இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (182)
– சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்.
வருடம் பிறந்து மாதம் ஒன்றும் ஓடி மறைந்து விட்டது. ஒவ்வொரு வருட ஆரம்பத்தையும் ஒவ்வொரு எதிர்பார்ப்புகளோடு ஆரம்பிப்பதுதான் மனித வாழ்வின் யதார்த்தமாகிறது.
லண்டன் மாநகரம், ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களில் மிகவும் பிரசித்தி வாய்ந்த மாநகரமாகும், பல நிறுவனங்களின் தலைமை அலுவலகம் லண்டனில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.
இந்த லண்டன் மாநகரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மாபெரும் பணி இம்மாநகர மேயரைச் சார்ந்ததாகும். தற்போது லண்டன் மாநகர மேயராக இருப்பவர் கன்சர்வேடிவ் கட்சியைச் சார்ந்த போரிஸ் ஜான்சன் (Boris Johnson) ஆவார். இவர் கடந்த இரண்டுமுறை லண்டன் மாநகர வாக்காளர்களினால் மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.
லண்டன் மாநகரத் தேர்தல் விதிகளுக்கமைய இருமுறைக்கு மேல் ஒருவர் மேயராகப் பதவி வகிக்க முடியாத காரணத்தினால் வருகின்ற மேமாதம் நடைபெற உள்ள தேர்தலில் தற்போதைய மேயர் போட்டியிட மாட்டார். லண்டன் மாநகரம் இங்கிலாந்து எனும் ஆங்கில நாட்டின் தலைநகரமாகும். ஆனால் மிகவும் வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் இங்கிலாந்தின் தலைநகரில் இங்கிலாந்து நாட்டின் தொன்மைக் குடிமக்களான ஆங்கிலேயர்கள் சிறுபான்மையினராக இருப்பதுவே !
ஆமாம் லண்டன் மாநகரில் உள்ள ஜனத்தொகையில் ஆங்கிலேயரை விட வந்தேறிய குடிகளான பிறநாடுகளின் வம்சாவழியினரே அதிக அளவில் இருக்கின்றார்கள். இந்த ஜனத்தொகை வேறுபாட்டின் தாக்கம் லண்டன் மாநகர மேயர் தேர்தலில் எதிரொலிப்பது தவிர்க்க முடியாத ஒன்றெனலாம்.
பொதுக் கருத்துக் கணிப்புகளின் படி இம்மாநகர மேயர் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி அல்லது எதிர்க்கட்சியான லேபர் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரே மேயராகத் தெரிவு செய்யப்படும் சாத்தியக்கூறு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கன்சர்வேடிவ் கட்சியின் சார்பாக கிங்ஸ்டன் பகுதி பாராளுமன்ற உறுப்பினரான ஸாக் கோல்ட்ஸ்மித் (Zac Goldsmith) என்பவரும் , லேபர் கட்சியின் சார்பாக சாடிக் கான் (Sadiq Khan) என்பவரும் போட்டியிடுகிறார்கள். இவர்களைத் தவிர மற்றும் பல வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ள போதிலும் இவர்கள் இருவரில் ஒருவரே மேயராவது சாத்தியம் எனக் கருதப்படுகிறது.
இதிலொரு விசித்திரமான விடயத்தைக் குறிப்பிடுவதற்காகவே நான் குறிப்பாக இம்மடலை வரைகிறேன். நான் சமீபத்தில் இந்தியா சென்று வந்தது பற்றிக் கடந்த மடலில் குறிப்பிட்டிருந்தேன்.
டிசம்பர் மாதம் 26ம் திகதி சென்னை சென்ற நான் ஜனவரி 17ம் திகதி லண்டன் திரும்பினேன். இதிலே ஆச்சரியம் என்னவென்றால் நான் செல்லும்போது கண்ட இங்கிலாந்து பிரதமருக்கும் திரும்பி வந்த பின்பு காணும் இங்கிலாந்துப் பிரதமருக்கும் ஒரு பாரிய வித்தியாசமிருப்பது போல எனக்குத் தென்படுவதே !
அது என்ன என்கிறீர்களா ?
இமிக்ரெண்ட்ஸ் எனப்படும் வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்து குடியேறியவர்கள் பற்றிய இவரது கண்ணோட்டமே ! இரண்டு நாட்களின் முன்னால் பிரதமர் ஒரு பாரிய பிரகடனம் செய்திருந்தார். அவரின் கூற்றுப்படி இங்கிலாந்து அரசாங்கமும் மக்களும் சிறுபான்மை மக்களைப் பாரிய அளவில் கைவிட்டு விட்டோம் என்பதுவே அவரது பேச்சின் சாரம்.
அதாவது கறுப்பு, ஆசிய, வேற்றின மக்கள் தாங்கள் இந்நாட்டில் வாழும் விகிதாசாரத்தின்படி அரச பதவிகளிலோ அல்லது தனியார் கூட்டுஸ்தாபனங்களின் தலைமைப் பதவிகளிலோ காணப்படவில்லை. இது இங்கிலாந்து நாட்டு அரசினதும், மக்களினதும் தவறான கொள்கை நடைமுறைத்தப்படுத்தலினால் நிகழ்ந்துள்ளது என்பதையே அவர் குறிப்பிட்டார்,
ஒரு மாதத்திற்கு முன்னால் பிரதமர் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டிருப்பார் என்று நான் கனவில் கூடக் கருதியிருக்க மாட்டேன். அப்படியாயின் ஏன் பிரதமரின் போக்கில் இந்தத் திடீர் மாற்றம் ? இங்கேதான் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் நான் ஏற்படுத்தும் தொடர்பு. லண்டன் மேயர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு லேபர் கட்சியின் வேட்பாளராகிய சாடிக் கான் எனும் இஸ்லாமியருக்கு உள்ளது எனும் கருத்து நிலவுகிறது. இந்த வெற்றி வாய்ப்பை நல்கப் போகிறவர்கள் யார் ?
லண்டன் மாநகரில் பெரும்பான்மையாக வாழும் வேற்றினத்தவர்கள் அல்லவா ? அப்படியாயின் கன்சர்வேடிவ் கட்சி தொடர்ந்தும் மேயர் பதவியைத் தம்முடன் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் இவ்வெற்றின் வாக்காளர்களின் ஆதரவைப் பெற வேண்டியது அவசியமல்லவா ?
இங்கேதான் பிறக்கிறது பிரதமரின் புதுக் கொள்கைத் திருப்பம். ஆமாம் வேற்றினத்தவர் என்று கருதப்படும் பெரும்பான்மை வாக்காளர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தால்தான் தம்முடைய சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெறும் சந்தர்ப்பம் பெருகும் எனும் காரணமே பிரதமரின் இத்தகைய திடீர் கருத்துப்பதிவுக்கு வழி சமைத்ததோ எனும் எண்ணம் எழுவது இயற்கைதானே !
அடுத்தொரு மிகப்பாரிய பிரச்சனையைப் பிரதமர் எதிர்கொள்ள வேண்டிய சூழல், அது என்ன அப்படியான சூழல் ? என்றுதானே கேட்கிறீர்கள்.
அதுதான் மிகப்பூதாகரமான ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருப்பதா? இல்லையா? என்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு. பிரதமரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான தான் பிரதமராகும் பட்சத்தில் இத்தகைய ஒரு சர்வஜன வாக்கெடுப்பை 2017ம் ஆண்டு நிறைவடைவதற்கு நடத்துவது எனும் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குரிய காலக்கெடு நெருங்கியவண்ணம் இருக்கிறது.
பிரதமரின் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியினுள்ளேயே பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனும் கோஷத்தை முன்வைக்கும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் எனும் பிரதமரின் வாதத்திற்கு ஆதரவாக கன்சர்வேடிவ் கட்சியைத் தவிர்ந்தோர்களிடமும் ஆதரவைக் கோர வேண்டிய காலக்கட்டாயம்.
தனக்கு ஆதரவாக இங்கிலாந்தின் சிறுபான்மைச் சமூகத்தினரது வாக்கினை பெற்றுக் கொள்வதற்கான ஒரு புத்திசாதுர்யமிக்க கொள்கை மாற்றமே பிரதமரின் சமீபத்திய நடவடிக்கை என்று கூட எண்ணத் தோன்றுகிறது. மனதின் மற்றொரு பக்கத்தில் 2020இல் நடக்கும் தேர்தலில் தான் பிரதமராக வேண்டி நிற்க மாட்டேன் என்று பிரகடனம் செய்த நிலையில் ஒருவேளை தன்னுடைய ஆட்சிக்காலத்தை நினைவுகூரும் வகையில் தான் ஏதாவது ஒரு அதிரடி அரசியல் செய்ய வேண்டும் எனும் எண்ணத்தில் தார்மீகமாக அத்தகைய ஒரு நிலைப்பாட்டை அவர் எடுத்திருக்கலாம் என்று எண்ணத் தலைப்படுகிறது.
எதி எப்படி இருப்பினும் பிரதமரின் இடத்துக்கு வர முயற்சிக்கும் ஏனைய கன்சர்வேடிவ் கட்சி முன்னணி அரசியல்வாதிகள் பிரதமர் அவர்கள் முன்னால் தூக்கிப் போட்ட சவாலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்ப்போமே !
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan