அன்னா ஹசாரே தில்லியில் கைது – செய்திகள்
புது தில்லி : 16 ஆகஸ்ட் 2011.
இன்று காலை அன்னா ஹசாரே, அர்விந்த் கேஜேரிவால், சாந்தி பூஷன் அகியோர் தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
16 ஆகஸ்ட் -ல் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள அரசு மற்றும் காவல்துறை அனுமதி பெற்றிருந்தார் ஹசாரே. அவருக்கு காவல்துறை சில நிபந்தனைகள் விதித்திருந்தது. ஹசாரே நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள மறுத்திருந்தார். மேலும் தனது போராட்டம் நிபந்தனைகளை மீறித் தொடரும் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஹசாரே கைது அரசு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்படுவதற்கு முன் அன்னா ஹசாரே விடுத்திருந்த அறிக்கையின் தமிழாக்கம் :
“விடுதலைக்கான இரண்டாவது போராட்டம் துவங்கிவிட்டது. என்னை கைதும் செய்துவிட்டனர்! ஒரு அன்னா ஹசாரேவைக் கைது செய்வதால் போராட்டம் நின்றுவிடுமா? நிச்சயம் இல்லை. போராட்டத்தை நிறுத்தாதீர்கள். கோடிக்கணக்கான இந்தியர்கள் இப்போராட்டத்தில் பங்குகொண்டுள்ளனர். என்னையும் என்னைச் சார்ந்த சில தலைவர்களை அரசு கைது செய்துள்ள போதும் நமது இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் போராட்டத்தை முன்னின்று வழி நடத்த தயாராக உள்ளனர். என்னுடன் சேர்த்து பலரையும் கைது செய்துள்ளது அரசு. கைதுகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். இன்னமும் பலரும் கைதாகி சிறை நிரப்ப வேண்டும். இந்தியாவின் எந்த சிறையிலும் இதற்கு மேல் இடம் இல்லை என்னும் நிலை வரவேண்டும். நான் சக இந்தியர்களுக்கு விடுக்கும் ஒரு வேண்டுகோள் என்னவென்றால், நமது போராட்டம் அமைதியான ஒன்றாக இருக்க வேண்டும். நமது நடவடிக்கைகள் அரசு, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு எவ்வித சேதங்களையும் ஏற்படுத்தக் கூடாது. நமது சக இந்தியர்களான பொதுமக்களுக்கு எவ்வித தொல்லையும் ஏற்படுத்தக் கூடாது. உங்களின் அலுவலகத்தில் இருந்து விடுப்பு எடுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட வாருங்கள். நாட்டு நலனுக்காக மாணவர்கள் கூட இன்று பள்ளி வகுப்புகளைப் புறக்கணித்து அமைதிப் போராட்டத்தில் ஈடுபடுவதில் தவறில்லை.முழு வாழ்க்கையையும் நீங்கள் உங்களுக்காக வாழ்கின்றீர்கள். உங்களின் இன்றைய ஒரு தினத்தை நாட்டிற்காகக் கொடுங்கள். என்னைக் கைது செய்ததன் மூலம் ஊழல் அரசியல்வாதிகளின் உண்மையான முகங்கள் இன்றைக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இது மாற்றம் கோரும் ஒரு போராட்டம். மாற்றம் வரும் வரை விடுதலைக்கான அர்த்தம் இருக்காது. எனது உடலில் உயிர் இருக்கும் வரை எனது இந்தப் போராட்டம் தொடரும். நன்றி. பாரத மாதவுக்கு வெற்றி! ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!”