சமையல் கலை
இன்று முதல் நம் வல்லமை இதழில், சமையல் கலை என்ற புதிய பகுதி தொடங்கியுள்ளோம். மனிதர் வாழ்வில் ஓடி, ஓடி உழைப்பதற்கான அடிப்படைக் காரணமே இந்த அரை சாண் வயிறு தான் . நல்ல சுவையான உணவு ஒரு மனிதனின் மனநிலையையே மாற்றக் கூடியதாகும். எதையோ உண்டு, இரைப்பையை நிரப்புவதை விட, சமையல் கலையை, படைப்புத் திறனுடன், ஒரு தவமாக எண்ணி செய்யுங்கால், வயிறு நிறைவதுடன், மனதும் நிறைந்து நம் பணியிலும் முழுக்கவனம் செலுத்துவதோடு, சக மனிதரை நேசிக்கும் பக்குவமும் , ஆக்கப்பூர்வமான செயல் திறனும், திருப்தியான மன நிலையால் மன அழுத்தம் போன்ற நோய்கள் தவிர்க்கப்பட்டு நோயற்ற வாழ்வு நாம் வாழ வழியமைக்கும் என்பதும் திண்ணம். ஆக ஒரு மனிதரின் அமைதியான வாழ்க்கைக்கு சுவையான உணவு இன்றியமையாததாகிறது. இதனைக் கருத்தில் கொண்டே, இப்பகுதி துவங்கப்பட்டுள்ளது. அன்றாடம் ஒரு புதிய உணவு வகையை அறிமுகப்படுத்தப் போகிறோம். தங்களுக்கு நல்ல சுவையான உணவு வகை படைக்கும் திறன் இருப்பின் தாங்களும் இப்பகுதியில் அதைப் பகிர்ந்து கொள்ளலாம்.
திருமதி வசந்தா குகேஷ், சமையல் கலையில் 46 ஆண்டு கால அனுபவம் மிக்கவர். நம் பாரம்பரிய உணவு முதல், இன்றைய நவீன மைக்ரோவேவ் சமையல், பன்னாட்டு உணவு வகை, மூலிகை உணவு வகை, சைவம் மற்றும் அசைவம் என்று அனைத்து வகை சமையலிலும் கைதேர்ந்த வித்தை கற்றவர். அவருடைய அனுபவ முத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள மனமுவந்து சம்மதித்துள்ளார். அவருக்கு நம் நன்றிகள்.
முதல் ரெசிப்பியாக ஒரு இனிப்பு வகை!
பால் வடை
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 2 ஆழாக்கு
பால் – 1/2 லிட்டர்
சக்கரை (பொடித்தது) – 1 கப்
எண்ணெய் – 1/2 லிட்டர்
செய்முறை :
1) பச்சரிசியை பாலில் அரை பதமாக வேக வைத்துக் கொள்ளவும்.
2) ஆட்டுரலில் இட்டு நன்கு மசிய அரைத்துக் கொள்ளவும்.
3) தேவையென்றால் சிறிது பால் தெளித்து அரைத்துக் கொள்ளலாம்.வடை தட்டும் பதத்திற்கு பக்குவமாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
4) எண்ணையை காய வைத்து மாவை உருட்டி எடுத்து, வாழை இலையில் வைத்து லேசாக தட்டி நடுவில் ஓட்டை போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
5) பொரித்தெடுத்த வடையின் மீது லேசாக நெய் தடவி, அதன் மீது பொடித்த சக்கரையை முழுவதும் பரவலாக படும்படி இரு பக்கமும் தூவவும்.
சுவையான பால் வடை தயார். சூடாகச் சாப்பிட சுவை கூடும்!
நல்லதொரு தொடக்கம். நல்வரவு வயிற்றிற்கும் ஆகுக. அடுத்த படியாக, பால் கொழுக்கட்டை ப்ளீஸ். என் அத்தை செய்து சாப்பிட்டது. ஒரு செளகர்யம் செய்தவர்களுக்கு. சாப்பிடும்போது பேசமுடியாது!