ஒன்றிலிருந்து இன்னொன்று.

1

சுபாஷிணி திருமலை.

நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். காலையும் மாலையும் கடலின் பார்வையிலே இருக்கிறோம். குரு பார்வை பார்த்தால், நல்லது நடக்குமாம். அதேபோல் கடல் பார்வை பட்டால், உற்சாகம் கரை புரண்டு ஓடும். அவ்வளவு உற்சாகத்தையும் எங்கள் அலுவலக வேலையில் முதலீடு செய்கிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மாலை சரியாக 6 மணி ஆகி விட்டாலே போதும். கடல் அலைகள் மோதி.. மோதி, எங்களை அழைத்து விடும். நாங்களும் ஆவலாய் அதைப் பார்க்க வந்து விடுவோம்.

அன்றும் அப்படித்தான். கடலின் அலைகளையும், அது வந்து வந்து போகும் அழகையும், எதையோ நமக்குச் சொல்ல வருவது போலவும், முடியாது திரும்பிச் செல்வது போலவும் தோன்றும் நிலை இருக்கிறதே அப்பப்பா! அது நம்மை அப்படியே ஆக்கிரமித்து விடும். திரும்பிப் போகும் போது நம்மையும் இழுத்துக் கொண்டு அதனுடன் போவது போலவும் இருக்கும். அய்யோ! நம்மை விட்டு இப்படிப் போகிறதே என்று வயத்தைக் கலங்கடித்து விட்டும் போகும்.

இப்படி நானும் அலையுமாக அலுவலக வாசலிலே நின்றிருக்கையிலே, “மேடம்.. மேடம்” என்று முனைவர் அருணாவின் குரல், என்னைக் கடலினின்று யதார்த்தத்தில் நிலை பெறச் செய்தது. “என்ன?” என்று திரும்பிப் பார்த்தேன்.

முனைவர் அருணாவுடன், முனைவர் ஜவஹர், முனைவர் ஜெயக்குமார், முனைவர் பெரியசாமி என ஒரு பெரும் பட்டாளமே வந்து கொண்டிருக்கின்றது. அனைவரும் அருகில் வந்தனர்.

“மேடம்! இங்க பாருங்களேன்” இது அருணாவின் குரல்!. “மேடம்! இதோ!” என ஜவஹர் கையில் இருப்பதைக் காட்டினார். நீண்ட மஞ்சள் நிற அலகு. அடர்ந்த மயில் கழுத்து நிறத்தில் உடல். அதனிடையே அழகான நீல நிற நீண்ட அகலமான ஒரு வரி. அந்த ஆகாய நீல நிறக் கோட்டு வரி அழகுப் பேரழகாய்த் தெரிந்தது. சின்னஞ்சிறு கண்கள். மஞ்சள் வளையமிட்டுப் பாதுகாப்பாய் இருந்தது. ஆனால் அதில் மிரட்சியும், பயமும் தெரிந்தது,  ஆயாசமும் தெரிந்தது. ஜவஹர் கையில் பாந்தமாய் அமர்ந்திருந்தது. அதற்கு வலிக்காது, அன்பாய், இதமாய் அவர் பூப்போல் கையில் வைத்திருந்தார். அப்போது அக்குஞ்சின் ஸ்பரிச அலைகளின் சந்தோஷம் அவர் முகத்தில் தெரிந்தது.

“மேடம்! இது மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து விட்டது. இதைக் காக்கைகள் கொத்திக் கொண்டிருந்தன. நாங்கள் எடுத்து வந்து விட்டோம் என்றார்.

ஒவ்வொருவரும் அதை அன்பாய் ஆசையாய்த் தடவினார்கள். அருணா மெதுவாகத் தொட்டாள். “பாருங்க மேடம்! எவ்வளவு மிருதுவாய் இருக்கு..”  என்றாள்.

‘அப்படியா! ஆனால் நான் தொட மாட்டேன். எனக்கு இதெல்லாம் பயம். தள்ளி நின்று பார்க்கத்தான் பிடிக்கும். அதுதான் என்னால் முடியும் என்பதுதான் உண்மையும் கூட. என்னால் ஒரு நாயை, பூனையைக் கூடத் தொட இயலாது. இது என்ன குஞ்சு?’ என்று யோசிக்கும் போது, “மேடம்! அலகு நீளமாக இருக்கு. அதனால் இது மரங்கொத்திப் பறவையாக இருக்கும்” என்றார் ஜவஹர்.

“இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இது… இது மரங்கொத்தி என்றால் ப்ரௌன் கலரில் இருக்கும். இது மயில் கழுத்து நீல நிறமல்லவா… இது…. இது ‘கிங் ஃபிஷர்’” என்றாள் அருணா. அவள் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் வாங்கியவள் அல்லவா! சட்டென்று ஆங்கிலம்தான் வரும்.

“ஆமாம்! மேடம்! இது மீன்கொத்திக் குஞ்சுதான். கடற்கரை அல்லவா! நெய்தல் நிலம்தானே. மீன்கொத்திப் பறவைதான்” என்று தமிழ்த்திணை கோட்பாட்டு விளக்கத்துடன் ஜெயக்குமார் கூறினார்.

“எல்லாம் சரி! இப்போது என்ன பண்ணுவது? இப்படியே இதை விட்டு விட்டும் போக முடியாது. முதலில் இதற்கு ஏதாவது சாப்பிடக் கொடுக்கலாம்” என்றேன் நான்.

“மேடம்! என்னிடம் சாதம் இருக்கிறது” என்றாள் அருணா. ஜெயக்குமார் உடனே ஓடிப்போய் பாட்டிலில் குடிதண்ணீர் நிறைத்து எடுத்து வந்தார். அருணா தன் டிபன் பாக்ஸிலிருந்து சாதம் எடுத்துத் தந்தாள். ஜெயக்குமார், பாட்டிலின் மூடியில் நீரை நிரப்பி, அக்குஞ்சின் அலகைத் தன் கையால் திறந்தார்.

முதலில் நீரைப் பிடித்து ஊற்றினார். பின் சாதத்தை ஊட்டினார். பறவையும் விழுங்கியது. இப்படி நான்கு முறை கொடுத்தோம். அதுவும் சாப்பிட்டது. ஜவஹர் கையின் பாதுகாப்பில் அது அமைதியாய் இருந்தாலும், அதன் கண்ணில் கலவரம் தெரிந்தது.

அடுத்த கட்டத்திற்கு நாங்கள் வந்தோம். அதுவரை எனக்கு ஆட்டோ வரவில்லை. இதற்குள் பேரா.அன்னிதாமசும், முனைவர் தேவியும் வந்தார்கள். “அப்பவே வீட்டிற்குப் போக வேண்டுமென்று பறந்தீர்கள். இன்னும் இங்கேயே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று பார்த்து விட்டு, அவர்கள் சென்று விட்டனர்.

சரி, நம் நிலைக்கு வருவோம். அடுத்த கட்டம் அக்குஞ்சின் பாதுகாப்பு. காக்கைகளிடமிருந்து காப்பாற்றியாகி விட்டது. இது தற்காலிக காப்பாற்றல்தான்.  நிரந்தரமான பாதுகாப்புப் பற்றி, அதனை வளர்ப்பது பற்றி யோசிக்க வேண்டும். என்னையும் அருணாவையும் தவிர அங்குள்ள மற்றவர்கள் எல்லோரும் விடுதியில் தங்கி ஹோட்டலில் சாப்பிடுபவர்கள்.

அருணாவின் வீடு பறவைக்குப் பாதுகாப்பு இல்லை. பக்கத்து வீட்டுச் சுட்டிகளின் பாசம் அதற்கு தொந்தரவாகி விடும். எனக்கோ அதைத் தொடவே பயம். ஆனால் எங்கள் வீட்டில் மற்ற தொந்திரவு இல்லை. இது என் மனத்தினில் ஓடிய வினாடி நேர எண்ணப் போராட்டம். இதற்கு விடையாக ஜவஹரின் குரல் எழும்பியது.

“மேடம்! ப்ளூ கிராஸூக்குப் போன் செய்யலாம் மேடம்! அவர்கள் இதற்கு வழி கூறுவார்கள். அவர்கள் வந்து கூட்டிக் கொண்டும் போவார்கள்” என்றார்.

சரியென்று தலையசைத்தாலும் ‘ப்ளூ கிராஸ் நம்பர் வேண்டுமே! இருக்கவே இருக்கிறது. ‘ஜஸ்ட் டயல்’ சேவை’ என்று நினைத்தபடி, உடனே 04426444444 என்னும் அச்சேவையை அழைத்தேன். ‘ட்ரிங் ட்ரிங்’ என்று அழைப்பு போனது. அதற்குள், “கடவுளே! அவர்களை எடுக்கச் சொல்லேன்” என்று வேண்டுதல் வேறு. அப்பாடா! போனை எடுத்து விட்டார்கள். ‘லொடக்’ என்று சப்தம் கேட்கிறது.

“ப்ளூ கிராஸ் வணக்கம்! சொல்லுங்கள்” என இனிமையாய் ஒரு குரல் கேட்டது. நான் பதிலுக்கு “வணக்கம் மேடம்! சென்னை மெரினா கடற்கரையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுனத்திலிருந்து பேசுகிறேன்! என் பெயர் சுபாஷினி! எங்கள் அலுவலகத்து வளாகத்தில் காக்கைகள் துரத்தியதால், வழி தப்பி மீன்கொத்திப் பறவையின் குஞ்சு ஒன்று விழுந்தது. விடாது காக்கைகளும் கொத்தின. நாங்கள் அவைகளை விரட்டி விட்டு, அக்குஞ்சை வைத்திருக்கின்றோம். நீங்கள் அதைக் கூட்டிச் செல்ல ஏதாவது ஏற்பாடு செய்ய இயலுமா!” எனக் கேட்டேன்.

அவர்களும் நிதானமாய்க் கேட்டு விட்டு, “அடடா, எங்கள் அலுவலக நேரம் முடிந்து விட்டது. நீங்கள் வீட்டில் வைத்திருங்கள். வீட்டு விலாசத்தைக் கொடுத்தீர்களானால், வண்டி அனுப்பி விடுவேன்” என்று மிகவும் நிதானமாக, இணக்கமாக பதில் அளித்தார்கள்.

“அப்படியா! நல்லது! ஒரு நிமிடம். மீண்டும் உங்களை அழைக்கின்றேன்” என்று கூறிவிட்டு தொலைபேசியைத் துண்டித்து விட்டோம்.

முதலில் ‘ப்ளூக்ராஸ்’ அமைப்பு இப்படி உடனே பேசி விடுவார்கள் என்று நாங்கள் அறியாததால், அதுவே எங்களுக்கு வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. என்னைச் சுற்றி இருக்கும் நண்பர்கள் அனைவரிடமும் அவர்கள் கூறியதை எடுத்துரைத்தேன்.

ஒரு நிமிடம் மௌனம் காத்தோம். எங்கள் மௌனம் அந்தக் குஞ்சுப் பறவைக்கு என்னவோ செய்தது. ஏக்கம், பயம், தயக்கம் என பலவித உணர்வுகள் அனைத்தும் அந்தச் சின்னஞ் சிறிய முட்டைக்கண்களில் தெரிந்தன.

“சரி! எனக்கு இதைப் பாதுகாக்கும் அறிவோ, அணுகுதலோ கிடையாது. நீங்களும் விடுதியில் தங்கியிருப்பதால்……” என்று தொடங்கினேன்.

உடனே, “மேடம்! நாம் நம் அலுவலகத்தில் விட்டுச் செல்லலாம். காலையில் அவர்களுக்குத் தகவல் அனுப்பி எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்வோம்” என்று ஜவஹர், பெரியசாமி, ஜெயக்குமார் அனைவரும் ஒரே குரலில் தெரிவித்தனர்.

“நல்லது! அப்படியானால் இதற்கு கூடு தயாரிக்கலாம்” என்று சொல்லி முடிக்குமுன், ஜெயக்குமார் அலுவலகத்துக்குள் சென்று காலியான சுமாரான அளவு அட்டைப்பெட்டி ஒன்றைக் கொணர்ந்தார். பெரியசாமி புல் பறித்து வந்து, அதற்கு புல்லால் ஒரு மெத்தை தயாரித்து விட்டார்.

சரி.. கூட்டிற்கு ஜன்னல்கள் வேண்டுமே! நாலு பக்கமும் ஒரு ஓட்டைக் காலணா அளவில் வட்டமான ஜன்னல்கள் நாலுபக்கமும் வைத்தோம். பின் அந்தக் குஞ்சைக் கொஞ்சி, அதன் வீட்டினுள் வைத்தோம். மேல் அட்டையை டேப் போட்டு ஒட்டி விட்டோம்.

இதை எங்கு வைப்பது? அலுவலகத்தின் முழு வரைபடமும் எங்கள் கண்முன் ஓடியது. ‘பூனை மற்றும் எலி’ யிடமிருந்து வேறு காப்பாற்ற வேண்டும். ம்.ம்…’ யோசித்தோம்! யோசித்தோம். நம் நண்பர்கள் இருக்கிறார்களே! பலே புத்திசாலிகள். அதை ஒரு கயிறு போட்டுக் கட்டி, அலுவலக அறை ஒன்றில் தொங்க விட்டு விட்டோம். அதனால் குஞ்சுக்கு ஒரு மரத்தில் இருக்கும் உயரமான, ஊஞ்சல் போன்ற உணர்வும் வரும்.

அதை அப்படிப் பத்திரப் படுத்தி விட்டு, அதை விட்டுப் பிரிய முடியாது பிரிந்து வந்தோம். நாங்கள் மட்டும்தான் வந்தோம், எங்கள் உள்ளங்கள் எல்லாம் அதைச்சுற்றி அந்த அறையில்தான் இருந்தன. எனக்கு ஆட்டோ வரவே நானும் அருணாவும் கிளம்பி விட்டோம். மற்றவர்கள் அவரவர் விடுதிக்குச் சென்று விட்டனர். நானும் என் வீடு அடைந்து விட்டேன். ஆனாலும் ஏதோ எதையோ மறந்து வைத்து விட்டு வந்தாற்போல் அன்று முழுவதும் இருந்தேன்.

இரவு உறக்கம் வரவில்லை. அருணாவிற்கு போன் பண்ணுகிறேன். ‘அது சமர்த்தாக இருக்குமா?”  என்று கேட்கிறேன். அவளும், “எனக்கும் அந்தப் பறவைக் குழந்தை மேல், எண்ணம் முழுவதும் இருக்கு. அதற்கு ஒன்றும் ஆகாது மேடம்,  தூங்குங்க. எங்கள் வீட்டில் தஞ்சாவூரில் இப்படி நிறைய தடவை குஞ்சுகளை வளர்த்து இருக்கிறோம்” என்கிறாள்.

அவள் வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை ஊட்டின. ஏனெனில் அவள் இந்த மாதிரி பறவை, நாய் எல்லாவற்றுடனும் அன்பாய் பழகுவாள். அவர்கள் அம்மா வீட்டில் நாய் இருக்கிறது. இப்போது கூட அந்த நாய் குட்டி போட்டிருக்கிறது. என் தங்கை கூட ஒரு நாய் வளர்க்கிறாள். எனக்குதான் பயம், ஆனால் அதன் மேல் அன்பு உண்டு.  இப்படி பல விந்தைகளைக் கொடுத்து விட்டு இரவு முடிந்தது.

மறுநாள் அவசர அவசரமாக அலுவலகம் ஓடி (ஆட்டோவில்தான்) வந்தேன். அப்பாடா! ஜவஹர் எதிரில் வந்தார். “ஜவஹர்” என நான் அழைக்குமுன், “கவலைப்படாதீங்க! மீன் கொத்திக் குஞ்சு மிகவும் பத்திரமாக இருக்கு. அதற்கு சாப்பாடும் தண்ணீரும் கொடுத்து விட்டோம். இப்போது மிகவும் தெம்பாக இருக்கிறது. திறந்தால் பறந்து ஓடி விடும்” என்றார் அவர். “அன்பு பத்திரப் படுத்தும் தானே சுபாஷிணி” என்று வண்ணதாசன் என் காதில் சொல்வது போல் உணர்ந்தேன்.

‘அய்யய்யோ! கையெழுத்திட மறந்துவிட்டேனே’ என லிப்டில் ஓடினேன். பதிவேட்டில் போய்க் கையெழுத்திட்டு விட்டு வந்தேன். எதிரில் அருணா வந்து கொண்டிருந்தாள். “அருணா! பார்த்தியா பறவையை!” என்றேன். “கீழேதான் வைத்திருக்கிறார்கள் மேடம்” என்றாள்.

அடுத்தக் கட்ட கடமையைச் செய்வோம் என, என் நாற்காலிக்கு வந்து, “044 2235 4959” என்னும் ப்ளுக்ராஸ் எண்ணைப் போட்டேன். நேற்றுப் பேசிய பெண்ணே இப்பவும் வணக்கம் சொன்னாள். நானும் வணக்கம் சொல்லி விட்டு, “நேற்றுப் பேசியவள் நான்தான். அந்தப் பறவைக் குஞ்சை நாங்கள் பாதுகாத்து வைத்திருக்கின்றோம்” என்று கூறி எங்கள் அலுவலகத்தின் முகவரியை அளித்தேன். உடனே அவரும், “வண்டி வந்து அழைத்துச் செல்வார்கள் மேடம்! மிக்க நன்றி” என்றார்.  நாமல்லவா நன்றி சொல்ல வேண்டும்.

ஒரு மணி நேரத்தில் வண்டி புறப்பட்டு விட்டது. அவர்கள் வழி கேட்டனர். நானும் அவர்களுக்கு வழியை விவரமாகச் சொன்னேன். அரைமணி நேரம் கழித்துப் போன் பண்ணி ‘அவர்கள் எங்கு இருக்கிறார்கள்?’ என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

குயின் மேரிஸ் கல்லூரி அருகே வந்து விட்டார்கள் என்று அறிந்து கொண்டதும், ஜவஹரிடம் போய் “அவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் தயாராய் இருங்கள்” என்று கூறினேன். அதற்குள் அலுவலகத்தில் உள்ள தளத்தில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் அலுவலக வாசலில் கூடி விட்டோம்.

‘நீல நிற சிலுவை’ போட்ட ஆம்புலன்ஸ் ஒன்றை முதலில் முனைவர் சரவணன்தான் பார்த்தார். எங்கள் அலுவலம் முன் வந்து நின்றது. அதிலிருந்து இருவர் இறங்கி வந்து கூண்டு ஒன்றை எடுத்தனர். நாங்கள் அலுவலகத்திற்குள் அவர்களை அழைத்துச் சென்று எங்கள் ‘ஒருநாள் உறவை’ அவர்களிடம் கொடுத்தோம். பல செல்போன்கள் அன்பாய்ப் படம் பிடித்தன.

அனைவரும் அதனுடனேயே சென்று, கூண்டை வண்டியில் வைத்தோம். வண்டி புறப்பட்டது. பிரியா விடை கொடுத்து அனுப்பினோம். ஒருநாள் வந்த உறவுதான். ஆனால் பலநாள் பழகியதாய் எங்கள் சிந்தனையில் நின்று விட்டது. ‘எங்களை அதற்குத் தெரியுமா! எங்காவது பார்த்தால் எங்களைத் தெரிந்து கொள்ளுமா? தெரிந்து கொள்ளாவிட்டால் தான் என்ன?’

ஓர் இரவு தஞ்சம் என்று வந்தப் பறவைக்கே இந்தப் பாடுபட்டோமே! ஒருவரது வாழ்க்கைக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும், அவர்கள் வாழ்வின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் எனின் எத்துணைப் பாடுபட வேண்டும்!

அன்று தபாலில் ஒரு கவர் வந்தது. எனது அருமை எளிய நண்பர் எழுத்தாளர் ‘களந்தை பீர் முகம்மது’ அனுப்பிய கவர் அது. பறவையைப் பிரிந்த ஆசுவாசத்தில் அந்தக் கவரைப் பிரிக்கின்றேன். அதனுள் ஒரு செய்தித்தாள். அதனுடன் ஒரு கடிதம் ‘அச்செய்தித்தாளின் நான்காம் பக்கம் பார்க்கவும் ‘சாதி என்னடா சாதி’ என்னும் கட்டுரையைப் படிக்கவும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

‘களந்தை பீர் முகம்மது’ அவர்கள் மிகவும் எளிய மனிதர். பழகுவதற்கு அருமையான நண்பர். ஆனால் மிகவும் தெளிவான சிந்தனைவாதி. தன் சிந்தனைகளை மிகவும் அமைதியாக அழகாக எடுத்துரைப்பார். அவர் படிக்கச் சொல்கிறார் என்றால் நிச்சயமாக மிகவும் முக்கியமானதாகத்தான் இருக்கும் என்று எண்ணி அதைப் படிக்கத் தொடங்குகின்றேன்.

‘காந்தியம் இந்தியாவில் உச்சத்தில் இருந்த காலம்’ என்றுதான் அக்கட்டுரை தொடங்குகிறது. காந்தி, ‘அரிஜன்’ பத்திரிகை நடத்தியும், தாழ்த்தப்பட்டவர்களை உயர்குடியினர் செய்து வந்த கொடுமைகளை எதிர்த்தும் வந்த காலம் அது. அப்போது இராமநாதபுர மாவட்டத்தில் ஒரு கிராமத்தில், ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் தான் ‘அந்தணர்’ என்று பார்த்த மாத்திரத்தில் அறியும்படியாக நாமம், பூனூல் அணிந்து இருந்தார். தன் பெயருக்குப்பின்னும் ‘அய்யங்கார்’ என்று இணைத்து இருந்தார்.

இத்தகைய ஆசிரியர், காந்திஜியின் கொள்கையில் மிகவும் கவரப்பட்டு இருந்தார். ‘தாழ்த்தப்பட்டவர் அனைவரையும் உயர்த்த கல்வியே சிறந்த வழி’ என்னும் காந்தியக் கொள்கையை இந்த ஆசிரியர் ஏற்றுக் கொண்டு இருந்தார். எனவே அந்த ஆசிரியர் தன் மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும் போது பல நாட்டுப்பற்று மிக்கப் பாடல்களைச் சொல்லிக் கொடுத்தார்.

பாரதியாரின் பாடல்களைக் கற்றுக் கொடுத்து, சாதி பாராட்டாது வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். தன்னால் நேரடியாக காந்தியப் போராட்டத்தில் ஈடுபட முடியாத தாகத்தை, காந்தியக் கொள்கைகளை மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் இவ்வழியைச் செய்வதில் தன் பங்கை அளித்தார்.

இவரது வகுப்பில் ஒரு மாணவன், மிகவும் குறைந்த மதிப்பெண்கள் வாங்கி வந்தான். உடனே அவனை அழைத்து அவன் குடும்பச் சூழலை அறிந்தார். மேலும் அவன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன் வேறு. அவனை அழைத்தார் அந்த ஆசிரியர். அவனைத் தன் வீட்டுக்கு மாலையில் வருமாறு கூறினார். பாடம் தனியாகச் சொல்லிக் கொடுப்பதாகவும், அதற்கு அவன் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் கூறிவிட்டார்.

அவன், தன்னுடைய வீட்டிலிருந்து ஒரு காவல் நிலையம் தாண்டி, இரண்டு தெருக்கள் தாண்டி, ஆசிரியர் வீட்டுக்கு வர வேண்டும். தினந்தோறும் மாலையில் ஆசிரியர் வீட்டுக்கு மாணவன் வர, ஆசிரியர் பாடங்களைக் கற்றுக் கொடுத்தார்.

முதலில் அவன் தயங்கினான். பின் ஆசிரியரும் அவர் குடும்பத்தாரும் இவனுடன் அன்பாகப் பழகும் விதத்திலிருந்து அவனும் சகஜநிலையை அடைந்து, அவர்களுடன் பழகினான். பின் அவனுடைய மதிப்பெண்கள் உயர்ந்தது. அவனது பெற்றோர் ஆசிரியரிடம் வந்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

இப்படியாக இனிமையாகப் போய்க் கொண்டிருந்த வேளையில், திடீரென்று ஒருநாள், அம்மாணவன் மாலையில் வீட்டுக்கு வரவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது. ஆசிரியருக்கு மிகவும் கவலையாகி விட்டது. உடனே ஆசிரியர், மாணவன் வீடு இருக்கும் சேரி நோக்கிப் போனார். போகும் வழியில் ஒரு காவல் நிலையம் உண்டல்லவா, அதற்கு முன், அய்யோ! குத்துயிரும் குலை உயிருமாய்த் தன் மாணவன்…..அடடா! என்ன செய்வது! உடனே அவனை அள்ளியெடுத்தார். தன் வீட்டுக்கு அழைத்து வந்தார். அவர் குடும்பத்தாரே அவனுக்கு முதலுதவி செய்து, மருத்துவம் பார்த்துக் கவனித்துக் கொண்டனர்.

அவனது உடல்நிலை தன்னிலை அடைந்ததும், ஆசிரியர் அவனிடம் “நடந்தது என்ன?” என வினவினார். “அய்யோ! நான் அதைச் சொன்னால் செத்து விடுவேன்” என்றான். ஆனால் அதற்கு அந்த ஆசிரியரோ “நீ சொல்லாவிட்டால் நான் செத்து விடுவேன்” என்று உறுதியாய்க் கூறி விட்டார். அவனுக்கு வேறு வழியில்லாது நடந்ததைக் கூறத் தொடங்கினான்.

“ஒவ்வொரு நாளும் எங்கள் வீட்டிலிருந்து போலீஸ் ஸ்டேஷனைத் தாண்டித்தான் உங்கள் வீட்டிற்கு நான் வருவேன். இன்றும் அப்படித்தான் வந்து கொண்டிருந்தேன். நான் வரும்போது போலீஸ் ஸ்டேஷனில் இருந்த இன்ஸ்பெக்டர் என்னை அழைத்தார். எதற்கு அழைத்தார் என்பது புரியாமலேயே நானும் போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்றேன். என்னை அழைத்த அந்த இன்ஸ்பெக்டர், “உங்கள் வாத்தியார் சாதி மதம் பார்க்கக் கூடாது என்று சொல்கிறாரா?” என்றார். நான் “ஆம்!” என்றேன்.

அதன்பின் அந்தச் சிறுவன் தொடர்ந்து சொல்லத் தயங்கி அழுதான். ஆனால், ஆசிரியர் அவனை விடுவதாக இல்லை. இறுதியில், அழுது கொண்டே அந்தச் சிறுவன், “உங்கள் வாத்தியார்தான் சாதி மதம் இல்லையென்கிறாரே! அவருக்கு ஒரு மகள் இருக்கிறாளே! அவளை நீ கட்டிக் கொள்ள வேண்டியதுதானே?” என்று அந்த இன்ஸ்பெக்டர் சொன்னார். அதற்கு “இப்படியெல்லாம் பேசாதீர்கள்” என்றேன். நான் சொல்லி முடிப்பதற்குள் அவர் கையிலிருந்த லத்தியைக் கொண்டு, என்னை கண்மூடித்தனமாக அடித்து வீதியில் போட்டு விட்டார்” என்று சொல்லி மீண்டும் அந்தச் சிறுவன் அழுதான். “இதுதான் நடந்ததா?” என்று சொல்லிவிட்டு அந்தச் சிறுவனை அந்த ஆசிரியர் தேற்றினார்.

இதன்பின் மாதங்கள் உருண்டு ஓடின. காலம் நமக்காகக் காத்திருக்குமா என்ன நண்பர்களே! அதன் வேலையை அது செய்யத்தானே செய்யும். ஒருநாள், அந்த ஆசிரியர் தன் மாணவன் அடி வாங்கிய காவல் நிலையத்திற்குச் சென்றார். அவனை அடித்த இன்ஸ்பெக்டர் அங்கு அமர்ந்து இருந்தார். இவர் வந்த தோரணையைப் பார்த்த இன்ஸ்பெக்டர் அவரையறியாமல் எழுந்து நின்று விட்டார். அது உண்மையில் உரம். காந்தியத்தின் பலம். அதற்கு முன் யாரும் அலட்சியமாய் அமர்ந்து இருக்க முடியாதே!

ஒரு பத்திரிகையை அவரிடம் தந்தார் ஆசிரியர். இன்ஸ்பெக்டர் அனிச்சைச் செயலாய் அதை வாங்கிப் படித்தார். அது ஒரு திருமணப் பத்திரிகை. ‘மணமகன் என்னுமிடத்தில் அன்று அவர் சொல்லிச் சொல்லி அடித்த மாணவனின் பெயர். மணமகள் என்னுமிடத்தில் அந்த அந்தண வாத்தியாரின் மகள் பெயர்’. இன்ஸ்பெக்டரின் சப்த நாடியும் ஒடுங்கிப் போயிற்று. “படித்து விட்டீர்களா? முடிந்தால் திருமணத்தில் கலந்து கொள்ள வாருங்கள்” என்று கூறிவிட்டு, அவரைத் திரும்பிப் பார்க்காமலே சென்று விட்டார்.

நண்பர்களே! சற்று இங்கு சிந்திப்போம். ஒரு பறவைக் குஞ்சை ஒரு இரவு பாதுகாத்து வைக்கும் போது, அல்லது அதற்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்று நினைத்த போதே நாம் பலவற்றை சிந்திக்க வேண்டியிருந்தது. அந்த அந்தண ஆசிரியரோ, ஒரு சிறுவனை, அதுவும் தாழ்த்தப்பட்ட சிறுவனை உயர்த்த வேண்டும் என்று நினைக்கும் போது, அவர் யோசித்திருக்க மாட்டாரா என்ன? அவனது வளர்ச்சியின் எல்லாப் பரிமாணங்களிலும் அவருக்கு அக்கறை இருக்காதா என்ன?

அவரே செய்திருப்பார். அவனை மருமகனாக்க வேண்டும் என நினைத்திருப்பார். நினைத்ததை நடத்தியும் காட்டியிருப்பார். அதற்குள் இந்த சமூகத்தின் சீண்டல் இருக்கிறதே! அதைத்தான் நம்மால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. இந்தக் கட்டுரையாசிரியரே கூறுகிறார், ‘ இந்த மாதிரியான பல தியாகங்கள் வெளியில் பேசப்படுவதில்லை’ என்று. அவர்கள் பிறர் அறிய வேண்டும் என்றோ, பாராட்டிப் பேசப்பட வேண்டும் என்றோ காரியங்கள் செய்தில்லை நண்பர்களே! இதை அறிந்ததும், உடனே என்னிடம் பகிர்ந்து கொண்ட நண்பர் களந்தை பீர் முகம்மதிற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன்.

காந்தியத்தைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்திருக்கின்றன; வெளி வருகின்றன. ஆனால் இந்தக் காந்தியத் தொண்டரின் பெயர் கூட வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை. ஆம்! உண்மையான தியாகத்தைப் பதிவு செய்யாத தேசம் எப்படி உருப்படும்?

இந்த ஆசிரியர் பெயருக்குப் பின்னால் தன் சாதியை எழுதிக் கொண்டவர்தான். அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த பல தேசபக்தர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் தங்கள் சாதியை இணைத்துக் கொண்டவர்கள்தான்.  அவர்கள் பெயர்களுக்குப் பின்னால் மட்டுமே சாதி இருந்ததே தவிர அவர்கள் மனதில் சாதிய உணர்வு இருந்ததே இல்லை.  இன்றைய தலைவர்களின் பெயருக்குப் பின்னால் சாதி அடையாளம் எதுவும் இல்லைதான். ஆனால் இன்றைய பெரும்பான்மையான அரசியல் தலைவர்களின் உள்ளங்களில், சாதிய உணர்வு நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிறது. அதனால்தான் இந்த தேசத்தில் சாதியக் கட்சிகளின் சதிராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இச்செய்தித்தாளின் அதே பக்கத்தின் எதிர் மூலையில் “புதிய முறையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை” என்ற செய்தி வெளி வந்திருக்கின்றது. இதை நாம் என்னென்று சொல்ல?-!!

 

படத்துக்கு நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஒன்றிலிருந்து இன்னொன்று.

  1. மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது சாதி விவரங்களை, சம்பந்தப்பட்ட நபர் விரும்பினால் மட்டுமே பதிவு செய்யப்படவேண்டும் என ஒரு விதி கொண்டு வரலாமே! திராவிடக் கட்சிகளும், காந்தியவாதக் கட்சிகள் என அழைத்துக் கொள்ளும் தேசீயக் கட்சிகளும் இதனை நடைமுறைப்படுத்த குரல் எழுப்பலாமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.