கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”கலிமுடிவில் ஓரடியை ஆலிலையில் உண்டாய்
பலிமுடியில் வேறடியை வைத்தாய் -தெளிவடைய
நூற்றிடுவேன் வெண்பாக்கள் நீர்வண்ணா வாழ்த்திடுவாய்
ஈற்றடி யாக இருந்து”….
காயாம்பூ வண்ணத்தை கற்றோர்தம் எண்ணத்தை
ஆயர்தம் சின்னத்தை மண்ணையுண் -ஓயாத
மாயத்தை ஒப்பில்லா சீயத்தை நேயத்தில்
தாயொத்த தாயத்தைத் தேடு….
காலை எழுந்தவுடன் கண்ணன் பெயர்சொல்லி
மூளை அடுப்பை மூட்டிடு -மாலை
மலைவனம் சென்றாயர் மாடுகள் மேய்க்க
அலைபவன் பேரால் அணை(SWITCH OFF)…
நீதான் நானென்றும் நான்தான் நீயென்றும்
சேதார மற்றென்றும் சேர்ந்திடுவோம் -ஏதோ
இலக்கணம் காட்ட எழுதவில்லை வெண்பா
விலக்கணும் மாய விரிப்பு….
தீனர்க்(கு) அருளூற்றாய் ஈனர்க்(கு) இருள்கூற்றாய்
மீனமாய் ஏனசிம்ம வாமன -மூணான
ராம கிருஷ்ண கலிபுருஷ னாய்வந்த
நாம சகஸ்ரனாய் நாடு….
பீதாம் பரமவிழ போட்ட நகைசிதற
வேதப்புள் வாகனனை தோள்சுமந்து -பாதாதி
கேசம் குலுங்க களிறுக்கன்(று) ஏகிய
நேசனக் கேசவனை நம்பு….கிரேசி மோகன்….

