ஈழத்தில் தந்தையை இழந்த 45 சிறுவர்கள்

0

மறவன்புலவு க.சச்சிதானந்தன், ஈழத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பயணத்தின் ஒரு பகுதியாகத் தென் மராட்சிக்கு 2010 செப்டம்பர் 2ஆம் நாள் சென்றார். அங்கே, தந்தையை இழந்த 45 சிறுவர்களைச் சந்தித்தார். இவர்கள் அனைவரும், கடந்த 6 மாதங்களில் தந்தையை இழந்தவர்கள். இப்போது ஆதரவற்ற நிலையில் தென் மராட்சியில் தங்க வைக்கப்பெற்றுள்ளனர்.

தென் மராட்சியில் பிறந்தவர்கள் சிலர், தற்சமயம் இலண்டன் மாநகரில் வசித்து வருகிறார்கள். அவர்கள் சார்பாக, இந்தச் சிறுவர்களுக்குச் சில அன்பளிப்புகளை மறவன்புலவு க.சச்சிதானந்தன் வழங்கினார். சிறுவர்கள் ஒவ்வொருவருடனும் சச்சி குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் செலவிட்டு, ஆறுதல் கூறினார். நம்பிக்கை ஊட்டினார். சிலர், உடலில் தீக்காயங்கள் இருந்தன. சிலர் மனநிலை பாதிப்புக்கும் உள்ளாயினர். சிலர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, தற்சமயம் பரோலில் வெளிவந்துள்ளனர். அதனால் அன்பளிப்புகளைப் பெறுவதற்கு அரசு அனுமதிக்காகக் காத்துள்ளனர்.

இது தொடர்பாகச் சச்சிதானந்தன் கூறியுள்ளதாவது-

“நான் பேசியதைக் கேட்ட பிறகு, அவர்கள் என்னைப் புறப்பட அனுமதிக்கவில்லை. சிலர் என்னைக் கட்டிக்கொண்டனர். சிலர் தேம்பி அழுதனர். சிலர் என் கைகளை அழுந்தப் பற்றினர். நான் அங்கிருந்து புறப்படும் வரை அவர்கள் அனைவரும் என்னுடனே இருந்தனர். நான் நாளையும் இதே போல் வேறொரு குழுவினைச் சந்திக்க உள்ளேன்.

“1979இல் நான் தொடங்கிய அறவழிப் போராட்டக் குழு [Nonviolent Direct Action Group (NVDAG)], இந்த மறுவாழ்வுப் பணிகளை ஒருங்கிணைக்கிறது.

“தந்தையுடன் உள்ள குழந்தைகள், தந்தையை இழந்தவர்களின் துயரத்தை அறிய மாட்டார்கள். என் தந்தையார், தம் 9ஆம் வயதில் தம் தந்தையாரை இழந்தவர். அதன் தொடர்ச்சியாக அவரை அருகில் இருந்த பிள்ளையார் கோயிலுக்குக் கொடையாக வழங்கினார்கள். எனவே, பிள்ளையாரின் மகனாகவே என் தந்தையார் வளர்ந்தார். அவரின் இளம் பருவத்தில் அவருக்கு நேர்ந்த இன்னல்களை அவர் வாயிலாக நான் கற்றுணர்ந்தேன். ஒவ்வொரு நாள் காலை பிரார்த்தனையிலும் இவ்வளவு அற்புதமான தந்தையை அளித்ததற்காகப் பிள்ளையாருக்கு நன்றி கூறுவேன்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *