அமெரிக்கர்களைத் திசை திருப்பும் சர்ச்சை

0

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari Annamalai2001ஆம் ஆண்டு செப்டம்பர் பதினோராம் தேதி நியுயார்க் நகரின் மான்ஹாட்டன் பகுதியில் பல மாடிக் கட்டடங்கள் இரண்டை முஸ்லீம் தீவிரவாதிகள் தாங்கள் பயணம் செய்த விமானங்களைக் கடத்திச் சென்று, தகர்த்து வீழ்த்தினர். அமெரிக்க ராணுவத்தின் கேந்திரமான பெண்டகானையும் சேதப்படுத்தினர். இரண்டாவது உலக யுத்தத்தில் ஜப்பான் அமெரிக்காவைப் பெர்ல் துறைமுகத்தில் தாக்கிய பிறகு இதுதான் அமெரிக்கச் சரித்திரத்தில், அமெரிக்க மண்ணில் நடந்த தாக்குதலாகக் கருதப்படுகிறது. இப்படி அமெரிக்கா தாக்கப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவுக் கொள்கையே காரணம் என்று முற்போக்கு அரசியல் அறிஞர்கள் சிலர் கூறினாலும், அமெரிக்க மக்களிடையே இஸ்லாம் மதத்திற்கும் அதைப் பின்பற்றுபவர்களுக்கும் நிறைய எதிர்ப்பு ஏற்பட ஆரம்பித்தது. ஏன், அமெரிக்க அரசே கூட சந்தேகத்தின் பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களைப் பாதுகாப்பாகக் கைதுசெய்து சிறையில் வைத்தது. இந்தத் தாக்குதலால் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்து போயினர். அமெரிக்கர்கள் பலர் மனத்தில் இப்படிப்பட்ட மனித இழப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இறந்தவர்கள் பலரின் சரிதையையும் அவர்களின் உற்றார்களின் துயரத்தையும் நியுயார்க் டைம்ஸ் போன்ற பிரபல பத்திரிகைகள் விபரமாக வெளியிட்டன. அந்தத் துயர நிகழ்ச்சிக்கு 9/11 என்று பெயர் சூட்டப்பட்டது. எரிந்து விழுந்த கட்டடங்கள் இருந்த இடத்திற்கு பூஜ்ய இடம் (Ground Zero) என்று பெயர் சூட்டப்பட்டு, அது ஒரு புனித இடமாகக் கருதப்படுகிறது. மேலும் அங்கு ஒரு நினைவாலயம் கட்டப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.  அமெரிக்க நாட்டையே 9/11-க்கு முன், 9/11-க்குப் பின் என்று பிரித்துப் பேசும் அளவிற்கு இந்தத் தாக்குதல் முக்கியத்துவம் பெற்றது.

இப்போது இதையொட்டி ஒரு அரசியல் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. அந்த இடத்திற்கு இரண்டு பிளாக்குகள் தள்ளி – அதாவது மிக அருகில் – இஸ்லாமிய மையம் (Muslim Center) ஒன்று கட்ட முடிவு செய்த ஒரு தனியார் நிறுவனத்தினர், நியுயார்க் நகரத்திடமிருந்து அதற்கான அனுமதியையும் பெற்றனர். இந்தத் திட்டம் பற்றிய செய்தி முதலில் நியுயார்க டைம்ஸ் பத்திரிகையில் 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளிவந்தபோது இதை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு ருபெர்ட் மர்டாக் (Rupert Murdock) தன்னுடைய வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) என்னும் பத்திரிகையில் பெரிதாக வெளியிட்ட பிறகு, இந்தச் செய்தி வலதுசாரிக் கொள்கையுடைய அரசியல்வாதிகளால் பெரிதுபடுத்தப்பட்டு இதை வைத்து ஒபாமாவைத் தீவிரமாகத் தாக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.

இந்த இஸ்லாமிய மையத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருப்பவர்களில் முக்கியமானவர்கள், அந்தப் பகுதியில் உள்ள மசூதியில் இமாமாக இருந்த ஃபெய்சல் அப்துல் ராஃப் (Feisal Abdul Rauf) என்பவரும் அவருடைய மனைவி டெய்ஸி கான் (Daisy Khan) என்பவரும் ஆவர். இவர்கள் இஸ்லாமில் அன்பைப் பரப்பும் சூஃபி என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள். மத ஒற்றுமைக்குப் பாடுபடுபவர்கள். டெய்ஸி கான் இந்த இடத்திற்கு அருகிலுள்ள யூதர்களின் மையத் தலைவரைச் சந்தித்துப் பேசி, அந்த மையத்தைப் போல் இஸ்லாமிய மையத்தை அமைப்பது பற்றி யோசனை கேட்டாராம். இஸ்லாமிய மையம் அமைப்பதில் யூத மதத்தைச் சேர்ந்தவர்களின் ஆதரவு இருந்தது. நியுயார்க் நகர மேயர் இந்த மையத்தை அமைப்பதற்கு எந்தவிதத் தடங்கலும் கூறாமல் அனுமதி அளித்திருக்கிறார். இதற்கு இரண்டு காரணங்கள் கூறுகிறார்கள். ஒன்று, அவர் மிகப் பெரிய பணக்காரராக ஆவதற்கு முன் நியுயார்க்கில் சொந்தமாக இடம் வாங்க யூத இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்ததாம். அதனால் சிறுபான்மையினரின் உரிமைகளை மறுப்பது தவறு என்ற கொள்கை உடையவர். இன்னொன்று, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களையும் ஆதரிக்கும் நகரம், சகிப்புத் தன்மை உடைய நகரம் என்று பெயர் வாங்கியது நியுயார்க், அந்தப் பெயருக்கு இழுக்கு வரக்கூடாது என்பது. அமெரிக்கக் குடியேற்ற வரலாற்றில் முதலில் அமெரிக்காவிற்கு வந்த பிராடெஸ்டண்ட் மதத்தைச் சேர்ந்தவர்கள் (Protestants)  பின்னால் வந்த யூதர்களையும் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த கிறிஸ்துவர்களையும் உரிமையோடு வாழ விடவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதனால்தான் யூதர்கள் இப்போது இஸ்லாமிய மையம் உருவாவதில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

வெள்ளை மாளிகையில் முஸ்லீம்களின் நோன்பை ஒட்டி நடந்த விருந்தில் கலந்துகொண்ட ஒபாமா, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தங்கள் மதத்தைப் பின்பற்றும் உரிமையை அமெரிக்க அரசியல் சட்டம் தருகிறது, அதனால் இஸ்லாமியர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில், அவர்கள் சொந்த இடத்தில், மையம் கட்ட உரிமை இருக்கிறது என்று சொன்னதை  எதிர்த்து, அவரை ஏற்கனவே எதிர்த்துக்கொண்டிருந்தவர்கள், அவர் கிறிஸ்தவர் இல்லை, உண்மையில் அவர் ஒரு இஸ்லாமியர் என்று புரளி கிளப்பினர். அதற்கு மறுநாளே ஒபாமா தான் கூறியது அரசியல் சாசனம் தரும் உரிமை பற்றியே மட்டும் சொன்னதாகக் கூறி ஓரளவிற்கு தான் சொல்லியவற்றிலிருந்து பின்வாங்க வேண்டியதாயிற்று. இதைப் பற்றித் தலையங்கம் எழுதிய தாராளவாதக் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் நடுநிலைப் பத்திரிக்கையான நியுயார்க் டைம்ஸ், தங்கள் மதத்தைப் பின்பற்ற எல்லா அமெரிக்கர்களுக்கும் அரசியல் சட்டத்தில் உள்ள உரிமை பற்றிக் குறிப்பிட்டு, ஒபாமா தான் முதல் நாள் கூறியதை மறுத்திருக்கத் தேவையில்லை என்று இலேசாகச் சாடியது. மத நல்லிணக்கம் என்பது அமெரிக்காவின் மிகப் பெரிய மதிப்பீடுகளில் ஒன்று என்றும் அந்தப் பத்திரிகை பெருமை அடித்துக்கொண்டது.

வலதுசாரிக் கட்சியான குடியரசுக் கட்சியில் உள்ள பழமைவாதிகள், இந்தச் சர்ச்சையை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு நவம்பரில் காங்கிரஸின் இரண்டு அவைகளுக்கும் நடக்கப் போகும் தேர்தலில் மக்களைத் திசை திருப்ப முயல்கிறார்கள். அமெரிக்காவின் ஜனாதிபதியே அமெரிக்காவின் எதிரி ஆகிவிட்டார் என்றும், அவர் அமெரிக்கக் குடிமகனே இல்லை என்றும், அதனால் ஜனாதிபதி ஆவதற்குத் தகுதி பெற்றவர் இல்லையென்றும் கூறி வருகிறார்கள். இதைப் பற்றி ஒபாமாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது, ஒபாமா இதைப் பற்றியெல்லாம் நினைப்பதற்குத் தனக்கு நேரம் இல்லையென்று பதில் அளித்திருக்கிறார்.

நியுயார்க் மாநில ஆளுநர் பதவிக்கும் நவம்பரில் தேர்தல் நடக்கவிருக்கிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர், இப்போது நியுயார்க் மாநில அரசு வழக்கறிஞராக இருக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் இஸ்லாமிய மையத்தின் பின்னணி பற்றிச் சரியாக விசாரிக்கவில்லை என்றும் அவர் தேர்தெடுக்கப்பாட்டால் நாட்டில் நிறைய விபரீதங்கள் விளையலாம் என்றும் பேசி வருகிறார். வலதுசாரிக் கொள்களையுடைய பழமைவாதிகளைத் தடுத்து நிறுத்தாவிட்டால் வரும் தேர்தல்களில் இடதுசாரிக் கொள்கைகளையுடையவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஜனநாயகக் கட்சி காங்கிரஸில் பலம் இழந்துவிடும் என்றும் இது நாட்டிற்கே நல்லதல்ல என்றும் இடதுசாரிப் பத்திரிகையாளர் ஒருவர் பயப்படுகிறார்.

இந்தச் சச்சரவுக்கு முன்னாலேயே அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், இமாம் ஃபெய்சல் அப்துல் ராஃபை எகிப்து மற்று பல இஸ்லாமிய நாடுகளுக்கு அமெரிக்கா இஸ்லாம் மதத்தின் எதிரியல்ல என்று எடுத்துச் சொல்ல அனுப்பியிருக்கிறது. அந்த நாடுகளில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு இஸ்லாமியர்களிடையே நிறைய ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்கா தன் வெளியுறவுக் கொள்கைகளை மாற்றிக்கொண்டாலொழிய அமெரிக்கர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே உருவாகியுள்ள பகைமை மாறுவதற்கு வழியில்லை. இந்தப் பகைமை உணர்ச்சியை வலதுசாரிக் கட்சியினர் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக வளர்க்கிறார்கள். இஸ்லாமிய மையம் நியுயார்க் நகரைத் தாக்கியதை இஸ்லாமியர் கொண்டாடும் வெற்றிச் சின்னம் என்று கூறி மக்களைத் திசை திருப்புகிறார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.