இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(279)

0

அன்பினியவர்களே!

அன்புநிறை வணக்கங்களுடன் அடுத்தொரு மடலுடன் இங்கிலாந்திலிருந்து உங்களுடன் மனந்திறக்கிறேன். நேற்றிருந்தோர் இன்றில்லை, இன்றிருந்தோர் நாளையில்லை இதுதான் உலக யதார்த்தம். அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இவ்வுலகில் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது தன்போக்கிலே தனது சக்கரத்தை உருட்டிக் கொண்டேயிருக்கிறது. சிரிப்போர் சிலர், அழுவோர் சிலர் சிரித்துக்கொண்டே அழுவோர் பலர். இப்படித்தான் வாழவேண்டும் என வாழத் தொடங்குவோர் எப்படியும் வாழ்ந்து முடிப்பதும் உண்டு. எப்படியும் வாழ்வோம் என்று வாழத் தொடங்குவோர் இப்படித்தான் என்று வாழ்ந்து முடிப்பதும் உண்டு.

வகுத்த பாதை நினைத்த இடத்தில் கொண்டு சேர்ப்பது சிலருடைய வாழ்வில் தான் சாத்தியமாகிறது. இப்படியான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டே சமுதாய நிகழ்வுகளில் ஒரு கண்ணோட்டம் செலுத்த வேண்டியுள்ளது.

சரி இனி இங்கிலாந்தில் நிகழ்ந்த சமீப நிகழ்வுகளில் சிறுதுளிகளை அலசுவோமா?

அரசியல் அரங்கத்தில் பல காட்சிகள் நடந்தேறினாலும் முக்கியப் பங்கான ப்ரெக்ஸிட் எனும் காட்சி கொஞ்சம் தொய்வு கண்டிருக்கிறது. காரணம் தற்போது இங்கிலாந்துப் பாராளுமன்றம் தனது கோடைக்கால விடுமுறையை அமுல்படுத்தியுள்ளது. பிரதமர் கூட இச்சிக்கல்களில் இருந்து கொஞ்சம் ஓய்வு பெற இத்தாலியை விடுமுறைக்குத் தேர்ந்தெடுத்துச் சென்றுள்ளார். ஓ! அது கூட ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடோ? பிரதமரைப் போட்டு துவைத்து எடுத்துவிட்ட சக பாராளுமன்ற அங்கத்துவர்கள் அவருடைய கட்சியினர் உட்பட பிரதமர் கொஞ்சம் மூச்சுவிட அவகாசம் கொடுத்துள்ளார்கள் போலத் தென்படுகிறது. ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட ப்ரெக்ஸிட்டுக்கான எதிர்பார்ப்புகளை கொஞ்சம் அனுசரணையோடு ஐரோப்பிய ஒன்றியம் நோக்குகிறது எனும் செய்தியோடு அவற்றில் சில மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள் எனும் செய்தியும் வயிற்றில் புளியைக் கரைக்கத்தான் செய்கிறது. பொறுமை, பொறுமை, பொறுமை என்கிறார்கள் சில அரசியல் அவதானிகள்.

அதைத்தவிர லேபர் கட்சியைப் பிடித்த சனிதோஷம் இன்னும் நீங்கிய பாடில்லாதது போலத் தோன்றுகிறது. யூத இன மக்களுக்கு எதிரான இனத்துவேஷக் கருத்துகளை கொண்டவர்கள் பலர் லேபர் கட்சியில் இருப்பதாக ஒரு பரவலான குற்றச்சாட்டு அனைத்து ஊடகங்கள் உட்பட பல முன்னணி யூத மதத் தலைவர்களால் சில மாதங்களாக லேபர் கட்சியை உலுக்கி வந்திருப்பதை உங்களில் பலர் அறிந்திருக்கலாம். இக்குற்றச்சாட்டுக்கு அக்கட்சியின் தலைவர் ஜெர்மி கோபனும் உட்படுத்தப்பட்டிருக்கிறார். பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் ஒடுக்குமுறையை நாம் எதிர்க்கிறோமேயொழிய எமது எதிர்ப்பு யூத மக்களுக்கு எதிரானதல்ல என்பது இக்கட்சியில் குற்றம் சாட்டப்பட்டிருப்போரின் வாதம். சரி, அப்படியாயின் உலகின் அனைத்துப் பொது ஸ்தாபனங்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட “யூத எதிர்ப்பு” எனும் அடைமொழிக்கான பொது வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்ள ஏன் லேபர் கட்சி தயங்குகிறது என்கிறார்கள் குற்றஞ்சாட்டுவோர். இதற்கிடையில் வந்ததடா மற்றுமோர் தலையிடி லேபர் கட்சிக்கு “பீட்டர் வில்ஸ்மன் (Peter Wilsman)“ எனும் பெயரில். எப்படி என்கிறீர்களா? பீட்டர் வில்ஸ்மன் லேபர் கட்சியின் தேசிய நிர்வாகக் குழுவில் ஓர் அங்கத்தினர். அத்தோடு இவர் தலைவர் ஜெர்மி கோபனின் நெருங்கிய ஆதரவாளர். இவர் சமீபத்தில் நடைபெற்ற நிர்வாகக்குழுக் கூட்டத்தில் லேபர் கட்சியின் மீது சுமத்தப்பட்டுள்ள  “யூதர் எதிர்ப்பு”  எனும் குற்றச்சாட்டு “ட்ரம்ப் (அமெரிக்க அதிபர்)அவர்களின் மீது வெறித்தனமான ஆதரவு கொண்ட விஷமிகளினால் சுமத்தப்படுக்கிறது என்று எகிறிக்குதித்த பேச்சு ஒலிப்பதிவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளிவந்துவிட்டது. சும்மா விட்டு விடுவார்களா? நமது ஊடகங்கள், பின்னி எடுத்து விட்டார்கள் போங்கள் ! இதன் விளைவுகளை அடுத்தடுத்த வாரங்களில்தான் பார்க்க வேண்டும்.

அதுதவிர சில வாரங்களாக இங்கிலாந்தை கொளுத்தும் வெயில் வாட்டி வதக்கிக் கொண்டிருந்தது. மேமாதம் இறுதிக்குப் பின்னால் கடந்த யூலை மாதம் 27ஆம் திகதி தான் இங்கிலாந்தின் தென்பகுதி (அடியேன் வசிக்கும் பகுதி) மழையையே கண்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 1976ஆம் ஆண்டுக்குப் பின்னால் 33 டிகிரிகளை வெப்பம் அதிகநாட்களுக்குத் தாண்டியது இவ்வருடம்தான் என்கிறார்கள். 1976ஆம் ஆண்டு கோடை நான் லண்டன் வந்து சுமார் 18 மாதங்களின் பின்னால், அப்போதுதான் சமீபத்தில் நான் ஈழத்திலிருந்து இங்கிலாந்துக்கு புலம் பெயர்ந்திருந்ததினால் அப்போது இருந்த வெப்பம் எனக்கு சும்மா “ஜூஜூபி “. ஆனால் இப்போதோ சுமார் 42 வருடங்களின் பின்னால் வாட்டி வதக்கி விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.  பச்சைப் பசேல் என்றிருந்த புல்வெளிகளெல்லாம் வைக்கோல்போலக் காட்சியளிக்கிறது. பின்புலங்களில் உலவுவது போல இங்கும் கால்நடைகள் உள்ளன என்றால் அவைகளுக்குத் திருவிழாதான் போங்கள்!

இந்த ட்ரம்ப் அண்ணா இருக்கார் பாருங்கோ! அவருக்குச் சும்மா விளையாட்டுன்னா பாத்துக்கோங்களேன். விட்டேனா பார் அடித்து நொறுக்கி விடுவேன் என்று ட்வீட்டர் மூலம் வெருட்டி விட்டு பின்னர் சிரித்துக் கொண்டே சந்தித்து விட்டு வந்தார் தென்கொரிய அதிபரை. அமெரிக்க நாட்டு ஜனநாயகத்தின் அத்திவாரத்திலேயே கைவைத்து விட்டார் என்று அமெரிக்க அரச உளவு நிறுவனம் குற்றம் சாட்ட, சிரித்துக் கொண்டே சென்று கைகுலுக்கி விட்டு வந்தார் ரஸ்ய நாட்டு அதிபருடன். ஈரானா? காட்டுகிறேன் பார் அவர்களுக்கு நான் யாரென்று என்று கூறி முன்னணி மேற்குலநாடுகள் அனைத்தும் சேர்ந்து கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக வெளியேறியது மட்டுமல்ல சில நாட்களின் முன்னால் ட்வீட்டர் வலைத்தளத்தின் மூலம் ஈரானுக்கு எச்சரிக்கை கூட விட்டிருந்தார் ட்ரம்ப் அண்ணா. அடிச்சார் பாருங்கோ ஒரு பல்டி ” எதுவித முன்நிபந்தனைகளுமின்றி ஈரான் நாட்டு அதிபருடன் பேசத்தயார்” என்று எதுவித முன்னறிவித்தலுமின்றி எதேச்சையாக ஓர் அறிவித்தலைச் செய்தார். புரியவில்லை ஒருவருக்கும். ஓ! ஒருவேளை இதைத்தான் “ராஜதந்திரம்” என்கிறார்களோ? என்ன செய்வது? சாணக்கியர் இருந்திருந்தால் கேட்டறிந்திருக்கலாம். எதையும் கேட்ட மாத்திரத்திலேயோ அன்றி பார்த்த மாத்திரத்திலேயோ அதைப்பற்றி முடிவு கட்டி விடக்கூடாது. ஒருவேளை அவரது இந்த யுக்திகள் தான் இன்றைய உலகிற்கு உகந்ததோ? காலம்தான் விடைபகர வேண்டும்.

மீண்டும் மற்றுமோர் மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *