பால நிவேதிதா

 

“நீங்க மனசு வச்சா என்னையும் வேணியையும் சேர்த்து வைக்க கண்டிப்பா முடியும்மா”

“நீ நல்லா யோசிச்சு தான் பேசுறியா குமார்… வேணி ஏற்கனவே திருமணமானவள், ஒரு குழந்தைக்கு தாய்….”-சித்ரா ஆச்சர்ய குரலில் .
“எல்லாம் தெரியும்மா… அந்த குடிகாரனோட அவ பட்டபாடு எனக்கு தெரியாதாயென்ன… ஒவ்வொரு நாளும் இரத்த கண்ணீர் தாம்மா விட்டுது… சாகுறமட்டும் அந்த பாவி வேணியை சந்தோஷமா வைக்கலைம்மா….!”

“ம்…எல்லாம் தெரிஞ்சுமா நீ அவளை திருமணம் செய்ய நினைக்கிற…?”

“எனக்கு படிக்கிற காலத்தில்  இருந்தே வேணி உசுரும்மா….என்னமோ காலம் திசைமாறி  ஒரு குடிகாரனைக் கட்டி அவளும் பட்டுட்டா….இனியாவது அவ சிரிக்கணும்….அவளுக்கும் நான் என்ன நினைக்கிறேன்னு தெரியும். .மனதுக்கு பிடிச்சு இருந்தும் பிடி கொடுக்காம பேசுறா…நீங்க தான்  எப்படியாவது சேர்த்து வைக்கணும் “..கூறிய குமாரின் குரலில்  நேசம் மிகுந்து இருப்பதை மறுக்க முடியாது.

“உன் நல்ல மனசுக்கு நல்லபடியா முடியும் குமார்… நான் ஊருக்கு கிளம்புவதற்குள் உனக்கு நல்ல செய்தி சொல்றேன்…” சந்தோஷமாய் பறந்தான் குமார். வேணியும் குமாரும் நல்ல பொருத்தம் தான் என மனதிற்குள் நினைத்த படியே உள்ளே செல்லவும்  அவள் கைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது.

“சொல்லுங்க ராஜ் ..?”

“என்ன மேடம் சொந்த ஊருக்கு போய்ட்டா புருஷன் புள்ளையெல்லாம் நினைப்புக்கு வராது போல…. ஒரே மலரும் நினைவுகளா.?”
மலரும் நினைவுக்கு அவன் கொடுத்த அழுத்தம் சித்ராவை எரிச்சல் படுத்தியது.

சமாளித்தபடியே” நாளை மறுநாள் புரோக்கர் அவங்களோட வந்துட்டா வெள்ளிக்கிழமை ரிஜிஸ்டர் பண்ணிடுவோம்.  அப்புறம் எனக்கு  இங்க  என்ன வேலை. ….?”

“ஆமா…அப்புறம்  இங்க வந்து பர்கர், பீஸா தான். ..ஹா..ஹா..பெரிதாய் சிரித்த ராஜன். ..சரி..என்ஜாய். .திங்கள்கிழமை மதுரையில் இருந்து உனக்கு பிளைட் …மறந்துடாதே..வேகப்படுத்து அந்த தரகனை..சரியா. .?”

“ம்ம்….சரியென கூறி, தொடர்பு துண்டிக்கப்பட்டப் பின் அயர்ச்சியாய் சாய்ந்தாள்.

தான் பிறந்துவளர்ந்த வீட்டை சற்று  அண்ணாந்து பார்த்தாள்.  இதே வீடு பதினெட்டு வருடத்துக்கு முன்பு அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, பெரியம்மா, பெரியப்பா, மேலதெரு அக்கா, கீழத்தெரு அத்தை மாமா என கலகலவென  இருந்தது. காலம் மாற மாற ஒவ்வொருவராக மறைந்து,  எஞ்சிய  உறவுகளும் இப்போது பட்டினக்கூட்டுக்குள் சென்று விட யாரும் இல்லாத கேள்வி கேட்பாரற்ற நிலையில் இதனை விலைக்கு கேட்பதாக குமாரிடம்  இருந்து தகவல் வர, இதை விட்டால் வேறு வழியில்லை.  இல்லையெனில் பராமரிப்பு இன்றி அழிந்தேவிடும்.அதற்கு தான் சித்ரா கிளம்பி வந்தாள். இத்தனை வருடங்கள் கழித்து வந்த போது ஓடி வந்து அழுதவள் வேணி தான். சித்ரா குமரியாக நடமாடிய போது பச்சிளம் குழந்தையாக இருந்தவள்.  இப்படி  எத்தனையோ மாற்றங்கள்  ஊரில் அன்பை தவிர. .

சித்ராவின் தாத்தா அவளை அவ்வூரிலேயே கட்டி கொடுத்து அருகிலேயே வைத்திருக்க கனவு கண்டு , அவ்வூர் சின்னப்பண்ணை மகனை பேசி முடிக்க, ஆனால் அவனோ திடுதிப்பென்று  அவன் நண்பனின் தங்கையை மணம் முடித்து வந்து நிற்க ,  சித்ராவின் திருமணம் நின்றது. சித்ராவை தவிர வீட்டில் அத்தனை பேரும்  இடிந்து போயினர்.

அதிலிருந்து ஆறு மாதத்திற்குள் ராஜனின் குடும்பம் ஒரு திருமண விழாவில் அறிமுகமாகி பெரியவர்களுக்குள் ஏற்பட்ட மனப்பொருத்தத்தால் இணைந்தது ராஜன் -சித்ரா வாழ்க்கை. இப்படியாக பழைய நினைவுகளை அசைப்போட்ட படியே சிறிது நேரத்தில் உறங்கி போனாள் சித்ரா .

மறுநாள் நினைத்தபடி தரகர் ஆட்களோடு வர பேசிய சித்ரா குறிப்பிட்ட தினத்திலேயே ரிஜிஸ்டரேசனையும் முடித்தாள்.இனி கிளம்ப வேண்டியது தான்.  இனி சொந்த மண் எப்போதும் பசுமையாய் மனதிற்குள் மட்டுமே.

மதிய வேளையில் தனது துணிமணிகளை எடுத்து வைத்து கொண்டு இருந்தாள் சித்ரா. சற்று தருணத்தில் வேணி தன் இரண்டு வயது மகனை ஒரு கையிலும், மற்றொரு கையில் கவருமாக வேர்க்க  விறுவிறுக்க வந்தாள்.    “அக்கா. ..கிளம்பிட்டீங்களா..உங்களுக்கு உதவனும்னு தான் ஸ்கூல்ல இருந்து வேகமா  ஓடி வந்தேன்”.

“அதுக்குள்ள பையன ஸ்கூல்ல சேர்க்க போறீயா…?”

“இல்லக்கா…எங்க அம்மா பார்த்த சத்துணவு வேலையை என்னையப் பார்க்கச் சொல்லி ஹெட்மாஸ்டர் ஐயா சொன்னாங்க… இது நான் மேலே படிக்க அப்ளிகேஷன். …!!”

“அட சூப்பர் வேணி…நான் நினைச்சதைவிட வேகமா இருக்கியே… வேலையும் பார்த்துக்கிட்டு அப்படியே படிக்கவும் போற….!”

“ஆமாக்கா….!”

“அப்படியே உன் மனசுக்கு பிடிச்சவனை மணமும் முடிச்சீன்னா இன்னும்  உன் வாழ்க்கை நல்லா இருக்கும். …!” முறுவலித்த வேணி,”சத்தியமா அது மட்டும் மாட்டேன்கா…”யோசிக்காமல் சொன்னாள்.

ஆச்சரியமும் அதிர்வும் கலந்த முகமாக ,”என்ன வேணி இப்படி பட்னு சொல்லிட்ட… நான் யாரை சொல்ல போறேன்னு தெரிஞ்சா இப்படி சொல்ல மாட்ட. ..!”

“தெரியும்கா…ஆனா நீங்க யாரச்சொன்னாலும் என் பதில்  இதுதான்கா..மன்னிச்சுடுங்க. ..!”

“எத்தனை காலத்திற்கு  இப்படி தனியா    இருக்க போற ,…உன் புருஷனோடு நீபட்ட கொடுமைக்கு மருந்தா நல்ல வாழ்க்கை கிடைக்கும் போது இப்படி முடிவெடுக்கிறயே வேணி…….!!” குரல் கம்மியது சித்ராவிற்கு.

“எல்லாரும் அப்டித்தான்கா சொல்றாங்க….என்  கணவர் துன்பம் கொடுத்தது உண்மை தான்,ஆனால் துன்பம் மட்டுமே கொடுத்தார்ன்னு எப்டிக்கா சொல்ல முடியும். அவரோடு நான் சந்தோஷமாய் வாழ்ந்ததற்கான அடையாளம் தானே இன்றைய என்  வாழ்வின் அர்த்தம்  என் மகன்….அவனை வளர்க்க இதோ கையில் வேலை…இன்னும் ஊன்றி நிற்க படிப்பு…இன்னும் எதற்குக்கா கல்யாணம்…?..சற்று மௌனத்திற்கு பின் பெருமூச்சு விட்டபடியே…என் முதல் வாழ்க்கையை என்னதான் இருந்தாலும் மறக்கவும் முடியாது மறைக்கவும் முடியாதுக்கா….ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அது சொல்லி காட்டப்பட்டால் அதை தாங்கும் சக்தி  எனக்கில்லைகா . ….”!

அதிர்ந்த சித்ரா, “குமார் மேல  உனக்கு நம்பிக்கை இல்லையா. .?”

“ஐயோ  அக்கா. ..அப்படி  இல்லை பிரிவின் வலியை விட சொல் வலி கொடியதுக்கா. …”குளமாகியது அவள் கண்கள்.

பார்த்தேயிராத சின்னப்பண்ணை மகனை இன்னும் கிண்டலுக்கு கூறுவதாக சித்ராவுடன் இணைத்து ராஜ் கூறும் போது தானும் சேர்ந்து சிரித்தாலும் உள்ளுக்குள் தனக்கு ஏற்படும் கசப்பு  உணர்வு  ஏனோ இப்போது நினைவிற்கு வந்தது  சித்ராவிற்கு.

சிந்தனையாய் தன்னைப் பார்க்கும் சித்ராவை பார்த்த வேணி,”என் பிடிவாதம் உங்களை கஷ்டப்படுத்துன்னு நினைக்கிறேன்கா. …ஆனா  என் முடிவு இது தான். ..நான் நிறைய படிக்கனும்…கடவுளை நம்புறேன் நான். ..வேணி முடிக்கும் முன்பே “நல்லவைகளுக்கு பிடிவாதம் தேவைதான் வேணி…”என முடித்தாள் சித்ரா .

மலர்ந்த முகத்துடன் விடைகொடுத்தாள் வேணி.சிறு பெண்ணின் தெளிவால் தெளிவான சித்ரா பெட்டி சாமான்களுடன் வெளியே வர ,கலங்கிய கண்களுடன் எதிர்ப்பட்ட குமாரை பார்த்து ,” அவள் வாழட்டும். …” என்றாள்  ஒற்றையாய்.

சித்ராவின் இந்த பதில் குமாரின் மனதிற்கு  என்றாவது புரியும்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மீண்டும் மீண்டு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *