குறளின் கதிர்களாய்…(221)
நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து.
-திருக்குறள் -877(பகைத்திறம் தெரிதல்)
புதுக் கவிதையில்…
உணர்ந்து
உதவாதர்களிடம் உரைக்காதே
உன் துன்பத்தை..
உன் வலியின்மையையும்
உரைத்துவிடாதே வெளியே,
வயவர் அறியும் வகையில்…!
குறும்பாவில்…
சொல்லாதேயுன் துன்பத்தை உணர்ந்து உதவாதவரிடம்,
பகைவரறிய உன் வலியின்மையையும்
பகன்றுவிடாதே பிறரிடம்…!
மரபுக் கவிதையில்…
துன்ப முனக்கு வருகையிலே
துன்ப மதனை உணர்ந்தேதான்
அன்பு கொண்டே உதவாத
அடுத்தவ ரிடமதைச் சொல்லாதே,
உன்னால் செய்ய இயலாதெனும்
உண்மை யான நிலையதுவை
என்றும் எடுத்துச் சொல்லிடாதே
எதிரி யறியப் பிறரிடமே…!
லிமரைக்கூ..
உதவாதவரிடம் துன்பத்தை உரைக்காமை நன்று,
எதிரியறிய என்றும் சொல்லிவிடாதே உண்மையை
உன்னால் வென்றிட முடியாது என்று…!
கிராமிய பாணியில்…
சொல்லாத சொல்லாத துன்பத்த சொல்லாத
சொல்லாத சொல்லாத உள்ளதச் சொல்லாத..
உண்மதெரிஞ்சி ஒதவாதவன்கிட்ட
சொல்லாத சொல்லாத
ஒன் துன்பத்த சொல்லாத..
எதுராளி அறியிறபடி உள்ளதச் சொல்லாத
ஒன்னால முடியாதுங்கிற உண்மயச் சொல்லாத..
அதால
சொல்லாத சொல்லாத துன்பத்த சொல்லாத
சொல்லாத சொல்லாத உள்ளதச் சொல்லாத…!
செண்பக ஜெகதீசன்…