வந்ததில் எல்லாம் பொருளுண்டு

0

சக்தி சக்தி தாசன்.


வசந்த்துக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது ,விடுவிடு வென வீட்டை விட்டு வெளியே வந்தவன் சடாரென்று கதவை அடித்துச் சாத்திக் கொண்டே காரை நோக்கி நடந்தான். வேலைக்குக் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது , ஆனால் உள்ளே அப்பாவுடன் இனியும் பேசிக் கொண்டிருக்க முடியாது என்ற கோபத்தில் வெளியேறி விட்டான் .

மனம் அலுத்துக் கொண்டது ” பின்ன என்ன என்னத்தைக் கேட்டாலும் நீ ஒண்டுக்கும் யோசிக்காதை அப்பு என்ன கஸ்டம் வந்தாலும் அதில ஒரு அர்த்தம் இருக்குக் கண்டியோ ” என்று கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

“அதுக்காக கழுத்தை வெட்டேக்க சிரிச்சுக் கொண்டு நிக்க முடியுமே ? , என்னடா இந்த விசர் மனுசன்” மனம் மீண்டும் முணு முணுத்தது.

அம்மா போன வருடம் மாரடைப்பால் இறந்த பின்பு , தங்கை மாலாவின் வீட்டில் தான் தங்கி இருந்தவர் , மைத்துனன் பாலா மிகவும் நல்லவன் மகனைப் போலத் தான் கவனித்து வந்தான் , ஆனாலும் வசந்த் தனக்கு லண்டனில் நிரந்தர வசிப்புரிமை கிடைத்ததும் அப்பாவைத் தன்னுடன் வைத்துக் கொள்ளுவோம் என்று கஸ்டப்பட்டு இங்கே கூப்பிட்டான்.அப்பாவால ஒரு சிரமமும் இல்லை ஆனால் எதையுமே நடைமுறைக்குச் சாத்தியமாகுமா ? என்று ஆராயாமல் அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பார்.

காரில் நீண்ட நெடுஞ்சாலை வழியாக ஓடிக் கொண்டிருந்தான் இன்னுமொரு அரைமணி நேரத்தைச் செலவழிக்க வேண்டும் . தீடிரென அம்மாவின் ஞாபகம் நெஞ்சில் மேலோங்கியது எனக்கு இரு இரண்டு மாத காலம் அப்பாவுடன் இருப்பதே இப்படி எரிச்சலைக் கொடுக்கிறது என்றால் தன் வாழ்க்கையில் 35 வருடங்களை எப்படித்தான் ஓட்டினாளோ என்று வியந்து கொண்டான் . எதிரே வந்த பெடஸ்ரியன் குரஸ்ஸின் முன்னே பிரேக் அடித்து காரை நிறுத்தியவனின் கண்களைத் தாக்கியது என்ன மின்னலா? ஆடி அசைந்து இடுப்புவரை கூந்தலுடன் கறுத்த அரை நிசாரும் , சிகப்பு ரவிக்கையும் அணிந்து கொண்டு அழகிய செவ்வதனத்தில் புன்முறுவலுடன் நடந்து கொண்டிருந்த அந்தப் பெண் நிச்சயமாக ஒரு தமிழ் பெண்தான் என்று அவன் மனம் அடித்துக் கூறியது.

பின்னே நிற்கும் காரின் ஹார்ன் சத்தம் காதைப் பிளக்க “சாரி” என்று கையை உயர்த்திக் காட்டி விட்டு நினைவுக்குத் திரும்பியவனின் நினைவில் கம்ப்பியூட்டரில் இருக்கும் டெஸ்க்டொப் வால் பேப்பரைப் போல அந்த அழகிய அணங்கின் வதனம் ஒட்டிக் கொண்டு விட்டது. அன்று முழுவதும் உட்கார்ந்திருந்த போதும் மனம் வேலையில் லயிக்கவில்லை , திரும்பத் திரும்ப அந்தத் தெருவில் கண்ட பதுமையே நினைவலைகளில் மோதினாள்.

அன்று மாலையில் வீடு திரும்பியதும் ” என்ன மோனை என்னத்தையோ பறி குடுத்தது போல இருக்கிறாய் , என்ன வேலையில ஏதாகிலும் பிரச்சனையோ ? ஒண்டுக்கும் யோசிக்காதை என்ன கஸ்டம் வந்தாலும் ஒரு அர்த்தம் இருக்கும் ” இது வசந்தின் அப்பா சோமசுந்தரம்.

“இஞ்சை பாருங்கோ அப்பா, எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை இனிச் சும்மா உங்கட அலம்பலைத் தொடங்காதேங்கோ” சொல்லிக் கொண்டே ரூமுக்குள் சென்று கட்டிலில் விழுந்தான்”.டெலிபோன் அடித்தது

“டேய் வசந்த் என்னடா பின்னேரம் போன் பண்ணுறன் எண்டாய் , பேச்சு மூச்சு ஒண்டையும் காண இல்லை என்ன சங்கதி ? ” என்றான் நண்பன் பிரேம் மறுமுனையில்.

 “இல்லையடா போன் பண்ணத்தான் இருந்தனான் , சொன்னா நம்ப மாட்டாய் இண்டைக்கு ரோட்டில ஒரு பெட்டையைப் பாத்தேண்டா , என்ன விசர் பிடிச்சு ஆட்டுது அவளை மறக்கவே முடிய இல்லையடா .” என்றான் வசந்த்.

“சரி சும்மா விசர்க் கதை சொல்லாதை இந்தச் சனிக்கிழமை பார்ட்டிக்கு வாராய் தானே?” என்றான் பிரேம்

 
“ஓமடா மறந்தே போனேன் இண்டைக்கு புதன் கிழமையாச்சு , ஓமோம் கட்டாயம் வாறன் , பிரண்ட்ஸ் எல்லாரும் வருவாங்கள் தானே?”

“அதைப்பற்றி யோசிக்காதை , அதை என்னட்ட விடு சரியடா நான் வெள்ளிக் கிழமை போன் பண்றன் “, என்றான் ப்ரேம். ” பாய்” என்றவாறு போன் தொடர்பை துண்டித்தான் வசந்த். அன்று இரவு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த வசந்தின் விழிகளைத் தூக்கம் வந்து சேர்ந்த பின்பு , அவன் எண்ணத்தில் மட்டும் கலர் கலராய்க் காதல் கனவுகள் வட்டமடித்துக் கொண்டிருந்தன.

அந்த வாரத்தில் மிகுதியாக இருந்த அந்த இரண்டு நாட்களும் வேலைக்கு அன்று அந்தப் பெண்ணைச் சந்தித்த நேரத்திற்கு புறப்பட்டான் . வியாழக்கிழமை காலை அவன் கண்ணுக்குத் தென்படவேயில்லை , வெள்ளிக் கிழமை காலை அதே தெருவில் கார் ஓடிக் கொண்டிருக்கும் போது அவன் கண்கள் குத்திட்டு நின்றன . ஆம் அவனது கனவுக் கன்னி சாலையோர நடை பாதையில் அதே புன்னகைத்த கண்களுடன் நடந்து கொண்டிருந்தாள்.

அவசரமாகக் காரைச் சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கியவன் கண்களில் இருந்து அந்தக் காரிகை மின்னல் போல மறைந்து விட்டாள். ஆம் அதே சமயம் அருகிலிருந்த பஸ் தரிப்பில் இறங்கிய கும்பலுள் மறைந்து அவள் போயே விட்டாள். ஏமாற்றத்துடன் திரும்பிய அவன் கண்களில் டிராப்பிக் வார்டன் அவன் காருக்கு அபராதம் எழுதி கண்ணாடி மீது வைப்பது தெரிந்தது.

 

ஆத்திரமாக வந்தது கனவுக் கன்னியை கண்களில் இருந்து தொலைத்து விட்டது மட்டுமல்ல , 80 பவுண்ட்ஸ் அபராதமும் அல்லவா கிடைத்து விட்டது . மனம் உடனே அப்பாவை நோக்கித் தாவியது ” என்ன நடந்தாலும் அதுக்கு ஒரு அர்த்தம் இருக்குக் கண்டியோ” அவரின் வார்த்தைகள் காதுகளில் கட்டெறும்பு புகுந்ததைப் போல் கடித்தது. ஆத்திரத்துடன் தனது காரையே காலினால் உதைத்தான் . பின்பு உடைந்த மனதுடன் வேலைக்குச் சென்றான்.

அன்று சனிக்கிழமையாதலால் சீக்கிரமாகக் கிளம்பினால் தான் இந்த டிராபிக் ஜாம் எல்லாத்துக்கும் ஈடு கொடுத்து சரியான நேரத்திற்கு பிரேமின் பார்ட்டிக்குப் போகலாம் . அப்பாவைப் பார்த்தவனின் மனதில் பாவம் இவருக்கும் ஏதாவது நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்து விட்டு போகலாம் என்று எண்ணியவாறே ” அப்பா உங்களுக்கு பக்கத்து ரெஸ்ட்டாரண்டில மசாலா தோசை எடுத்துத் தரவே ?” என்று கேட்டான். “இல்லையப்பு எனக்கு இப்ப பசிக்க இல்லை , நான் பேந்து மெதுவாய்ப் போய் அங்கேயே சாப்பிட்டுப் போட்டு வாரன் ராசா ” என்றார் சோமசுந்தரம்.

“சரி அப்பா , இந்தாங்கோ காசு , கவனமாப் பாத்துப் போங்கோ , துறப்பைக் கவனமா எடுத்துக் கொண்டு போங்கோ என்ன ” என்று கூறிவிட்டு ” சரி அப்பா நான் போயிட்டு வாறன்” என்றவனைப் பார்த்து ” தம்பி நீயும் கவனமாய் போ , உனக்கு நான் சொல்லத் தேவையில்லை எண்டாலும் பார்ட்டியில பாத்து நட” என்ற அப்பாவைப் பார்த்துச் சிரித்தவாறே காரை நோக்கி நடந்தான் வசந்த்.

வழியெல்லாம் மற்றக் கார் டிரைவர்களை மனதுக்குள் திட்டிக் கொண்டே ஒருவாறு பிரேமின் வீட்டை அடைந்தான் வசந்த். அவன் போவதற்கு முன்னாலேயே மற்ற பிரண்ட்ஸ் எல்லோரும் வந்திருந்தார்கள் , பார்ட்டி களை கட்டிக் கொண்டிருந்தது , “ஹாய் வசந்த் என்னடா லேட்டாய் வாராய் ?” என்று கையிலே கிளவுசுகளை ஏந்திய வண்ணம் அவனது பிரண்ட்ஸ் அக்கறையாக விசாரித்தார்கள்.

“தெரியாதே ரோட்டிலே ஒரே டிராபிக் ” என்று சொல்லிக் கொண்டே கதிரையில் அமர்ந்தவனின் கையிலே பியர் கானைத் திணித்தான் பிரேம். அவர்கள் இருந்த அந்த இடமே சிரிப்பும் , பலமான சம்பாஷணைகளும் என்றவாறு மிகவும் பம்பலாக களையோடு இருந்தது . அப்போது வீட்டுக் காலிங் பெல் அடித்த சத்தமும் அதைத் தொடர்ந்து பிரேம் கதவைத் திறக்கும் சத்தமும் கேட்டது.

“வாங்கோ , வாங்கோ நீங்க வருவியள் என்று நான் நினக்க இல்லை ” என்று பிரேம் யாரையோ வரவேற்பது கேட்டது , அவன் கதைத்த தொனியிலிருந்து வாயெல்லாம் பல்லாக பிரேம் இருக்கும் காட்சி அவனுக்கு மனக் கண்ணில் தெரிந்தது . வந்தவர்கள் கொஞ்சம் பெரிய ஆட்கள் போல இருக்கு என்று வசந்த் எண்ணிக் கொண்டான்.

அதைத் தொடர்ந்து அவர்கள் இருந்த சிட்டிங் ரூம் கதவு திறந்தது , அனைவரின் வாயும் சடன் பிரேக் போட்டது , மியூசிக் சென்டர் அலறும் ஒலியைத் தவிர வேறு ஒரு சத்தமும் இல்லை ! டீசன்ட் ஆன கசுவல் வெயருடன் ஒரு நடுத்தர ஆண் உள்ளே நுழைந்தார் அவரின் பின்னே பாப் பண்ணிய கெயர் ஸ்டைலுடன் சுடிதார் அணிந்த வண்ணம் ஒரு பெண் , அவரின் மனைவியாக இருக்க வேண்டும் என்று வசந்த் நினக்க முன்னமே , “பிரண்ட்ஸ் மிஸ்டர் அன்ட் மிஸஸ் ராம் , ஊரில எங்கட வீட்டுக்கு பக்கத்து வீடு ” என்று பிரேம் அறிமுகப் படுத்தினான்.

அடித்தது ஒரு மின்னல் வசந்த்தின் தலையில் , ஆம் அவர்களின் பின்னே இந்த மூன்று நாட்களும் அவனைப் பைத்தியக்காரனாக்கிக் கொண்டிருந்த அந்தக் கனவுக் கன்னி அதே புன்னகைத்த கண்களுடன் , பாப் கெயருடன் ஜீன்சும் , டீசார்ட்டும் அணிந்தபடி மெதுவாய் உள்ளே வந்தாள் .

“மடையா எல்லாரையும் அறிமுகப்படுத்தினாய் இவள் யாரடா ? “என்ற தோணியில் பிரேமைப் பார்த்தான் வசந்த் , அதற்கு பிரேம் அவனைப் பார்த்த விதம் “அவசரப்படாதே கண்ணா ” என்று கூறுவது போலிருந்தது. வசந்தின் அவசரத்தைப் புரிந்து கொண்டவன் போல பிரேம் ” இது மிஸஸ்.ராமோட தங்கச்சி , ரத்னா ” என்றான்.

பழம் நழுவி பாலில் விழுந்தது போலிருந்தது வசந்துக்கு , “ரத்னா” அவனது மனம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டது . அதற்குள்ளாறவே அவனது மனம் , கல்யாண அழைப்பிதழைக் கனவு காணத் தொடங்கியது “வசந்த் அன்ட் ரத்னா” , கனவு அலை பாறையில் மோதிச் சிதற திடுமென விழித்துக் கொண்டவனைப் போல , பியர்க் கானை வாயொடு பொருத்தினான். கைகள் சிறிது நடுங்கியது , குளிர் காலத்திலும் அவனுக்குச் சிறிது வேர்த்தது.

ரத்னா அருகிலிருந்த கதிரையில் அவனைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தவாறே அமர்ந்து கொண்டாள். அவளது அக்காவும் , அத்தானும் எதிர்த்தாற் போல அமர்ந்தார்கள் . அத்தான் எங்கட சமுதாயத்தின் மரியாதையைக் குறைய விடக் கூடாது என்னும் காரணத்திற்காக தனது கிளாசை விஸ்கியால் நிறைத்துக் கொண்டார். ரத்னாவின் அக்கா அங்காலையும் , இங்காலையும் பார்த்து விட்டு படக்கென ஒரு வாய் வைனை டேஸ்ட் பண்ணி விட்டு கீழே வைத்து விட்டார்.

பிரேம் ரத்னாவைப் பார்த்து “உங்களுக்கு வைன்?” என்றான் . “இல்லை எனக்கு ஒரேஞ் ஜூஸ் குடுங்கோ” என்றாள் ரத்னா.

 “ஓ எண்ட ஆள் பண்பாட்டுத் திலகம்தான் ” மனதுக்குள் பெருமைப் பட்டான் வசந்த் . மில்லில அரிசி அரைக்கும் சத்தம் போல பழையபடி சந்தைச் சத்தம் பக்ரவுண்டாகியது.

ரத்னாவின் அத்தான் இப்போ ரெண்டு கிளாஸ் விஸ்கிக்கு பிறகு ஈழப் பிரச்சனையிலிருந்து , இன்டர்நேஷனல் லெவலுக்குத் தாவி விட்டார். மெதுவாகத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு ” நீங்கள் அந்த ஹை ஸ்ரீட்டுக்குக் கிட்டவே வேலை செய்யுறியள் , நான் அனேகமா அதால காரில போகேக்க உங்களைப் பார்க்கிறனான் ? ” என்றான் வசந்த்

 
“ஓமோம் நீங்க எங்க வேலை செய்யிறீங்க ? ” என்றாள் ரத்னா.

” நான் எஸ்ஸோ கராச்சில மனேஜரா இருக்கிறன்” என்றான் வசந்த் 

“அதுக்கு ஏன் ஹை ஸ்ரீட்டுக்குப் போகத் தேவையில்லையே” என்றாள் ரத்னா . போச்சுடா இவள் விஷயம் தெரிஞ்சவள் மாட்டீட்டன் , “உங்களைப் பார்க்கிறதுக்குத்தான் அங்க வாறனான் அதுவும் ஒரு மூண்டு நாளாத்தான் எப்பிடிச் சொல்லப் போறன்? ” என்று நினைத்துக் கொண்டவன் “இல்லை மத்த ரோட்டில ஏதோ வேலை நடக்குது சரியான டிராபிக் அதுதான் சுத்திப் போறனான்” ஹி ஹீ என்று அசடு வழியப் பதிலளித்தான் வசந்த்.

அடுத்த இரண்டு மணி நேரம் எப்பிடிப் போச்சுது என்றே தெரியவில்லை , வசந்த்தும் , ரத்னாவும் நெருங்கிய நண்பர்கள் போல ஜோக்கடிப்பதும் , சிரிப்பதும் என்று ஓடியது . “அப்பு என்ன நடந்தாலும் அதுக்கு ஒரு அர்த்தம் இருக்குக் கண்டியோ” திடீரென்று அப்பாவின் ஞாபகம் வர கட்டெறும்பு திரும்பவும் காதினுள் நுழைந்தது.

இப்ப மிஸ்டர்.ராம் இன்டர்நேஷனலில் இருந்து மூனுக்கும் , மாசுக்கும் தாவீட்டார் , மிஸஸ் . ராம் மெதுவாகவே ஒரு ரெண்டு , மூணு கிளாஸ் வைனை உள்ள தள்ளியிருப்பார் போல இருந்தது. வழமை போல் எல்லாருக்கும் தண்ணி உச்சக் கட்டம் . சாப்பாடு அரைவாசியை வயித்துக்குள்ளேயும் மிச்சத்தை பின்னுக்குள்ளேயும் தள்ளியதும் ஒவ்வொருவராக ஆடி , ஆடி விடை சொல்லிப் புறப்பட்டார்கள். ரத்னா மட்டும் புறப்படும் போது “ஜ ரியலி எஞ்ஞோய்ட் டு நைட் , ப்ளீஸ் பி இன் டச்” என்று சொல்லி தனது மொபைல் நமபரைக் குடுத்துச் சென்றாள்.

கடைசியாக வசந்த் வெளிக்கிட்டான் , அவனைப் பார்த்து பிரேம் “என்னடா ரத்னாவோட ஒரே வாரப்பாடு போல இருக்கு , வழக்கமா நீ ஆடுற காவடியாட்டத்தைக் கூட மறந்திட்டாய் மச்சான்” என்றான். ” டேய் பிரேம் சொன்னா நம்ப மாட்டாய் , ரெண்டு மூண்டு நாளா என்னைப் போட்டு ஆட்டிக் கொண்டிருந்த பெட்டை , ரத்னா தாண்டா ” என்றான் வசந்த். “யூ அர் எ லக்கி மான்டா ” என்ற பிரேமிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான் வசந்த்.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவனை ” என்ன அப்பு டயர்டா இருக்கும் போய்ப்படு ” என்ற அப்பாவின் குரல் வரவேற்றது. ரூமுக்குள் கட்டிலில் விழுந்தவனைக் கனவுலகு வரவேற்றது , பிறகென்ன அவன் விஜய் ஆகவும் , ரத்னா சிம்ரனாகவும் பார்க்கில் ஓடிப்பிடித்து விளையாடினார்கள்.

அடுத்தநாள் வேலைக்குப் போனதும் எப்ப 10 மணியாகும் என்று காத்துக் கொண்டிருந்து விட்டு , தயங்கியவாறு ரத்னாவின் மொபைல் போன் எண்களைச் சுழற்றினான் “ஹலோ” மறுமுனையில் ஒலித்த காந்தர்வக் குரல் அவனை கிறக்கியது. “நான்தான் வசந்த் , எப்பிடி இருக்கிறீங்க ? ” என்றான் வசந்த் .

“நீங்க பிரீ என்றால் பின்னேரம் மக்டொனால்ட்ஸ்ல மீட் பண்ணுவமா” என்றாள் ரத்னா .

கொஞ்சம் தயங்கினாலும் எங்கே தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு விடுவாளோ என்ற பயத்தில் “ஓமோம் நான் பிரீதான்” என்று துடித்தான் வசந்த். வீட்டுக்கு போன் பண்ணி அப்பாவிட்ட தான் வீடு வரத் தாமதாகும் என்று தெரிவித்தான்.

இப்படியாக அவனது காதல் உறவு நான்கு மாத காலத்தைக் கடந்தது , ஒருநாள் வேலையால் வீடு வந்ததும் அப்பா ” தம்பி என்னவோ அப்பு நீயும் இப்ப முன்னை மாதிரி இல்லை ஒழுங்கா வீட்டுல சாப்பிடுறது இல்லை , அடிக்கடி லேட்டாய் வாராய் , இப்ப உனக்கும் கல்யாண வயது எட்டுது பாத்து நடந்து கொள்” என்றார்.

ஒருவாறு துணிச்சலை வரவழைத்துக் கொண்டு அப்பாவிடம் தனது காதலை வெளிப்படுத்தினான் ” நான் உதைப் பற்றிக் கேள்விப்பட்டனான் , உவன் பிரேம் வந்து என்னட்டை உண்ட விசயத்தைக் கதைச்சவன் , அந்தப் பெடிச்சியோட இதைப் பற்றிக் கதைச்சனியே ?” என்றார் அப்பா

“கலியாணத்தைப் பற்றிக் கேக்க இல்லை , நாளைக்குக் கேக்கிறன்” என்றான்

” ஏதோ அப்பு என்ன நடந்தாலும் அதில ஒரு அர்த்தம்… ” கட்டெறும்பு காதில ஊறத் தொடங்கியது. டெலிபோன் அலறியது மறுமுனையில் பிரேம் ” டேய் நல்ல தமிழ் படம் போடுறாங்கள், போவம் வாடா” என்றான். அப்பாவிடம் சொல்லி விட்டுப் புறப்பட்டான் .போனவன் ஒரு மணித் தியாலத்திலேயே திரும்பி விட்டான் ” என்ன ராசா படத்துக்கு போக இல்லையே” அப்பா கேட்டார்.

“படமே அது , ஹீரோயின் குடிக்கிறதும் , ஸ்மோக் பண்றதும் , தமிழ் படங்கள் எண்டு கண்றாவியையெல்லாம் எடுக்கிறாங்கள், அவங்களை விட்டுட்டு நான் வந்துட்டன்” என்றான் வசந்த்.

” என்னடா தம்பி இந்த ஊரிலே இருக்கிறாய் , இதுகள் நடக்கிறது தானே?” அப்பா இப்போ மாடார்ன் அப்பாவாய் அட்வைஸ். இந்த மனுசன் என்னடா” என்று  மனதுக்குள் எண்ணிக் கொண்டவன் ” அப்பா , இந்தக் கன்ட்ரியோ , எந்தக் கன்ட்ரியோ தமிழ் பொம்பிளைகள் எல்லே? ” இது வசந்த் .

அடுத்த நாள் மாலை ரத்னாவைச் சந்தித்த போது ” ரத்னா அப்பா எண்ட கலியாணத்தைப் பற்றிக் கதைக்கத் தொடங்கிட்டார் , வாட் டூ யு திங்க் ? ” என்றான் வசந்த். ” யூ பெட்டர் கம் அன்ட் ஸ்பீக் வித் மைய் ஸிஸ்டர் ” என்றவள் தலையைக் குனிந்து கொண்டாள். அதைத் தொடர்ந்து பல விடயங்களைத் தொட்டுத் தொட்டுத் தாவியது அவர்களது சம்பாஷணை.

 

அன்று இரவே ரத்னா வீட்டுக்குப் போன் செய்து அவனது அத்தானிடம் , தான் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேச எப்போ சந்திக்கலாம் என்று கேட்டான் . அதற்கு அவர் நாளை மறுநாள் மாலையில் வரச் சொன்னார். அவரது தொனியிலிருந்து

அவர்களது விஷயம் அவருக்கு தெரிந்திருந்தது போல அவனுக்குத் தென்பட்டது.

படுக்க ஆயத்தம் பண்ணும்போது அப்பா உள்ளே வந்தார் ” தம்பி நாளைக்கு உண்ட பெரியம்மாவைப் போய் பார்க்க வேணும் கண்டியோ , வேலையிலிருந்து கெதியா வந்திடு” என்றார் அப்பா , அப்போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது, அவனது பெரியம்மா ஈழத்திலிருந்து வந்து அவளுடைய மகனுடன் தங்கி இருக்கிறாள் அவளைப் பார்க்கப் போகலாம் என்று அவன் தான் அப்பாவுக்குச் சொல்லி இருந்தான்.

” உங்களை வந்து அவை பாத்தவையே ? நீங்கதான் சும்மா..” இழுத்தான்” சரி பரவாயில்ல போவம் வெளிக்கிட்டு நில்லுங்கோ , நானும் முன்ன பின்ன அங்க போனதில்லை இனி வழியை வேற கண்டு பிடிக்க வேணும்” என்றான் வசந்த். “சரி தம்பி” என்று விட்டு அப்பா போய்விட்டார்.

அடுத்தநாள் சுவுத்தோலுக்குள்ள காரில இருந்து கொண்டே புறுபுறுத்த வண்ணம் போனான் வசந்த் ” சும்மா இவையளைப் போய் பாக்கிறன் எண்டு நீங்க சொல்லி இப்ப வழி தெரியாமச் சுத்திக் கொண்டு போறம் , பாத்தியளே” பொருமினான் வசந்த். “உங்கினேக்க ஆரிட்டயாவது கேக்க ஏலாதே ?” , “அப்பா இதென்ன ஊரெண்டு நினைச்சியளே , அல்லாட்டி உவையென்ன பெரிய மினிஸ்டேர்ஸ் எண்டு நினைக்கிறியளே ?” திரும்பவும் பொருமல். காரை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கினான் ” ஒண்டுக்கும் யோசிக்காத எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கு கண்டியோ”?  அப்பா வாயைத் திறக்கவும் கட்டெறும்பு தன் வேலையைப் பார்க்கத் தொடங்கியது.

அருகிலிருந்த ஒரு பப்பினுள் சென்றான் விசாரிக்க…………. அங்கே……….. !

அவன் கண்ட காட்சி அவனது தலையை ஆயிரம் துண்டுகளாக வெடிக்க வைத்தது , ஆமாம் இரண்டு வெள்ளையர்களின் நடுவே கையில் கிளாஸூடன் ஒரு வெள்ளையனின் மீது தலையை சாய்த்தவாறு அவன் கனவுக் கன்னி “ரத்னா” . மெதுவாகத் திரும்பினான் , அடுத்த நாள் நிச்சயிக்கப்படவிருந்த அவனது திருமணம் நடப்பதற்கு முன்னரே விவாகரத்து மனுத் தாக்கல் செய்யப் பட்டு விட்டது.

அப்படியே வந்து காரில் ஏறினான் . “என்ன ராசா ? இடம் தெரியுமே ? “அப்பா ஆவலாகக் கேட்டார். “சரியாத் தலையிடிக்குது , நாளைக்கு வடிவா வழியைப் பாத்துட்டுக் கூட்டிக் கொண்டு போறன்” என்றவனைப் பாத்து ” ஏனப்பு நாளைக்கு ஏதோ ஒரு அவசரமான காரியமாய்ப் போகவேணும் எண்டு சொன்னாய்?” என்றார். “இல்லை அப்பா அந்த அப்பாயிண்ட்மெண்ட் கான்சல் எண்டு இப்பதான் போன் வந்துது “என்றான் வசந்த்

 
” சீ பாவம் நீ , வீணா இவ்வளவு தூரம் அலைஞ்சுட்டு திரும்பிறம்” என்றார் அப்பா

” என்ன நடந்தாலும் அதில ஒரு அர்த்தம் இருக்கு”….. அப்பா . தன் காதுகளையே வசந்துக்கு நம்ப முடியவில்லை , தானே கட்டெறும்பைப் பிடித்து தன் காதுகளில் விடுகிறானா ? அப்பா ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தார். இப்போது அவன் அப்பாவைப் பார்த்த பார்வையில் ஒரு வாஞ்சையிருந்தது , காரிலிருந்த டேப்ரிகார்டரை இயக்கினான்

“வந்ததில் எல்லாம் பொருளுண்டு” அரை குறையாய் இருந்த பாடல் தொடர்ந்தது.

 

படங்களுக்கு நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.