ஸ்ரீஜா வெங்கடேஷ்

நான் இந்த ஜவுளிக்கடைக்கு வந்து இன்னும் இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. என்னை, சுடிதார் செக்க்ஷனில் மிகப் பிரதானமான இடத்தில் கண்ணாடி கேசினுள் பின் செய்து வைத்துள்ளார்கள். நான் யார் என்று இன்னும் புரியாதவர்களுக்கு,… நான் ஒரு அழகான சுடிதார். அருமையான நீல வண்ணத்தில் தங்க நிறப் பூக்கள் வேலைப் பாடுகள் செய்து மிக உன்னதமான துணியில் தயாரிக்கப் பட்டவள் நான்.

‘நான் ஏன் ஒரு ஆணாக இருக்கக் கூடாது?!!..’ என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு. ஆனால், சுடிதார் என்பது பெண்கள் அணியும் ஆடை; நான் ஆண் என்றால் வீண் வாக்குவாதங்கள் , சச்சரவுகள் தொடங்கும். பெண்களின் கற்பு பற்றிக் கேள்வி வரும். அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் நான் பெண்ணென்று ஆகி விட்டேன்.

என்னை யார் வேண்டுமானாலும் வந்து வாங்க முடியாது. நான் இருக்கும் கடை மிகப் பெரியது. எப்போதும் குளுகுளுவென இருக்கும். எங்கள் கடையில் இருக்கும் ஆடைகளின் ஆரம்ப விலையே, குறைந்தது இரண்டாயிரம் ரூபாய். அதிலும் என் விலையோ ஏழாயிரம் ரூபாய். சாதாரணமானவர்களால் வாங்க முடியுமா? எனக்கு இதெல்லாம் பெருமையாக இருந்தது. பின்னே சும்மாவா?!!.. ஒரு பணக்கார அழகு தேவதையின் உடமையாவது என்பது என்ன சாதாரண விஷயமா? என்னைப் பராமரிக்கவே செலவு செய்ய வேண்டுமே? என்னை உரிமையாக்கிக் கொள்ளப் போகும் பெண்ணுக்காக நான் காத்திருந்தேன்.

அந்த நேரங்களில் நான் சும்மாயில்லை. கடைக்கு வந்து போகும் பெண்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன். கூந்தல் புரள அதை ஸ்டைலாக பின்னுக்குத்தள்ளும் யுவதிகள் , உடைக்கு மேட்சாக நகை அணியும் கன்னிகள் , எந்த நேரத்திலும் தன் லிப்ஸ்டிக் கலையாமல் பார்த்துக் கொள்ளும் அலங்காரப் ப்ரியாக்கள் என்று பலர் என்னைப் பார்க்க வந்தனர். ஆனால் ஏனோ!!.. யாரும் என்னை வாங்கத் துணியவில்லை. முதலில் எனக்கு ஏமாற்றமாக இருந்தாலும் , இப்படிக் கடையில் இருந்து வேடிக்கை பார்க்க முடிந்ததை எண்ணி சந்தோஷப் பட்டேன்.

நான்கைந்து தினங்கள் சென்றன. இப்போது என் கவனம் பார்வையாளர்களிடமிருந்து கடையில் வேலை செய்யும் பெண்கள் மீது தாவியது. அவர்கள் தான் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்? குளுகுளு கடை , பேசிச் சிரிக்கத் தோழிகள் ,  மாதம் பிறந்தால் கணிசமான சம்பளம் , நடுவே போனஸ் வேறு. கண்டிப்பாக அவர்கள் சந்தோஷமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அப்படி இல்லை என்பது எனக்கு அவர்கள் பேச்சிலிருந்து புரிந்தது.

ஒவ்வொருத்திக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை. மலர்விழிக்கு, தன் காதலன் தன்னை உண்மையாகவே காதலிக்கிறானா? இல்லையா? என்ற சந்தேகம். மங்கைக்கு வாடிக்கையாளர்கள் காட்டும் சிடுசிடுப்பைக் கண்டு எரிச்சல். பாவம் விஜிக்கோ! நின்று நின்று கால்களின் நரம்புகள் வீங்கிப்போய் வலி வேதனை. இப்படி பல பிரச்சனைகளுக்கு நடுவே அவர்கள் இருந்தாலும்,.. எல்லோருக்கும் பொதுவான பிரச்சனை பணத்தேவை. வேலையை விட முடியாத சூழ்நிலை என்பதைப் புரிந்து கொண்டேன்.

நான் இருக்கும் செக்க்ஷனுக்கு பொறுப்பு ராணி. மிகவும் அடக்கமான அமைதியான பெண். அவளுக்கு என் மேல், நான் வந்த நாள் முதல் ஒரு கண். அக்கம் பக்கம் யாரும் இல்லாத நேரத்தில் என்னைத் தொட்டுத் தடவிப் பார்ப்பாள். ஆரம்பத்திலெல்லாம் , இது என்ன இந்தப் பெண்ணுக்குப் பேராசை? இவளெல்லாம் என்னை வாங்க முடியுமா? என்று இளக்காரமாக நினைத்தேன். ஆனால் போகப் போக என் மீதான அவள் ஆசை என்னை மாற்றி யோசிக்க வைத்தது. ‘வேறு யாராவது பணக்காரப் பெண்ணின் உடைமையாகி பத்தோடு பதினொன்றாக இருப்பதை விட இந்தப் பெண்ணின் உரிமையானால் என் மீதே இவள் முழுக்கவனமும் இருக்கும் அல்லவா?..’ என்று எண்ணமிட்டேன்.

நான் வந்து ஒரு வாரம் இருக்கும். ஏதோ ஒரு பெரிய இடத்துப் பெண் போலிருக்கிறது!!.. எங்கள் கடைக்கு வந்தாள். பெரிய இடத்துப் பெண் என்று ஏன் சொல்கிறேன் என்றால் கடையின் முதலாளியே வந்து வரவேற்று அவளுக்கு குளிர் பானம் வழங்கி உபசரித்தார். அந்தப் பெண்ணின் பிறந்த நாள் வருகிறது போலும். அதற்கு உடை வாங்க வந்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். எனக்கு அவள் என்னை வாங்க வேண்டும் போலவும் இருந்தது , வேண்டாம் போலவும் இருந்தது.

பணத்தை மூட்டையில் கட்டி கொண்டு வந்திருந்தாளோ என்னவோ?!!.. தெரியவில்லை..,  கண்ணில் கண்ட உடைகளையெல்லாம் வாங்கினாள். அவள் பார்வை இரு வினாடிகள் என் மேல் தேங்கியது . எனக்கு மூச்சு முட்டியது. நான் பயந்தது நடந்து விட்டது.  என்னைத் தேர்ந்தெடுத்தே விட்டாள். உடன் வந்த அவள் தோழி “நீ சுடிதாரே போட மாட்டியே? எப்பவும் ஜீன்ஸ் டாப்ஸ் தானே போடுவே ஏன் சுடிதார் வாங்கறே? ” என்று கேட்டாள்.

அதற்கு அந்தப் பெண் “இந்தக் கலரும் டிசைனும் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு. எங்காவது கோவிலுக்குப் போகும் போது போட்டுட்டுப் போகலாம், அதான் வாங்குறேன்” என்றாள். இந்த உரையாடல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் நடந்தது என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. எனக்கு ஆங்கிலம் புரியக் கூடாது என்று எதுவும் நியதியா என்ன?..

என் விதி எனக்குத் தெரிந்து போயிற்று. என்னை அவ்வளவு விலை கொடுத்து வாங்கிப்போய் , மடிப்புக்கூட பிரிக்காமல் அப்படியே போட்டு வைக்கப் போகிறாள். என்னை அணிந்து எங்கும் பெருமையோடு செல்லப் போவதில்லை. இந்த விஷயம் என் ஆத்திரத்தைத் தூண்டியது. இப்படி அவள் பீரோவில் மக்கி மறையவா நான் இத்தனை வண்ணமயமாகத் தயாரிக்கப் பட்டேன். யாராவது என்னைத் தூக்கி ராணியிடம் கொடுங்களேன் என்று கத்த எண்ணினேன். நான் கத்தினாலும் மற்றவர்களுக்கு என்ன கேட்கவா போகிறது? பார்சல் செய்யும் போது மௌனமாக இருந்தேன்.

ராணிக்கு என்னை விற்பதில் சிறிதும் இஷ்டமில்லை தான். அவளால் என்னை வாங்க முடியாவிட்டாலும், தினம் என்னைத் தொட்டுத் தடவிப்பார்க்கலாம் அல்லவா? இந்த விஷயத்தில் என் நிலையும்.. அவள் நிலையும் ஒன்று தான். என்ன நான் சொன்னால் மற்றவர்களுக்குக் கேட்காது , ராணி சொன்னால் மற்றவர்கள் கேட்க மாட்டார்கள். வித்தியாசம் அவ்வளவு தான். ராணியும் அமைதியாகவே என்னை வழியனுப்பி வைத்தாள்.

என் புது வீடு வந்து சேர்ந்து இன்றோடு ஒரு மாதம் ஆகி விட்டது. இது வரை அந்தப் பெண் என்னை உடுத்தவேயில்லை. எனக்குக் கோபமும் , அழுகையும் ஒன்றை ஒன்று மிஞ்சிக் கொண்டு வந்தது. ‘நான் கொண்டிருந்த பெருமை என்ன? இப்போது நான் இருக்கும் நிலை என்ன? தலை விதி என்பது இது தானோ?!!’ என்றெல்லாம் எண்ணிக் கொண்டேன். மேலும் இரண்டு மாதங்கள் ஓடின. அவள் என்னைத் தொடவேயில்லை.

ஒரு நாள் எதையோ தேடுகிறேன் பேர்வழி என்று பீரோவைக் குடைந்து கொண்டிருந்தாள். ‘ஒரு வேளை என்னைத்தான் தேடுகிறாளோ!!..’வென்று நான் முன்னால் சென்று அவள் கண்ணில் பட்டுக் கொண்டேயிருந்தேன். என்னையே திரும்பத்திரும்பப் பார்த்ததில் அவளுக்கு எரிச்சல் வந்து விட்டது போலும். ஏதோ சாப்பிட்டுக் கொண்டே தேடிக்கொண்டிருந்தவள் கவனக் குறைவாக உணவுப்பொருளை என் மேல் தேய்த்து விட்டாள். என் அழகே போய் விட்டது… கறை வேறு. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குரோதத்தொடு அவளையே வெறித்தேன்.

“ஐயையோ கறையாயிடுச்சே? இதை நான் இனிமே எப்படி யூஸ் பண்ணுவேன்! எங்கியாவது கண்காணாம இருக்கட்டும்” என்று சொல்லியபடி என்னை அடி ஆழத்தில் தள்ளி மற்ற உடைகளைக் கொண்டு என்னைப் புதைத்து விட்டாள். எனக்கு அந்தக் கறை மீது ஆத்திரமான ஆத்திரம். நான் நன்றாக இருந்தாலாவது, என்றாவது ஒரு நாள் என்னை அணிவாள் என்று நம்பிக்கையோடு இருக்கலாம். இப்போது இந்தக் கறை இருக்கும்போது அவள் என்னை ஏறெடுத்தும் பார்ப்பாளா? குமுறிக்குமுறி அழுதேன். ராணியிடம் இருந்திருந்தால் அவள் என்னை எப்படியெல்லாம் அணிந்து அழகு பார்த்திருப்பாள்? எப்படியெல்லாம் பாதுகாத்திருப்பாள். ஹூம்! எனக்கு மயக்கமாக வந்தது.

வெளிக்காற்று பட்டு நான் மீண்டும் மயக்கம் தெளிந்த போது, நான் அவள் கையில் இருந்தேன். ‘என்னையா எடுத்திருக்கிறாள்?!!.. இருக்காதே?…’ என்று எண்ணமிட்டபடி சுற்றுமுற்றும் பார்த்தேன். என் எதிரில், பழைய கிழிந்த உடைகளையே அணிந்து பழக்கப்பட்ட வேலைக்காரப் பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். என்னை வாங்கியவள் சொல்லிக் கொண்டிருந்தாள் “இந்தா செல்வி , இது புது சுடிதார் தான் , ஆனா தெரியாமே கறையாக்கிட்டேன். ஒரு தடவை கூடப் போடவேயில்லை. நான் சும்மா தான் போட்டு வெச்சுருக்கேன். நீ இதைத் தோய்ச்சு உபயோகப் படுத்துவேன்னா வெச்சுக்கோ , இல்லேன்னா எங்கியாவது தூக்கிப் போடு. அம்மா இதப் பாத்தா, என்னைத் திட்டுவாங்க” என்றாள்.

செல்வி என்று அழைக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கண்கள்,.. என்னைப் பார்த்ததும் ஆசையில் பளபளத்தது. முகத்தில் நம்ப முடியாத ஆச்சரியம் , கூடவே சொல்லொணா மகிழ்ச்சி. என்னை வாங்கியவள் என்னை செல்வியிடம் ஒப்படைத்து விட்டாள். நான் உண்மையிலேயே அவள் உடைமையாகி விட்டேனா என்று உறுதி செய்துகொள்வதற்காகவோ என்னவோ!!.. என்னை அழுத்திப் பிடித்தாள் செல்வி.

கனவில் நடப்பவள் போல, என்னை வாங்கிக் கொண்டு தன் இடத்திற்கு வந்தாள். இரு கைகளாலும் என்னை அணைத்துக் கொஞ்சி முத்தமிட்டாள். என் மேல் இருந்த கறைக்குத்தான் அதிக முத்தங்கள் கிடைத்தன. “இந்தக் கறை இல்லேன்னா , இந்த சுடிதார் எனக்குக் கெடச்சிருக்குமா? ” என்று சொல்லியபடி கறையை மீண்டும் மீண்டும் முத்தமிட்டாள்.

இப்போது என்னை நினைத்து மட்டுமல்ல,.. என் மேல் இருக்கும் கறையை நினைத்தும் பெருமையாக இருந்தது. இல்லையா பின்னே?!! நான் சரியான இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டேன் அல்லவா? இதை விட எனக்கு வேறு என்ன வேண்டும்??…

 

படத்துக்கு நன்றி..

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “சுடிதார்..

  1. புதிய பரிமாணத்தில் சுடிதார் ஆடையின் கதை மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  2. சுடிதார் – புதிய கோணத்தில் சிந்தித்து எழுதப்பட்ட ஒரு அருமையான காவியம். எதுவும் யாருக்கும் நிரந்தரமல்ல… ஆசைபடுவதெல்லாம்நமக்கு கிடைத்துவிடுவதுமல்ல.. கிடைத்ததெல்லாம் நம்மிடம் நிலைப்பதுமல்ல. கரை படிந்த உடை என்றாலும் அந்த வேலைக்கார சிறுமிக்கு கிடைத்தும் அந்த சிறுமி பெற்ற சந்தோசத்தை இந்த “நினைவலை” னை படித்ததும் பெற்றேன். வாழ்த்துக்கள். சுடிதார் சுகமாக உள்ளது.

  3. கரை நல்லது! மேடம்! வாழ்த்துக்கள்! அருமையான கதை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *