நாஞ்சில் நாடன் பயணம் – 8

0

தி.சுபாஷிணி

 

இந்த நீண்ட பயணத்தை அனுபவிக்க, வாய்ப்பு அளித்த.. நண்பர்களாகிய உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ஞாநியின் கேணி அளித்த கொடை., சிறந்த எழுத்தாளர்களின் அறிமுகங்கள். அவ்வறிமுகங்களில் நாஞ்சிலாரும் அடக்கம். அவரது உழைப்பும், அதன் வெளிப்பாடான எழுத்தும், என்னை அவர் படைப்புகள் அனைத்தையும் படிக்கத் தூண்டின. சில புத்தகங்கள் நாஞ்சிலார் அளித்தார். பல நூல்கள் நானும் தேடிப்போய் வாங்கிப் படித்தேன். என் வாசிப்பின் உற்சாகத்தைப் பார்த்த தமிழினி வசந்த குமார், நாஞ்சிலாரின் படைப்புகளை அளித்தார். சிலவற்றிற்குப் பணம் வாங்க மறுத்து விட்டார்.

நாஞ்சிலாரின் முதுகலைக் கணிதப் படிப்பு, புள்ளியல் பாடம் உள்ளடக்கியதால், அவரது விஷயங்களைப் படிப்படியாக அடுக்கி வைக்க உதவுகிறது. எதைச் செய்தாலும் நேர்த்தியாகச் செய்தல் அவர் செயலை நேர்த்தியாக்குகிறது. தன் படைப்பில் தான்தான் கதாநாயகன்.. தன்னுணர்வுகள்தான் கதையின் கரு,.. தன்னைத் தாண்டிச் செல்வதை படைப்பின் பலமாய் இருந்து, படைப்புகளின் யதார்த்தத்தை, மென் உணர்வுகளென நிலை நிறுத்துகிறது.

அவர் படித்து முடித்து வேலைக்காக வரும் காலத்தே, வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவு. அப்பொழுது பம்பாய் நகரம்தான் பெரும்பாலும் வேலை வாய்ப்புகளைத் தந்தது. படித்த காலத்தில் அவர் நடந்த நடையும், வேலைக் காலத்தில் அவர் செய்த ஓய்வு ஒழிச்சல் இல்லாத பயணங்களும், இவற்றிற்கு இடையில் சங்க இலக்கியங்களைதைத் தேடிய கடும் முனைப்பும்தான்,.. ஒரு சிறந்த படைப்பாளியாக அவரை நிறுத்தி இருக்கின்றது. வாசகர்களின் மத்தியில், அணுகுவதற்கு எளிய எழுத்தாளராக வாசகர்களாலும்,.. இளம் படைப்பாளர்களால் மதிக்கப்படும் படைப்பாளியாகவும் திகழ்கிறார்.

இவரது வாழ்க்கையின் கணுக்களிடையே நேர்ப்பட்ட நகரங்களின் வாழ்வையும், அதன் ஆதாரமானஉணவு, உறை ஆகிய இரண்டிற்கும் மனிதன் படும் அல்லல்களையும், எல்லாவற்றையும் மீறி, அவரறியாது வாழவைக்கும் உயிரிழையான மனித வாழ்வின் புதிரையும், விடுமுறைகளைச் சேகரம் செய்து கொண்டு பிறந்த இடங்களுக்குச் செல்லும் போது புதிர் விடுபடுதலும், கிராமத்தின், தன் இனத்தின் பண்புகள், எதிரொலிகள், அக்கால சூழ்ச்சிகள், எல்லாம் படைப்புக்காகத் தெறித்து விழுகின்றன.

இவையாவும் சொல்லித் தீராதவை போல்தான் அள்ளி அள்ளி வைக்கிறார். அவ்வாறு அள்ளி வைக்கும் பொழுது வட்டார வழக்கைத் தெரிந்தெடுக்கிறார். தன்னியல்பாக, அதைப் பற்றிப் பேசும் பொழுது, அதற்குரிய காரணங்கள், விளைவுகள், அதனால் ஏற்கும் மனிதமனநிலைகளில் இன்ன பிற,.. என்று அடுத்தடுத்து தகவல்களை அடுக்கி வைப்பார். அவர் ஒரு படைப்பில் ஒரு பிரச்சனையைக் கூறுகிறார். என்றால்,.. அதன் நீள அகல ஆழங்களை நம்மால் அறிய இயலும். இப்படியொரு விளக்கப் படமாய் அப்படைப்பு நம் கண் முன் விரியும்.

இவரது படைப்புகளில் ஒரு தனிப்பகுதி, ‘கும்பமுனி’ கதாபாத்திரத்திற்கு நாம் அளிக்கலாம். ஏறக்குறைய பத்து கதைகள் தேறும் என்று நினைக்கிறேன். கும்பமுனியின் வக்கிரமான உரையாடல்களும்,.. தவசிப் பிள்ளையின் குதர்க்கமான கிண்டலான பதில்களையும், மேலோட்டமாகக் கருதினால் அங்கதத்தில் சேர்த்து விடலாம்,.. மறந்தும் விடலாம். அவையனைத்தும் நாஞ்சிலாரின் கோபங்கள்.

‘‘பாறையில் விழுந்த ஒரு வித்து, தான் வாழ வேண்டி, பிளவைப் பயன்படுத்தி வேரைத் தேடிச் சென்று மரமாய் வளர்ந்து நிற்கின்றது. அப்படிப் பாறையில் மரமாய்த்தான் இவரைப் பார்க்கி்றேன். உழைப்பின் பாடுகள் அனைத்தும் குண்டுமணிகளில் இருப்பதைப் போல்,.. இவர் பாடுகள் எல்லாவற்றையும் கதைக்குள் கொண்டு வந்து விடுகிறார். நவீனத்துவவாதிகளான க.நா.சு., சு.ரா, போன்றவர்களின் மரபை புறக்கணித்தவர்கள். நாஞ்சில் நாடன் மரபை கற்றுக் கொள்கிறார். நவீனத்துவத்தை வேர்களை நோக்கிப் புரிந்து கொள்கிறான். மரபை இவர் புதுமையாக்குகிறார்”

(சு. வேணுகோபால் மற்றும்  உயிர் எழுத்து ஏப்ரல் 2011)

“அப்போ உங்களுக்கு வேலைகள் இருக்கும்’’. என்று நாஞ்சிலார் நாஞ்சில் நாடு பாணியில் விடைபெறுகிறார்.

‘விருதுமேல் விருதுபெறும்

நாஞ்சிலாருக்கு

வெறும் வாசகியின்

வாழ்த்துரை!

நடைபேசியதை கை எழுதியது

படைப்புகள் ஆகின;

பயணங்கள்

சந்தித்தவர்கள்.. கதைமாந்தர்கள்

ஆயினர்

மண்.. தளமாகி, மொழி வழியாகியது

‘நா’ சுவைத்ததைப் பேனா

நாஞ்சிலான் சமையல்

நூலாக்கி வருகிறது  அவர்தம்

வாழ்வியலின் பதிவு

கவிமணிவழி உறவு.

தலைப்பிள்ளை ‘விரதம்’

ஆண்டவன் பிள்ளை ‘இடலாக்குடி இராசா’

அடங்காப்பிள்ளை ஆங்காரம், கிழிசல்

அறத்தின் நாயகன் ‘பிராந்து’

தகப்பன் சாமி ‘யாம் உண்பேம்’

காவற்பிள்ளை ‘தன்ராம் சிங்’

சமரசப்பிள்ளை ‘பிணத்தின் முன் தேவாரம்’

நிர்பந்தப்பிள்ளை ‘சாலப் பரிந்து’

கனிவின் கசிவு ‘வனம்’
நட்பின் மதிப்பு ‘கான்’

நின்ற சொல்லன் ‘காமாட்சி நாதன்’

சுயமரியாதைக்குக் ‘கோம்பை’

சமுதாயத்தின் தன்மானம்

‘ஐயம் இட்டு உண்’

உறவுகளின் உரசல்

‘தலைகீழ் விகிதங்கள்’

என்பிலதனை யதார்த்தம்

எட்டுத்திக்கு வாழ்வின் போராட்டம்

எண்ணல்களில் நீட்சி

சிவ அணைஞ்சான்

கட்டுரையின் நீண்ட முந்தானை

முன்னுரை

கதைக்குத் தடையில்லாத்

தகவல்கள் மற்றும்  பெயர் சூட்டும்

தலைப்புகள் தனிபாணி!

‘சூடிய பூ சூடற்க!’
கம்பனின் கவிக்கு அடிமை

ஆண்டாளுக்குத் தோழமை

சங்கச் செவ்வியச்

சொற்களை ஊடுபாவாய்க்

கையாளும் ஆளுமை ..

மண்ணுளிப் பாம்பிலும்

பச்சை நாயகியிலும்

கவிப்புலமை!

வெளிச்சம் வெள்ளானுக்குக்

கூச்சம்..

திகம்பரம்,.. அவர் மனம்

எளிமை நேர்மை .. அவர் அணி

நிதர்சனம் கும்பமுனி

நனிநாகரிகன் .. நாஞ்சில் மணி

நின்ற சொல்லன்  சுப்பிரமணி

இன்று ,..கலைமாமணி

நாளை,.. ஞானபீடத்தின் அணி.

நான் வாழும் நாளும்

வாழிய பல்லாண்டு‘ பல்லாண்டு!!

பல கோடி நூறாயிரம்! ‘நாஞ்சிலாரிடம் வாழ்த்துகளை அளித்துவிட்டு, அவருடன் பயணிக்க அனுமதி அளித்ததற்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட்டு, இரயில் நிலையத்திலிருந்து வெளிவந்தேன். ஆனால் என் உள்ளம்,.. இந்த பயணத்தில்தான் அலைந்து கொண்டு இருந்தது. அதுதானே இதன் பண்பும் பயனும் !!..

 

பச்சை நாயகி.

 

கவிதைகள் உயிர் எழுத்துப் பதிப்பகம் வெளியீடு. டிசம்பர் 2010  முதல் பதிப்பு – 96 பக்கங்கள் – விலை 60 ரூபாய்.

உயிர் எழுத்து, வார்த்தை, தீராநதி, யுகமாயினி, வடக்கு வாசல், அம்ருதா, மணல் வீடு, சங்கு, ஓம் சக்தி தீபாவளி மலர், ரசனை ஆகிய இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு இது. இந்நூலை, சொல்லொன்றில் கங்கு கனலைச் செய்யும் சௌந்தர் வல்லத்தர அண்ணாவிற்கு சமர்ப்பிக்கிறார்.

‘‘வீடு புறந்தள்ளுகிறது….

நடந்து தீரவில்லை இன்னும்

பார நாள்,.. வாழ்ந்தென்ன செய்ய!!..’’
என்னும் வினாவோடுதான், பச்சை நாயகி தன் பவனியைத் தொடங்குகிறாள்.

பூவுலகத்தைப் புதுக்கி எடுக்கும் ஒப்பற்ற வாரிசுகளை உம்மில் எவள் எழுதக் காத்திருக்கிறீர்’’

என்று அடுத்த வினாவை வைக்கிறார் கவிஞர்.

‘‘தமிழ்

என்பது உயிரும் வளர்க்கும்

ஓங்கியும் எரிக்கும்’’

மொழியின் வெம்மையை நாம் உணரச் செய்கிறார்.
கொய்தல்

முளைப்பதும்

முளையாதிருப்பதும்

அதனதன் முனைப்பு

உதிர்தல் இயல்பு

பறித்தல் என்பது வலியின் ஆட்சி

ஆயுளைத் துணித்தல்

முளைத்தல் விதியெனில்

பூத்தல் பணி செய்து கிடத்தல்

கொய்தல் என்பதோர் கொடுங்கையற்று

இயல்பு மீறாவிடின் அது வன் கொடுமை யென்று கூறுகிறார்.
மக்களாட்சி வதைப்படலம்

மக்களின் ஆட்சி யெனும்

புன்மைத்தாய புகலுள;

இரந்தும் உயிர்வாழும்

ஏழையர் தம் வாக்குள;

செம்மொழித் தமிழெனும்

கிழிந்த செருப்புள்ள;

கொய்த பாவம் தின்றுயர்ந்த

சிந்தையிற் கூனுள குற்ற மகவுள;

நாவெலாம் திகட்டாத தேனுள..

கருத்தெல்லாம் கருநீல விடமுள;

நோயுளவெனில் நோற்ற சுவர்க்கத்துச்

செவிலியர் மனையுள;

கருங்கடல் கடந்த வைப்பின்

கனத்த பணமுள;

வானவர் உலகத்து அமர வாழ்வுள..

கோலக் கடலோர வெண்கலச் சிலையுள;

மாற்று ஏதுள?!!..

‘உள உள’ எனும் ஈற்றுச் சொல்லால், கவிதை மொழி அழகு பெறுகிறது. கம்பனை நினைவு படுத்துகிறார்.

ஒப்பாரி

துவைத்து அலசினாற் போகாது..

அக்கறை

யமன் நிறம்

நட்ட கல் பேசுமோ

நாதன் உலாப் போயபின்

துரோகம் வெல்லற்கரிய

வெங்கொடுமைப் பேராட்சி

உடன் கட்டைத்

துணைத் கொடுமை சிற்றாட்சி

தினப்பாடு

‘சூடிக்’ கொடுத்த சுடர்கொடி ஆரமெனில்

ஒன்றும் கை கரவா

ஆழிமழைக் கண்ணன் என்

ஆவியுள் புக்கு

வேணு இசைத்து

அரளிங்க நர்த்தனமும் ஆடுகிறான்’..

ஆண்டாளின் மொழியை ஸ்வீகரித்த பாங்கு நயமிக்கது.

‘‘இருப்புக்கும் இருப்பற்றுப் போவதற்கான

இடைவெளி தினப்பாடு’’

இது யதார்த்தத்தின் தத்துவத்தின் வெளிப்பாடு.

‘தேடுவதில் தொலைகிறது என் காலம்’ என்னும் கவிதையில், கவிஞர் நாடன்,.. மனிதன் தன் காலத்தின் செலவாதிகளை அடுக்குகிறார்.

‘‘எண் சுவடி வாய்ப்பாடு மனப்பாடம்

சந்தி சாரியை திரிடி விகாரம்

உகாரம் ஆகுபெயன் அளபெடை

பண்புத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை

பிரம்பு வீச்சில்

நல்வழி நானூறு நாலடி

தூது உலா அந்தாதி பகம் பரணி

பள்ளு பிள்ளைத் தமிழ் ஓர்ந்து கற்றதில்

தொலைந்தோர் காலம்

‘‘உண்ண உரையாட உடலுறவு கொள்ள

செலவாதி போகப் பயணம் செய்ய

நுண்மின் இசைக் கருவி எனவரங்கி

தொலைந்தோர் காலம்’’

‘‘வெம்பிய உடலும் கூம்பிய மனமுமாய்

அச்சு முறிந்து ஐயோ வென்றான பின்

தியானம் யோகம் நியமம் குண்டலினித்

தேரோட்ட முனைந்ததேன் காலம்’’.
மனித வாழ்வியல் பயணத்தில் கரைந்த கால நழுவுதலை, அறியாது தொலைத்தமையை, அறியப்படுத்தி நிற்கின்றது இக்கவிதை. மொழி நயம் இயல்பாய் இருந்து விடுகின்றது.

எது கவிதை என்று எடுத்துரைக்கிறார்.

கவிதை என்பது,

சொற்களைத் காட்டி மிரட்டுவதால்

தத்துவச் சாயம் பூசுவதல்ல..

எனினும் கவிதை சீவித்திருந்தது;

நல்ல கவிதை எப்படி நடக்கும்!..

காதலின் கிளர்ச்சி அழகின் ஈர்ப்பு..

பால் குடி மாறா மதலை வாசம்,

தலைகளின் மேநிலை

அன்பின் நீட்சி

இறையின் மாட்சி

அறம்

மறம்

மொழியின் வறுமை கவிதையில் கண்படும்

நேரயின் கூறு இனத்தின் அழிவு.

கவிதை தோற்பது மானுடம் தோற்பது.

‘‘கவிதை தோற்பது மானுடம் தோற்பது’’ உண்மையின் அழகு இவ்வரியில் வழிநின்றது.
‘‘எங்கெனத் தேடுவதுடன்

எழிலார்ந்த பொன்முகத்தை,

காற்று வெளியதனுள், கசன விதைத்து,

பைந்நாகப் பாய் விரித்த பாற்கடலில்?

என்று நடு………சுசீலா போல், குன்னாங் குடி மஸ்தானுக்கு மனோன்மணி போல்,.. கவிஞர் நாஞ்சிலுக்கு ‘‘கானகத்துப் பச்சை நாயகி’’.

2009 இன் தொடக்கக் காலம் மனப் போராட்டம் நிறைந்ததாக இருந்தது. ஈழத்துத் துயரம். கொத்துக் கொத்தான கொலை பாதக மரணங்கள், நாதியற்றுப் போனதோர் இனத்தின் பேரழிவு. தாய் மண்ணின் நயவஞ்சகம் அல்லது நபும்சகம். இரகசியமாய் அழுவதன்றி மார்க்கமென்ன நமக்கு?

நமக்கு என்று அழவே நேரம் போதவில்லை. பிறகெங்கே இனத்துக்கு மாரடிப்பது ‘அம்மாடி’, தாயரே’ என்று?..

‘என் தாயைச் சான்றோயைக்

கொன்றானும் நின்றான் கொலையுண்டு நீ கிடந்தாய்;

வன்தாள் சிலை ஏந்தி வாரிக்கடல் சுமந்து

நின்றேனும் நின்றேன் நெடுமரம்போல் நின்றேனே!’
என்ற கம்பன் பாடல் அலைக்கழித்துக் கொண்டிருந்த காலம், தீங்கு தடுக்கும் திறனிலேன் எனும் பீஷ்மன் குரல் பேராட்சி செய் காலம், சீனப் பெருஞ்சுவரா, சயாம் மரண ரயிலா, ஈழக் கடற்கரையா? எது வெங்கொடுமை, வன்கொடுமை புன்கொடுமை?

ஈண்டு தேர்தல் ஆர்ப்பாட்டங்களில் தேசம் களைகட்டிக் கிடந்தது. புன் செல்வம் நச்சுப் புகையெனப் பரந்து, நஞ்சுக்கும் போதைக்கும் வேறுபாடறியா மக்களை மயக்கியது. மேலும் இங்கு விவரித்துச் சொல்ல இயலாத ..வேறு சில மானசீக அவஸ்தைகளும் என் குளம் கலக்கிய போது, கவிதை என்றொரு மடை திறந்தது. பாரங்களை இறக்கி வைக்க அல்லது தோள் மாற்ற..’.

என்னும் நாஞ்சிலின் நெஞ்சின் வேதனையைப் பகிர்ந்து நிற்கின்றது இக்கவிதைத் தொகுப்பு.

அடிபட்டக் குழந்தை ‘அம்மா’ வெனக் கதறி அவனை இறுக அணைத்து, தன்னைத் தவிர்த்த காரணமறியாது, அவள் முகம் பார்க்கும் குழந்தையாய், கவிஞரைப் பார்ககிறேன்.

பச்சை நாயகி மற்றும் மிமி

‘முந்தி வந்தேன் ஊழிகாலத்துப்

பசியோடும்

பந்தியில் அமர்ந்தேன்..

எனை ஒதுக்கி இலை தாண்டிப்போய்

விளம்புகிறாய்.’

இவ்வரிகளின் நீரோட்டம் தான் இவரது அனைத்துப் படைப்புகளும் என்னலாம்.
பச்சை நாயகி மற்றும்  மிமி

‘‘நன்றே செய்வாய் பிழை செய்வாய்

நானோ இதற்கு நாயாமே’’

எனக் கள்ளமில்லாது வினவும் கவிதையாய் அமைந்திருக்கின்றதெனில் பச்சைநாயகி, அவரது ஆன்மப் பகிர்தலின் நாயகியாய் நான் பார்க்கின்றேன்.

நாஞ்சிலார் பிறர் கவிதைத் தொகுப்பிற்கு மதிப்பாடு அளிக்கும் போழ்து ,..சங்க இலக்கியங்களைத் தான் அளவுகோலாக வைத்துக் கொள்வார் என்பார். அவ்வாறெனில் அவர் கவிதைகளுக்கும் இது பொருந்தும்தானே! செவ்விய மொழிநடையைத் தாங்கித்தான்,.. இவரது கவிதைகள் உலா வருகின்றன. அதனால் அதன் உயிரோட்டம் தடைபடாமல் ஓடிக்கொண்டிருக்கின்றது.

தாயுமானவன்தான் நினைவுக்கு வருகிறார் .. ‘அகிலமெல்லாம் கட்டியாளினும் கடல் மீதும் ஆட்சி செய்யவே நினைவர் என்,.. பேராசைதான். எனினும் அத்தனைக்கும் ஆசைப்படும் என்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ்’. என்று தன் கவிதைத் தளத்திற்கான காரணத்தை மொழிகிறார் ஆசிரியர்.

‘‘இந்தப்பாடல்கள்

முழுமை அல்ல..

உணர்ச்சிக் கோடாரி

உள்ளம் காணிக்கையில்,

தெரிந்து விழுந்த

படிமச் சிலாம்புகள்..

பட்டறை மீது

பாட்டுருவங்கள்;

வடிக்கப் பெறுகையில்

ஒடித்தெறித்த ஒளிச் சிதறல்கள்..”

என்றும் ம. இல. அவர்களின் உயர்ப்பின் அதிர்வுகளைத் தாங்கி இப்பச்சை நாயகி வளைய வருகிறாள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *