கைப்பேசியினால் இழந்தவை

1

-முனைவர் க. முத்தழகி

muthazhagiசமூகம் சிறப்புற மனிதன் அமைதியுடனும், மகிழ்வுடனும் வாழவேண்டும். அவ்வாறு மனிதர்கள் வாழ்வதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்களே தவிர உண்மையான மகிழ்வு அவர்களிடம் இல்லை. மனித மனங்களில் இன்று மனிதநேயம் குறைந்துகொண்டே வருகிறது. மனிதர்கள் இன்று உறவுகளைத் தேடுவதைவிட ஊதியம் தேடுவதை நோக்கமாகவே வாழ்ந்து கொண்டுள்ளனர். இயந்திரமயமான இன்றைய வாழ்க்கையில் மனிதர் ஒருவருக்கு ஒருவர் உரையாடி மகிழ்வது என்பது கடினமான செயலாக இருக்கிறது. அதனையும்விட மனித மனங்கள் சுயநலப்போக்கில் செல்கிறது. சாலையில் நடந்துசெல்லும் பொழுது சிறு விபத்து நிகழ்ந்தால்கூட நின்று பார்க்க முடியாத அளவிற்கு மனிதநேயம் பெருகிக்கொண்டு வருகிறது. இதனையும்விட நமக்கு ஏன் தேவையில்லா பிரச்சனைகள் என தம்மைத் தாமே முடக்கிக் கொள்பவர்களே அதிமாக இருக்கிறார்கள். அவ்வாறு தம்மைத் தாமே முடக்கிக் கொள்பவர்கள் இன்றைய நிலையில் கைப்பேசிக்கும், தொலைக்காட்சிக்கும், இணையத்திற்க்கும் தங்களை அடிமைப்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவைகளுள் கைப்பேசியினால் இச்சமூகத்தில் நிகழும் அவலங்களை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கைப்பேசி என்பது நமக்கு மிகவும் பயனுள்ளதாகவும், தகவல் பரிமாற்றத்திற்கு இன்றியமையாத ஒன்று என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதன் பயன் நமக்கு எவ்வகையில் இருக்கிறதோ அதே அளவில் அதில் தீமையும் உள்ளது என்பதையும் நாம்

தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். இவற்றுள் கைப்பேசியினால் இழந்து கொண்டிருப்பவைகளே அதிகமாக உள்ளது. 

குழந்தைகள்

குழந்தைகளின் பேச்சு, சிரிப்பு நம்மை ஈர்க்கக் கூடியது. அத்தகைய மழலை செல்வங்களின் மனனத் தன்மையை அதிகரிக்கக் கூடியது தாலாட்டுப் பாடல்கள். அத்தகைய தாலாட்டுப் பாடல்களை தாய் பாடும்பொழுது குழந்தையின் மீது கொண்டுள்ள அன்பு முழுமையாக வெளிப்படுவதுடன், உறவுமுறைகளையும் கூறிப் பாடுவதால் குழந்தைக்கு உறவு முறைகளையும் தன் குழந்தைக்குச் சுட்டிக்காட்டுகிறாள். இன்று குழந்தைகளுக்கு இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கைப்பேசியினை தொட்டிலின் கீழ்வைத்துக் குழந்தையை தூங்க வைக்கின்றனர். இதில் தாயின் உணர்வு, அன்பு குழந்தைக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.

பாரதியார் குழந்தைகளை ஓடிவிளையாட வேண்டும் என்றார்.

ஓடிவிளையாடு பாப்பா
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடிவிளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுவதும் விளையாட்டு
என வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பார்.

ஆனால் இன்றைய குழந்தைகளே ஓடியாடி விளையாடுவதையே விரும்புவதே இல்லை.

கைப்பேசியினை கொண்டு
காலையில் எழுந்தவுடன்
முதல் வணக்க அலைபேசியில்
அயல்நாட்டில் உள்ள அப்பாவுக்கு
மாலை வந்தவுடன் மயக்கம்
கைப்பேசியில் விளையாடுவதில்

இதனால் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும்  பாதிப்பு அடைகிறார்கள். மற்றவர்களுடன் பேசிப்பழக விரும்புவதும் இல்லை, மற்றவர்களிடம் விட்டுக்கொடுத்து வாழவும் தெரிவது இல்லை. இவர்களிடம் வாழ்க்கை தத்துவத்தை எடுத்துச்செல்ல வேண்டும். நாம் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்;. ஆனால் அவர்கள் வயதினை கருத்தில்கொண்டு வெற்றி, தோல்வி மற்றும் சரி, தவறு நான்கையும் பிள்ளைகளுக்கு அனுபவபூர்வமாக உணர்த்தவேண்டும். வாழ்க்கைப் பாடத்தைப் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கப் போதுமான சுதந்திரத்தையும், வழிகாட்டுதலையும் பெற்றவர்கள் அறிவுறுத்த வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் குழந்தைகளுக்கு எவ்விதமான ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை நாம் கண்காணிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

தம்படம் (selfi) எடுத்தல்:

இன்று கைப்பேசியில் புகைப்படம் எடுத்தல் என்பது எளிமையான ஒன்றாகும். இதில் இளமை முதல் முதுமை வரை ஆர்வம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. காலையில் இருக்கும் பரபரப்பில் தயக்கமின்றிப் புகைப்படம் எடுக்க மறப்பதில்லை. மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. ஆனாலும் அதில் உள்ள ஆபத்தையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும். சுற்றுலாச் செல்லும் மாணவர்கள் தம்படம் எடுக்கும் ஆர்வத்தில் தாம் என்ன செய்கிறோம், எங்கு இருக்கிறோம் என்ற நிலையை மறந்து தன்னுடைய உயிரையும் இழக்கிறார்கள்.

ஒரு கல்லூரியின் மாணவர்கள் சுற்றுலாச் சென்றபொழுது அங்கு நீராடச் சென்றுள்ளனர். நீராடிக்  கொண்டிருக்கையில் ஒருவருக்கு ஒருவர் தம்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது தன்னுடன் வந்த நண்பன் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தமையைப் பார்க்கவில்லை. பின்பு அவர்கள் எடுத்த தம்படத்தை காணும் பொழுதுதான் அவர்களுக்குத் தெரிந்தது. தம்படம் எடுப்பதில் ஏற்படும் ஆபத்தினை குறித்து இன்றைய இளைஞர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

அலுவலகங்களில்

அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் கைப்பேசியை வைத்துக் கொண்டு மற்றவர்களின் நேரங்களைச் சுரண்டிக் கொண்டிருப்பதை உணர மறுக்கின்றனர். மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென உயர் அதிகாரிகள் கூறினர். ஆனால் ஒரு சில அலுவலர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்களது கைப்பேசியில் புலனம் (வாட்ஸ் அப்) பார்ப்பதும், முகநூல் (பேஸ் புக்) பார்ப்பதும், தகவல்களைப் பரிமாறிக் கொண்டும் இருந்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் இப்படிக் கைப்பேசியுடன் அலுவலர்கள் வாழ்ந்துக் கொண்டிருந்தால் எங்களின் குறைகளைத் தீர்ப்பது எப்படி எனப் பொதுமக்கள் புலம்பியவாறு சென்றனர்.

மருத்துவர் ஒருவர் கைப்பேசியில் பேசிக்கொண்டே நோயாளிக்கு ஊசி போட்டுள்ளார். அது முன்பே ஒருவருக்கு போடப்பட்ட ஊசி என்பதை பார்க்காமல் கைப்பேசியில் உரையாடிக் கொண்டு நோயாளிக்கு ஊசி போட்டமையால், அந்த நோயாளிக்கு எய்ட்ஸ் பரவியது. மருத்துவர்கள் மக்களின் உயிரைக் காக்கக் கூடிய இறைவனாக மதிக்கப்படக் கூடியவர்கள். அவர்கள் செய்த கவனக்குறைவால் ஒருவரின் வாழ்கையே சீரழிந்துவிட்டது. நாட்டுப்பண் பாடும்பொழுது ஒரு மருத்துவர் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார் என்பதற்காகத் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார். ஆகவே அலுவலர்கள் தங்கள் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல் படவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

விபத்துக்கள் நிகழ்வதற்கான காரணங்கள்:

இன்று விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகமாக இருக்கிறது. இதற்கு முதன்மையான காரணம் கைப்பேசியினால் ஏற்படுவதே என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. வாகனம் ஓட்டும் பொழுது கைப்பேசியில் பேசிக்கொண்டு சென்றால் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர் என்று கூறினாலும் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள். நம் அரசு பேருந்துகளில் திருக்குறள் எழுதப்பட்டு இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, ஆனால் இன்று ஒரு குழந்தையின் போட்டோ போட்டு,

“அப்பா பிளிஸ்
கைப்பேசியில் பேசிக்கொண்டே
வாகனம் ஓட்டாதீர்கள்” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த வாசகம் ஓட்டுநரிடம் உம்மை நம்பி உமது குடும்பம் உள்ளது என்பதையும், வாகனத்தின் உள்ளே நம்மைப்போன்ற பல குழந்தைகளின் குடும்பங்களும் உள்ளன என்பதும் உணர்வுப்பூர்வமாக ஓட்டுநருக்கு உணர்த்தப்படுகிறது. தலைக்கவசம் அணியப்பட்டு வாகனம் ஓட்டுவதன் மூலம் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்ப்பதற்கே. ஆனால் வாகன ஓட்டிகளோ அந்த தலைக்கவசத்திற்குள் கைப்பேசியை வைத்துப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தனது உயிருக்கே ஆபத்து என்பதை தெரிந்துக் கொண்டே தங்கள் உயிருடனே விளையாடுகிறார்கள். ஒரு நிமிடம் வாகனத்தை நிறுத்திவிட்டுப் பேசுவதினால் யாருக்கும் எந்த விதமான இழப்பும் ஏற்படப் போவதில்லை. இதனை உயிர்ச் சிந்தனையாக வாகன ஓட்டிகள் மனத்தில் கொள்ளவேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது.

இக்கட்டுரையில் கைப்பேசியினால் குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய இழப்புகள் பற்றியும், தம்படம் எடுக்கும் ஆர்வத்தினால் ஏற்படும் இழப்புப் பற்றியும், அலுவலகத்தில் இருப்பவர்களின் கவனச்சிதைவினால் ஏற்படக் கூடிய இன்னல்கள் குறித்தும், வாகனங்கள் ஓட்டும் பொழுது கைப்பேசியினை பயன்படுத்துவதனால் ஏற்படும் இழப்புகள் குறித்தும், ஒரு சில கருத்துக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கைப்பேசியினால் இழந்தவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *