புதிய கோட்பாடு ! பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா
+++++++++++++++
- https://youtu.be/0MElgqjgJ5M
- https://youtu.be/hP45Xd_IplM
- https://gizmodo.com/asteroids-really-could-have-brought-water-to-earth-exp-1825532121
- https://www.space.com/27969-earth-water-from-asteroids-not-comets.html
- https://www.space.com/30582-asteroid-mining-water-propulsion.html
- https://www.space.com/8305-water-ice-discovered-asteroid-time.html
- https://www.bing.com/videos/search?q=asteroids+water&&view=detail&mid=434FF06AA6245CD80B77434FF06AA6245CD80B77&&FORM=VRDGAR
++++++++++++++++++
[Click to Enlarge]
பாரெங்கும் நோக்கினும் நீருண்டு
பாலை வனத்தில் பசுஞ்சோலை !
தாரணியில் கடல், நதிகள், ஏரிகள்.
நிலவின் இருட் துருவத்தில் பனிக்குழிகள்.
செந்நிறக் கோளில் பனிநீர்ப் பள்ளம்.
வால்மீன் தலையில் பனித்த நீர்க்கட்டி.
வக்கிரக்கோள் வயிறு குளிர்நீர்த் தொட்டி !
+++++++++++
பூமிக்குப் பேரளவு நீர் வெள்ளம் எப்படி வந்தது ?
பூர்வ காலத்தில் பூமியைப் பன்முறை வால்மீன்கள் தாக்கியதால் கடலிலும், ஏரிகளிலும் நீர் வெள்ளம் நிரம்பியது என்பது பழைய கோட்பாடு. 2018 ஏப்ரல் 25 இல் வெளியான புதிய விஞ்ஞான வெளியீட்டின்படி, அதிவேக முரண்கோள்கள் [Asteroids] பன்முறை பூமியைத் தாக்கிப் பேரளவு நீர் வெள்ளம் சேர்ந்தது என்று பாம் கேணன் சோதனை மூலம் [BAM Cannon Experiment] ஆய்வு செய்து அறிவிக்கப் பட்டது. சோதனை நடத்திய இடம் : காலிபோர்னி யாவில் உள்ள நாசாவின் ஆமெஸ் ஆய்வு மையம் [Ames Research Center]. சோதனையில் பங்கெடுத்த குழு விஞ்ஞானி டெரிக் டாலி [Terik Daly] ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டப் படிப்பாளி] .
செய்த சோதனை என்ன ? எரிமலைப் பாறை மீது, அதிவேக எறிவிண்கற்கள் ஏவி [Shooting Meteorite-Like Projectiles on Volcanic Rocks], விளைந்த தாக்கல்களால் நீர் வெள்ளம் சேர்ந்தது என்று அறிந்தனர். அதற்குச் செய்த சிறு மார்பிள் கணைகளின் வேகம் 11,200 mph [18,000 kmh]. ஏவிய மார்பிள் கணைகள் பூர்வீக நீர்செழித்த, தாதுக்கள் நிரம்பிய பழைய முரண்கோள்கள் போன்று, [Carbonaceous] இருந்தன. அந்த மோதல்களில் 30% கொள்ளளவு நீர் வெள்ளம் தாக்க பீடத்தில் அடைபட்டு இருக்கும். இம்முறையில்தான் முரண்கோள்கள் தாக்கி, நிலவிலும், செவ்வாய்க் கோளிலும், மற்ற சூரிய மண்டலக் கோள்களிலும் நீர்வெள்ளம் சேர்ந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கிறார்.
வால்மீன்களில் உள்ள தண்ணீர் ஆவியைச் சோதித்ததில், அதிலுள்ள கனநீர் [Heavy Water Molecule], பூமியில் கிடைக்கும் கனநீர் போலில்லை. ஆனால் முரண்கோள் [Asteroid] பெற்றுள்ள கனநீர், பூமியில் உள்ள கனநீர் போல், அளவிலும், ஏகமூலப் பண்பாட்டி லும் ஒத்திருந்தது. ஆகவே விஞ்ஞானிகள் கூறும் புதிய கோட்பாடு : பூகோளத்தின் கடல் நீர்வெள்ளம் முரண்கோள்கள் பன்முறை தாக்கியதால் சேர்ந்தது என்பதே. இவற்றை விளக்க மாக யூடியூப் ஒளி திரைகளில் காணலாம்.
+++++++++++++
பூதக்கோள் வியாழனுக்கும் செவ்வாய்க் கோளுக்கும்
இடையே சூரியனைச் சுற்றும் பல்கோடி முரண்கோள்கள்
++++++++++++++++++
++++++++++
பூமிக்குள் அதன் ஆழ் கடலுக்குள்
கோளுக்குள்
கோளின் குடலுக்குள்
பாறைக்குள்,
உறங்கும் படு பாதாள
ஊற்றுக்குள் நெளிந்தோடும்
ஆற்றுக்குள்,
நிலையான ஏரிக்குள்
நிரம்பியது எப்படி
நீர் வெள்ளம் ?
எப்போது தோன்றியது ?
நூறு கோடி
ஆண்டுகட்கு முன்பா ?
பூர்வப் பிரபஞ்சத்தில் தோன்றியதா ?
படிப்படி வளர்ச்சியில்
வடித்ததா ?
மூலகங்கள் இணைந்தா ?
மூலக்கூறுகள் பிணைந்தா ?
மின்னல் அடித்து இரசாயனங்கள்
பின்னியதா ?
தோல் அடியில் நீர்ப்பனி சுமக்கும்
வால்மீன்கள் தாக்கி
கோளில் கொட்டியதா ?
ஆழ்ந்து உளவினும் இந்தக்
கேள்விக்கு விடை
கிடைப்பது எக்காலம் ?
++++++++++
கனடா வடதுருவப் பனித்தளத்தில் உள்ள பாஃபின் தீவின் [Baffin Island, Canada] பாறைகளுக்கிடையே உறைந்த நீர் வெள்ளம் பூமி தோன்றிய துவக்க காலத்துப் பூர்வீக நீர் என்பது முதன்முறையாக அறியப் பட்ட சான்றாகக் கருதப் படுகிறது. அந்தப் பாறை நீர் மாதிரிகள் 1985 ஆண்டில் சேமிக்கப்பட்டவை. அவற்றைப் பல்லாண்டுகளாய்த் துருவிச் சோதிக்க வாய்ப்புக்கள் இருந்தன. அவை பூமியின் ஆழ்தட்டிலிருந்து [Earth’s Deep Mantle] வெளி வந்த பூமி அங்கமாய்க் கருதப்படும் உட்சாதனத்தைக் கொண்டிருந்தது. அவை மேற்தளப் பாறையிலிருந்து [Crustal Rocks] உதிரும் வண்டல் படிவுகளால் [Sediments] பாதிக்கப் படவில்லை. இதுவரை நாங்கள் பாராத பூர்வ படிவுப் பாறை [Primitive Rocks] என்பது எங்கள் முடிவு. அவற்றின் நீர் பூமியின் பூர்வீகத் துவக்க நிலை நீராகக் கருதுகிறோம். அவை பூமியின் தோற்ற வரலாற்றையும், ஆரம்ப நீர்மயம் எங்கிருந்து எப்படி வந்தது என்று அறியவும் உதவுகிறது.
டாக்டர் லிடியா ஹால்லிஸ் [Astrobiology Institute, University of Glasgow, Scotland]
கனடா வடதுருவப் பாறை நீரில் மிகச் சிறிதளவு டியூட்டிரியம் [Deuterium] உள்ளதை அறிந்தோம். அதனால் அழுத்தமாய்த் தெரிவது : அந்த நீர்மயம் பூமி தோன்றிக் குளிர்ந்த பிறகு புறத்திலிருந்து வீழ்ந்து நிரம்பிய தில்லை என்பதே. அதாவது கோள்கள் தோன்றி உருவாவதற்கு முன்பே, நமது சூரியனைச் சுற்றி இருந்த தூசி, துணுக்குகள் நீர் மூலக்கூற்றை ஏற்கனவே ஏந்தி வந்திருக்கலாம். பல யுகங்களாய் இந்த நீர்மயம் செழித்த தூசி, துணுக்குகள் மெதுவாகச் சேர்ந்து நீர்க்கோள் பூமி வடிவாகி இருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் பேரளவு நீர் வெள்ளம் பூதள வெப்பத்தில் ஆவியாகி இழக்கப் பட்டாலும், மிஞ்சி இருந்தது போதுமான அளவு கடலில் நிரம்பியுள்ளது.
டாக்டர் லிடியா ஹால்லிஸ் [Astrobiology Institute, University of Glasgow, Scotland]
பூமியின் உட்தட்டில் பூர்வக் கால நீர்த் தேக்கம் கண்டுபிடிப்பு
2015 நவம்பர் 13 ஆம் தேதி விஞ்ஞான வெளியீட்டில் [Journal Science] காரி ஹூஸ், கஸுஹைடு நாகசீமா, ஜெஃப்ரி டெய்லர், மைக்கேல் மோட்டில், காரென் மீச் [NASA Astrobiology Institute, University of Hawaii] ஆகியோர் முதன்முதல் வெளியிட்ட ஆய்வறிக்கை : கனடாவின் வடதுருவப் பகுதியில் உள்ள பாஃபின் தீவுப் பாறைகளில் பூர்வக் கால நீர்த் தேக்கம் இருந்ததற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. அந்த ஆய்வுக் குழுவின் தலைவர் : அகிலவியல் இரசாயன விஞ்ஞானி, [Cosmochemist] டாக்டர் லிடியா ஹால்லிஸ் என்பவர். [Astrobiology Institute Fellow, University of Glasgow, Scotland]
பூகோளப் பரப்பில் மூன்றில் இரண்டு பகுதி கடல் பரவியுள்ளது. ஆனால் அந்தப் பேரளவு நீர்த் தேக்கம் எப்போது, எங்கிருந்து பூமியில் சேர்ந்தது என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது. பூமி தோன்றிய போது சேர்ந்ததா, அல்லது தோன்றிய பிறகு நேர்ந்ததா என்பது இதுவரை விஞ்ஞானிகளால் உறுதியாகக் கூற முடியவில்லை. இப்போது கனடா பாறை மாதிரிகள் பூமியில் நீர்மயம் ஆரம்ப காலத்திலே உருவானது என்பதற்குச் சான்று தெரிவிக்கும். அதற்கு விஞ்ஞானிகள் பயன்படுத்திய கருவி அயான் நுண்ணுளவி [Ion Michroprobe]. அந்த பாறைகளுக்கிடையே இருந்த பனிக்கட்டி நீர்த் துளிகள் ஒப்பு நோக்க எத்தனை பங்கு டியூடிரியம் [Deuterium] கொண்டது என்று ஆராய்ந்தனர்.
டியூட்டிரியம் என்பது ஹைடிரஜனின் ஏகமூலம். [Deuterium is an Isotope of Hydrogen]. ஹைடிரஜன் அணுக்கருவில் ஒரு புரோட்டான் பரமாணு உள்ள போது, டியூட்டிரியம் அணுக்கருவில் ஒரு புரோட்டானுடன் ஒரு நியூட்டிரானும் சேர்ந்துள்ளது. அதாவது ஹைடிரஜனின் அணுநிறை : 1 டியூட்டிரியத்தின் அணுநிறை : 2. சூரியக் கோள்களின் வெவ்வேறு நீர் மாதிரிகளைச் சோதித்ததில், அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு டியூட்டிரியம் / ஹைடிரஜன் விகிதத்தைக் கொண்டிருந்தன. [Different Hydrogen / Deuterium Ratio] கொண்டிருந்தன. சமீபத்தில் இரசாயன ஆய்வு செய்த நமது சந்திரனின் பாறை மாதிரிகள் மூலம், பூமியானது நீர்த் தேக்கமுடன் ஆரம்பம் முதலே இருந்தது என்பது உறுதியானது. அப்பெல்லோ -15 & 17 நிலவுப் பயணங்களில் நாசா விண்வெளி விமானிகள் சேகரித்த பாறை மாதிரிகள் காட்டிய டியூட்டிரியம் / ஹைடிரஜன் விகிதம் [Deuterium to Hydrogen (D/H) Ratio] பூமியில் இருக்கும் நீரைப் போன்று இருந்தது.
பூமியை நீர்ப்பனி கொண்ட வால்மீன்கள் தாக்கியதால் நீர்த் தேக்கம் உண்டானதா, நீர்ச் செழிப்புள்ள முரண்கோள்கள் [Water Rich Protoplanets, or Asteroids] மோதியதால் நீர்மய அமைப்பு தோன்றியதா என்னும் வினாக்கள் விஞ்ஞானிகளிடையே எழுந்துள்ளன ! வான்மீன்களின் பனிநீர் மாதிரிகள் காட்டும் [D/H Ratio] நமது பூமியின் கடல் நீர் [D/H Ratio] போல் இரட்டிப் பானது.
“வெகு தூரப் பிரபஞ்சத்தில் ஈர்ப்பாற்றல் பெரிது படுத்திய அண்டத்தில் (Gravitationally Magnified Object) நீர்மயத்தை நாங்கள் கண்டுபிடித்தது விந்தையான ஓர் நிகழ்ச்சியே. நாம் முன்பு நினைத்தது போலின்றி நீர் மூலக்கூறுகள் பூர்வத் தோற்ற பிரபஞ்சத்தில் செழிப்புடன் இருந்ததை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது. மேலும் இதைப் பல பில்லியன் ஒளியாண்டுக்கு அப்பால் உள்ள பேரசுர நிறையுடைய கருந்துளைகள், ஒளிமந்தைகள் ஆகியவற்றின் படிப்படி வளர்ச்சியை (Supermassive Black Holes & Galaxy Evolution) அறிய அடுத்த கட்ட ஆய்வு நிலைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.”
ஜான் மெக்லீன், மாக்ஸ் பிளாங்க் ஆய்வகம், ரேடியோ வானியல் [டிசம்பர் 29, 2008]
“மற்றவர்கள் நீரைக் காண முயன்று தோற்றுப் போயினர். மிக மங்கலான சமிக்கையைக் காண்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம். ஆகவே வெகு வெகு தூர அண்டத்தை நோக்கவும், அழுத்தமாகப் பதியவும் அகிலப் பெரிதுபடுத்திக் கண்ணாடியாக (Cosmic Magnifying Lens) முன்னுள்ள காலாக்ஸியைப் பயன்படுத்தி நீர் ஆவி (Water Vapour) துள்ளி எழுவதைக் கண்டுபிடித்தோம்.”
வயலட் இம்பெல்லிஸெரி மாக்ஸ் பிளாங்க் ஆய்வகக் குழுத் தலைவர் [டிசம்பர் 29, 2008]
“நீர் மேஸர் (Water Maser) கதிர்கள் அண்டையில் உள்ள அநேக காலாக்ஸிகளில் காணப்படுகின்றன ! காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பேரசுர நிறையுள்ள கருந்துளையை மிக்க அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் சூடான வாயுக்கள், துகள்கள் இருக்கும் பகுதிகளில் நீர் மேஸர் கதிர்கள் தென்படுகின்றன. அதாவது நீர் மூலக்கூறுகள் உள்ள மேஸர் கதிர்கள் காலாஸி தட்டில் இல்லாமல் கருந்துளையின் ஈர்ப்பாற்றல் வீசி எறியும் பேரெழுச்சிக் கணைப் பொருட்களில் தெரிகின்றன.”
ஜான் மெக்லீன்.
“நீர் மேஸர் கதிர்கள் காலாக்ஸிகளின் கருவில் தென்படுவதால் இப்போது பேரசுர நிறையுள்ள கருந்துளைகளைப் பற்றி ஆய்வு புரிய எங்களுக்கு ஆர்வம் உண்டாக்கிப் புதிய கதவு திறக்கிறது. மேலும் இப்போது கைவசமுள்ள தொலைநோக்கிகள் மூலம் நீர் மயமுள்ள வெகுதூரக் காலாக்ஸிகளை நோக்க மேம்பட்ட ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கி விடுகிறது. அடுத்த பிறவி புது முறை ரேடியோ தொலைநோக்கிகள் மூலமும் தேட எமக்கு வழி திறந்துள்ளது.”
வயலட் இம்பெல்லிஸெரி
“சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது!”
லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]
“சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”
வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]
“பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்!”
டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]
பிரபஞ்சத்தின் வெகு வெகு தொலைவில் நீர்மயமா ?
2008 டிசம்பரில் ஜெர்மனியின் மாக்ஸ் பிளாங்க் ஆய்வகத்தின் ஆராய்ச்சிக் குழுவொன்று 100 மீடர் எஃபெல்ஸ்பெர்க் ரேடியோ தொலைநோக்கியில் (Effelsberg Radio Telescope) இதுவரை காணாத பூமியிலிருந்து வெகு வெகு தூரத்தில் உள்ள ஓர் அண்டத்தில் நீர்மயம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. 11 பில்லியன் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் நீர் ஆவி (Water Vapour) இருப்பதைக் கண்ட தளம் : குவஸார் (Quasar MG J0414 + 0534 at Redshift 2.64) (Redshift 2.64 means 11.1 Billion Light Years Distance). அதாவது “சிவப்பு நகர்ச்சி 2.64” என்றால் அந்த தளம் பிரபஞ்சமானது ஐந்தில் ஒரு பங்கு வயதில் (13.7 பில்லியன்/5 =2.74 பில்லியன் ஆண்டு வயது) இருந்த போது உண்டான பூர்வத் தோற்ற அமைப்பு ! இந்த அரிய நிகழ்ச்சியைக் காண வானியல் விஞ்ஞானிகள் சுமார் 14 மணிநேரம் எடுத்தனர்.
பூர்வத் தோற்றப் பிரபஞ்சத்தில் நீர் இருந்த கண்டுபிடிப்பைக் காண முடிவதற்கு ஒரு நிபந்தனை : பல்லாயிரம் கோடி ஒளியாண்டு தூரத்தில் உள்ள குவஸாரும் (MG J0414 + 0534) அதற்கு முன்னால் அதை மறைக்கும் ஒளிமந்தை காலாக்ஸியும் நேர் கோட்டில் இணைந்திருக்க வாய்ப்பிருக்க வேண்டும் ! முன்னிற்கும் காலாக்ஸி குவஸார் அனுப்பும் ஒளியைத் திரிபு செய்யும் ஓர் “அகிலத் தொலை நோக்கியாகவும்”, “அகிலப் பெரிது படுத்தியாகவும்” (Cosmic Telescope & Magnifier) உதவி செய்கிறது ! காலாக்ஸி புரியும் அத்தகைய “ஈர்ப்பாற்றல் பெரிதுபடுத்தி” (Gravitational Lensing) இல்லை யென்றால் இந்த விந்தையான நிகழ்ச்சியைக் காண ஆய்வாளர்கள் 100 மீடர் ரேடியோ தொலைநோக்கி மூலம் தொடர்ந்து 580 நாட்கள் கண்காணித்து வந்திருக்க வேண்டும் !
வெகு தொலைவில் நீர் ஆவி எழுச்சி எப்படிக் காணப்பட்டது ?
நீர் ஆவி எழுச்சி லேஸர் ஒளிக்கதிர்போல் “மேஸர்” கதிரலையாக (Maser -Microwave Amplification by Simulated Emission of Radiation) நுண்ணலை அலைநீளத்தில் தெரிந்தது. அந்த சமிக்கையானது பரிதியின் ஒளிக்காட்சி போல் (Luminosity) 10,000 மடங்கு வெளிச்சத்துக்கு ஒப்பானது. அத்தகைய வானியல் பௌதிக மேஸர் கதிர்கள் அடர்த்தியான துகள், வாயு எழுகின்ற வெப்ப அரங்குகளைக் காட்டுகின்றன என்பது முன்பே அறியப் பட்டது. அதாவது பெரு வெடிப்பு நேர்ந்து 2.5 பில்லியன் ஆண்டுகள் கடந்த பிரபஞ்சத்தின் பிள்ளைப் பிராயத்தில் இருந்த குவஸாரின் அடர்த்தி வாயுக்கள் அந்தச் சூழ் நிலையில் சேர்ந்து நீர் மூலக்கூறுகளை உண்டாக்கி உள்ளன என்பது அறியப்பட்டிருக்கிறது.
நீர் மேஸர் கதிர்கள் நெருங்கியுள்ள அநேக காலாக்ஸி களில் காணப்படுகின்றன ! காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பேரசுர நிறையுள்ள கருந்துளையை மிக்க அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் சூடான வாயுக்கள், துகள்கள் இருக்கும் பகுதிகளில் நீர் மேஸர் கதிர்கள் தென்படுகின்றன. அதாவது நீர் மூலக்கூறுகள் உள்ள மேஸர் கதிர்கள் காலாஸி தட்டில் இல்லாமல் கருந்துளையின் ஈர்ப்பாற்றல் வீசி எறியும் பேரெழுச்சிக் கணைப் பொருட்களில் தெரிகின்றன. “நீர் மேஸர் கதிர்கள் காலாக்ஸிகளின் கருவில் தென்படுவதால் இப்போது பேரசுர நிறையுள்ள கருந்துளைகளைப் பற்றி ஆய்வு புரிய எங்களுக்கு ஆர்வம் உண்டாக்கிப் புதிய கதவு திறக்கிறது. மேலும் இப்போது கைவசமுள்ள தொலைநோக்கிகள் மூலம் நீர் மயமுள்ள வெகுதூரக் காலாக்ஸிகளை நோக்க மேம்பட்ட ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கம் ஊட்டுகிறது. அடுத்த பிறவி புதுயுக ரேடியோ தொலை நோக்கிகள் மூலமும் தேட வழி திறந்துள்ளது,” என்று மாக்ஸ் பிளாங்க் ஆய்வகக் குழுத் தலைவர், வயலட் இம்பெல்லிஸெரி கூறினார்.
பிரபஞ்சத்தில் நீர் மயத்தைத் தேடும் சுவாஸ் விண்ணுளவி
1998 டிசம்பர் 5 இல் அமெரிக்காவின் வான்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் பெகஸஸ் ராக்கெட் (Pegasus-XL Launch Vehicle) மூலம் 288 கி.கி. எடையுள்ள சுவாஸ் துணைக்கோள் ஏவப்பட்டது. அதுமுதல் சுவாஸ் ஏது பழுதின்றி ஒழுங்காய் பூமிக்கு மேல் 600 கி.மீடர் (360 மைல்) உயரத்தில் இயங்கி வருகிறது. சூரியத் தட்டுகள் உதவியால் வெப்ப சக்தியை இழுத்து 230 வாட் மின்சக்தியை உற்பத்தி செய்து கொள்கிறது. அது கொண்டுள்ள கருவிகள் கீழ்க்காணும் மூலக்கூறுகளை காலாக்ஸிகளில் காணும் திறமையுடையவை :
1. நீர் (Water H2O at 556.936 GHz)
2. ஆக்ஸிஜன் மூலக்கூறு (Molecular Oxygen O2 at 487.249 GHz)
3. நடுநிலைக் கார்பன் (Neutral Carbon C at 491.161 GHz)
4. ஏகமூலக் கார்பன் மானாக்ஸைடு (Isotopic Carbon Monoxide 13CO at 550.927 GHz)
5. ஏகமூல நீர் மூலக்கூறு (Isotopic Water 2H18O AT 548.676 GHz)
நீரைக் கண்டுபிடிப்பதுடன் விண்மீன்களின் மூலக்கூறு முகில்களில் சுவாஸ் விண்ணுளவி மற்ற மூலகங்களைக் (Elements) காணவும் டிசைன் செய்யப் பட்டுள்ளது. சுவாஸ் ஐயமின்றி நமது சூரிய மண்டலத்தில் வால்மீன்கள் தாக்கிய வாயுக் கோள்களான வியாழன், சனிக் கோளை காட்டியுள்ளது. மேலும் சுவாஸ் செவ்வாய்க் கோளின் வாயுக் கோள் மண்டலத்தில் 100% ஒப்பியல் நீர்மையைக் (Relative Humidity) காட்டியுள்ளது. செவ்வாய் வாயுத் தளத்தில் நீர்ப் பரவல் 10 முதல் 45 கி.மீடர் உயரம் வரை 100% பூர்த்தி நிலையில் (100% Saturation) இருப்பதைக் காட்டியுள்ளது.
சுவாஸ் விண்ணுளவி கண்டுபிடித்த விந்தைகள்
மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளைச் சுவாஸ் விண்ணுளவி இதுவரை அறிவித்துள்ளது. அண்ட வெளி விண்மீன் பகுதிகளில் நீர்மயச் செழிப்பு பல்வேறு விதங்களில் மாறியுள்ளதைக் காட்டுகிறது. அநேகப் பேரசுர மூலக்கூறு முகில்களில் காணப்பட்ட நீர்மயச் செழிப்பு அண்டக் கோள் விண்மீன் பகுதிகளை விட ஓரளவு குறைவாகவே உள்ளது என்று காட்டியிருக்கிறது. மேலும் புதிதாக உருவாகும் விண்மீன்களிலும், செவ்வாய், வியாழன், சனிக் கோள்களின் வாயு மண்டலத்திலும், “வால்மீன் லீ” யிலிம் (Comet Lee) நீர் இருப்பதைச் சுவாஸ் காட்டியுள்ளது.
(தொடரும்)
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Earth Science & the Environmental Book.
32. http://science.nationalgeographic.com/science/space/solar-system/early-earth.html [December 2006]
33. http://www.smithsonianmag.com/ist/?next=/science-nature/how-did-water-come-to-earth-72037248/ [May 2013]
33(a) http://www.titech.ac.jp/english/news/2013/024238.html [November 12, 2013]
34. http://regator.com/p/269926483/origin_of_earths_water_part_of_our_planet/
35. http://www.dailygalaxy.com/my_weblog/2015/11/-origin-of-earths-water-part-of-our-planet-from-the-beginning.html [November 13, 2015]
36. https://en.wikipedia.org/wiki/History_of_Earth [December 15, 2015]
37. https://en.wikipedia.org/wiki/Origin_of_water_on_Earth
38. http://www.huffingtonpost.com/entry/earths-water-old_56460271e4b08cda348867ea [November 17, 2015]
39. http://karmaka.de/?p=6245 [November 13, 2015]
40. http://cnmnewz.com/water-has-been-on-earth-all-along-study-of-volcanic-rocks-reveals/
41. http://www.hngn.com/articles/150356/20151113/earths-water-probably-didnt-come-comet-here-beginning.htm [November 13, 2015]
42. https://en.wikipedia.org/wiki/Deuterium [December 12, 2015]
43. https://www.space.com/27969-earth-water-from-asteroids-not-comets.html [December 10, 2014]
44. https://www.space.com/30582-asteroid-mining-water-propulsion.html [September 18, 2015]
45. https://gizmodo.com/asteroids-really-could-have-brought-water-to-earth-exp-1825532121 [April 25, 2018]
******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] ( April 28, 2018)