சஷ ஆண்டிலும் அப்படித்தான் நிகழ்ந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சி. கன்று மிகவும் அழகாக இருந்தது. தெருக்குழந்தைகள் அதை வாஞ்சையாக வருடிவிட்டனர். புதுவரவுக்காக மட்டுமல்ல; பொங்கல் பண்டிகை அன்று பிறந்ததற்கும் சேர்ந்தே மகிழ்ந்தனர். பொங்கலன்று பிறந்தால் கன்று கிருஷ்ணன் கோவிலுக்கே சொந்தம்.

வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்திருந்த எருக்கஞ்செடிகளினூடே கிடந்த சிதைந்த அரிக்கேன் விளக்கு, சூரியன் அதிகாலையில் விழிக்கும் முன் ஏரில் கட்டப்பட்டு உழுத நாட்கள். நீரும், சூரிய ஒளியும், நுண்ணுயிர் ஆற்றலும் நிலத்திற்கிருந்ததால் விவசாயம் செழித்திருந்தது. கண்களுக்கெட்டிய தூரம்வரை பசுமை.

குறிப்பாகத் திருத்தங்கல்லிலிருந்து நாராயணசாமி மற்றும் நாச்சியாரம்மாள் என்ற கடவுள்கள் இந்தக் கிராமத்திற்கு ஒவ்வொரு பங்குனி மாதமும் வருகை புரிவதை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவர். ஒவ்வொரு வீட்டிலும் முறுக்குச் சுடுவது என்பது ஒரு சடங்காகவே நிகழும். காலப்போக்கில் இந்த விழாவானது “முறுக்குச்சாமி விழா” என்றே மருவிப்போனது.

பண்டிகைக்கு ஏழெட்டு நாட்களுக்கு முன்பிருந்தே பலகார வகைகள் தயாரிக்க ஆயத்தமாகிவிடுவர். அதற்கென ஒரு பெரிய வடைச்சட்டி உண்டு. இரண்டு மூன்று மனிதர்களின் உதவியோடு அடுப்பின் மீது அமர்த்தப்படும். பலகாரங்கள் தயாரானபின் முற்றத்தில் வைத்து அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்பொழுது பண்ணைப் பணியாட்களின் முகத்தில் மகிழ்ச்சி, பிரவாகமெடுக்கும்…. விழா முடியும்வரை வீடு முழுவதும் ஊர் உறவு என கலகலக்கும்.

வீட்டிற்குள் இந்த ஊஞ்சல் கட்டிலில்தான் துயில்வது வழக்கம். அருகிலிருந்த ஜன்னலின் கம்பியில் ஒரு கயிற்றினைக்கட்டி அதன் மறுமுனையைக் கட்டிலில் இணைத்துக்கொண்டுத் தேவையானபொழுது தூளியை ஆட்டுவதுபோல ஆட்டிக்கொண்டு அனந்த சயனம் கொண்ட நாட்கள். மேலே ஏற ஒரு மடக்கு நாற்காலி.

கோடை காலத்தில் பரந்த நிலவெளியில் நிலா ஒளியில் அனைவரும் படுத்துக்கொண்டு, புராதனக் கதைகள், புராணக் கதைகள் என நித்திரை வரும்வரை காலட்சேபம் நீளும்.

பூதான் இயக்கத்தில் தீவிரமாயிருந்தபொழுது ஒருமுறை விநோபா இந்த வீட்டிற்குத்தான் வருகை புரிந்தார். தன்னுடைய எல்லா நிலங்களையும் பூதான் இயக்கத்திற்குத் தானம் செய்துவிட்டார்.

தானம் செய்தபின் ஒரு முறை பிச்சம்மாள் தனக்கு ஒரு நிலம் வேண்டும் என யாசித்தபொழுது தர இயலாத சூழல். இதனால் சிலகாலம் பிச்சம்மாள் இக்குடும்பத்தின் மீது கொஞ்சம் கோபம் கொண்டிருந்தார். தாத்தா பலமுறை பிச்சம்மாளின் மனதினை மாற்ற முயற்சித்தார். தான் ஏற்கெனவே விநோபாவின் பூதான் இயக்கத்திற்கு வழங்கிவிட்டதாயும், தானம் செய்தபின் திரும்பப் பெறுவது தர்மமல்ல எனவும் தன்னால் உதவ இயலாததற்குத் தன்னை மன்னிக்கும்படி மிகவும் வருத்தப்பட்டார்.

வீடே அந்தத் தெருக் குழந்தைகளால் நிரம்பி வழியும். ‘குழந்தைச்சோறு ‘ இந்த வீட்டில் மிகப்பிரச்சித்தம். தெருவிலிருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் இங்கிருந்துதான் ‘குழந்தைச்சோறு’ ஊட்டி வளர்க்கப்பட்டனர். சுவர் நிறைய சுதந்திரப்போராட்டத் தலைவர்களின் படங்கள் அலங்கரித்தன.

தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிற்சாலைகள் கிராமத்தை ஊடுருவி ஆட்கொள்ள ஆரம்பித்தபின், மெல்ல மெல்ல அது கந்தக பூமியாக மாறிப்போனதால் மழை பொய்த்தது. விளை நிலங்கள், விலை நிலங்களாக மாறிப்போயின.

வாவரசி மரங்களினூடே செல்லும் முணுமுணுக்கும் தென்றலில் குலவைச்சத்தம் கம்மலாகிக் கேட்டது. இப்பொழுது சப்தம் முற்றிலும் நின்று போயிருந்தது.

ரங்கராஜின் கல்விக்காக அதை விற்கும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டபொழுதும்கூட விற்காமல் சமாளிக்க முடிந்தது. விவசாயம் வீழ்ந்து போனதால் அவ்வளவு பெரிய வீட்டினைப் பராமரிக்க முடியாமல் அந்த வீட்டினை விட்டுவிட்டு கடந்த முப்பது வருடங்களாகத் தற்சமயம் வசிக்கும் வீட்டிற்கு மாறவேண்டிய சூழல்

ஏன் இந்த கிராமங்களெல்லாம் அழிந்து வருகின்றன…? தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், பட்டாசுத் தொழிற்சாலைகளும் முளைக்கின்றபொழுது மனித நேயம் மட்டும் ஏன் முளைக்கவில்லை……? ஏன் இந்த சிதைவுகள்….?

இச்சிதைவுகள் பொருள் தேடலில் வேட்கைகொண்ட சுயநலமான மனிதர்களின் தலைவிதியைக் காட்டுகின்றன. அகத்தேடல் இல்லாததால் வாழ்வு இன்றும் ஆதிகாலம் போன்ற காட்டுமிராண்டி வாழ்வாகவே இருக்கிறது.

ஏன் சிவா இன்னமும் வரவில்லை. வெகு நேரம் ஆயிற்றே என்ற ஒரு பயரேகை பெரியவரின் மனதினில் ஓடியது..

———————

 

தே நேரத்தில் அந்த மாளிகையினுள்ளே சிவா….

சிவா, அந்த இரும்பு வெளிவாசலைத் தாண்டி உள்ளே குழுமியிருந்த சருகுகளின் மீது காலடி வைத்தான். மயான அமைதி. சுவர்ப்பூச்சிகளின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ரீங்காரம்…

சுவரினை ஒட்டிய காகிதப் பூச் செடி முற்றி மரமாகியிருந்தது. அதிலிருந்து வயலட் நிறப் பூக்கள் உதிர்ந்து சருகுகளாகியிருந்தன. பெயர் தெரியா மற்ற மர இலைகளும் உதிர்ந்து அரக்கு நிறமாக பரிணமித்திருந்தன. சில மரங்கள் மதிற்சுவரை ஒட்டி பட்டுப்போய் மொட்டையாகக் காட்சியளித்தன.

சருகுகளின் மீது காலடி பட்டு சர்ரக்….ஸர்க்…. என்ற ஒலி எழும்பியது. சூரியன் நண்பகலைத் தாண்டி மேற்கே பயணித்துக் கொண்டிருப்பதன் அறிகுறியாக சிவாவின் நிழலானது வடகிழக்கில் விழுந்து கொண்டிருந்தது.

வீட்டினுள் நுழையும் கதவிற்கருகே வந்துவிட்டான். சுற்றுமுற்றும் ஒரு முறை நோட்டம் விட்டான். இந்த வீடு ஏறக்குறைய ஒரு அரண்மனை போன்ற அமைப்பினைக் கொண்டதாக இருந்தது. இந்தியாவிற்கு சிமெண்ட்டும், மின்சாரமும் அறிமுகமாவதற்கு முன்பே கட்டப்பட்ட மாளிகை. சுண்ணாம்பும் காரையும் கடுக்காயும் பனைவெல்லமும் கலந்த கலவையால் தங்களது முன்னோர்களால் கட்டப்பட்டதெனவும் அதனை எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் மின்சாரம் உட்பட புதுப்பிக்காமல் அப்படியே பாரம்பரியமாக ஒரு நினைவுச் சின்னமாக அந்த வீட்டினை வைத்திருப்பதாகவும் தாத்தா சொன்னது நினைவிற்கு வந்தது. கதவு மிகப்பெரிய கோட்டைக் கதவாக இருந்தது. பழங்கால வீடு.

சாவியினால் திறந்து பலங்கொண்ட மட்டும் கதவினைத் தள்ளினான். க்ரீச் என மெல்லத் திறந்தது. உள்ளே நுழைந்தான்.

உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. பழக்க தோஷத்தில் மின்சார ஸ்விட்சை கை தேடியது. மூளையின் நியூரான்கள் தாமதமாக உணர்ந்தன இந்த வீட்டினில் மின்சார இணைப்பு இல்லை என்ற உண்மையை.

தன் செல்ஃபோனை உயிர்ப்பித்து ஒளியைக் கொண்டு வந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரு பெரிய ஹால். அதனை ஒட்டி மாடிக்குப் போக தேக்கு மரப்படிகள்.

படிகளின் மீது ஏறினான். ஒவ்வொரு படியாக ஏறும்பொழுது அவனது காலடிச் சத்தங்கள் பட்டு , “டக்….டக்…..” என்ற ஒலியினை பிறப்பித்தது. தன் காலடிச் சப்தத்தினைத் தவிர இன்னொரு “டக்….டக்….” என்ற சப்தமும் வந்து கொண்டிருந்தது. யாரோ தன்னைத் தொடர்ந்து வருவது போன்ற ஒரு உள்ளுணர்வு. அவனது ஆழ்மனம் எச்சரிக்கை விடுத்தது.

படிகளின் மீது ஏறுவதை அப்படியே நிறுத்தினான். அவனது வலதுகால் மேல்படியிலும் இடக்கால் கீழ்படியிலும் இருக்கும்பொழுது தன் இயக்கத்தினை சிலைபோல திடீரென நிறுத்தினான்.

அப்பொழுதும் “டக்….டக்….”. என்ற சப்தம் வந்து கொண்டிருந்தது. 360 டிகிரிகளில் கழுகுப் பார்வையைச் சுழற்றினான். யாரும் தென்படவில்லை. ஆனால் அந்த “டக்…. டக்….” என்ற சப்தம் இவன் பயணித்த அதே படிகளினருகே வந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் சப்தம் நின்றுவிட்டது.

சிவாவின் இதயம் இப்பொழுது வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. உடலினுள் ரத்தம் அமீபா வடிவினில் தன்னிஷ்ட்த்திற்குப் பயணிக்க ஆரம்பித்தது.

சிவா மீண்டும் படி ஏற ஆரம்பித்தான். இப்பொழுது எச்சரிக்கையாக காலடி எடுத்துவைத்துக்கொண்டே தன்னைத் தொடர்ந்து வருபவரின் அந்த ”டக்…..டக்….” என்ற காலடிச் சப்தம் வருகின்றதா என ஆராய்ந்தான்.

ஊஹூம். சப்தம் வரவே இல்லை.

தைரியமாய் படியேற ஆரம்பித்தான். சில நொடிகளில் அதே “டக்….டக்…..” சப்தம் வர ஆரம்பித்தது. இப்பொழுது சிவா தன் இயக்கத்தினை நிறுத்திவிட்டு செல்ஃபோனில் நொடிகளைக் கவனித்தான். சரியாக 111 வது நொடிகளில் அந்த “டக்… டக்….” சப்தம் நின்று போனது. மீண்டும் படியேறும்பொழுது சரியாக 111வது நொடிகளில் மீண்டும் அந்த “டக்…. டக்….” சப்தம்.

பார்வையில் யாரும் தென்படவில்லையாதலால் ஒருக்கால் அது தன் காலடியின் எதிரொலியாக இருக்கலாம் என நினைத்துக்கொண்டான்.

முதல் மாடியை அடைந்தான். நிறைய அறைகள் இருந்தன. சுற்றிப்பார்த்தான். அந்த முடி எங்கே வைக்கப்பட்டிருக்கும்…? மேல்மாடியிலிருந்து சோதிக்க ஆரம்பிக்கலாம் என நினைத்து அடுத்த மாடிக்குச் சென்றான்.

சுற்றிப்பார்த்தான். பழங்கால அமைப்பினில் கட்டிடம் பராமரிப்பின்றி ஆனால் உறுதியாக இருந்தது. அங்கே ஒரு அறை வித்தியாசமாக இருந்ததைக் கண்டான். பராமரிப்பின்றி இருந்தாலும் கூட அதன் உள் கட்டமைப்பானது பொலிவிழக்காமல் காணப்பட்டது.

அறையின் முகடு மரத்தினால் இழையப்பட்டிருந்தது. மின்விளக்குகள் போன்ற அமைப்பானது வரிசையாக ஒருங்கே அமைக்கப்பட்டு ஒளியை வீசிக்கொண்டிருந்தது. பழங்கால பெயர் தெரியா தலைவர்கள் சிலையாக நின்று கொண்டிருந்தனர். சுவரோவியங்கள். கதவுகளில் கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது.

 

 

அந்த இடப்புறக் கதவினைத் திறந்து உள்ளே நுழைந்தான். காரைச் சுவர்கள் வர்ணப்பூச்சு இல்லாமல் தேமே என இருந்தன.

இன்னும் மேலே நகர்ந்தான். அந்த சுவரினைப் பார்த்துக்கொண்டே வந்த பொழுது காரைச் சுவரினில் ஒரு நிழல்…..

 

 

அந்த நிழலுருவத்தில் ஒரு ஜோடி கண்கள். அந்தக் கண்கள் தன்னை கவனித்துக் கொண்டிருப்பதை சிவா உணர்ந்தான்.

சிவா எந்த திசையில் நகர்ந்தாலும் அந்தக் கண்களும் அதே திசையில் இமைக்காமல் பயணித்தன.

இவை நிஜக் கண்களா….?

சிவாவின் மனதினுள் ஐயம்.

அந்த நிழலை நோக்கி மெல்ல மெல்ல பயத்துடன் அடியெடுத்து வைத்தான். தன் வலக்கையை நிழல் உருவத்தினை நோக்கி நகர்த்தினான்.

சிவாவிற்கும் நிழல் உருவத்திற்கும் ஓரடி தொலைவினை வகுத்துக்கொண்டு முன்னேறினான். நிழலின் அடியிலிருந்து அதே ஓரடி வித்தியாசத்தினில் கையை மேல் நோக்கி பயத்துடன் நகர்த்தினான். கண்கள் நிர்ச்சலனமாய் சிவாவினையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன.

கை இப்பொழுது நாசிக்கருகே வந்துவிட்டது. மெல்ல மெல்ல நகர்த்தி கண்களை நோக்கி நகர்த்தி…..

கண்களுக்கும் தன் கரத்திற்கும் இடைப்பட்ட தொலைவினை கணிசமாக மெல்ல மெல்லக் குறைத்து…..

இரண்டங்குல தொலைவாய் குறைந்து…..

இன்னும் மெல்ல மெல்ல நகர்த்தி…..

கண்களைத் தொட எத்தனிக்கும் அந்த நொடியில்……

சரேலென சில்லென்ற ஒரு அமானுஷ்யமான காற்று ஒன்று 92 கிலோ எடை கொண்ட சிவாவினை தரையில் தள்ளியது.

சிவா தடாரெனத் தரையில் விழுந்தான்.

திடீரென எதிர்பாரா விதத்தில் விழுந்ததால்…. சமநிலை இழந்து கீழே விழுந்ததால், பலத்த அடி. உடலெங்கும் வலி.

தைரியம் வரவழைத்துக்கொண்டு அங்கிருந்து எழுந்து வெளியேற வாசலை நோக்கி ஓடினான். ஓடிக்கொண்டிருந்த பொழுது இரண்டு மூன்று அறைகளுக்கடுத்து அமானுஷ்யமாக “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்………………….” என ஒரு சப்தம் வந்து கொண்டிருந்தது.

அந்த அறையின் கதவு திறந்திறந்தது. உள்ளே எட்டிப்பார்த்தான் சிவா.

ஜன்னலின் வழியே பட்டுப் போன ஒரு மரத்தின் கிளைகள் பயமுறுத்தும் வகையில் பங்களாவினுள் ஊடுருவியிருந்தன. சூரியன் மேற்கே ஒளிர்ந்து கொண்டு சூரியக் கதிர்கள் ஜன்னலில் ஊடுருவின. ஊடுருவிய கதிர்களில் ஒளித் துகள்கள் டிண்டால் விளைவினை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

மரக் கிளையில் மின்கம்பியின்றி ஒரு 60 வாட் மின்விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. விளக்கின் கீழே செவ்வக வடிவில் ஒரு திண்டு கட்டப்பட்டிருந்தது. திண்டின் கூரிய முனையின் ஒரு பகுதி உடைந்திருந்தது. தரை கருங்கற்களால் வேயப்பட்டிருக்க அது சூரிய ஒளியில் செந்நிறமாகக் காட்சியளித்தது.

ஒரு இளம்பெண் தன் இரு கைகளையும் சுவரினில் சாய்த்து தலையை இரு கரங்களுக்குமிடையே நுழைத்து இடக்காலினை இரண்டு அடி அந்தரத்தில் முன்னிறுத்தி அமானுஷ்யமாக, “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்……………………..” என்ற ஒலியை எழுப்பிக்கொண்டிருந்தாள்.

 

 

தொடரும்…

                                   பாகம்-11

 

வாசகர்களுடன் ஒரு வார்த்தை…..


நண்பர்களே… இந்தக் கதை இவ்வளவு பெரிய வெற்றியடையும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. முகமறியா எத்தனையோ வாசகர்கள் முகநூல் மூலம் எப்படியோ நுகர்ந்து தனி மடலில் தொடர்பு கொண்டு வியக்கின்றனர். ஒரு சகோதரி இப்படிக் கேட்டார்.  ”இந்தக் கதையில் வரும் ரங்கராஜ் நீங்களா….? உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவமா….?” என. வேறு சில ரசிக ரசிகைகள் இக்கதையினில் வரும் சம்பவங்களை என் வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்த்து, “இதெல்லாம் நிஜமா……?” எனக் கேட்டனர்.

நிஜம் சொன்னால், இக்கதையை எழுதச் சொல்லித் தூண்டியவர் அமெரிக்காவில் நார்த் கரோலினாவில் வசிக்கும் என் இனிய நண்பர் டாக்டர் சங்கர்குமார். தவக் கட்டுரைகள் எழுதியபொழுது அவர் வெகுவாய் ஊக்குவித்து, ”இதனையே ஒரு கதை வடிவினில் கொடுத்தால் மக்கள் மிகவும் விரும்பிப் படிப்பார்களே…! உங்களால் முடியும் ரிஷி….முயற்சியுங்கள்… “ என்றார். ஜூலை, 2008ல் மூன்றே மூன்று பாகங்கள் மட்டும் எழுதி அவரிடமும் இன்னும் சில ஜாம்பவான்களிடமும் காட்ட…. அவர்கள் அமோகமாக வரவேற்க…. ஒரு சகோதரி விகடனில் பதிப்பிப்பதற்காக மொத்தமாக எழுதிக்கொடுக்கும்படிக் கேட்டார். அப்பொழுது திடீரென அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைய…. தொழில்நுட்பத்திலும் பணியிலும் அதிகக் கவனம் செலுத்தி…. காலப்போக்கில் இக்கதையை மறந்தே போனேன். தொடரவே இல்லை.

ஒரு நாள் அண்ணாகண்ணன் முகநூலில் அறிமுகமாக…. அப்படியே வல்லைமையில் எழுதும்படிக் கேட்க…. நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… உதயமானது.  இக்கதையில் வரும் சம்பவங்கள் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையே.

இன்னொரு சகோதரி இப்படிக் குறிப்பிட்டார். “சுஜாதாவின் கதைக்கு அடுத்தபடியாக அதிகமுறை மீண்டும் மீண்டும் படித்தது…. படித்துக் கொண்டிருப்பது உங்களின் நிர்வாண நேனோ செகண்ட்ஸ்….தான் ” என்றார்.

இன்னொரு அன்னை இப்படிக் குறிப்பிட்டார். “உன் கதை சுஜாதாவின் கதை போன்றே இருக்கின்றது. உனக்கு மட்டும் அதிர்ஷ்டமும் காலமும் கைகோர்த்தால் நீ உயர….உயர….என உயர்ந்து சிகரங்கள் பல தொடுவாய்….” என வாழ்த்தினார். அந்த அன்னைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்:.

லண்டனில் வசிக்கும் ஒரு நண்பர் இக்கதையில் பல புதுப்புது தகவலகள் குவிந்து கிடக்கின்றன எனவும் அது மட்டுமின்றி  ஊகிக்க இயலாவண்ணம் எதிர்பாரா திருப்பங்களுடன்(த்ரில்லிங்காக) மென்மேலும் படிக்கத் தூண்டுவதாக அமைந்திருப்பதாக  அகமகிழ்ந்தார்.

இந்தியா மற்றும் அமெரிக்காவினில் மட்டுமல்ல…. உலகின் மற்ற தேசங்களிலிருந்தெல்லாம் நட்புக்கரங்கள் நீள்கின்றன. வாழ்த்துகின்றனர். சில ரசிக ரசிகைகள், தொலையாடவேண்டும் எனவும்… வேறு சிலர் குழுவாக சந்தித்து உரையாடல் நிகழ்த்தவேண்டும்…. எனவும் தங்களது அபிலாஷைகளை வெளிப்படுத்தினர்.

இன்னொரு சகோதரி இப்படிக் கேட்டார், “எப்படி உங்களால் இவ்வளவு விஷயங்களைக் கோர்த்து கதையாக எழுதிட முடிகின்றது….? கதையை முன்கூட்டியே திட்டமிட்டு எழுதிவருகின்றீர்களா…..?”

இந்த நொடிவரை அடுத்து என்ன எழுதுவது என எனக்கே தெரிவதில்லை. வல்லமை ஆசிரியர் வார இறுதி நாட்கள் நெருங்க நெருங்க இணைய ஊடு உரையாடலில், “அடுத்த பாகம் ரெடியா….?” என ஞாபகப்படுத்த சனிக்கிழமை மாலை நான் வசிக்கும் இந்தக் கிராமத்திலிருக்கும் ஒரு காஃபிக் கடைக்கு தனிமையில் சென்று ஒரு பெரிய குவளை காஃபியுடன் டூநட்ஸும் லபக்கிக் கொண்டு ஆளரவமற்ற ஒரு டேபிளிலமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாது மனத்திரையில் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட…. சுமார் ஒரு மணிநேரத்தில் அடுத்த பாகம் மனதினில் தயாராகியிருக்கும். அது ஒரு சினிமாபோல் மனத்திரையில் ஓடும்.  சினிமா முடிந்ததும் வீடு திரும்புகையில் மனதினுள் அக்கதையினை மெருகேற்றும் பணி தொடரும். வீட்டிற்கு வந்ததும் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஏற்கெனவே படித்திருந்த தேவையான புத்தகங்களை என் நினைவுப் பெட்டகத்திலிருந்து தேடிப்பிடித்தும் படிக்காத நூல்களைத் தேடிப்பிடித்து வாசித்தும் மனதினில் ஓடிய சினிமாவுடன் கலந்து தட்டச்சி முடிந்துவிடும். எழுதி முடித்தவுடன் ஒரு பிரசவ மகிழ்ச்சி பிரவாகமெடுக்கும்.  எழுதுவதற்காக அதிகமாய் அலட்டிக்கொள்வதில்லை. இந்தக் கதையின் புலம், எனக்குப் பிடித்த இயற்பியலும் அறிவியலும் தியானமும் மனமும் என்பதனால் மிகவும் எளிதாகிப் போனது. இதுவே நிதர்சன உண்மை.

இக்கதையினை ரசித்துப் படிக்கும் எத்தனையோ முகமறியா ரசிக ரசிகைகளுக்கும், வாய்ப்பளித்த வல்லமை மின்னிதழுக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள்.

——————————————————————————————————————————————————

 

நன்றி….

 

– எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத்.

– முத்தமிழ் மின் குழுமத்தின் 2007 ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிறுகதைப் போட்டியில்  முதல் பரிசினை வென்ற “லயம்” என்ற சிறுகதை. இரவீந்திரன் கிருஷ்ணசாமி.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “நிர்வாண நேனோ செகண்ட்ஸ்…-10

  1. அருமையாக, த்ரில்லிங் ஆக இருக்கிறது. கதை என்றே நம்ப முடியவில்லை.
    நன்றி ஐயா.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  2. ////தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிற்சாலைகள் கிராமத்தை ஊடுருவி ஆட்கொள்ள ஆரம்பித்தபின், மெல்ல மெல்ல அது கந்தக பூமியாக மாறிப்போனதால் மழை பொய்த்தது. விளை நிலங்கள், விலை நிலங்களாக மாறிப்போயின.///

    மனம் கணக்கிறது! கண்கள் பணிக்கிறது! பிறகு பேசுவோமே!

  3. இது அந்தக் கிராமத்தில் நான் வாழ்ந்தபொழுதே நிகழ்ந்த மாற்றம். பட்டாசுத் தொழிற்சாலைகளும் தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் கிராமத்திற்குள் அடியெடுத்து வைத்தபின் பசுமை மறைந்து படிப்படியாக கந்தகம் ஆட்கொண்டது.

    பாடசாலையில் பாடவேளைகள் முடிந்து மாலை வேளைகளில் விளையாடிக்கொண்டிருந்த நாங்கள் பணத்தாசைகளால் ஈர்க்கப்பட்டு தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்கும் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கும் வேலைக்குப் போனோம். பம்பரம், கில்லி, கபடி, பேந்தான், ஐஸ்ப்ளே, காக்கா குஞ்சு, கள்ளம்போலீஸ், நீச்சல் என அனைத்து விளையாட்டுகளும் மறைந்து போய் படிப்படியாய் தொழிற்சாலைகளின் கரங்களில் சிக்குண்டு போனோம். அதன்பின் விளையாடவே நேரம் இல்லாமல் போய்விட்டது.

    வற்றாத ஜீவநதியாக நீர் நிலைகளிருந்தன. குடிநீரையே அனைத்திற்கும் பயன்படுத்துவோம். 24 மணிநேரமும் தண்ணீர்ப் பஞ்சமே இல்லாமல் இருந்தது. வற்றாத நீர் நிலைகள் இருந்தன. அழகான நந்தவனங்கள் இருந்தன. விவசாயம் செழித்தோங்கி விவசாயிகள் மகிழ்ச்சியாக கம்பீரமாய் இருந்தனர். அண்டை அயலார்கள் அனைவரும் தத்தமது விளைச்சலை வீட்டு உபயோகித்திற்கு பகிர்ந்து கொள்வோம். நானே எங்கள் வீட்டுப் பசும்பாலை ஒவ்வொரு உபாத்யாயர்களின் வீட்டிற்கும் சென்று அர்ப்பணித்திருக்கின்றேன். ஆசிரியர்களும் தர்ம நெறிகளைப் பின்பற்றி அதையே போதித்திருந்தனர். ஆழமான தர்மநெறிகளைப் போதித்தனர்.

    ஆனால் இன்று….?

    நீர்ப் பஞ்சம் தலை விரித்தாடுகின்றது. மக்களின் மனதினில் வஞ்சமும் சூழ்ச்சியும் குடிபுகுந்துவிட்டன. மொத்தத்தில் மனிதன் தனது அகத் தேடலைத் தொலைத்துவிட்டு புறத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் வந்த விளைவினால் மனிதனது வாழ்க்கை இன்றும் காட்டுமிராண்டி வாழ்வாக மாறிப்போனதை என்னால் உணர முடிகின்றது. நியாய தர்மங்களும் மனிதமும் தொலைந்து போய்விட்டனவோ என எண்ணத் தோன்றுகின்றது. இதனைக் கண்ணுற்றதால் விளைந்த கதையே “லயம்” என்ற சிறுகதை.

  4. ஆழ்ந்த வேர்கள் கொண்ட இச்சிதைவுகள் பொருள்தேடலில் வேட்கைகொண்ட சுயநலமான மனிதர்களின் தலைவிதியைக் காட்டுகின்றன. அகத்தேடல் இல்லாததினால் வாழ்வு இன்றும் ஆதிகாலம் போன்ற காட்டுமிராண்டி வாழ்வாகவே இருக்கிறது.

    —– I love the Ultimate truth in above lines. We honour and appreciate your excellency, Keep educating the readers and your contribution to make better society ! Awesome!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.