மதுமிதா

12576240_949330908454442_569273548_n

பார்க்கும்போதே மனதை உருக்கும் படியான காட்சியாக ஷாமினி தான் கண்டதை ஒளிக்கண்ணில் பதிவு செய்த இந்தப் படத்தை சாந்தி போட்டிக்குத் தேர்ந்து எடுத்திருக்கிறார். நான்கு கவிதைகள் வந்திருக்கின்றன. குழந்தையின் பாதுகாப்பு கருதி இடப்பட்ட ப்ளாஸ்டிக் கயிறுடன் குழந்தையின் கண்களும் உருவமும் நம்மைக் கட்டிப் போடுகின்றன. நன்றி பவளா.

சிறகற்ற பட்டாம் பூச்சி

ஒரு செங்கல் சுமப்பவளாக
இருக்கலாம்….
ஒரு யாருமற்ற தேவதை
குழந்தையோடு
அனாதையாகி இருக்கலாம்..
எவனாவது காதல் சொல்லி
வயிறு நிரப்பி இருக்கலாம்…
மானம் போன பிறகு
நகரம் நரகமே ஆனாலும்
சாலைவாசியாய் மாறி இருக்கலாம்…
உடல் விற்பவளாய் விரல்கள்
மட்டும்…… கயிறோடு
பிணைத்திருக்கலாம்…
பசி மட்டுமே பீறிட்டுக்
கிடக்கும் இந்த கண்களுக்கு
அவள் தேடும் வயிறு
கயிறுகளால இறுக கட்டப்
பட்டிருக்கலாம்…
ஒரு கனவற்ற காட்டுக்குள்
கயிறு கொண்டு
அவள் அடைத்தே
வைத்திருக்கலாம்…
இந்த பட்டாம்பூச்சியையும்
இந்த உலகம் பியித்து
எறிந்துவிடுமோ என்பது
அவளின் தத்துவமாக கூட
இருக்கலாம்..

கவிஜி

சிறந்த கற்பனா சிந்தனை. பெண்மையைப் போற்றி யதார்த்தமான வலியினைப் பதிவு செய்திருக்கிறார் கவிஜி கனிவான மனதுடன்.

கட்டு…

கல்யாணமெனும்
கால்கட்டு போட்டபின்னே
கைக்கு எட்டியது குழந்தை..

பிள்ளை வயிறு காயாதிருக்க,
வாயைக் கட்டிய
வயிற்றைக் கட்டிய உழைப்பு
பெற்றோருக்கு..

வாழ்வைக் கட்டிய வறுமையிலும்
வளர்க்கின்றனர் பிள்ளையை,
வறுமையைக் காட்டாமலே..

வாலைக் காட்டுகிறது அது
இவர்களை
வேலைசெய்ய விடாமலே..

வறுமைக்கட்டை அவிழ்க்கமுடியாமல்
பாசக்கட்டை மறைத்து
பெற்றோர் போட்டதுதான்
இந்தப்
பாசக் கயிறு…!

-செண்பக ஜெகதீசன்…

கயிறிலும் கட்டிலும் சிறப்பான வார்த்தை விளையாட்டை நிகழ்த்தி இருக்கிறார் செண்பக ஜெகதீசன்

இடை விலங்கு.

செல்வந்தர் பிள்ளைகளை மக்கள் கூட்டத்தில்
செல்வாக்காய் தோற்பட்டியில் இணைத்துக் கையில்
நாகரீகமாய் பிணைப்பார் நளினமான செயல்
நாசுக்கான பூட்டாக விலங்கு கையில்
கைக்குழந்தையானால் ஏணை கட்டி யருகில்
மைவிழி கரைய இணைவார் பணியில்.
நடமாடும் பிள்ளையை என்ன செய்வார்!
வடம் கொண்டு இடை பிணைத்தார்.

தடமின்றிப் போகாது கண்காணிப்பில் பிள்ளையது
முடமாகாது வாழ்விற்கு வேதனம் தேடுவது.
கடப்பாட்டாளர் ஏழைகளின் எளிமை வழி.
நடமாடல், விளையாடலுடனேதும் கடிக்கவும் வழி.
பாசத்தின் பிணைப்பு திருஷ்டிப் பொட்டில்
பேச வழியற்ற பேந்தும் விழியில்.
ஆசுடை தாக்கங்கள் பிள்ளையெதிர் காலத்திலே
மாசுடை சமூகப் பிழையாலும் இந்நிலையே!

வரிகள் வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
13-2-2016.

குழந்தையின் உருவை எழுத்தில் இன்னுமொருமுறை காட்சிப்படுத்துகிறார். மேட்டுக்குடிக்கும் ஏழ்மைக்குமான வேறுபாட்டைத் துல்லியமாகக் காட்டுகிறார் வேதா இலங்காதிலகம்.

கலிகாலம்

சுட்டிப்பெண்ணே உன்
சுட்டித்தனத்திற்குப் பயந்துதான்
கட்டிப்போட்டிருக்கிறாள் அன்னை
கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்வரைதான்
கட்டளைகள் செலுத்தமுடியும்
இந்த நிகழ்வை பார்க்கும்போது
அந்த யசோதா வீதியிலுள்ளவீடுகளில்
வெண்ணை திருடிய மாயக்
கண்ணனை உரலில் கட்டிப்போட்டதுதான்
நினைவுக்குவருகிறது ..
தாய் கண்முன்னே காவல்இருக்கும் வரை
பெண்ணுக்கு பாதுகாப்பு
மனிதனின் காமம்
மரணகுழி வெட்டும் சோகம்
மலராத மொட்டுகளைக் கூட
மதிகெட்டு கசக்கக் கூடாதென்றே
அழுத்தும் பணியிலும்
துரத்தும் கடமையிலும்
கண்முன்னேயே கட்டிப்போட்டிருக்கிறாள்
என்ன செய்வது கலிகாலம்
பெண் பெயரில் இருப்பதால்
நதிகள் கூட பாழ்படுத்தப்ப்டும் நிலையில்
நீயெங்கே நான் எங்கே?

சரஸ்வதி ராஜேந்திரன்

உவமையும் ஒப்புமையும் அழகு. அக்கறையும் தாய்மை உணர்வும் இயலாமையுடன் சமூக அவலத்தைக் காட்டும் பாங்கும் நன்று சரஸ்வதி ராஜேந்திரன்.

கவிஜி முதல் இடத்தைப் பெறுகிறார்.

இன்னும் எழுத வேண்டிய படைப்பூக்கத்தை இந்தப் படத்தின் குழந்தை மனதுக்குள் நின்றபடி எழுப்பியபடியே இருக்கிறார்.

அன்புடன்
மதுமிதா

15.02.2016

மதுமிதாவின் குதிரை கவிதை!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 50 இன் முடிவுகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *