குறளின் கதிர்களாய்…(123)
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு.
-திருக்குறள் -20(வான் சிறப்பு)
புதுக் கவிதையில்…
அனைவருக்கும் நன்றாய்
அமைவதில்லை அகில வாழ்வு,
நீரில்லாமல்..
அதற்குரிய
மழைவளம் இல்லையெனில்,
உலகில்
நல்லொழுக்கமும் அமையாது…!
குறும்பாவில்…
நீரில்லாமல் யார்க்கும் நிலைக்காது
அகில வாழ்வு, அப்படித்தான்
மழைவளமின்றி நல்லொழுக்கமும்…!
மரபுக் கவிதையில்…
மண்ணில் மனித வாழ்வமைய
மிகவும் தேவை நீரதுதான்,
எண்ணிப் பாரிதை நன்றாக
எல்லா வளமும் சிறந்திடவே
மண்ணில் பெய்தே பாய்ந்தோடும்
மழைநீர் வளம்தான் இல்லையெனில்,
கண்ணிய மான நல்லொழுக்கம்
காசினி தன்னில் நிலைக்காதே…!
லிமரைக்கூ…
வையவாழ்வு அமையாமல் வழுக்கும்
நீரின்றி, அதுபோல மழைவளமின்றி
அமையாது நல்லதாய் ஒழுக்கம்;…!
கிராமிய பாணியில்…
அமயாது அமயாது வாழ்வு அமயாது
ஒலகவாழ்வு அமயாது,
ஒருநாளும் அமயாது
உயிரக்காக்கும் தண்ணியில்லண்ணா..
அதுபோலத்தான்
அமயாது அமயாது நல்லொழுக்கம் அமயாது
அடிச்சிப்பெய்யிற மழயில்லண்ணா,
அதுகுடுக்கிற வளம் இல்லண்ணா…!
-செண்பக ஜெகதீசன்…