இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (175)

0

சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன்.

“என்ன பெரிசு ஒரே பாடாய்ப் படுத்தறே, ஓரமா ஒதுங்கிப் படுத்துக்கோப்பா” என்றும்
“இஞ்சை பாருங்கோ உங்களுக்கு வயசாயிப் போச்சுது, சும்மா இந்த இளசுகளோட போட்டி போடாம பேசாம சிவனேன்னு ஒரு மூலையில போய் இருங்கோவன்” என்றும்
கேட்கும் பேச்சுகள் …

age3இவையெல்லாம் எமது பின்புலங்களில் நாம் எங்காவது கேட்கும் வார்த்தைகள். நான் மேலே கூறிய உதாரணங்களிலிருந்து இவையெல்லாம், எமது நாடுகளுக்கேயுரிய ஒரு குறிப்பிட்ட பிரச்சனை என்று நான் கூறுவதாக யாரும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இது சகல நாடுகளிலும், சகல கலாச்சாரங்களிலும் ஊறிப்போயிருக்கும் ஒரு விடயமாகும். அதாவது வயது எனும் காரணி ஒரு மனிதனின் வாழ்வை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பதுவே இங்கே எழும் கேள்வியாகும். இந்தத் தாக்கத்தின் வடிவம் நிறவெறி, மதவெறி எந்த அளவிற்கு ஒரு சமூகத்தைப் பாதிக்கிறதோ அந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பது சமூக ஆராய்ச்சி வல்லுநர்களின் கருத்து.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் எம்மால் குடும்பத்திற்கு, சமுதாயத்திற்கு உபயோகம் இருக்கிறது. அது வயது ஏற ஏற ஒவ்வொரு வடிவம் எடுக்கிறது. அந்த உபயோகத்தன்மையின் வடிவமும், அதன் முக்கியத்துவமும் சூழலுக்கேற்ப, சார்ந்திருக்கும் சமூகத்திற்கேற்ப மாறுதலடைகிறது. ஆனால், தன்னுடைய ஓய்வு நிலையை அண்மிக்கும் ஒருவனுடைய உபயோகத்தன்மை குறைகிறது என்பது பலருடைய பொதுப்படையான கருத்து என்பதே முக்கியமாக நான் இங்குக் குறிப்பிட விழைவது.

இப்படியான ஒரு நிலமை நடைமுறையில் இருக்கிறது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் நிலைமை இருந்தாலும் அது சரியா? தவறா? என்பதுவே கேள்வியாகிறது.

சீ.ஏ.ஏ.டி.இ எனும் வயதுப்பாகுபாட்டிற்கு எதிரான ஒரு அமைப்பின் கணக்கெடுப்பின் படி, இந்த வயதானவர்கள் எனும் பட்டியல் அதாவது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் ஜனத்தொகையில் மூன்றிலொரு பங்கு இருக்கிறார்கள் எனக் கணிக்கப் படுகிறது. அதே அமைப்பின் மற்றொரு கணிப்பின் படி வயதானவர்கள் எனக் கணிக்கப்படுவோரில் 25% வேலையில்லாத் திண்டாட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இரண்டரை மில்லியனுக்கு மேற்பட்ட வேலை செய்யக்கூடிய நிலையிலுள்ள 45க்கும் 65க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் ஐக்கிய இராச்சியத்தில் வேலையற்று இருக்கிறார்கள் என்பதுவும் இவ்வமைப்பின் மற்றொரு கணிப்பாகும்.

age1சட்டரீதியாக வேலை செய்வதற்கு உட்பட்ட வயதிலுள்ளவர்கள் வயதானவர்கள் எனும் முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுவதினால், அரசாங்கத்திற்கு 5.4 பில்லியன் பவுண்ட்ஸ் வேலையற்றோருக்கான உதவிப் பணத்திலும் 31 மில்லியன் பவுண்ட்ஸ் உற்பத்தி நஷ்டத்திலும் செலவாகிறது என்பதும் ஒரு கணிப்பாகிறது. வேலைவாய்ப்பு அற்றுப்போகும் தன்மை 59 வயதுடன் அதிகரிக்கின்றதாகக் கூறப்படுகின்றது. மேலே கூறப்பட்ட ஐக்கிய இராச்சியத்திற்கான சில வருடங்களுக்கு முன்னரான புள்ளி விபரங்களாகும். இந்தப் புள்ளி விபரங்கள் உலகின் மற்றபாகங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது.

நான் இந்தப் புள்ளி விபரங்களைக் குறிப்பிட்டதன் காரணம் வயதுப்பாகுபாடு எனும் இந்த நிகழ்வு எப்படிப் பாதிக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே! ஒரு மனிதன் 20 வயதில் உத்தியோகம் எனும் நிலையை அடைக்கிறான் என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொள்வோம். சராசரி மனிதருடைய வாழ்வில் பிள்ளைகள் வளர்ந்து தமது அன்றாடத் தேவைகளைக் கவனிக்கும் நிலையிலிருக்கும் போது தாம் புரியும் பணியின் பால் செலுத்தக்கூடிய சிரத்தையின் விகிதம் அதிகமாக இருக்கும்.

இங்கேதான் ஒரு மனிதனின் உபயோகத்தன்மைக்கு ஓய்வுண்டா? அவனது அனுபவத்திற்கு வயதாவதுண்டா? எனும் கேள்விகள் ஓங்காரமாய் எழுகின்றன. இந்தப் பிரச்சனையை நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு அணுகுகிறோம்? இது என்றும் இருந்து வரும் ஒரு பிரச்சனை. அதுவும் இதற்கு தற்போது அதிக விளம்பரம் கொடுத்து, அரசாங்க அளவில் வயதுப்பாகுபாடு காட்டுவது சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டு அதைப்பற்றி பிரச்சாரமும் செய்யப்படுகிறது.

சில வருடங்களின் முன்னால் ஏன் இந்தப் பிரச்சனை இப்படி பெரிதாக்கப்படவில்ல? பின் ஏன் இப்போது என்னைப் போன்றவர்களின் கண்களில் இது தீவிரமாகத் தெரிகிறது? ஒருவேளை நானும் அந்த வயதானவன் எனும் பட்டியலின் வாசற்கதவைத் தட்டி நிற்பதால் எனது விழிப்புணர்ச்சி அதிகமாகியிருக்கிறதோ? இதற்கு இன்னொமொரு காரணமும் இருக்கலாம். இப்போதெல்லாம் மருத்துவ வசதிகள் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது. மக்கள் தமது உடல்நலத்தில் அதிக கவனமெடுக்கிறார்கள். அதனால் சராசரி மனிதனின் வாழ்வுக்காலம் நீடிக்கப்படுகிறது.

இது எதற்கு வழிவகுக்கிறது என்றால் ஒரு மனிதனுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் (பென்ஷன்) முன்னைவிட அதிகாலத்திற்கு உயிர்வாழ்வதினால் அதிககாலத்திற்கு வழங்கப்படவேண்டியுள்ளது. அரசாங்கங்கள் அதற்காக தமது பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. சரி அரசாங்கம் எங்கே இருந்து தனது பணத்தைப் பெற்றுக் கொள்கின்றது? உழைக்கும் மக்கள் செலுத்தும் வரிப்பணமே அரசாங்கத்தின் அதிகப்படியான வருமானமாக இருக்கிறது.

இங்கேதான் புள்ளி விபரத்தை மீண்டும் உற்று நோக்க வேண்டி இருக்கிறது …

ஐக்கிய இராச்சியத்தைப் பொறுத்தவரையில் 1901ம் ஆண்டில் ஒரு ஓய்வூதியம் பெறுபவருக்கு 10 வரி செலுத்துவர் எனும் விகிதத்தில் இருந்தது. ஒரு பத்து ஆண்டுகளின் முன் அதாவது 2005ம் ஆண்டில் ஒரு ஓய்வூதியம் பெறுபவருக்கு 4 வரிப்பணம் செலுத்துவோர் எனும் விகிதத்தில் ஓய்வூதியம் பெறுவோரின் தொகை அதிகரித்து விட்டது. இதே விகிதத்தில் கணக்கிட்டால் 2050 ஆண்டளவில் ஒரு ஓய்வூதியம் பெறுவோருக்கு 2 வரிப்பணம் செலுத்துவோர் எனும் வகை ஓய்வூதியக்காரரின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்வதற்கான பொருளாதாரக் கொள்கைகளில் ஒன்றாகத்தான் இந்த வயதுப்பாகுபாட்டின் மூலம் வயதானவர்கள் என்போரை வேலையிலமர்த்தத் தயங்கும் நிறுவனங்களை அரசாங்கம் சாடத் தொடங்கியுள்ளது.

இங்கேதான் வயதானவர்கள் உபயோகமற்றவர்கள் என்று சமுதாயம் கணிக்கத் தொடங்குவதின் பிரதிபலிப்புகள்தான், இந்நிறுவனங்களின் தயக்கம் என்ற எண்ணம் பரவலாக இருந்து வருகிறது. ஒரு மனிதனுடைய உபயோகத்தன்மையை நிர்ணயிக்கும் உரிமையை யார் யாருக்குக் கொடுத்தது ?

உபயோகத்தன்மை என்பது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகிறது என்பதே உண்மை. 20 வயதில் சோம்பேறித்தனமாகவும் எதிலும் ஆர்வமில்லாமலும் இருக்கும் ஒரு இளைஞன் 50 வயதிலும் பெரும்பான்மையாக அதே குணாம்சங்களைத்தானே பிரதிபலிப்பான்? அதே போல 20 வயதில் மிகுந்த சுறுசுறுப்பும், ஆர்வமும் கொண்ட ஒரு இளைஞன் 50 வயதிலும் அப்படி இருப்பதுதானே சகஜம்.

இதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை.

age2வயதானவர்களை ஒதுக்கி வைத்து அவர்களைக் காலத்தின் மாற்றத்திற்கு உட்படாதவர் என ஒதுக்கும் மனப்பான்மையையே அநேகமாகக் காணக்கூடியதாக இருக்கிறது. அப்படியானால் தான் புரிந்த பணியினாலும், மற்றைய வாழ்க்கைப் பாடங்களினாலும் அந்தப் பெரியவர் அடைந்த அனுபவத்திற்கு விலையில்லாமல் போகிறதா? வாழ்க்கையின் நடுப்பகுதி என்று கூறப்படும் 50களில் , தனது முழுக்கவனத்தையும் செலுத்தி தன்னுடைய அனுபவத்தின் அனுகூலத்தைத் தனது கம்பெனிக்குக் கொடுக்கக்கூடிய ஒருவர் தனது வயதின் நிமித்தம் அச்சந்தர்ப்பத்தை இழப்பது என்பது நியாயமாகுமா ?

அதேவேளை அனுபவம் உடையவர் என்பதனால் தொடர்ந்து 60களிலும், 70களிலும் வேலையைத் தன்னுடன் தக்க வைத்துக் கொண்டிருப்பதனால், இளைஞர்களின் வேலைவாய்ப்புத் தன்மைகள் குறைகின்றனவா? அன்றி அந்த இளைஞனோ, யுவதியோ ஒரு அனுபவமிக்க மூத்தவரின் அருகே பணிபுரியும் வாய்ப்புப் பெறும்போது அவரின் அனுபவங்களின் அனுகூலத்தைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இருக்கின்றதா?

பல கேள்விகள் பிறக்கும் வேளையிலே அவற்றிற்கான விடைகளைத் தேடி எமது அறிவை விசாலப்படுத்திக் கொள்வோம். அதேசமயம் வயதுப்பாகுபாடு எனும் காரணியால் ஒரு அனுபவமிக்கவரின் அனுபவத்தின் அனுகூலத்தைச் சமுதாயம் இழக்கின்ற நிலை வந்தால் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைக்கு எம்மை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் உபயோகத்தன்மைக்கு ஓய்வில்லை. அது பிரயோகிக்கப்படும் சூழல்களில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் அந்த உபயோகத்தன்மையின் உதவி நிச்சயம் சமுதாய வளர்ச்சிக்குத் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை.

வயதானவர்கள் எனும் பெயர்சூட்டி பெரியோரைப் பீரோவில் வைத்து அழகு பார்க்கும் நிலைக்கு நாம் போய்விடக்கூடாது. சமுதாயம் செழிக்க சிந்தை விரிய வேண்டும். விவாதங்கள் ஆக்கபூர்வமான முறையில் வலுவாக நிகழ வேண்டும்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *