வண்ணங் கொண்ட வண்ணாத்திப்பூச்சியே!

0

திருமதி.ஷைலஜா.

வண்ணாத்திப் பூச்சிகள் பார்க்க அழகானவை என்பதை யாராலும் மறுக்கமுடியாது. பட்டாம்பூச்சி என்றும் இதை சொல்கிறார்கள்.வண்ணாத்துப்பூச்சியா?வண்ணாத்திப்பூச்சியா?எது சரி.’வண்ணாத்திப்பூச்சி வயசென்ன ஆச்சி’என்ற திரைப்பாடல் நினைவுக்கு வருகிறது. ‘பூப்பூவா பறந்து செல்லும் பட்டுப்பூச்சி அக்கா’  என்ற பாட்டு, ‘ஓ..பட்டர்ஃப்ளை விரித்தாய் சிறகை’  இப்படி சில பாட்டுக்களும் நினைவுக்கு வரணுமே!

வண்ணாத்திப் பூச்சிகள் எப்போதும் தோட்டங்களில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும். அவற்றை சில இடங்களில் கூட்டம் கூட்டமாகத் தரையில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கலாம்.  அவை ஏன் அப்படி உட்காருகின்றன தெரியுமா?  தங்கள் உடலுக்குத் தேவையான உப்பினை உறிஞ்சி எடுத்துக் கொள்வதற்காகத் தான். (இந்தத் தகவலை அளித்த திரு. கல்பட்டு நடராஜன் அவர்களுக்கு நன்றி)

பட்டர்ஃபிளை எபெக்ட் என்றால் ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய ஒரு மாற்றத்தை தோற்றுவிக்கக் கூடிய தன்மை உடையது எனும் பொருள்பட உள்ளதை விக்கிப்பீடியா மூலம் அறிந்துகொண்டேன். அதாவது வண்ணாத்திப்பூச்சி பறக்கும் எபெக்டு பெரிய சுனாமி வரக் காரணம் ஆகலாமாம். பூனை நாய்க்கெல்லாமும் கூட பூமில வரப் போகிற இயற்கைச் சீற்றங்கள் பற்றிய முன் எச்சரிக்கை உணர்வு இருக்குமாம்.

பட்டர்ஃப்ளை பார்க்குகள் வெளிநாட்டில் குறிப்பா சிங்கப்பூர், கனடாவில் மிகவும் பிரபலம் என்றாலும் கார்டன் சிடி ஆஃப் இண்டியா என்கிற பெங்களூரின் பன்னார்கட்டா பகுதியில் சற்றும் செயற்கை சூழலின்றி காடுகள் அமைந்த இடத்தில் நகரின் தெற்கே சிடியிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ‘பன்னார்கட்டா நேஷனல் பார்க்’கிற்கு தினமும் பல்லாயிரம் மக்கள் வந்து போகிறார்கள்.

லயன்சஃபாரி (Lionsafari)எனப்படும் சிங்கங்களை சுதந்திரமாய் அலையவிட்டு நாம் வாகனக் கூண்டிலிருந்து அவைகளை அருகே சென்று பார்ப்பது, இங்கு பல வருடங்களாக உள்ளது. ஆனால் சில வருடங்களாக மட்டுமே பட்டர்ஃப்ளை பார்க் என்று வண்ணாத்திப் பூச்சிகளுக்கென்றே பிரத்தியேகப் பூங்காவினை அமைத்துள்ளனர். இதைப் பற்றி சொல்லத்தான் வண்ணாத்திப்பூச்சி பற்றி சின்ன அறிமுகத்தோட கட்டுரை ஆரம்பமானது!

இந்த பட்டர்ஃப்ளை பார்க்குல பெரியவர்களுக்கு 30 ரூபாயும் சிறுவர்களுக்கு 15 ரூபாயும் டிக்கட் வசூலிக்கின்றனர்.(இது 2வருஷம் முன்னாடி இப்போ அதிகப்படுத்தி இருக்கலாம்).

இந்தப் பார்க்கில் நீங்கள் புகுந்துவிட்டால் அவ்வளவுதான்!  சிறகடிக்கும் பட்டுப்பூச்சியாய் மகிழ்ந்து போய் விடுவீர்கள். அழகழகான வண்ணத்துப் பூச்சிகளைப் பார்க்கும்போதே ’ஓ பட்டர்ஃப்ளை விரித்தாய் சிறகை பறித்தாய் என் மனதை’ என்று பாடத் தோன்றும். எத்தனை வண்ணங்கள் அதன் உடலில்! வண்ணத்துப்பூச்சிகள் வந்து அமருவதற்காகவே வளர்க்கப்படும் ரோஜாத் தோட்டம், பழங்கள் கொண்ட மரங்கள், சிறு ஓடைகள் என்று உள்ளம் கொள்ளை போகும் விதத்தில் அமைந்துள்ளது இந்த பட்டர்ஃப்ளை பார்க்கில்.

விதம் விதமான ரோஜாக்களைப் பார்ப்பதா பச்சை, ஆரஞ்ச், மஞ்சள், நீலம், சிவப்பு என்று சிறகில் கொண்ட ஓவியத் தீற்றலுடன் வண்ணத்துப்பூச்சிகள் அங்கும் இங்கும் பறக்கின்றதைப் பார்ப்பதா?.நம் கையில் நம் தலைமேல் அமர்ந்து ஹலோ சொல்லிப் போகின்றன.  ‘எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்று பாரதி போல பாடத் தோன்றும் அளவிற்கு அந்த இடத்தில் நமக்குப் பரவசம் தோன்றுவது நிஜம்!

ஏழரை ஏக்கர் நிலப்பரப்பில் 10000 சதுர அடி டோம் அதாவது வட்ட வடிவமான வளைவுப் பகுதி கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்தப் பார்க்கில் ஒரே நேரத்தில் இருபதிலிருந்து முப்பது வகை வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்கலாம்.

விலங்குகளுக்கு மட்டும் தான் பூங்கா இருந்தது, இப்பொழுது வண்ணத்துப் பூச்சிகளுக்கும் உள்ளது. இது அக்டோபர் நவம்பர் மாதங்களில் மட்டுமே திறந்திருக்கும். ஏனெனில் வண்ணத்துப்பூச்சிகளுக்கான சீசன் இதுதான் என்பதால், குறிப்பிட்ட இரு மாதங்கள் மட்டுமே நீங்கள் அதிகம் அவைகளைக் கண்டு மகிழலாம்!

‘சில நேரங்களில் பட்டாம்பூச்சிகள் நம்ம கண்ணுக்கு தென்படாம ஏமாத்துது’ என்று சிலர் புகார் சொல்கிறார்கள். அதென்னவோ நாங்க போகிற போதெல்லாம் ஜோரா வந்துடுதே(மலர்முகம் என்பதாலோ? !!(ஓவர்தான் பொறுத்துக்குங்க)!!

என்ன எல்லோரும் இந்த சீசனுக்கு புறப்பட்டு விட்டீர்களா பெங்களூர் பட்டர்ஃப்ளை பார்க்கிற்கு?!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *