இளங் கன்று…………
உமா சண்முகம்இன்றைய யூத்களிடம் இந்த ஃபன் என்ற வார்த்தைதான் நாக்குகளில் புரண்டு, நிமிடத்துக்கு நான்கு முறை வெளியே வருகிறது. மொபைலில் பேசினாலும் சரி எஸ்.எம்.எஸ், மற்றும் ச்சாட்டிங்கில் பேசினாலும் சரி, இந்த வார்த்தை இல்லாமல் அவர்களது உரையாடல் இருக்காது.
‘அதென்ன ஃபன்?’ என்று யாராவது கேட்டு விட்டால் போதும். உடனே “ஹலோ உங்களுக்கு இப்ப என்ன பிரச்சினை?” என பதில் கேள்வி கேட்கிறார்கள்.
ஆனால் இந்த ஃபன் வாழ்க்கை, இளைஞர்களின் டீன் வயதுடன் முடிந்து விட்டால் பரவாயில்லை. அதை தாண்டிப் போகும் போது வாழ்க்கையின் தத்துவங்கள், நடைமுறைகளென சகலத்தையும் இந்த ஃபன் நடவடிக்கைகள் முடக்கி விடுகின்றன. விளைவு, வாழ்க்கையில் சகிப்பு, பொறுமை, பரஸ்பர விட்டுக் கொடுக்கும் தன்மை எல்லாம் போய் தனி மனித சுதந்திரம்,உரிமைதான் தலை தூக்கி நிற்கிறது.
நம் நாட்டில் 60 சதவீத ஆண்களும், 40 சதவீத பெண்களும், தங்களுக்கு எல்லா வகையிலும் பொருத்தமானவர் என்று நினைத்து எதிர் பாலினத்தை சேர்ந்தவர்களுடன் வாழ்க்கையில் நுழைவதில்லை. அதனாலேயே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, சகித்து பொறுமையுடன் வாழ்வது இயலாத விஷயமாகி விட்டது.
இன்றைய இளம் தலைமுறையினர் எதையும் சகித்துக் கொள்ள தயாரில்லை. மேற்கத்திய உணவு, நடை, உடை பாவனையில் ஊறிப் போன டீன் ஏஜினருக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் என்பதே வேப்பங்காயாக கசக்கிறது. பிடிக்காத வாழ்க்கையை கட்டி இழுத்துப் போக இருவருமே விரும்புவதில்லை. இதன் விளைவாகத்தான் விவாகரத்து 150 மடங்கு அதிகரித்துள்ளது.
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில்தான் அதிக அளவில் விவாகரத்துகள் நடக்கின்றன. ஆனால் வெஜிடபிள் சார்ந்த உணவு, யோகா போன்றவற்றிற்கு எப்போது அவர்கள் மாறினார்களோ, அப்போதே விவாகரத்துக்கள் அங்கே குறைய ஆரம்பித்து விட்டன.
‘குடும்பம் என்பது ஒரு ஆலமரம். இதை இந்தியாவில் உளள மக்கள் நன்றாகவே பின் பற்றுகின்றனர். என் மகளுக்கு நல்லபடியாக திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்று ஒரு தகப்பனாக கவலைப்படுகிறேன்’ என்று இந்தியாவிற்கு சில ஆண்டுகளுக்கு முன் வந்தபோது சொன்னார் முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன்.
ஆனால் இந்தியாவில் உள்ள இளம் தலைமுறையினரில் சிலர் அமெரிக்கர்களாக மாறி வருகின்றனர் என்பதற்கு ஆதாரம், நம் நாட்டில் பெருகி வரும் இந்த விவாகரத்து அதிகரிப்புதான். இது, கடந்த 5 ஆண்டில் 150 மடங்குஅதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் சொல்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குடும்ப நல கோர்ட்களில் கூட்டமே இருக்காது. ஆனால் இன்று நிற்க இடமில்லாதபடி கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக திருமணமான முதல் ஆண்டிலேயே பிரியும் இளம் தம்பதிகளின் எண்ணிக்கை கணிசமாக கூடி வருகிறது. எந்தச் சண்டையும் இல்லாமல் கோர்ட்டுக்கு வந்து, சிரித்தபடியே பிரிந்து செல்லும் தம்பதிகளும் அதிகமாகி விட்டனர். இன்று டைவோர்ஸ், நாளை இன்னொரு கல்யாணம்.
திருமணம் செய்யத்தான் பல வெப்சைட்கள் இருக்கின்றன என்று நினைக்க வேண்டாம். இப்போது விவாகரத்து செய்யக் கூட ஏகப்பட்ட வெப்சைட்கள் வந்துவிட்டன. போதாக்குறைக்கு விவாகரத்து ஆன ஆண்,பெண்களுக்கு வரன் பார்க்கவும் தனி வெப்சைட்கள் வந்து விட்டன. பத்தாண்டுகளுக்கு முன் வரை,அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான இந்த நடைமுறைகள் இப்போது இந்தியாவில் புகுந்து பணம் பண்ணி வருகின்றன.
‘இளம் தலைமுறையினர் விவாகரத்து செய்து கொள்ள என்ன காரணம்?’ என்று சமீபத்தில் ஒரு வெப்சைட் சர்வே செய்தது. அதிகச் சம்பளம் அதிகத் திறமை என்று எல்லாவற்றிலும் சரி நிகர் சமானமாக இருப்பதுவும், ஈகோ இருப்பதும் பெண்களுக்கு அதிக ஆளுமை உரிமை கிடைத்ததுமே முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் உண்மையான காரணம் குடும்ப முறைதான். அதாவது,
1. கூட்டுக் குடும்ப முறை கிட்டத்தட்ட இல்லாமல் போய் விட்டது. வீட்டுக்கு தெய்வங்களான தாத்தா பாட்டிகளே இல்லாத நிலை வந்துவிட்டது.
2. வாழ்க்கை சகிப்புத் தன்மையும், பொறுமையும் கொண்டது என்ற உண்மை எம். பி. ஏ போன்ற மேற்படிப்புகளை படித்தவர்களுக்குக் கூட புரியவில்லை.
3. திறமையில்,சம்பளத்தில் வெற்றி கண்ட பலரும் வாழ்க்கையில் தோல்வி அடையக் காரணம் மேற்கத்திய பாணி லைப் ஸ்டைல்தான்.
மொத்தத்தில் எல்லா சுதந்திரமும் வந்தாச்சு; ஆனால் சகிப்புத் தன்மை போயே போயாச்சு.