பழந்தமிழக மூவேந்தர்களின் காலவரையறை – 14

0

கணியன்பாலன்

 

அ.சேர வேந்தர்கள்:

மாமூலனார் பாடல்கள்தான் நமது கால நிர்ணயிப்புக்கான முதல் அடிப்படை ஆதாரங்களை வழங்குகின்றன. பண்டைய ஆதார சங்க இலக்கிய நூல்களில் மாமூலனாருக்கு முன் ஒரு தலைமுறையும், அவரது தலைமுறைக்குப்பின் 8 தலை முறைகளையும் நம்மால் இனங்காண முடிந்தது. முதல் காலகட்ட முதன்மைப் புலவராக குடவாயிற்கீரத்தனாரும் பத்தாம் காலகட்ட முதன்மைப்புலவராக கோவூர்கிழாரும் இருக்கின்றனர். மாமூலனார் இரண்டாம் காலகட்ட முதன்மைப் புலவராகிறார். நமக்குக் கிடைத்துள்ள பண்டைய ஆதார சங்க இலக்கிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள பத்து வரலாற்றுக் கால கட்டங்களும் கி.மு. 350 முதல் கி.மு 50 வரையான 300 வருட காலத்தைக் கொண்டதாகும். கிரேக்கவீரன் அலெக்சாந்தர் இந்தியாவை விட்டு வெளியேறிய கி.மு. 325க்கு ஒரு தலைமுறை முந்தைய காலம்(கி.மு. 350) முதல், சோழமன்னன் நலங்கிள்ளி உச்சயினிவரை படையெடுத்த காலத்திற்கு(கி.மு.75) பிந்தைய ஒரு தலைமுறை(கி.மு. 50) வரையான பத்து வரலாற்றுக் காலகட்டங்களே நமது சங்ககால வரலாற்றுக் காலகட்டங்கள்(கி.மு.350-50) ஆகும்.

சேர வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள்தான் முதலில் நிர்ணயம் செய்யப்பட்டன. இரண்டாம் காலகட்ட மாமூலனார் காலம் என்பது கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு என முன்பே கணிக்கப்பட்டுள்ளது. அதாவது கி.மு. 325- கி.மு. 275 ஆகும். ஆதலால் முதல் காலகட்டம் என்பது கி.மு. 350 இல் இருந்தும், இரண்டாம் காலகட்டம் என்பது கி.மு. 320 இல் இருந்தும் தொடங்குகிறது. இமயவரம்பன் இரண்டாம் காலகட்டம் ஆவான். வின்சென்ட் சுமித் அவர்கள் கி.மு. 325-322 வரை வட இந்தியாவில் கலவரம் நடந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே வட இந்தியாவில் கலவரம் நடந்தது என்பது நந்தர்கள் மௌரியர்களுக் கிடையேயான போர்போக, சேரலாதன் இமயவரம்பனின் படையெடுப்பாலும் இருக்கலாம் எனக்கொண்டு அவன் கி.மு. 325வாக்கில் முதல் காலகட்டத்தின் இறுதியில் வடநாடு படையெடுத்ததாகக் கொள்ளப்பட்டது. ஆதலால் அதற்கு இரு வருடங்களுக்கு முன் கி.மு. 327வாக்கில் அவனது தந்தை உதியன் சேரலாதன் இறந்து இமயவரம்பன் வேந்தனாக ஆனான் எனக் கணிக்கப்பட்டது. கி.மு. 163 என்பது வரலாற்றில் இரண்டாம் தூமகேது தோன்றிய ஆண்டாகும். அந்த வருடத்தில்தான் பத்தாம் பதிற்றுப்பத்தின் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்துபோகிறான். இது ஒரு முக்கிய காலவரையறையாகும்.. ஆதலால் பதிற்றுப்பத்தில் உள்ள சேரலாதன் இமயவரம்பன் முதல் பத்தாம் பதிற்றுப்பத்தின் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் வரையான வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள் என்பது சுமார் கி.மு. 327இல் தொடங்கி கி.மு. 163இல் முடிகிறது என கணிக்கப்பட்டது.

உதியன் முதல் தொடங்கும் குட்டுவர்களின்  இறுதி ஆட்சி ஆண்டு என்பது, சேரன் செங்குட்டுவன், சம்பைக் கல்வெட்டு வெட்டிய ஆண்டில்(கி.மு.220) இறந்தான் எனக்கொண்டும், அதன்பின் 8 ஆண்டுகள் மட்டுமே ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆட்சியில் இருந்தான் எனக்கொண்டும் சுமார் கி.மு. 212 என நிர்ணயிக்கப்பட்டது. கி.மு. 212 முதல் கி.மு. 163வரை 4 பொறையர்குலச் சேர வேந்தர்களும் அதன் பின் இறுதியாக 13 ஆண்டுகள் கணைக்கால் இரும்பொறையின் ஆட்சியும், ஆக மொத்தம் ஐந்து பொறையர்குலச் சேரர்களின் ஆட்சி சுமார் 62 ஆண்டுகள் இருந்ததாகக் கொண்டு, பொறையர்குலச் சேரர்களின் ஆட்சி கிட்டத்தட்ட கி.மு. 212வாக்கில் தொடங்கி, கி.மு. 150வாக்கில் முடிந்ததாகக் கொள்ளப்பட்டது.

உதியனின் மகன் இமயவரம்பன் முதல் ஐந்து குட்டுவர்களின் ஆட்சியாண்டுகள் என்பது கி.மு.327-கி.மு.212 வரை எனவும். ஐந்து பொறையர்களின் ஆட்சி யாண்டுகள் என்பது கி.மு.212-கி.மு.150 வரை எனவும் கணிக்கப்பட்டது. இந்தக் கி.மு. 150வாக்கில் தான் கணைக்கால் இரும்பொறை சிறையிலிடப்பட்டு இறந்து போகிறான். மாக்கோதை வெளியிட்ட நாணயம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்பதாலும், குட்டுவன் கோதையின் நாணயம் கி.மு. முதல் நூற்றாண்டு என்பதாலும், குட்டுவன் கோதை முத்தொள்ளாயிரம் நூலின் காலத்தைச் சேர்ந்தவன் என்பதாலும், இவன் உச்சயினியை வென்ற சோழன் நலங் கிள்ளியின் சமகாலத்தவன் என்பதாலும், இவனது ஆட்சிக்காலம் கி.மு.70வாக்கில் முடிவதாகக் கொள்ளப்பட்டது. ஆதலால் இறுதி மூன்று கோதை வேந்தர்களின் ஆட்சியாண்டுகள் என்பது கிட்டத்தட்ட கி.மு. 150-கி.மு. 70 வரையான சுமார் 80 ஆண்டுகள் எனக்கணிக்கப்பட்டது.

குட்டுவகுலச்சேர வேந்தர்கள்:

கி.மு. 327வாக்கில், இமயவரம்பனின் வேந்தர் ஆட்சி தொடங்குவதாகக் கொள்ளப் பட்டது. அவன் மொத்தம் 58 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகப் பதிற்றுப்பத்து குறிப்பிட்டுள்ளது. அவனது ஆட்சி மௌரியப் படையெடுப்புக்குப்பின், முதல் கரிகாலனின் இரண்டாம் வெண்ணிப்பறந்தலைப் போரில் முடிகிறது. அதன் காலம் கி.மு. 275 ஆகும். ஆகவே அவனது மொத்த ஆட்சிக்காலம் கி.மு. 333-275 எனக் கணிக்கப்பட்டது. ஆதலால் இமயவரம்பன் சுமார் 6 ஆண்டுகள் அரசனாகவும் 52 ஆண்டுகள் வேந்தனாகவும்(கி.மு.327-கி.மு.275) இருந்தான் என ஆகிறது. இவனுக்குமுன் இவனின் தந்தை உதியன் சேரலாதன் சேர வேந்தனாக சுமார் 20 ஆண்டுகள் ஆண்டான். ஆகவே அவனது வேந்தர் ஆட்சிக்காலம் கி.மு.347-கி.மு.327 ஆகும். இமயவரம்பனுக்குப் பின் அவனது தம்பி சுமார் 10 ஆண்டுகளும், மூத்த மகன் 15 ஆண்டுகளும் வேந்தர்களாக ஆண்டதாகக் கொண்டு செங்குட்டுவனின் வேந்தர் ஆட்சி கிட்டத்தட்ட கி.மு. 250-220 வரை எனக் கணிக்கப்பட்டது. செங்குட்டுவன் மொத்தம் 55 ஆண்டுகள் ஆண்டதாகப் பதிகம் கூறுகிறது. அசோகர் இறந்த ஆண்டு கி.மு. 232 என்பதால், செங்குட்டுவன் கி.மு. 232-228வாக்கில் தனது வடநாட்டுப்படையெடுப்பை நடத்துகிறான். அதன்பின் கிள்ளிவளவனுக்காக கி.மு. 225வாக்கில் நேரிவாயில் போரை நடத்துகிறான். அதன்பின் 5ஆண்டுகள் கழித்து கி.மு. 220வாக்கில் இறந்து விடுகிறான்.

செங்குட்டுவன் மொத்தம் 55 ஆண்டுகள் ஆண்டதால் அவன் கி.மு. 275இல் இமயவரம்பன் இறந்தபோது அரசனாக ஆகிறான். அதேகாலத்தில் தான் அவனது தமையன் களங்காய்க்கண்ணி நார் முடிச்சேரலும் அரசனாகிறான். இமயவரம் பனின் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவனும், மூத்த மகன் களங்காய்க்கண்ணி நார் முடிச்சேரலும் மூன்றாவது காலகட்டம் என்பதாலும் அவர்களது மொத்த ஆட்சிகள் பதிற்றுப்பத்துப்படி தலா 25 ஆண்டுகள் என்பதாலும் தம்பி 10 ஆண்டுகளும் மூத்தமகன் 15 ஆண்டுகளும் வேந்தர்களாக ஆண்டதாகக் கொண்டு அவர்களது ஆட்சிகள் கி.மு. 250க்குள் முடியமாறு கணிக்கப்பட்டது. களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் பெண்கொலைபுரிந்த நன்னனை, நன்னனூர் நன்னனை வெற்றி கொள்கிறான் என்பதும், இவன் பாலைபாடிய பெருங்கடுங்கோ இடம்பெற்றுள்ள புகளூர்க் கல்வெட்டுக்கு(கி.மு.295) ஒரு தலைமுறை பிந்தையவன் என்பதும் கணக்கில் கொள்ளப்பட்டு இவனது வேந்தர் ஆட்சிக்காலம் சுமார் கி.மு. 265-250 எனக் கணிக்கப்பட்டது. ஆதலால் இமயவரம்பனுக்கும் இவனுக்கும் இடையே இருந்த பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் வேந்தர் ஆட்சிக்காலம், கிட்டத்தட்ட கி.மு. 275-265 எனக் கணிக்கப்பட்டது.

அதன்பின் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 8 ஆண்டுகளும், செல்வக் கடுங்கோ வாழியாதன் 7 ஆண்டுகளும் ஆண்டதாகக் கொள்ளப்பட்டது. இவை வேந்தர் ஆண்டுகள் தானே ஒழிய மொத்த ஆட்சி ஆண்டுகள் அல்ல. இலக்கியக் கணிப்புப் படி ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும், செல்வக் கடுங்கோவாழியாதனும் 5ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 5ஆம் காலகட்ட நள்ளி என்கிற கடையேழு வள்ளல்களில் ஒருவரைப்பாடிய காக்கை பாடினியார் நச்செள்ளையார்தான் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை 6ஆம் பதிற்றுப்பத்தில் பாடியுள்ளார். பேகன், ஓரி, பாரி போன்ற வள்ளல்களின் சமகாலத்தவன் இவன். பதிற்றுப்பத்துப் பதிகப்படி இவனது மொத்தஆட்சி ஆண்டுகள் 38 ஆகும். இவன் சேரன் செங்குட்டுவன் வேந்தன் ஆனபோது (கி.மு.250) அரசனாக ஆக்கப்பட்டான். இவை அனைத் தையும் கணக்கில் கொண்டுதான் இவனது வேந்தர் ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட கி.மு. 220-212 எனக்கணிக்கப்பட்டது. ஆகவே கிட்டத்தட்ட கி.மு. 347-212 வரை, மொத்தம் ஆறு குட்டுவகுலச்சேரவேந்தர்கள் 135 ஆண்டுகள் ஆண்டனர் எனலாம்.

பொறையர்குலச்சேர வேந்தர்கள்:

செல்வக் கடுங்கோவாழியாதனை 7ஆம் பதிற்றுப்பத்தில் கபிலர் பாடியுள்ளார். அவர் 5ஆம் காலகட்டத்தின் முதன்மைப்புலவர் ஆவர். அவர் பாரியின் பறம்புப் போருக்குப்(கி.மு.215) பின் சில வருடங்கள் கழித்துத்தான் செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடியுள்ளார். மூவேந்தர்களும் சேர்ந்துதான் பாரியை அழித் தனர். ஆதலால் பறம்புப்போரின்போது செல்வக்கடுங்கோ வாழியாதன் சேர வேந்தனாக இருந்திருக்க இயலாது. குட்டுவன் குலத்தில் வாரிசுகள் இல்லாததால் செல்வக்கடுங்கோவாழியாதன் கி.மு. 212வாக்கில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்குப் பின் வேந்தன் ஆகிறான். இவன் கிமு. 230வாக்கில் அந்துவன் சேரலுக்குப்பின் கரூரில் பொறையர்குல சேர அரசன் ஆவதாலும், இவனது மொத்த ஆட்சி ஆண்டுகள் என்பது பதிற்றுப்பத்துப்பதிகப்படி 25 ஆண்டுகள் என்பதாலும் இவன் 205வரை வேந்தனாக இருந்தான் எனலாம். இவை அனைத்தையும் கணக்கில் கொண்டுதான், இவனது வேந்தர்ஆட்சி ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட கி.மு. 212-205 எனக் கணிக்கப்பட்டது.

அதன்பின் கி.மு. 205வாக்கில் இருந்து தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையின் ஆட்சி தொடங்குகிறது. அதியமானின் திருக்கோவிலூர் போருக்குப் பல ஆண்டுகள் கழித்துத்தான் தகடூர் போர் நடக்கிறது. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஆட்சியேற்றபின் தான் இப்போர் தொடங்குகிறது. அவன் ஆட்சியேற்ற இரு வருடங்களில் தொடங்கிய இப்போர் சுமார் 3 வருடம் நடக்கிறது(கி.மு.203-கி.மு.200). அதன்பின் புகார்ப் போர் (கி.மு. 199)நடக்கிறது. இலக்கியக்கணிப்புப்படி தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும், இளஞ்சேரல் இரும்பொறையும் 6ஆம் காலகட்டம் ஆவர். பதிற்றுப்பத்துப்பதிகப்படி தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் மொத்த ஆட்சிக்காலம் 15 ஆண்டுகள் என்பதாலும், செல்வக்கடுங்கோ வாழியாதன் வேந்தன் ஆன சுமார் இரு ஆண்டுகள் கழித்து(கி.மு. 210) பெருஞ்சேரல் இரும்பொறையை அரசனாக்கினான் என்பதாலும் அவனது வேந்தர் ஆட்சிக்காலம் என்பது ஏறக்குறைய கி.மு. 205-கி.மு. 195 என ஆகிறது. அதன்பின் ஆட்சிக்கு வந்த 6ஆம் காலகட்ட இளஞ்சேரல் இரும்பொறை கி.மு. 200வாக்கில் தகடூர் போருக்குப்பின் அரசனாக்கப்படுகிறான். சுமார் கி.மு. 195வாக்கில் வேந்தன் ஆகிறான். பதிகப்படி இவனது மொத்த ஆட்சி ஆண்டுகள் 16 என்பதால் இவனது வேந்தர் ஆட்சி கி.மு. 184வாக்கில் முடிவடைகிறது. ஆகவே இவனது வேந்தர் ஆட்சிக்காலம் என்பது கி.மு.195 – 184 ஆகும்.

கி.மு. 184 முதல் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சி நடைபெறுகிறது. இலக்கியக் கணிப்புப்படி இவன் 7ஆம் காலகட்டம் ஆகிறான். இரண்டாம் தூமகேது தோன்றிய ஆண்டு(கி.மு.163), இவன் இறக்கிறான். ஆதலால், இவனது வேந்தர் ஆட்சிக் காலம் என்பது கி.மு. 184 முதல் கி.பி. 163 வரை ஆகும். இவனைத் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் கி.மு. 182வாக்கில் தோற்கடித்து கைது செய்து சிறையில் அடைக்கிறான். இவன் தப்பித்து வந்து மீண்டும் சேர வேந்தன் ஆகிறான். இவன் காலத்தில்தான் முசிறியைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் முற்றுகையிடுகிறான். இவன் இரண்டாம் கரிகாலன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், தொண்டைமான் இளந்திரையன் போன்றவர்களின் சமகாலத்தவன் ஆவான்.இவனுக்குப்பின் எட்டாம் காலகட்டக் கணைக்கால் இரும்பொறை கி.மு. 163 முதல் சுமார் 13 ஆண்டுகள் ஆட்சி செய்கிறான். கி.மு. 150வாக்கில் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியிடம் போரில் தோற்று, அவனால் கைது செய்யப்பட்டு சிறையிலேயே இறந்து போகிறான். இவனைப் பொய்கையார் பாடியுள்ளார். இவன் கிட்டத்தட்ட கி.மு. 163-150வரை சேரவேந்தனாக இருந்தான். இவனே கடைசிப் பொறையர்குலச் சேரவேந்தன் ஆவான். ஆகவே கிட்டத்தட்ட கி.மு. 212-கி.மு. 150வரை 62 ஆண்டுகள், 5 பொறையர்குலச் சேரவேந்தர்கள் ஆண்டனர் எனலாம்.

கோதைகுலச் சேர வேந்தர்கள்:

அதன்பின் கோதைகுலச் சேரர்களின் ஆட்சி நடைபெறுகிறது. இலக்கியக் கணிப்புப்படி கோக்கோதை மார்பன், மாக்கோதை, குட்டுவன் கோதை ஆகிய மூவரும் சுமார் கி.மு. 150-கி.மு. 70வரை ஆள்கின்றனர். கோட்டம்பலத்துஞ்சிய மாக்கோதை வெளியிட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. அதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்கிறார் நடன. காசிநாதன் அவர்கள். ஒரு நூற்றாண்டை தொடக்கப்பகுதி, இடைப்பகுதி, இறுதிப்பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 30-35 ஆண்டுகள் எனக்கொள்ளலாம். அதன்படி கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்பது கி.மு. 135-கி.மு. 100 வரையான காலம் ஆகும். அதுதான் மாக்கோதையின் ஆட்சிக்காலம் ஆகும். இவனுக்கும் கணைக்கால் இரும்பொறைக்கும் இடையே இருந்தவன் தான் கோக்கோதை மார்பன் ஆவான். கணைக்கால் இரும்பொறையின் ஆட்சி கி.மு. 150வாக்கில் முடிந்து, மாக்கோதையின் ஆட்சி கி.மு. 135வாக்கில் தொடங்குவதால் இடைப்பட்ட கோக்கோதை மார்பனின் ஆட்சி என்பது கி.மு. 150-கி.மு. 135 ஆகும். கடைசி வேந்தன் குட்டுவன் கோதையின் நாணயங்களும் நமக்குக் கிடைத்துள்ளன. அதன்காலம் கி.மு. முதல்நூற்றாண்டின் முதல்பகுதி எனக் கருதப்படுகிறது. மேலும் அவன் முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்றவன். சோழன் நலங்கிள்ளிக்குச் சமகாலத்தவன். மேலும் பிட்டனின் மகன் பிட்டன் கொற்றன் இவனுக்குப் படைத்தலைவனாக இருந்தவன். இவனது காலத்தைச் சேர்ந்த பிட்டனின் மகள் வெட்டிய கல்வெட்டுக்காலம் சுமார் கி.மு. 85 ஆகும். ஆகவே இவைகளைக் கொண்டு இவனது வேந்தர் ஆட்சிக் காலம் கிட்டத்தட்ட கி.மு. 100-கி.மு. 70 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவ்விதமாகக் கோதைகுலச் சேரவேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டன.

   சேரவேந்தன் இமயவரம்பனின் வேந்தர் ஆண்டு என்பது அவன் வடநாடு படையெடுத்துச்செல்வதற்கு(கி.மு.325) 2 ஆண்டுகள் முன்பு கி.மு. 327வாக்கில் தொடங்குகிறது. அதன் கடைசிச் சேரவேந்தன் குட்டுவன் கோதையின் ஆட்சி யாண்டு கி.மு. 70வாக்கில் முடிகிறது. இந்த இடைப்பட்ட சுமார் 257 ஆண்டு களில் 13 சேர வேந்தர்கள் ஆண்டுள்ளனர். முதல் சேர வேந்தன் உதியனையும் சேர்த்து மொத்தம் 14 சேர வேந்தர்கள் ஆண்டுள்ளனர். ஆகவே தனிப்பட்ட சேர வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளில் ஒருசில ஆண்டுகள் முன்பின் இருந்தாலும், முதல் வேந்தனான சேரன் உதியன் முதல் இறுதி வேந்தனான குட்டுவன் கோதை வரையான 14 சேர வேந்தர்களின் வேந்தர் ஆண்டுகள் என்பது சுமார் கி.மு.347-கி.மு.70 வரையான 277 ஆண்டுகள் என்பது இந்திய, உலக வரலாற்று சான்றாதாரங்களைக் கொண்ட ஒரு உறுதியான காலவரையறையை உடையது எனலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *