கிரேசி மோகன்
————————————–

சஞ்சாரி நாரதர், சக்களத்தி அற்றவளாய்
பஞ்சாப கேசனுடல் பாகியாய் -பெஞ்சாதி
பார்வதியென்(று) ஆக்கும் பனிமலை மன்னனே
பார்விதி என்றார் பலத்து….(49)….

தும்புருவின் வாக்கில் திளைத்ததில் தந்தையும்
தம்பருவப் பெண்மணம் தாமதித்தான் -தென்புறும்
வேறுவாய்த் தீயினுள் வேள்வியவிர் பாகத்தை
தாரைவார்ப் பாரோ தெரிந்து….(50)….

வரம்கொட்டும் சாமி வரன்கேட்டுச் சென்றால்
தரம்பார்த்(து) இகழ்ந்திடுமோ தன்னை -வரையுற்றோன்
கேட்டு மறுத்துவிட்டால் கேலிப் பொருளாகும்
பாட்டை நினைத்துவிட்டான் பற்று….(51)….

அப்பனிடம் கோபித்து அப்பார்வதி தன்னுடலை
எப்போது தீயில் எரித்தாளோ -அப்போதே
அத்தனை ஜீவனையும் ஆளும் சிவபிரான்
பத்தினி பற்றொழித்தார் பார்….(52)….

கின்னரர், கஸ்த்தூரி, கங்கைக் கரையுயர்ந்து
விண்ணுறும் தேவமர வெற்பில்முக் -கண்ணரன்
அஞ்சு புலனாண்டு ஆனைத்தோல் பூண்டுதவம்
விஞ்சுமெழில் குன்றில் வளர்ப்பு….(53)….

சரக்கொன்றை சூடி, மரப்பட்டை போர்த்தி
சிரங்கால் மனோசிலை சாற்றி -விரைப்பூ
சிலாஜது மேவும் சிறுபாறை குந்தி
கலாஜடை யோந்தொண்டர் கூட்டு….(54)….

ஆளை உறையவைக்கும் பாளப் பனியிலரன்
காளை குளம்புகளால் கீறித்தன் -தோளுயர்த்தி
கர்வமாய் காட்டெருது கண்கலங்க கத்துதலால்
சர்வாங்கம் சிங்கம் சிலிர்ப்பு….(55)….

தானே தவப்பலன் ஆனோன் தனதெட்டில்
வானோர் விரும்பிடும் வேள்வித்தீ -ஏனோ
ஸமித்தால் எரியூட்டி செய்த தவத்தின்
நிமித்தம் சிவன்போக்கு நெஞ்சு….(56)….

தானாய்ச் சிறந்தவன், வானே வணங்கிடும்
மூணாம் விழிகொள் முதலையிம -வானே
பணிந்து தொழுது பணிவிடையைப் பெண்ணை
அணிந்திடச் சொன்னான் அழைத்து….(57)….

சஞ்சலம் செய்தாலும் கொஞ்சமும் மாறாத
நெஞ்சுரம் கொண்டோனே ஞானவான் -பஞ்செனப்
பார்வதி வந்து பணிவிடை செய்திட
ஓர்விழித் தீக்கண்ணன் ஒப்பு….(58)….

கொய்தனள் பூக்களை, செய்தனள் சுத்தமாய்
மெய்தவன் வீற்றிருக்கும் மேடையை -பெய்தனள்
தீர்த்தமும் தர்பையும்: நீர்தலையோன் தண்மதி
தீர்த்ததவள் கொண்ட தவிப்பு….(59)….கிரேசி மோகன்….!

சர்கம் ஒன்று சுபம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *