திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 42

க. பாலசுப்பிரமணியன்

இறைவனின் தியானத்தில் இருந்தபோது 

திருமூலர்-1-1

இராமகிருஷ்ண  பரமஹம்சர் மற்றவர்களுக்குப் புரியும் வகையில் எளிதாக சிறிய கதைகளைக் கூறியிருக்கின்றார்.  ஒருமுறை காட்டில் ஒரு ஒதுங்கிய இடத்தில் தன்னுடைய குடிலை அமைத்து இறைவனை வணங்கி வந்தார் ஒரு முனிவர். அவருக்கு சில சீடர்கள் உண்டு.  தங்களுடைய குருவிற்குத் தேவையான பொருட்களை அவர்கள் சேகரித்து வந்தார்கள். அந்த முனிவரும் அமைதியாக தியானத்தில் ஈடுபட்டு வந்தார். ஒரு நாள் அவருடைய குடிலுக்கு நேர் எதிரில் ஒரு புதிய குடில் அமைக்கப்பட்டிருப்பதை அவர் கவனித்தார். சில நாட்களில் அந்தக்  குடிலுக்கு சில பேர்கள் நித்தம் வந்து செல்வதையும் அவர் கவனித்தார். தன்னுடைய சீடர்களை அழைத்து அந்தக் குடிலுக்கு வந்திருப்பவர்களைப் பற்றி விசாரிக்கச் சொன்னார்.

சீடர்கள் தகவல் தெரிந்து குருவிடம் வந்து ” குருவே, உங்களிடம் இதை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. அங்கே புதிதாக வைத்திருப்பது ஒரு பெண். அவள் வேசியாக இருக்கின்றாள். நித்தம் அவளுக்காக பலர் வந்து செல்கின்றனர்.”

இதைக்கேட்ட முனிவரின் மனம் துயரமுற்றது. அடுத்த நாள் அவர் பூசையில் அமரும் பொழுது அவர் உள்ளத்தில் இப்பொழுது அந்த வேசி என்ன செய்து கொண்டிருப்பாள்? எப்படியெப்படியெல்லாம் இருப்பாள் என்ற சிந்தனை வளர அவருடைய முழுக்கவனமும் பூசையில் செல்லவில்லை. ஆனால் அந்த வேசியோ தன்னுடைய தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் “இப்பொழுது அந்த முனிவர் எப்படி எப்படியெல்லாம் இறைவனை போற்றிக்கொண்டிருப்பர் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். அவள் மனம் முழுவதும் அந்த இறைவனின் பூசையில் நின்றது. இறைவன் யாருக்கு அருள் புரிவான் என்பதே கேள்வி..

ஆகவே, சிந்தையைச் சிதறாமல் வைத்து ஒன்றே குறிக்கோளாக இறைவனை நினைப்பதும் அவனை வழிபடுவதும் உண்மையான பூசையாகும்.

எப்படி இந்த ஒருநிலைப்படுத்திய தியானத்தை வளர்ப்பது?  திருநாவுக்கரசர் தேவாரத்தில் வெகு அழகாகச் சொல்லுகின்றார்

காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக

வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக

நேயமே நெய்யும்பாலா நிறை நீரமைய வாட்டிப்

பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டி னோமே .

திருமூலரோ சிந்தையுள் திருவடி இருந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு பதில் அளிக்கும் வண்ணம் கூறுகின்றார்

சிந்தையி னுள்ளே எந்தை திருவடி

சிந்தையும் எந்தை திருவடிக்கு கீழது

எந்தையும் என்னை யறியகி லானாகில்

எந்தையும் யானும் அறிகிலேன்

திருவடியைச் சிந்தையில் வைத்தால்  எப்படி இருக்கும் ? என்னென்ன உணர்வுகள் நமக்குக் கிடைக்கும்? இதோ மாணிக்கவாசகரின் வார்த்தைகள் நம்மை உணரவைக்கின்றன.

இணையார் திருவடி என்றலைமேல் வைத்தலுமே

துணையான சுற்றங்க ளனைத்தையும் துறந் தொழிந்தேனே .

சிந்தையில் இறைவன் இருக்கும் வரையில் சொந்தங்களும் பந்தங்களும் அவர்களின் நினைவுகளும் நமக்கு ஏற்படுவதில்லை. அவற்றின் பாதிப்புக்கள் நம்மைக் கட்டுப்படுத்துவதில்லை

சுற்றத்தில் எத்தனை பேர் இருந்து என்ன பயன்? எப்பொழுது இறைவன் நெஞ்சினில் இல்லையோ, அப்பொழுது இந்தச் சுற்றங்களுக்கெல்லாம் பொருளேது

ஊரிருந் தென்னநல் லோரிருந் தென்னுப காரமுள்ள

பேரிருந் தென்பெற்ற தாயிருந் தென்மடப் பெண்கொடியாள்

சீரிருந் தென்ன சிறப்பிருந் தென்னவித் தேயத்தினில்

ஏரிருந் தென்வல்ல வாவிறை வாகச்சி யேகம்பனே !

என்று பட்டினத்தார் தன்னுடைய மனக்கவலையை வெளிப்படுத்துவது ஒரு உண்மையான பக்தியின் வெளிப்பாடகத் தெரிகின்றது

எல்லா உறவையும் சுற்றத்தையும் விளக்கி இறைவனோடு மட்டும் இருக்கும் பொழுது உடல், பொருள், ஆவி அனைத்தும் அவனையே சார்ந்திருக்கும். அவனையே நாடியிருக்கும். அந்தப் பரவச நிலை எப்படி இருக்கும் ?

 மாணிக்கவாசகர் அந்தப் பரவச நிலைக்கு நம்மை எடுத்துச் செல்லுகின்றார்

அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை

ஆனந்த மாய்க்கசிந் துருக

என்பரம் அல்லா என்னருள் தந்தாய்

யானிதற் கிலனோர் கைம்மாறு

முன்புமாய் பின்பு முழுதுமாய் பரந்த

முத்தனே முடிவிலா முதலே

தென்பெருந் துறையாய் சிவபெரு மானே

சீருடைச் சிவபுரத் தரசனே !

அவனோடு ஒன்றி இருக்கும்பொழுது எப்படிப்பட்ட ஆனந்தநிலை நமக்கு கிடைக்கின்றது !

(தொடருவோம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.