தமிழாகரர் தெ.முருகசாமியின் பேருரை

அண்ணாகண்ணன்

கம்பன்அம்பத்தூர் கம்பன் கழகத்தின் 32ஆம் நிகழ்ச்சி, 2011 ஆகஸ்டு 27 அன்று நடைபெற்றது. கம்பனில் போர்க்களக் காட்சிகள் என்ற தலைப்பில் இரா.கு.இலக்குவன் பேசினார். கம்பனில் ஒரு பாடல் என்ற தலைப்பில் தமிழாகரர் தெ.முருகசாமி சொற்பொழிவு ஆற்றினார். இவற்றுள் முருகசாமியின் ஆற்றொழுக்கான உரை, என்னைப் பெரிதும் கவர்ந்தது.

மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும், மகனைப்
பெற்ற அன்றினும், பிஞ்ஞகன் பிடிக்கும் அப் பெருவில்
இற்ற அன்றினும், எறிமழு வாள் அவன் இழுக்கம்
உற்ற அன்றினும், பெரியதோர் உவகையன் ஆனான்.

என்ற ஒரு பாடலை எடுத்துக்கொண்டு, ஒன்றரை மணி நேரம் மிகச் சிறப்பாக உரையாற்றினார். இதிலும் முதலிரண்டு அடிகளுக்கே இந்த ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. நேரமின்மையால், அத்துடன் முடித்துக்கொண்டார். ஒவ்வொரு சொல்லுக்கும் இலக்கண, இலக்கிய உரை விளக்கங்களுடன் துணைக் கதைகள், எடுத்துக் காட்டுகள் தந்தார். பாடல் வரிகளை இசையுடன் பாடிக் காட்டினார்.

என் நினைவில் உள்ள வரை, தமிழாகரர் தெ.முருகசாமியின் உரையிலிருந்து சில முத்துகள்:

* நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாடல்களின் சாரத்தை நம்மாழ்வாரின் ஆயிரம் பாடல்களில் பெறலாம். அந்த ஆயிரம் பாடல்களின் சாரத்தை அதன் முந்நூறு பாடல்களில் பெறலாம். அந்த முந்நூறு பாடல்களின் சாரத்தை நூறு பாடல்களில் பெறலாம். அந்த நூறு பாடல்களின் சாரத்தை முதல் பத்துப் பாடல்களில் பெறலாம். அந்த முதல் பத்துப் பாடல்களின் சாரத்தை ‘உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்’ எனத் தொடங்கும் முதல் பாடலில் பெறலாம். அந்த முதல் பாடலின் சாரத்தை ’உயர்வற’ என்ற முதல் சொல்லில் பெறலாம் என்பார்கள். இவ்வாறாக, நாலாயிரம் பாடல்களின் சாரத்தை ’உயர்வற’ என்ற ஒரு சொல் எடுத்துக் காட்டுகிறது.

* வாசகம் என்பது வடசொல்; வாய்மொழி என்பதே தமிழ்ச்சொல். வைணவத்திற்கும் சைவத்திற்கும் மோதல் இருந்த காலத்தில், திருவாய்மொழி என்பதே நற்றமிழ் நூல்; திருவாசகம், வட சொல் தலைப்பினைக் கொண்டுள்ளது என வைணவர்கள் வாதிட்டனர். அதற்கு மறுமொழியாக, திருவாய்மொழிக்கு உரிய உரை மணிப்பிரவாள நடையில் உள்ளது எனச் சைவர்கள் கூறினர்.

* பெண், மீண்டும் மீண்டும் கேட்பதில் மகிழ்கிறாள். குழந்தைக்குச் சோறு ஊட்டும்போது, ’சோறுன்னு சொல்லு’ எனக் கேட்டுச் சொல்ல வைக்கிறாள்; அதன் கொச்சை மொழிச் சொல்லை, ’இன்னொரு முறை சொல்லு, இன்னொரு முறை சொல்லு’ என முத்தமிட்டு முத்தமிட்டுக் கேட்கிறாள். அதனால்தான் ’சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்றார் வள்ளுவர்.

* காரைக்குடி பக்கத்தில், திருமணத்திற்குப் பெண் பார்த்துவிட்டு வரும்போது, ’பெண் எப்படி?’ என்று கேட்டால், ’உள்ளது போல் இருக்கிறாள்’ என்பார்களாம்.

* அப்பா – அம்மா என்ற சொற்கள் கூட, தமிழில் பொருத்தமுற அமைந்துள்ளன. அப்புடன் சேர்ந்த உப்பே போல என இலக்கண உரையாசிரியர்கள் முன்பு சான்று காட்டினார்கள்; அப்பு என்றால் தண்ணீர் எனப் பொருள். அந்நீரை உடையவன் அப்பன். அந்தத் தண்ணீரைப் பெற்றுக்கொண்டு, இனிமை ஆக்குபவள் அம்மா; அம் என்றால் அழகிய எனப் பொருள். பெண் பெறுவதால், அவளுக்கு மட்டுமே பெற்றவள் என்ற சொல் பொருந்தும்.

* அம்மாவையும் குழந்தையையும் பிரிப்பதில்லை; கேரளப் பகுதிகளில் அம்மையும் குழவியும் என்பார்கள்; தமிழ்நாட்டில் அம்மி கொத்துபவர்கள், தெருவில் அம்மி கொத்தலையோ  எனக் கூவிக்கொண்டே  வருவார்கள்; அம்மியுடன் குழவியையும் கொத்தினாலும் எங்கும் குழவி கொத்தலையோ எனக் கூறுவதில்லை; சொல் அளவில் கூட குழவியைக் கொத்துவதைச் சொல்லாத சமூகம், தமிழ்ச் சமூகம்.

*“வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான்”

என்ற பாடலில் வாரணம் பொருத மார்பு, வரையினை எடுத்த தோள், நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நா, தாரணி மவுலி பத்து, சங்கரன் கொடுத்த வாள் ஆகிய அனைத்தும் பிறிதின்கிழமை ஆகும்; வீரம் என்பது தற்கிழமை ஆகும்.

* இராமன், சிவதனுசு வில்லைத் தூக்கி, நாணேற்ற முயல்கையில் முறிக்கிறான். அதன் பின் சீதையை மணமுடிக்கச் செல்கிறான். பெருமான் புறப்பாடு ஆயிற்றே! இந்த இடத்தில் வரும் பாடல்களைக் கம்பன், மல்லாரி ராகத்தில் அமைத்துள்ளான். அந்தப் பாடல்கள்:

தோகையர் இன்னன சொல்லிட, நல்லோர்
ஓகை விளம்பிட, உம்பர் உவப்ப,
மாக மடங்கலும், மால் விடையும், பொன்
நாகமும், நாகமும், நாண நடந்தான். 32

ஆடக மால் வரை அன்னது தன்னை,
‘தேட அரு மா மணி, சீதை எனும் பொன்
சூடக வால் வளை, சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது’ என்ன, எடுத்தான். 33

(கம்பராமாயணம்/பால காண்டம்/கார்முகப் படலம்)

தமிழாகரர் தெ.முருகசாமி (65), புதுவையில் வசித்து வருகிறார். காரைக்குடியில் உள்ள இராமசாமி தமிழ்க் கல்லூரியில் 31 ஆண்டுகள் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழண்ணலுடன் இணைந்து அகநானூற்றுக்கு உரை வரைந்துள்ளார். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், கம்ப ராமாயணம், வில்லிபாரதம், பன்னிரு திருமுறை ஆகிய இலக்கியங்களில் ஆழங்கால் பட்டவர். இவற்றுள் சில குறித்து, தொடர் சொற்பொழிகள் ஆற்றியவர். கடலூரில் திருவிளையாடல் புராணத்திற்கும் புதுச்சேரியில் திருமந்திரத்திற்கும் தொடர் வகுப்புகள் எடுத்து வருகிறார்.

தமிழாகரர் தெ.முருகசாமி அவர்களின் தமிழ்ப் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

 

இவர் படைப்புகள் சில, இங்கே:

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “தமிழாகரர் தெ.முருகசாமியின் பேருரை

 1. கம்பன் விழா இனிது நடந்தது குறித்து மகிழ்ச்சி. கம்பராமாயணத்தை
  ஒரு சாரார் எரிக்கும் நிகழ்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தபோது
  ரசிகமணி டி கே சி அவர்கள் கம்பரின் புகழைப் பரப்பிக்கொண்டிருந்தார்.
  அப்போது கம்பராமாயண எதிர்ப்பாளர்கள் உச்சரித்த வாசகம் என்னவென்றால்,
  ” எத்தனை டி கே சி வந்தாலும் கம்பராமாயணத்தைக் காப்பாற்றமுடியாது”
  என்பதே. 1948 இல் நான்காவது கம்பர் மாநாட்டில் அவர் ஒரு பேருரை
  நிகழ்த்தியுள்ளார். அப்போது அவர் சொன்ன ஒரு வாசகம்,” கம்பரோ
  கவிச்சக்கரவர்த்தி. தமிழ்க் கவிக்கு மாத்திரம் சக்கரவர்த்தி அல்ல.
  உலகக் கவிக்கே சக்கரவர்த்தி என்று சொல்லுதல் பொருந்தும். அப்படிச்
  சொல்லுவது வெறும் வார்த்தை அல்ல. தேறத் தெளிந்து சொன்ன சொல்.”
  இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

 2. அன்று அம்பத்தூர் கம்பன் கழக நிகழ்வினை கண்டு ரசித்தவன் என்கின்ற முறையில்… திரு இரா.இலக்குவணன் அவர்கள் “போர்க்க்ளகாட்சிகள்” என்ற பெயரில் இரத்தினசுருக்கமாக… குறித்த நேரத்துக்குள் ஒருநிமிடம் முன்னதாகவே முப்பத்தி ஒன்பது நிமிடங்களில் தெளிவாக சுவையாக எடுத்துரைத்தது நன்றாக இருந்த்தது. திரு.தெ.முருகசாமி அவர்கள் “கம்பனின் ஒரு பாடல்” தலைப்பில் இவரது கருத்துக்கள் ரெம்பப சுவையாக இருந்தது. இடை இடையில் அந்த பாடலை ராகத்துடன் ஒருவிதமான நடனத்துடன் பாடி பேசியது மிகவும் மகிழ்ச்க்கு உகந்த்ததாக இருந்ததது உண்மைதான். இவருக்கு கொடுக்கப்பட்ட நேரம் பத்தாத காரணத்தால் அந்த ஒரு பாடலின் இரு வரிகள் விளக்கம் சொல்ல வாய்ப்பு அவருக்கு இல்லை. கேட்க்கும் பாக்கியம் நமக்கும் இல்லை. இக்குறை நிகழ்ச்சி பொறுப்பாலர்களைத்தான் சேரும். திரு.தெ. முருகசாமி அவர்களின் உரைதனை பற்றி நன்கு அறிந்த விழாகுழு அமைப்பாளர்கள் அவருக்கு “நேரம்” சரியாக ஒதுக்கிதராதது தவறுதான். இல்லை இது போன்ற நட்சத்திர சிறப்பு பேச்சாளர்களை ஆண்டு விழா போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான நேரத்தை ஒதுக்கிகொடுத்து பேசவிட வேண்டும். அவருக்கும் முழுமையாக பேசிடாமல்…. நாமும் அவரது முழுமையாக் உரையினை கேட்க விடாமல் அனைவருக்கும் கொஞ்சம் சங்கடமாக வருத்தமாகவே இருந்த்தது உண்மை. இதுபோன்ற நிகழ்வுகளை “அம்பத்தூர் கம்பன் கழகம்” வருங்காலத்தில் தவிர்த்தால் நன்றாக இருக்கும். அவரிடம் படித்த மாணவர்கள் வந்திருந்து சிறப்பித்தது மகிழ்ச்சி என்றாலும், அவரது பேச்சுக்களை உரையினை…மீண்டும் மாணவியின் நிலையில் அமர்ந்தபடி குறிப்பெடுத்த பேராசிரியர் திருமதி.
  சிதம்பரம் அவர்கள் செயல் என்னை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இத்தகைய பண்பு இப்போதுள்ள மாணாக்கர்களிடம் இல்லை என்பதை நினைத்து கொஞ்சம் வருத்தமாகவும் இருந்த்தது. அதே நேரத்தில்… ஒரு ஓரமாக அமைதியாக நிகழ்ச்சியினை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நமது அண்ணா கண்ணன் அவர்கள் இவ்வளவு சிறப்பாக இச்செய்தியினை எழுதி வெளியிட்டிருந்தமை கண்டு ஆச்சர்யமாகவும் இருக்கிறது. எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் இவரை அழைத்துக்கொண்டு சென்றால் மட்டுமே போதுமென்று நினைக்கிறேன். நிகழ்ச்சியினை பற்றி நடந்த நிகழ்வுகளை பற்றி மிகவும் சிறப்பாக எழுதி கொடுத்து விடுவார் நேற்று நினைக்கிறேன்.வாழ்த்துக்கள் அண்ணா கண்ணன் அவர்களுக்கு.

 3. சிறு திருத்தம்:
  முந்தய கடிதத்தில் கடைசி வரியில் “நேற்று” என்று இருப்பதை “என்று”என படிக்கவும். தவறுக்கு வருந்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *