தாலி என்பது பெண்ணினத்தின் அடையாளமா?
த.சதீஸ்குமார்
14.8.2011 என் மறக்க முடியாத நினைவுகளில் பதிந்த நாளாகிப் போனது. ஒரு இல்லற இணையேற்பு விழாவின் அழைப்பு அன்றைய நாளில் இருந்த காரணத்தால் திருமணம் என்றால் செல்ல வேண்டுமே என்கிற கட்டாய உணர்வே என்னை அந்நிகழ்விற்குச் செல்ல வைத்தது.
அழைப்பிதழின் முகப்பில் பெரியார், பெருஞ்சித்திரனார், வள்ளுவர் இணைந்திருப்பது போலான படம். ஒரு வியப்பு கலந்த கேள்வி என்னுள். தமிழுக்காய் பெண்ணியத்திற்காய் பாடுபட்ட இவர்களை முன்னுரிமைப் படுத்தி இந்நிகழ்வு நடப்பதன் காரணம் என்ன? ஏதோ ஒரு கடவுளின் துணை என்று ஆரம்பிக்கும் அழைப்பிதழுக்கு மத்தியில்… அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது என இல்லறம் உணர்த்தும் திருக்குறளில் அழைப்பிதழ் தொடங்கக் காரணம் என்ன?
ஒரு வேளை இது தமிழையும் பெண்ணியத்தையும் முன்னுரிமைப் படுத்தும் நிகழ்வாய் இருக்குமா? அல்லது மேடைகளில் மட்டும் பெண்ணியம் பேசும் சிலரின் திருமணமா என்ற வினாக் குறியுடன் மண்டபத்தில் நுழைந்தேன். அங்கு வியப்பான நிகழ்வு ஒன்று நடந்தது. மணப்பெண் தீந்தமிழ் (எ) ச.மு.தீபலக்குமி மணமகன் கொழுமம் ஆதி (எ) ம.ஆ.திருமுருகனுக்கு தாலி என்கிற பொன் தொடரியை அணிந்த பிறகே மணமகன் மணமகளுக்கு அணிவித்தார்.
காலம் காலமாய் பெண்ணினத்திற்கு மட்டுமேயான சடங்கு என்கிற பெயரில் நடத்தப்பட்ட இந்த அடிமைத்தனத்தில் மாறுதலின் காரணம் என்ன என்று எனக்குள் பல கேள்விகள். அதற்கு விடை திருமணத்தை நிகழ்த்தி வைத்த தமிழ்த்திரு.தா.பெ.அ.தேன்மொழியம்மையாரின் உரையில் எனக்குக் கிடைத்தது. பெண்களுக்கான இந்த அடிமைத் தனமான தாலி வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதற்கு உறவினர்கள் மறுப்பால் இது நிகழ்ந்தது.
திருமணம் என்பது ஆண்-பெண் இருவருக்குமான நிகழ்வு. அடையாளச் சடங்கு (தாலி) என்பது ஒன்று இருவருக்கும தேவை இல்லை அல்லது இருவருக்கும் தேவை. நான் உனக்குப் பொன் தொடரி இட வேண்டுமென்றால் நீ எனக்குப் பொன் தொடரி இட வேண்டும் என்று வேண்டி பெண்ணியச் செயல்பாட்டில் முதல் வெற்றி பெற்றிருக்கிறார் கொழுமம் ஆதி. சடங்குகளைக் கொண்ட வாழ்வே சிறப்புறும் என்பவர்களுக்கு மத்தியில் பெண்ணுரிமையுடன் இவர்கள் வாழ்வில் வெற்றி காண அனைவரும் வாழ்த்துவோம். பெண்ணுரிமையை நிலை நாட்டுவோம்!
புதுமை புரட்சி என்று ஆங்காங்கே ஒவ்வொரு நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருந்தாலும் நிகழுவுகள் முன்பு “தாலி பெண்களுக்கு வேலி” என்று சொல்லிகொண்டிருந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாரிகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. நமது தமிழ் நாட்டில்தான் இன்று வரை தாலியின் பெருமைபேசப்பட்டு வருகிறது. இந்தியாவில் கூட மற்றைய மாநிலங்களை ஒப்பிடுகையில் தாலிக்கு மதிப்பும் மரியாதையும் நமது தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.அதே நேரத்தில் இந்த சீர்திருத்த திருமணங்களும் ஆங்காங்கே நடைபெறுவதும் நமது தமிழகத்தில்தான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இவ்வளவு மரியாதைக்கு உரிய தாலியினை வெளியில் தெரியாதபடி மறைத்தபடி தொலைகாட்சியில் செய்திகளை வாசிக்கும் மாந்தர்கள் இருப்பதும் நமது தமிழகத்தில்தான். நாம் எதையும் வெறுத்து ஒதுக்குவதும் கிடையாது.தேவைப்படும்போது அதனைப்பற்றி விமர்சனம் செய்து விட்டு வீட்டுக்கு வந்ததும் பழமையில் ஊறி செயல்படுவதும் அரசியல்வாதிகளின் வழக்கமான செயல்களே. உண்மையானமாற்றங்களை வரவேட்பூம். விளம்பரத்துக்கான மாற்றங்களை வெறுத்து ஒதுக்க்குவோம்.
இருமணமினைந்த மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க அறத்துடன்!