கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

சுதாமன் அவலுக்கு சொத்தை அளித்த
கதாதரன் கண்ணன் பரம -பிதாவாம்
அலர்மேல் அன்னை அரியின் சிபார்சால்
மலரும்நாள் காசின் பிறப்பு….!
அவலுக்கு செல்வம், அழகுமயில் ராதை
அவளுக்குக் காதல், விஜயன் -கவலைக்கு,
கீதை, அடியார்தம் கண்ணீர் திவலைக்கு
தாதை அளிப்பான் துடைப்பு….!
திகட்டும் அளவு திரவியம் தந்தாய்
புகட்டிய நஞ்சை புசித்தாய் -நகத்தால்
உரித்தெறிந்த உற்சாகம் இன்றெங்கு போயிற்று
தரித்திரநா ராயணா தா….!
வெறும்வாயில் மெல்லும் அவலா கிடாது
குருவாயூ ரப்பா எனக்கும் -திருவாயால்
பாடிய நாரண பட்டர்க்குப் போட்டாற்போல்
போடுநீ ஆமாம்சா மி….!
அந்தரங்க சுத்தியுடன் அந்தணங்கு ஆண்டாள்போல்
அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க -வந்திறங்கி
வைகுண்டம் வாவென்று கைகொடுத்து தூக்கிவிடும்
பைகொண்ட நாகமுற்ற பொற்பு….!
தீனர்க்(கு) அருளூற்றாய் ஈனர்க்(கு) இருள்கூற்றாய்
மீனமாய் ஏனசிம்ம வாமன -மூணான
ராம கிருஷ்ண கலிபுருஷ னாய்வந்த
நாம சகஸ்ரனாய் நாடு….கிரேசி மோகன்….!