Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்… (14)

க. பாலசுப்பிரமணியன்

ஆசைக்கு அளவேது?

திருமூலர்-1

ஒரு முறை ஒரு நாட்டின் அரசன் தன் நாட்டின் முக்கிய அமைச்சரை அழைத்து “நாட்டில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இறுக்கின்றனரா?எனக் கேட்டான். உடனே அமைச்சர் “மன்னா, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர் அவர்களுக்குத் தேவை என்பது ஏதுமே இல்லை.” என்று பதிலளித்தார். இதனால் மன்னன் மிக்க மகிழ்ச்சி அடைந்தாலும் எதற்கும் தான் ஒருமுறை சென்று சோதித்து வரலாம் என்ற எண்ணத்தில் அன்று இரவு மாறுவேடம் அணிந்து நகர்வலம் வந்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில் நள்ளிரவில் முக்கிய  வீதி ஒன்றில் ஓர் இளைஞன்  ஓடுவதைக்கண்டு அவனை நிறுத்தி “ஐயா, தாங்கள் இந்த நள்ளிரவில் எதற்கு இவ்வளவு வேகமாக ஓடுகின்றீர்கள்?” என வினவினான்.

உடனே அந்த இளைஞன் “நண்பா, இன்று மதியம் நான் இந்தக் கோட்டையின் கதவருகே கூலிவேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கே மண்ணைத் தோண்டும்பொழுது ஒரு தங்க நாணயம் கிடைத்தது. நல்லவேளை அதை யாரும் பார்க்கவில்லை. ஆகவே அதை அங்கேயே மண்ணில் புதைத்திட்டுவிட்டு வந்து விட்டேன். அதை எடுத்துக்கொள்ளத்தான் இப்போது அவசரமாகச் சென்றுகொண்டிருக்கின்றேன்.” என்று பதிலுரைத்தான்.

அதிர்ச்சி அடைந்த மன்னன் தன்னுடைய வேடத்தைக் கலைக்காமல் “நண்பா, போயும் போயும் ஒரு தங்கக் காசுக்காகவா இவ்வாறு ஓடுகின்றாய். என்னிடம் நிறையப் பணம் உள்ளது. இதோ பத்து தங்கக் காசுகள் வைத்துக்கொள். வீடு சென்று அமைதியாக உறங்கு.” என்றார்.

மிக்க நன்றி நண்பா. இந்த பத்துக்காசும் இரண்டு மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ உதவும். ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அந்தக்காசு  நான் வைத்த இடத்தில இருக்குமா என்பது தெரியாது. ஆகவே அதை இப்பொழுதே எடுத்துக்கொள்ளுவதுதான் சாலச் சிறந்தது.” என்றான்.

மீண்டும் அதிர்ச்சியுற்ற மாறுவேடத்திலிருந்த அரசன் “அப்படியானால் உனக்கு நூறு தங்ககாசுகள் தருகின்றேன். நீ அமைதியாக வீடு செல்.” எனச் சொல்லுகின்றார்.

அளவற்ற மகிழ்ச்சி நண்பா. இது எனக்கு ஆறு மாதங்களுக்கு மேல் உதவும். ஆனால் அதற்குப் பின் அந்த தங்கக் காசு அங்குதான் இருக்கும் என்பதை உறுதி செய்ய முடியாது. ஆகவே, அதையும் இப்பொழுது எடுத்துக் கொள்கின்றேன்.” என்று பதில் சொன்னான் அந்த இளைஞன்.

இவ்வாறு பேரங்கள் தொடர, ஒரு நிலையில் மன்னர் தன்னுடைய வேடத்தைக் கலைத்து “இளைஞனே, நான் இந்த நாட்டின் மன்னன். உன்னுடைய அளவற்ற ஆசையைக் கண்டு அதிர்ச்சியடைகின்றேன். மன்னன் என்ற முறையில் உன்னை மகிழ்ச்சியுடன் காணத் துடிக்கின்றேன். ஆகவே என்னுடைய நாட்டின் பாதிப் பகுதியை உனக்கு பரிசாக அளிக்கின்றேன். அப்படியாவது நீ மகிழ்ச்சியுடன் இருந்தால் போதும்.”

உடனே அந்த இளைஞன் “மன்னா, என்னை மன்னித்து விடுங்கள். மன்னன் என்று அறியாமல் உங்களிடம் தவறாக நான் பேசிவிட்டேன். ஆனாலும், தாங்கள் என்னை அறிந்து எனக்காக பாதி நாட்டை பரிசாகத் தருவதைக் கண்டு வியக்கின்றேன். ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம். தாங்கள் பாதி அரசை எனக்குக் கொடுக்கும் பொழுது அந்த வாயில் உள்ள பகுதியாகப் பார்த்துக் கொடுங்கள். நான் எப்பொழு வேண்டுமானாலும் சென்று அந்த தங்கக் காசை எடுத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.”

இவ்வாறே நம்மில் பலர் இருக்கும் மற்றும் கிடைக்கும் வசதிகளையும் வாழ்க்கையையும் மறந்து, அதைத் தொலைத்து, இல்லாததற்க்காக ஏங்கும் நிலையில் நம்மை வருத்திக்கொள்கின்றோம். ஆசைகளுக்கு அளவேது?

இத்தகைய  ஆசைகளைத் தூண்டிவிப்பதே  ஐம்பொறிகள் தானே?  ஆகவே ஆசைகளை அடக்குவதற்கு  ஐம்பொறிகளை  கட்டுப்படுத்த வேண்டும். அவைகளை வென்றுவிட்டால் வாழ்க்கையில் ஐம்பொறிகளை அடக்க  வேண்டும். அவைகளை வென்றுவிட்டால் அமைதிப் பாதைக்கு  வழிதெரியும். இந்தக்கருத்தை வலியுறுத்தும் திருமூலர்  என்ன கூறுகின்றார்:

ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும்

ஞானத் திரியை கொளுவி அதனுட்பு

கூனை இருளற நோக்கும்  ஒருவர்க்கு

வானக மேற வழியெளி  தாமே

மிகப்பெரிய வரவுகள் இருந்தாலும் அதில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட்டுவிட்டு சில சிறிய இன்பங்களுக்காகவும் வரவுகளுக்காவும் வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டு இருக்கின்றோம்.

மீண்டும் மீண்டும் மனத்தை அடக்கி  ஆள வேண்டும் என்று நாம் நினைக்கும் போது மனத்தினில் இருக்கின்ற மாசினை முழுமையாக நீக்க முயற்சிக்க வேண்டும். இதை ஒரு மந்திரக்கோல் மூலம் கொண்டு வர முடியாது. விடா   முயற்சி வேண்டும். இதனை வலியுறுத்தும் வள்ளுவரும்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற.

என்று சுருக்கமாகச் சொல்கின்றார்.

இந்த நிலையை அடைய ஒரு மனிதனுக்கு இளம் பிராயத்திலேயே நல்ல கல்வி கிடைக்கவேண்டும்.  நல்ல கல்வி மூலம் பக்குவப்படாத மனது, அரசனே ஆயினும் அவனை நல்வழி நடத்தாது. ஆகவே ஒரு நல்ல அரசனுக்குக்  கூட சிறப்பான கல்வி தேவை.

(தொடரும்)

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க