அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 52

எல்ஸாஸ் சமூக அருங்காட்சியகம், ஸ்ட்ராஸ்போர்க், பிரான்சு

முனைவர்.சுபாஷிணி

ஐரோப்பாவில் அதன் அதிகாரப்பூர்வ பார்லிமண்ட் இருக்கின்ற நகரமாக விளங்குவது பிரான்சில் வடகிழக்கு நகரங்களில் ஒன்றான ஸ்ட்ராஸ்போர்க். இந்த ஐரோப்பிய பார்லிமெண்ட் ஒவ்வொரு ஆண்டும் 12 முறை கூடும் போதும் நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் ஐரோப்பிய நாடாளுமன்ற செயற்பாடுகள் பற்றிய பல்வேறு விடயங்கள் இங்கு அலசி ஆராயப்படுவது வழக்கம். பெல்ஜியம் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் இருக்கும் மற்றொரு ஐரோப்பிய பார்லிமெண்டின் பகுதியை விட முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக இந்த பார்லிமண்ட் அமைந்துள்ளது. இங்குதான் ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலும் நடத்தப்படுகின்றது என்பது இதன் சிறப்பை மேலும் புரிந்து கொள்ள உதவும்.

2bad3b72-fe7c-4c8c-9775-3a27c5358631
ஐரோப்பிய பார்லிமென்ஸ் – ஸ்ட்ராஸ்போர்க்

ஐரோப்பாவின் அரசியலமைப்பிற்கு மையப் புள்ளியாக விளங்கும் இந்த மாநிலம் வரலாற்று பழமைக்குச் சிறிதும் குறைந்ததல்ல. ஏறக்குறை கி.மு.1500 ஆண்டு வாக்கிலேயே செல்ட்டிக் இனக்குழுவினர் இங்கு இருந்தமைக்குச் சான்றாக இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புக்கள் கிடைத்திருக்கின்றன. அதன் பிறகான ரோமானியப் பேரரசின் தாக்கம் இப்பகுதியில் அமைந்ததற்குச் சான்றாக இன்றளவும் காணப்படும் சுவர்களின் எச்சங்கள், அகழ்வாய்வுச் சான்றுகள், ரோமானிய தெய்வங்களின் சிலைகள், போர் கருவிகள் ஆகியனவை அமைந்திருக்கின்றன. ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இப்பகுதி ஜெர்மானியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட இடமாக அமைந்திருந்தது.

இப்பகுதியில் புழக்கத்தில் இருந்த மொழி அல்சேட்டியன் என அழைக்கப்படுவது. இது இன்றைய ஜெர்மன், அதாவது டோய்ச் மொழியின் ஒரு வகை பேச்சு மொழி. இந்த மொழியை விட தற்சமயம் இங்கு பிரஞ்சு மொழியே விரிவாகப் பேசப்படுகின்றது.இதற்கு முக்கியக் காரணம், இப்பகுதி பிரான்சு நாட்டின் எல்லைக்குள் தற்சமயம் இருப்பதேயாகும். ஆயினும் எனது நேரடி அனுபவத்தில் காணும் போது இங்குள்ள மக்கள் ப்ரென்சு மொழியும் டோய்ச் மொழியும் என இரு மொழி தெரிந்தவர்களாகப், பேசக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

a1
ரைன் நதியால் சூழப்பட்ட ஸ்ட்ராஸ்பொர்க் நகரம்

பிரான்சு நாட்டின் எல்லைக்குள் இருந்தாலும் எல்சாஸ் என அழைக்கப்படும் இப்பகுதி முழுமையாக பிரென்சு பண்பாடு மற்றும் கலாச்சரத்தை உள்வாங்கிய பகுதியாக இல்லை. அதே போல, ஜெர்மனியின் பல நூற்றாண்டு தாக்கம் இப்பகுதியில் இருந்தாலும் ஜெர்மானிய கலாச்சரமோ பண்பாடோ இங்கு நிலைபெற்றது என்றும் சொல்வதற்கில்லை. இப்பகுதி எல்சாஸ் என்ற தனித்துவத்துடன், இரண்டு பெரு நாடுகளுக்கிடையில் தனித் தீவாக விளங்குவதே இதன் தனிச் சிறப்பாக அமைகின்றது.

இப்பகுதியின் மாறுபட்ட தன்மை மட்டுமே இதனைத் தனித் தீவாக அமைத்திருப்பதாக நினைத்துவிட வேண்டாம். எல்ஸாஸ் பகுதியின் முக்கிய நகரான ஸ்ட்ராஸ்பொர்க் நகரமே ரைன் நதி சூழப்பட்டு ஒரு தீவாகவே அமைந்திருக்கின்றது. இந்த நில அமைப்பு இந்த நகரத்தின் எழிலுக்கு ஒரு கூடுதல் தனிச்சிறப்பாக அமைந்திருக்கின்றது.

எல்ஸாஸ் எனப்படும் பகுதி Alsace-Champagne-Ardenne-Lorraine என்ற மாவட்டப்பகுதியில் அமைந்திருக்கின்றது. எல்ஸாஸ் மக்களின் மொழி எப்படி தனித்துவம் வாய்ந்ததோ அதே போல இம்மக்களின் உடை யலங்காரம் வித்தியாசமானது. வீட்டு உபயோகப் பொருட்கள், சமையல் கருவிகள் விவசாயக் கருவிகள் ஆகீயனவும் இப்பகுதிக்குண்டான தனிச்சிறப்பைப் பிரதிபலிக்கும் வகையிலேயே இருந்திருக்கின்றன.

a2

​காளானும், சீஸும் கலந்த ஃப்ளாம்கூகன்

எல்ஸாஸ் பகுதிக்கான பிரத்தியேக உணவாக அமைவது ஃப்ளாம்கூகன். இது பீஸா போன்ற வகையில் அமைந்த ஒரு உணவு. ஆனால் மிகத்தட்டையாக மெலிதாக இருக்கும். இப்பகுதியில் மட்டுமன்றி ஜெர்மனியின் மேற்கு மானிலங்கள் பலவற்றில் பிரபலமாகிவிட்ட உணவு இது. அதிலும் குறிப்பாக இலையுதிர் காலத்து சாலை நிகழ்வுகளில் கிடைக்கக்கூடிய உணவு வகைகளில் இது கட்டாயம் கிடைக்கும்.

a3

எல்ஸாஸ் பற்றிய இவ்வகையான பல விசயங்களை உள்ளடக்கிய ஒரு தகவல் கூடமே இன்றைய பதிவில் இடம்பெறும் இந்த அருங்காட்சிகம். எல்ஸாஸ் அருங்காட்சியகம் என அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் ஸ்ட்ராஸ்புர்க் நகரின் மையப் பகுதியின் மையச் சாலையிலேயே அமைந்திருக்கின்றது. 1902ம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் உருபெற்றது. இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கும் கட்டிடமும் எல்சாஸ் கட்டிட அமைப்பில் அமைந்த ஒரு கட்டிடமேயாகும்.

அருங்காட்சிகத்தின் உள்ளே சென்று காண்போமே..!

தொடரும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.