தன்வந்திரி பீடத்தில் அமாவாசையில் சூலினி துர்கா ஹோமம்
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 17.03.2018 சனிக்கிழமை அமாவாசை திதியை முன்னிட்டு காலை 10.30 மணிளவில், பீடாதிபதி மற்றும் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி சூலினி துர்கா ஹோமம் நடைபெற உள்ளது.
ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே ‘அமாவாசை’ ஆகும். இந்நாளில் முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.
அமாவாசையில் நடைபெறும் பூஜைகள் மற்றும் ஹோமத்தில் பங்கு கொள்வதால் சந்ததியினர் தோஷமில்லாமல் நலமுடன் வாழ வழி செய்கிறது. பித்ருக்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும். இதனால்,அவர்களது பரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும். துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைக்கப் பெறுவர்கள்.
உலகத்தில் இன்றைக்கு இருக்கிற மோசமான வியாதிகளுள் ‘திருஷ்டி’ எனப்படும் வியாதி மிக கொடூரமான ஒன்று. இந்த திருஷ்டியினால் தனிப்பட்ட நபரின் முன்னேற்றம் பாதித்தல், குடும்பத்தில் சச்சரவு ஏற்படுதல், தாம்பத்திய உறவில் விரிசல், நல்ல வேலையை இழத்தல், ஓரடி எடுத்து வைத்தால் இரண்டடி சறுக்குதல் உட்பட ஏராளமான பாதிப்புகள் விளைகின்றன. எனவே, ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள திருஷ்டியை அமாவாசையில், தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் சூலினி துர்கா ஹோமம், ஸ்ரீ ப்ரித்யங்கிரா ஹோமம், சரப ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம் போன்ற ஹோமங்களில் கலந்துகொண்டு ஏற்படும் திருஷ்டிகளை அவ்வப்போது கழித்துக் கட்டுவது நல்லது.
ஒரே வீட்டில் இருவருக்கு இராகு தசை அல்லது கேது தசை நடப்பவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் தீரவும், நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும்,அகால மரணம் நிகழாமல் இருக்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் மேற்கண்ட ஹோமங்கள் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடக்கவிருக்கிறது. இதில் அனைவரும் பங்கு கொண்டு பித்ருக்களின் ஆசிகளையும், ஸ்ரீ துர்கா தே
வியின் அருளையும் பெற்று, பெரு வாழ்வு வாழலாம் என்று ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவிக்கிறார்.