Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

வாழ்ந்து பார்க்கலாமே 27

க. பாலசுப்பிரமணியன்

மாற்றங்களின் வேகங்களும் மனித வாழ்க்கைத் திறன்களும்

மாற்றங்களின் வேகம் நம்மைத் தடுமாற வைத்துக்கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம். இந்த மாற்றங்கள் நமது வாழ்க்கை முறைகளை மிகவும் பாதிக்கின்றன. மனித மூளையின் சிந்தனைத் திறன்களை போலவே கணினிகள் மூலமாக செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) பதப்படுத்தி அதை எவ்வாறு இயந்திரச் சிந்தனைகளுக்கு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிய உலகளாவிய ஆரய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக பல வித இயந்திரங்களும் கருவிகளும் செயற்கைச் சிந்தனை மூலம் மனித சிந்தனைகளுக்கு ஓய்வு கொடுப்பது மட்டுமின்றி, பல இடங்களிலும் பல திறன்களும் மனித சிந்தனைகளைத் தேவையற்றதாக ஆகிவிடுகின்றன. இதன் தாக்கத்தின் மூலமாக பல மனிதச் சிந்தனைத் தேவைகளும் அவை சார்ந்த திறன்களும் வாழ்க்கை நடைமுறைகளும் அழிந்து விடும் நிலையில் உள்ளன. இது சமுதாயத்திற்கு நல்லதா தீயதா என்ற விவாத மேடைகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த விவாதங்களை அர்த்தமற்றதாக ஆக்கும் வகையில் அந்தக் கருவிகளின் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் தாக்கங்களும் அமைந்து கொண்டிருக்கின்றன.

உதாரணமாக சில நாட்களுக்கு முன் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் கூறினார் ”  ஒரு காலத்தில் ஒரு நிறுவனத்தின் இயக்குனராக நான் இருந்த பொழுது எனக்கு உதவி செய்ய ஒரு தனிப்பட்ட உதவியாளர் இருந்தார். இன்று அதுபோன்ற ஒரு உதவியாளருக்குத் தேவையே இல்லை. அதற்க்கு பதிலாக எனது அலைபேசியில் உள்ள கூகுள் உதவியாளர் எனக்குத் தேவையான பல வேலைகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றுகின்றது “

“கூகுள், இன்று எனக்கு என்னென்ன வேலைகள் உள்ளன?”

“கூகுள், இன்று மாலை எனக்கு எந்த விமானத்தை பிடிக்க வேண்டும். எத்தனை மணிக்கு விமான நிலையத்திற்கு எந்த வழியாகச் செல்லவேண்டும்?”

“கூகிள், சென்னையிலிருந்து கும்பகோணத்திற்குச் செல்லும் பாதைகள் என்ன? அவைகளின் தூரங்கள் எவ்வளவு? அந்த தூரத்தை இந்தப் போக்குவரத்து நெரிசலில் கடக்க எவ்வளவு நேரம் ஆகும்?

“கூகுள், இன்று சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா? அப்படிப் பெய்தால் எந்த நேரத்தில் மழை வரலாம் ?

“கூகிள் அடுத்த ஒரு வாரத்திற்கு மதுரையின் வெப்ப நிலை என்ன?”

இது போன்ற பல கேள்விகளுக்கு பதிலும் அதைத் தொடர்ந்து தேவைப் பட்ட தகவல்களும் கிடைக்கின்றன.

அது மட்டுமா… உங்களுடைய மருத்துவரிடம் தொலைபேசியில் சந்திப்பதற்கான நேரத்தை கேட்டுவாங்கி அதை உறுதிப்படுத்தும் நுண்ணறிவும் இந்த அலைபேசிக்குள் அடக்கப்பட்டுவிட்டது.

ஒரு பெண்மணி விளையாட்டாக தன்னிடம் உள்ள கூகுள், உதவியாளரிடம் “கூகிள், வத்தக்குழம்பு வைப்பதற்கான முறை என்ன?” என்று கேட்க சில நொடிகளில் அதைத் தயாரிக்கும் முறைகளை பதிவு செய்து விடுகின்றது.

செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் நாம் செய்யும் பல வேலைகள் வழிமாறி முறைமாறி புதிதான பரிமாணங்களில் உருவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக, செயற்கை நுண்ணறிவில் இயங்கும் குளிர்சாதனப் பெட்டிகள், அவைகள் உள்ளே வைக்கப்பட்டுள்ள பொருட்களையும் அவர்களின் தரத்தையும், அவர்களின் வாழ்நாளையும் உங்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கும் நிலையில் உள்ளன. நாம் ஒரு கடைக்குச் சென்று “எவ்வளவு பால் வாங்க வேண்டும். எவ்வளவு தக்காளி வாங்க வேண்டும்?’ என்று நினைத்தால் உடனே நமது அலைபேசி மூலமாக அதை அந்தக் குளிர் சாதனப் பெட்டியிலிருந்து தகவலாக மட்டுமின்றி அதை கண்கூடாகவும் பார்த்து முடிவு எடுத்துக்  கொள்ளலாம்.

காலையில் நாம் பல் துலக்கும் பொழுது நமக்கு உதவி செய்து நமது பற்களில்  உள்ளோ வெளியிலோ கறைகள் உள்ளனவா, நாம் எவ்வாறு பல் துலக்கியுள்ளோம் என்பதைத் தெரிந்து கொள்ளும் கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

பல விதமான உடல் அறுவை சிகிச்சைகள் மனித இயந்திரங்களின் மூலமாகச் செய்யப்பட்டு வருகின்றன.

மிசியோ காக்கூ என்ற ஒரு ஆராய்ச்சியாளர் மற்றும் அறிவியல் நிபுணர் தன்னுடைய “மூளையின் சக்தி ” (The Power of Mind) என்ற புத்தகத்தில் மூளையின் வலிமையைப் பற்றியும் செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும் சேர்ந்து செயல்படும் சாத்தியக்கூறுகள் பற்றியும் விளக்கமாக எழுதியுள்ளது வியப்பை மட்டுமின்றி அதிர்ச்சியையும் அளிக்கின்றது. இதனால் நமது வாழ்வு முறைகள் எவ்வாறு மாற்றப்படும் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.

இத்தனை மாற்றங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா அல்லது மறுக்க முடியுமா? இவைகளின் தாக்கங்கள் எத்தனை வேகமா வரும்? தற்போது நடைமுறையில் இருக்கின்ற வாழ்வாதாரங்கள் இடிக்கப்படும் பொழுது எவ்வளவு சீக்கிரத்தில் நாம் புதிய முறைகளோடு இணைந்து வாழ முடியும்? இவையெல்லாம் கேள்விக்குறிகளே !

ற்றங்களை நாம் சந்தித்துத் தான் ஆகவேண்டும்.

இந்த மாற்றங்கள் நன்மை பயக்குமா தீமை பயக்குமா, தேவையா அல்லது தேவையில்லையா என்பதைக் காலம் தான் நிர்ணயிக்க வேண்டும்.

ற்றங்களுக்குத் தக்க முறையில் நம்மை சிறிய அளவிலாவது மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றோம்.

மாற்றங்கள் சந்தேகங்களை உண்டுபண்ணலாம் மாற்றங்கள் வியப்பை உண்டுபண்ணலாம். மாற்றங்கள் பயத்தையும் பீதியையும் உண்டுபண்ணலாம். மாற்றங்கள் மகிழ்வை உண்டுபண்ணலாம். மாற்றங்கள் இன்னும் பல புதிய சிந்தனைகளை உண்டுபண்ணலாம். அவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

நாம் அவைகளோடு இணைந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

வாழ்ந்து பார்க்கலாமே !

(தொடரும் )

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க