இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (168)

0

சக்தி சக்திதாசன்.

cross
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்.
நிலவு தன் நிறத்தைச் செந்நிறமாக மாற்றி செந்நிலவாக காட்சியளித்த இவ்வாரத்திலே உங்களுடன் மீண்டும் மடல் மூலம் மனம் திறப்பதில் மகிழ்கிறேன்.

பல்லினக் கலாச்சார மக்கள் சேர்ந்து வாழும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் மத நல்லிணக்கம் இல்லையானால் மக்களின் புரிந்துணர்வு மிகவும் பாதிக்கப்படுகிறது. மதம் என்பது மனிதனுக்கு அணிகலனேயின்றி ஆடையில்லை. அம்மதத்தை இறுகப் பற்றும் காரணத்தினால் மனிதருக்கு மனிதர் புரிந்துணர்வு அற்றுப் போகும் நிலை ஏற்படுமாயின் அது மிகவும் வலியினை ஏற்படுத்துவது தவிர்க்கப் பட முடியாதது.

நான் என்னை ஒரு இந்துவாகக் காண்கிறேன். ஆனால் இம்மதத்தை நான் கேட்டு பெறவில்லை. நான் விதையாக விழுந்த நிலம் அம்மதத்திற்குச் சொந்தமானது என்பதுவே உண்மை. குழந்தையாக இருந்து வாலிபனாக மாறி இன்று வயோதிகத்தின் வாயிலில் நிற்கும் நான் வளர்ந்து வந்த பாதையின் வழிகாட்டியாய் இந்து மதம் அமைந்தது என்பதுவே உண்மை. வாழும் வகையின் பல முறைகள் எனது பெற்றோரால் என்னுள் புகுத்தப்பட்டதன் அடிப்படைக் காரணமாக எனது மதம் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

ஆனால் தமக்கென தனிப்பட்ட கருத்துக்களை சுதந்திரமாக வகுக்கக்கூடிய பருவம் வந்ததும் ஒவ்வொருவரும் தமக்கென அபிப்பிராயங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். அவ்வபிப்பிராயங்கள் அவர்களை ஆத்திக அல்லது நாத்திக பாதையில் அழைத்துச் செல்கிறது. அதற்காக ஒரு பாதையை விட மற்றைய பாதை எந்த விதத்திலும் சிறந்தது என்று அறுதியாகச் சொல்லக்கூடிய உரிமை ஒருவருக்கும் கிடையாது.

அதே போல ஒரு மதத்தினை பின்பற்றுவோர் மற்ற மதத்தினை தமது மதத்திலும் கீழானதாக அன்றிப் பிழையானதாகக் கருதுவதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது. அடுத்தவரைக் காயப்படுத்தாது, அடுத்தவரின் உரிமைகளை உதறித்தள்ளாது தாம் தமது நம்பிக்கைகளின் படி வாழ்வது எவ்விதத்திலும் தவறாகாது. இந்தக் காலங்களில் கூட சிலர் தமது மதத்தின் மீதுள்ள அதீத நம்பிக்கையால் அதை ஒரு வெறியாக மாற்றி மற்றைய மதத்தினரை இழித்துப் பேசுவது மிகவும் மனவருத்தத்திற்குரிய விடயமாகிறது.

lbcஇன்று காலையில் நான் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது லண்டனில் உள்ள ஒரு முக்கியமான வானொலி அலைவரிசையான எல்.பி.சி எனும் அலைவரிசையின் காலை நிகழ்ச்சியை செவிமடுத்துக் கொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சியை நான் விரும்பிக் கேட்பதுண்டு. காரணம் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் நிக் வெராரி என்பவர். இவர் கன்சர்வேடிவ் கட்சியின் பால் ஈர்ப்புக் கொண்டவர். ஆயினும் இவர் தனது நிகழ்வினை நடத்தும் நடுநிலைமையான பாங்கு எனை மிகவும் கவரும்.

Nick-Ferrari-001இன்றைய நிகழ்வில் அவர் விமர்சித்தது இங்கிலாந்தின் வட பகுதியில் உள்ள “லங்காசையர்” எனும் நகரில் ஏற்பட்ட ஒரு சிறு சர்ச்சையே. அங்குள்ள இறந்தோரைத் தகனம் செய்யும் இடத்தில் 50 வருட காலமாக இருந்த கிறிஸ்தவ மதத்தின் இலச்சினையான சிலுவையை அந்நகரின் நகரசபை அகற்றியதால் ஏற்பட்ட சர்ச்சையே இதுவாகும். அதை அகற்ற அந்நகரசபையினர் கொடுத்த விளக்கம், பல்லின மக்கள் வாழும் நகரில் மற்றைய மதத்தினரும் இத்தகன மையத்தை உபயோகிப்பதால் இச்சிலுவை அவர்களின் மனதைப் புண்படுத்தும் என்பதாகும்.

அதனால் கிறிஸ்தவ மதத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட அந்நகர மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்து அந்நகர சபைக்கும் தமது பாராளுமன்ற உறுப்பினருக்கும் முறையீடு செய்தார்கள். இங்கு மிகவும் விசித்திரமான விடயம் என்னவெனில் இச்சிலுவையைப் பற்றி மற்ற எந்த மதத்தினரும் எதுவிதமான முறையீடு செய்ததாகவோ அன்றி இது தமக்கு எதுவிதமான மனக்கிலேசத்தைக் கொடுத்ததாகவோ கூறவில்லை. இருப்பினும் சில முற்போக்குவாதிகள் என்று கூறிக் கொள்ளும் நகரசபை உறுப்பினர்கள் தாமாக எடுத்துக்கொண்ட ஒரு தேவையற்ற செயலெனவே கருதப்படுகிறது.

இந்நிகழ்வில் நிக் வெராரி அவர்கள் இச்சிலுவை அங்கிருப்பதை ஆட்சேபிக்கும் மற்றைய மதத்தினர் எவராகிலும் தனது தொலைபேசி அழைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று தமது ஆட்சேபனையைத் தெரிவிக்குமாறு கோரியும், அழைத்த மற்றைய மதத்தினர் அனைவரும் இது தமது பெயரால் நடத்தப்படும் ஒரு வீண் செயல் என்றே கருத்துத் தெரிவித்தனர்.

காலம் காலமாய் கிறிஸ்தவ மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டிலே இறந்தோரைத் தகனம் செய்யும் இடத்தில் அவர்கள் பின்பற்றும் மதத்தின் அடையாளச் சின்னம் இருப்பதில் என்ன தவறு. அத்தகன மண்டபத்தில் வேற்று மதத்தினர் தமது உறவினரைத் தகனம் செய்கையில் இச்சிலுவை இருப்பதை விரும்பவில்லையானால் அதை அகற்றச் சித்தமாக இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இதைத்தவிர ஜனநாயகமாக எப்படி நடக்க முடியும் ?

இங்கிலாந்து நாடு கிறிஸ்தவ மதத்தினை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு. இங்கு வாழும் ஏனைய மதத்தினர் அனைவரும் ஏதோ ஒரு காலத்தில் இங்கு வந்து குடியேறியவர்களே! இங்கிலாந்தில் வேற்றுமதத்தினருக்குத் தரப்படும் சுதந்திரம், தனிமனித உரிமைகள் வேறு எந்த நாடுகளிலும் காணமுடியாத வகையில் விசாலமானது.

இங்கு வாழும் இங்கிலாந்து மக்களின் புரிந்துணர்வு அளவிடமுடியாதது. இங்குக் குடியேறி இந்நாட்டைத் தமது நாடாக்கி வாழும் மற்றைய மதத்தினருக்கு அவர்களது மதங்களையும் கலாச்சாரத்தையும் பின்பற்றி வாழும் சகல உரிமைகளையும் வழங்கியதோடு, அத்தகைய வைபவங்களில் தாமும் பங்குபற்றி கௌரவிக்கும் மனப்பான்மையுடையவர்களே பெரும்பான்மையான இங்கிலாந்து மக்கள் என்பதை நான் எனது நாற்பது வருட அனுபவத்தில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

முற்போக்குச் சிந்தனை எனும் பெயரில் சிலரது நடவடிக்கைகள் சமயங்களில் மக்களிடையே நிலவும் நல்லெண்ண புரிந்துணர்வை எதிர்மறையாக மாற்றி விடக்கூடிய வல்லமை படைத்தது. மதம் எமக்கு நற்சிந்தனையையும், பண்புகளையும் அடுத்தவரைச் சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்க்கும் காரணியாகவே அடிப்படையைக் கொண்டுள்ளது.

அனைத்து மதங்களும் மக்களுக்கு நன்மையையும், அன்பையுமே போதிக்கின்றன. மதத்தினைக் கண்மூடித்தனமான வகையில் பின்பற்றுவோர் சிலரே அம்மதங்களுக்கிடையிலான பிரிவினைகளுக்குத் தூபமிடுகிறார்கள்.

மதத்தினை பின்பற்றுவது தவறல்ல மதத்தின் மீது “மதம்” கொள்வதே தவறு.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

படங்கள் உதவி:
http://www.lbc.co.uk/
http://www.theguardian.com/media/2010/jun/18/arqiva-commercial-radio-award-winners
http://www.telegraph.co.uk/news/religion/11902123/Crematorium-cross-removed-to-avoid-offending-non-religious-visitors.html

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.