சமச்சீர்க் கல்வி – உண்மையில் சமச்சீர் தானா?
ஸ்ரீஜா வெங்கடேஷ்
ஒரு வழியாக பள்ளிகளில் எந்த வகையான பாடங்கள் நடத்தப் பட வேண்டும் என்பது குறித்து உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பை வெளியிட்டு விட்டது. இது நாள் வரை பள்ளிகள் இயங்கியது தான் பெருத்த ஆச்சரியம். புத்தகங்கள் இல்லாமல் , எந்தப் பாடத்திட்டம் என்பதே தெரியாமல் குழந்தைகளை சமாளித்த ஆசிரியர்களின் திறமைக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள்.
பள்ளிகளில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடை பெற்றன. சுற்றுலா அழைத்துச் செல்லல் , வினாடி வினா நிகழ்ச்சிகள் நடத்துதல் , கலைகள் உதாரணமாக நாடகம் , ஓவியம் , இசை ஆகியவற்றுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குதல் முதலியவை கையாளப் பட்டன. இவையெல்லாம் கண்டிப்பாக வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஞானி இப்போது தான் பள்ளிகள் உண்மையாக நடை பெறுவதாக் கூறுகிறார். அதை முழுமையாக என்னால் ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் அதில் ஓரளவு உண்மை இருக்கவே செய்கிறது.
பாடப் புத்தகங்கள் வந்து விட்டால் நம் பிள்ளைகள் மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாகவே மாறி விடுகிறார்கள். அப்படி ஆக வேண்டும் என்பது தான் பெற்றோர்களின் விருப்பமும். நிலைமை இப்படியிருக்க கலையாவது மண்ணாங்கட்டியாவது? ஓவியமும் , நாடகமுமா குழந்தைகளுக்கு நாளை சோறு போடப் போகிறது? என்ற பெற்றோர்களின் நியாயமான கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை.
நம் நாட்டில் பொறியியல் , மருத்துவம் முதலிய தொழில் சார்ந்த படிப்புகளுக்கு இருக்கும் மரியாதை கலை சார்ந்த படிப்புகளுக்கு இல்லை. ஏனெனில் கலை என்றாலே சினிமா என்று ஆனது ஒரு காரணம் . அந்தத் துறையின் போக்குப் பிடிக்காத பெற்றோர்கள் தங்கள் வாரிசுகள் அதில் ஈடுபடக்கூடாது என்று நினைக்கிறார்கள். சினிமாவை விட்டால் பணம் சம்பாதிக்க கலையியல் கற்றவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. எழுத்தாளர்களுக்கும் , நாடக ஆசிரியர்களுக்கும் கிடைக்கும் வருமானம் கிட்டத்தட்ட ஒன்றுமில்லை என்ற நிலையில் தான் இருக்கிறது. அதனால் பெற்றோர்கள் அவ்வாறு நினைப்பதை தவறு என்று சொல்ல முடியாது.
இந்தக் கட்டுரை நிச்சயமாக தமிழ் நாட்டின் எழுத்தாளர்கள் நிலை பற்றியது அல்ல என்பதால் மேலே போகிறேன். ஜூன் ஒன்றாம் தேதி திறக்கவிருந்த பள்ளிகள் கிட்டத்தட்ட 15 நாட்கள் கழித்து ஜூன்15ஆம் தேதி திறந்தன. அதன் பிறகும் என்ன பாடத்திட்டம் என்பதே தெரியாத குழப்பத்தில் பாடங்கள் நடத்தப் படாமல் இருந்தன. சில பள்ளிகளில் ஏதோ அடிப்படைக் கணிதம் , இலக்கணம் முதலியவை நடத்தப்பட்டன அவ்வளவுதான்.
இன்னும் பத்து நாட்களுக்குள் புத்தகங்கள் வழங்கப்பட்டாலும் இரண்டு மாதங்கள் வீணானது என்னவோ நிஜம். அதை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்? அரசியல் தலைவர்கள் பலரும் இனிமேல் பள்ளி ஆசிரியர்கள் சுறுசுறுப்பாக இழப்பை ஈடுகட்டும் வண்ணம் செயல் பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது எவ்வளவு தூரம் சரி? மிகுதி இருக்கும் எட்டு மாதத்திற்குள் பத்து மாதங்களுக்கான பாடங்களைத் திணித்தால் அவற்றை எந்தளவு நம் பிள்ளைகளால் உள்வாங்கிப் படிக்க முடியும்? அவர்களது வளரும் மூளைக்கு இவ்வளவு சுமையை அளிப்பது சரியா? அதனால் குழந்தைகளின் மன அழுத்தம் கூடாதா?
மேலும் ஒரு மாதம் வரை கல்வியாண்டு நீட்டிக்கப் படுகிறது என்றே வைத்துக்கொள்ளுவோம் , வெயிலின் கடுமையான தாக்கம் நிறைந்த கோடை காலங்களில் வகுப்புகளோ , தேர்வுகளோ நடப்பது நல்லது தானா? இது போன்ற பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கும் , கல்வியாளர்களுக்கும் இருக்கிறது.
இந்த சமச்சீர்க் கல்வி என்பது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா? என்று கேள்வி எழுப்பினால் ஆம்! என்கின்றன அரசியல் கட்சிகள். பெற்றோர்களின் ஆதரவும் கணிசமாகவே இருக்கிறது.இந்நிலையில் என்னுள் ஒரு கேள்வி எழுகிறது. இது உண்மையிலேயே சமச்சீர்க்கல்வி தானா? ஆட்டோ ஓட்டுனரின் குழந்தையும் , வங்கி மேலாளரின் குழந்தையும் ஒரே புத்தகத்தைத்தான் படிக்கப் போகிறார்களா? என்று கேட்டால் இல்லை என்று தான் பதிலளிக்க வேண்டியிருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மெட்ரிகுலேஷன் , ஆங்கிலோ இந்தியன் , ஓரியண்டல் என்று பல்வேறு வகையான பாடத் திட்டங்களைக் கொண்டு தனியார் பள்ளிகள் இயங்கி வந்தன. வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை பாடத்திட்டங்கள் கிடையாது. மாநில அரசுப் பள்ளிகள் தவிர CBSE அல்லது ICSE பாடத்திட்டங்கள் உள்ள பள்ளிகளே தனியார் பள்ளிகளாக இருக்கும். நீதி மன்றத் தீர்ப்புப்படி இவை யாவும் ஒருங்கிணைக்கப் படவேண்டும்.(இந்த ஒருங்கிணைப்பில் CBSE , ICSE வராது) தமிழ்நாட்டு அரசினர் பள்ளியில் நடத்தும் பாடத்திட்டமும் , தனியார் பள்ளிகளது பாடத்திட்டமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது இந்த ஒருங்கிணைப்பின் நோக்கம். இதன் மூலம் பாரபட்சமற்ற கல்வி எல்லாப் பிள்ளைகளுக்கும் கிடைக்கும் கல்வியாளர்கள் முன் வைக்கும் வாதம்.
ஆனால் நடைமுறை அப்படி இல்லை. சென்ற கல்வியாண்டிலேயே தனியார் பள்ளிகள் அனைத்தும் சேர்ந்து நீதி மன்றத்தில் சமச்சீர்க் கல்வியை எதிர்த்து வழக்குத் தொடுத்தனர். அவர்களால் சமச்சீர்க் கல்வி முறையை முடக்க முடியாவிட்டாலும் , அவர்களுக்கு சாதகமான ஒரு அம்சம் தீர்ப்பில் இருந்தது. அதாவது தமிழ்நாடு பாடநூல் கழகம் தயாரிக்கும் புத்தகங்களைத்தான் தனியார் பள்ளிகள் நடைமுறை படுத்த வேண்டும் என்பது இல்லை. அரசு சில பதிப்பாளர்களின் பட்டியலை அளிக்கும். அவ்வாறு அரசு அங்கீகாரம் பெற்ற பதிப்பாளரிடமிருந்து சமச்சீர்ப் பாடத்திட்டத்திற்கான புத்தகங்களை தனியார் பள்ளிகள் வாங்கிக் கொள்ளலாம்.
இதை வைத்துப் பார்க்கும்போது தங்களுடைய வியாபாரம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகள் நிச்சயமாக தமிழ்நாடு பாடநூல் கழகம் தயாரித்தப் புத்தகங்களை பயன்படுத்தப் போவதில்லை. அப்படிச் செய்து விட்டால் பணத்தைக் கொட்டிக் கொடுத்து அந்தப் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோருக்கு யார் பதில் சொல்வது? எல்லோரும் படிக்கும் புத்தகத்தைப் படிக்கவா நாங்கள் நாள் முழுக்க வரிசையில் நின்று , பணத்தை அள்ளி வீசி எங்கள் குழந்தைகளை உங்கள் பள்ளிகளில் சேர்த்தோம், என்று கேட்பார்களே? அதற்காகவாவது தனியார் பள்ளிகள் பதிப்பாளர்களிடம் தானே புத்தகங்களை வாங்கியாக வேண்டும்.
இந்த முறையில் அவர்களுக்கு பண லாபம் வேறு இருக்கிறது. தமிழ் நாட்டு பாடநூல் கழக புத்தகங்களாயிருந்தால் அவை இலவசமாகவே குழந்தைகளுக்கு வழங்கப் பட்டு விடும். ஆனால் வேறு ஒரு பதிப்பாளரிடம் புத்தகம் வாங்கினால் இரட்டிப்பு விலை வைத்து பெற்றோர்களிடம் விற்று விடலாமே?
இப்படி வியாபார நோக்கோடு செயல்படும் தனியார் பள்ளிகள் தாங்கள் பயன்படுத்தும் புத்தகங்களின் தரமே சிறந்தது என்று விளம்பரம் செய்வார்கள். அதற்கேற்றவாறு புத்தகம் போடுபவர்களும் சில பகுதிகளை மிகுதியாகச் சேர்க்கலாம். அப்படிச் செய்தால் எங்கிருக்கிறது சமச்சீர்க் கல்வி? அடிப்படை நோக்கமே அடிபட்டுப் போகிறது அல்லவா? அரசால் அங்கீகரிக்கப்பட்ட பதிப்பாளர் பட்டியல் வருடா வருடம் மாறுமா? இல்லையா? என்பதெல்லாம் இன்னும் தெரிய வராத விஷயங்களாயிருக்கின்றன. அப்படி அரசு அங்கீகாரம் பெற இன்னும் என்னென்ன ஊழல் நடக்குமோ? அந்த சாத்தியக் கூறையும் புறந்தள்ள முடியாது.
அப்படியென்றால் சமச்சீர்க் கல்வி என்பது தேவையற்ற ஒன்று என்பது தான் உன் கருத்தா? என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் அப்படி அல்ல. எல்லாக் குழந்தைகளும் ஒரே கல்வி கற்க அதை விடச் சிறந்த வழி வேறு இருக்க முடியாது. அது நடக்க வேண்டுமானால் நம் பெற்றோர்களிடையே இருக்கும் தனியார் பள்ளி மோகம் குறைய வேண்டும். அரசு பள்ளிகளிலும் , அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி கற்பிக்கப் படுகிறது என்ற எண்ணம் உண்டாக வேண்டும்.
அந்த எண்ணம் உண்டாவது நம் ஆசிரியர்களின் கையில் தான் இருக்கிறது. அரசு ஆசிரியர்களில் பொறுப்போடு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடுவே சில களைகளும் இருப்பது கண்கூடு. களை எடுக்கப் பட வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகம் பலமானதாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் ஆசிரியர்களை சந்தித்துப் பேச வேண்டும். அவ்வாறு பேச வரும் பெற்றோர்களை ஆசிரியர்கள் மதிக்க வேண்டும்.
இப்படி அரசுப் பள்ளிகளையும் , அரசு உதவி பெறும் பள்ளிகளையும் நெறிப் படுத்துவதை விடுத்து வெறுமே சமச்சீர்க் கல்வியை நடைமுறைப் படுத்துவதில் எந்தப் பயனும் இல்லை. எனினும் , இந்த சமச்சீர்க் கல்வி என்பது அனைவருக்கும் ஒரே கல்வி என்ற கட்டடத்துக்கு இடப்பட்ட அஸ்திவாரம் என்று கொள்ளலாம். அப்படிக் கொண்டால் அந்த அஸ்திவாரத்தை பலமாக்குவது அரசின் கையிலும் ஆசிரியர்கள் கையிலும் தான் உள்ளது . அவர்கள் அதைச் செய்வார்களா? இதற்கான விடை காலத்தின் கையில் தான் இருக்கிறது.
மிக சரியாக சொன்னீர்கள். உண்மையிலேயே சமச்சீர் கல்விதானா என்று பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.
Very nice essay. The truth in it stung me like an arrow.