இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (266)

அன்பினியவர்களே!
அன்பான வணக்கங்கள் இதோ அடுத்த மடலில் உங்களைச் சந்திக்க ஆவலாய் விரைந்துள்ளேன். கல்வி என்பது ஒரு மனிதனுக்கு மேம்பட்ட அறிவையளிப்பது. வாழ்வின் பொதுவான சிக்கல்களை எவ்வாறு இலகுவாகச் சமாளிப்பது என்பது மட்டுமின்றி உலகின் பல அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் அறிவைக் கல்வி அளிக்கிறது என்பதுவே நிதர்சனமான உண்மை. மனித வாழ்வின் வாழ்க்கை நிலைகள் காலங்களுக்கூடாக மாறி வந்திருக்கிறது. அம்மாற்றங்களின் விளைவாக அவ்வப்போது அவர்களது தேவைகளும் தமது வடிவத்தில் மாற்றமடைந்து வந்திருக்கிறது. இம்மாற்றங்களைச் சமாளிப்பதற்காக, அதற்கான அடித்தளத்தை உள்வாங்கி அம்மாற்றங்களுக்குத் தேவையான அளவு அறிவையளிக்கக் கூடிய வகையில் கல்வியின் வடிவங்களும் மாற்றமடைந்தே வந்திருக்கிறது. இவைகள் நிச்சயமாக சமுதாயத்துக்கு இன்றியமையாத தேவை எனலாம்.

மனித சமுதாயம் உலகளாவிய ரீதியில் தொடர்ந்து கண்டு வந்த மாற்றங்கள் அனைத்து நாடுகளிலும், அனைத்து சமுதாயங்களிலும் ஏறத்தாழ ஒரே மாதிரியான மாற்றங்களாகவே காணப்படுகின்றன. ஆனால் இம் மாற்றங்களை அவைகள் அடைந்த காலகட்டங்கள் அந்தந்த நாடுகளின் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப வேறுபட்டே இருக்கின்றன. மனிதனுடைய வாழக்கையின் மாறுதலில் மிக முக்கியமான மாறுதல்கள் அவன் வாழும் சூழலின், மாற்றங்களும் அவைகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் தன்மையில் தேவைப்பட்ட போக்குவரத்து வசதிகளுமேயாகும். கால்நடையாகப் பயணித்த மனிதனின் வாழ்வின் மாற்றங்கள் அவனைக் கைவண்டி, மாட்டு வண்டி, குதிரை வண்டி, கார், பஸ்,  சைக்கிள், மோட்டார் சைக்கிள், ரெயில், விமானம், ராக்கெட் என பல்வேறு பரிமாணங்களுக்கூடாகப் பயணிக்க வைத்திருக்கிறது.

இவைகளின் மாற்றங்களுக்குப் பின்னணியில் கண்டுபிடிப்புகளும், அவற்றைக் கையாண்ட விஞ்ஞானிகளும் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் இக்கண்டுபிடிப்புகளைக் கையாளும் திறமையைக் கல்வியே ஈந்திருக்கிறது என்றால் மிகையாகாது. சமுதாயத் தேவைகளுக்கேற்ப கல்விமுறையை விஞ்ஞானம், கலை, சட்டம், மருத்துவம், பொறியியல்,வணிகம் எனப் பல்வேறு கட்டமைப்புகளுக்கூடாகச் சீராக்கினார்கள். எந்தெந்தத் துறையை எவரெவர் தேர்ந்தெடுத்தாலும் அதற்குரிய அடிப்படைக் கல்வியறிவு அவர்களுக்கு இருக்கிறதா என்று சோதித்தே அவர்களை அத்துறைக்கு அனுமதித்தார்கள். இன்றைய காலகட்டத்தில் எந்தத்துறை தமது வாழ்வின் வசதியைப் பெருக்கிக் கொள்ளக்கூடிய வகையில் பொருளீட்ட உதவுகிறதோ அந்தத்துறையயே பெரும்பான்மையோர் தேர்ந்தெடுப்பதை அவதானிக்கலாம். அத்தகைய சூழலில்தான் சமுதாய மாற்றங்களின் தேவைகளின் முன்னிலையாக சிவில் பொறியியல் துறை நிர்வகிக்கப்பட்டது.

19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பல கண்டுபிடிப்புகளை, பல திறமைகளை கொண்டுவரக்கூடிய அளவில் அவர்களுடைய அறிவுத்திறனை வளர்க்கக்கூடிய அளவுக்கு முன்னேற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அகிலத்தின் பல பாகங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து பெரிய பெரித்தானியா எனும் நிலையை அடைந்திருந்த காலகட்டமது. அபோதுதான் 1806ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி, இங்கிலாந்தின் ஹாம்ஷையர் பகுதியில் உள்ள போட்ஸ்மவுத் எனும் இடத்தில் பிரெஞ்சு சிவில் பொறியியலாளரான மார்க் இசம்பாட் புரூனெல் என்பவருக்கும் சோபியா கிங்டொம் எனும் ஆங்கிலப் பெண்மணிக்கும் அவதரித்தார் “இசம்பாட் கிங்டொம் புரூனெல்.” இவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள் இருந்தார்கள். வல்லமை வாய்ந்த பொறியியலாளரான இவரது தந்தை நான்கு வயதிலேயே இவருக்கு வரைதல், மற்றும் கூர்மையான அவதானம் என்பனவற்றுக்கான பயிற்சிகளை அளித்தார் என்பதும், எட்டு வயதில் கட்டிட வரைதல் பயிற்சியும், கட்டிட வரைபடங்களிலுள்ள பிழைகளைக் கண்டறியும் திறமைகளையும் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

14 வயதாயிருக்கும்போதே இளம் புரூனெல் பிரெஞ்சுப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார். இவருக்குப் பதினைந்து வயதாக இருக்கும் போது அப்போது 5000பவுண்ட்ஸ் கடனில் மூழ்கிய அவரது தந்தை சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையாகும் வழி தெரியாது இருந்த அவருக்கு அன்றைய ரஸ்யா அடைக்கலம் கொடுக்க முன்வந்தது. தம்முடைய நாட்டு வல்லமை மிக்க சிவில் பொறியியலாளர் ஒருவரை இழக்க விரும்பாத அன்றைய இங்கிலாந்து அரசு தாமே அவரது கடனை அடைத்து அவரை விடுவித்தது.

இங்கிலாந்தில் அமைக்கப்பட்ட முதலாவது ஆற்றுக்குக் கீழான சுரங்கப்பாதையை அமைக்கும் பணியில் முக்கிய பொறியியலாளராகவிருந்த இவரது தந்தையுடன் உதவியாளாராக இவர் பணிபுரிந்தார். இப்பணியின்போது ஏற்பட்ட இரண்டு பெரிய விபத்துக்கள் ஒன்றில் புரூனெல் காயமடைந்தார். இவரின் திறமைகளின் சான்றாக இன்றும் நாம் காண்பது “Clifton suspension bridge-கிளிப்டன் தொங்குபாலம்.”  இங்கிலாந்தின் பிறிஸ்டல் நகரில் இது அமைந்துள்ளது. இங்கிலாந்தின் பொற்காலம் என்று சொல்லப்பட்ட “தொழிற்சாலைப் புரட்சி” யில் முக்கிய பாகத்தை வகித்தவர் இவர் என்பதே உண்மை. இங்கிலாந்தின் ரெயில் பாதை அமைப்புக்களில் அவற்றை மிகவும் சிறப்பான முறையில் திட்டங்களைத் தீட்டி நிர்மாணிக்கும் பணியில் இவரே முதலிடம் வகித்திருக்கிறார்.

இங்கிலாந்தின் முதலாவதாக அமைக்கப்பட்ட மிக நீண்ட ரெயில் பாதையில் ஓடும் “த கிரேட் வெஸ்டேன் ரெயில்வே (The great Western Railway) வரைபடத் திட்டமிடல் தொடங்கி நிர்மாணிப்புக்குக் கொண்டு வந்தவர் இவரே. இந்த ரெயில் சேவையின் ஆரம்பம் 1833ஆம் ஆண்டு பிறிஸ்டல் நகரில் நிகழ்ந்தது. இதன் முதன்மைப் பொறுயியலாளரான புரூனெலின் திட்டம் லண்டனில் டிக்கட் வாங்கும் பயணி அந்தப் பயணச்சீட்டுடன் நியூயோர்க் நகரை சென்றடைய வேண்டும் என்பதே! எப்படி என்கிறீர்களா ? லண்டனில் ” த கிரேட் வெஸ்டேன் ” ரெயில் சேவையில் ஏறும் பயணி பிறிஸ்டலைச் சென்றடைந்து அங்குத் துறைமுகத்தில் ” த கிரேட் வெஸ்டேன் ஸ்டீம்போட் ” எனும் கப்பற்சேவையில் தமது பயணத்தைத் தொடர்ந்து நியூயோர்க் நகரைச் சென்றடைய வேண்டும். அதுவரையும் சாதாரண “கேஜ்”எனும் அளவிலான தண்டவாளத்தைக் கொண்டிருந்த ரெயில் சேவை புரோட் கேஜ் (Broad gauge) எனும் தண்டவாள அமைப்புக்கு மாற்றியவர் எனும் பெருமை இவரையே சாரும்.

இங்கிலாந்தின் அதிசிறந்த பொறியியலாளர் எனும் பெருமை பெற்ற இவர் அமைத்த பல ரெயில்வே பாலங்கள், சுரங்கப்பாதைகள் இன்றும் இவரது பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. 19ஆம் நூற்றாண்டின் பொறியியல் சிங்கம் எனப்பெயர் பெற்ற இவர் 2002ம் ஆண்டு பிபிஸி நடத்திய பிரித்தானியாவின் பிரபல்யமான 100 பேர்கள் எனும் பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் புரூனெல் அவர்கள் இரண்டாவதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இவருடைய பெயரால் இயங்கிக் கொண்டிருக்கும் புரூனெல் பல்கலைகழகம் இவரைப் போன்ற திறமையாளர்கள் காலத்தால் அழிக்கப்படாதவர்கள் என்பது யதார்த்தம்.

தனது 53வது வயதில் காலன் இவரைத் தன்னோடு அழைத்துக் கொண்டு விட்டான். 1859ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி இருதய நோய்க்கு இரையாகினார் புரூனெல். ஏப்பிரல் மாதம் பிறந்த இணையற்ற ஆங்கிலப் பொறியியலாளரான இவரைப் பற்றிய நினைவுகளை உங்களுடன் மீட்டியதில் ஆனந்தமடைகிறேன்.

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க